செங்கல்பட்டு அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து வறுமை காரணமாக கல்வி பயில சென்னைக்கு வந்தான், நாகராஜ் எனும் சிறுவன். ஒன்பதாம் வகுப்பிலிருந்து பதினோறாம் வகுப்பு வரையிலும் (அந்தகால SSLC) அரசினர் ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி, அரசு பள்ளியில் படித்துவந்தான்.
விடுதிக்கும் பள்ளிக்கும் இடையே சுமார் ஐந்து அல்லது ஆறு கிமீ தூரம் நடந்தே செல்லவேண்டும். விடுதி அப்போது சென்னை கோடம்பாக்கத்தில் இருந்தது, பள்ளியோ சைதாப்பேட்டை அருகில் நந்தனம் எனுமிடத்தில் இருந்தது. இத்தனை தூரமும் நடந்துசென்று பல்வேறு அசௌகரியங்களின் மத்தியிலும் கல்வி பயின்று வந்த நாகராஜுக்கு முத்தையா என்றொரு க்ராஃப்ட் ஆசிரியர். அவர் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு மாத்யூவாக மாறியிருந்தார்.
அவர் தினமும் தனது மாணவர்களுக்கு ஆண்டவருடைய அன்பைக் குறித்து சொல்லிவருவார். சிறுவன் நாகராஜும் அவ்வாறு நற்செய்தியைக் கேள்விப்பட்டாலும் அத்தனை ஆர்வம் காட்டியதில்லை. சில சமயம் மாணவர்கள் அந்த ஆசிரியரை கிண்டல் செய்வார்கள். சிறுவன் நாகராஜையும் கூட அவனுடைய தோற்றத்தை வைத்து மாணவர்கள் பரியாசம் பண்ணுவார்கள். ஆனாலும் நாகராஜ் அமைதியாகவே இருப்பான். காலப்போக்கில் ஆசிரியர் முத்தையா மேத்யூ மூலம் கேள்விபட்ட கிறிஸ்துவின் நற்செய்தி அவன் உள்ளத்தைத் தொட்டது. ஒருகட்டத்தில் அருகிலுள்ள ஏஜி சபைக்கு செல்லத் துவங்கினான். அப்போது ஏஜி சபை ஒரு சிறிய ஷெட்டில் நடைபெற்றது. கூவம் நதிக்கரையினிலே அமைந்திருக்கும் வாழைமரங்களே அப்போது அதன் அடையாளமாம்.சிறுவன் நாகராஜுடன் அவனுடைய நண்பனும் அந்தகால ஏஜி சபைக்கு செல்லுவதுண்டு.அங்கேயே நாகராஜ் ஞானஸ்நானம் பெற்றான்.
காலம் எனும் வல்லோன் வழக்கமாக எல்லா நண்பர்களையும் பிரிப்பது போலவே இந்த மாணவர்களையும் பிரித்துப்போட பல வருடங்கள் கழித்து நாகராஜ் எனும் வாலிபனின் சாயலில் ஒருவரை அவனோடு படித்த நண்பன் அடையாளங்கண்டு அருகில் சென்று சற்று அச்சத்துடன், நீங்கள் நாகராஜ் தானே என்று விசாரிக்க அன்றைய சிறுவனும் இன்றைய பிரபல பாஸ்டருமான நண்பருக்கு தாங்கொண்ணா சந்தோஷம். அப்போது (1997 ?) அவருக்கு காலில் விபத்து ஏற்பட்டு ஒரு ஊன்றுகோலுடன் வந்திருந்ததாக அவருடைய நண்பர் சொல்லுகிறார். (அந்த விபத்து காரணமாகவே அவர் சற்று தாங்கி நடக்க நேர்ந்தது.)
ஒன்றாகப் படித்தாலும் இடையே தொடர்பு விட்டுப்போனது. ஆனாலும் தனது நண்பன் நாகராஜ் டாக்டர் ஜஸ்டின் பிரபாகர் சபைக்கு செல்லுவதாகவும் அவரது மரணத்துக்குப் பிறகு அந்த சபையை நடத்துவதாகவும் இன்றைக்கு சென்னையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்த ஒரு சபைக்கு பாஸ்டராக இருப்பதாகவும் வெவ்வேறு காலக் கட்டத்தில் தகவல் பெற்றவண்ணமாக இருந்தார்,அவருடைய நண்பர். இருவருமே சென்னையிலேயே எதிரெதிர் திசைகளில் பொறுப்பான ஊழியங்களில் இருந்தாலும் அதிகமாக தொடர்புகொள்ளும் வாய்ப்பு கிட்டவில்லை. ஆனாலும் அவர்களுக்குள் அன்பின் ஐக்கியம் இருந்திருக்கிறது. இன்றைக்கோ தம்மோடு சிறுவயதில் ஒன்றாக கல்வி பயின்ற நண்பன் நாகராஜ் தனது ஊழியப் பயணத்தில் வெற்றிபெற்றதுடன் தனது விசுவாச ஒட்டத்தையும் நிறைவுசெய்துவிட்டார் எனும் செய்தி அவருடைய நண்பருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இருவருக்கும் சில மாதங்களே இடைவெளியாகும். வயது 53.
நாகராஜ் எனும் மாணவன் அண்மையில் சென்னையில் கர்த்தருக்குள் நித்திரையடைந்த பாஸ்டர் பால் மோசஸ் டேனியல் மற்றும் அவருடைய நண்பர் அட்வெண்ட் சபையின் வட்டாரப் போதகரான அருள்திரு விஜயசீலன் ஐயா அவர்கள்.
மாணவப் பருவத்தில் முத்தையா மேத்யூ எனும் க்ராஃப்ட் ஆசிரியரால் ஊன்றப்பட்ட கிறிஸ்துவின் நற்செய்தி எனும் வித்தானது வளர்ந்து எத்தனை மேன்மையான பலனைக் கொடுத்திருக்கிறது என்றெண்ணும்போது ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்த செய்தியைக் கேள்விபட்டபோது நான் யோசித்தது, இதுதான்,சென்ற தலைமுறையில் நடைபெற்ற இதுபோன்ற தனித்தாள் ஊழியம் இன்றைக்கு நடைபெறுகிறதா என்பதே. அடுத்தது சிறுவயதில் அவ்வளவு சிரமப்பட்டாலும் தனது வாழ்க்கையை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்துவிட்டால் அவர் எத்தனை மேன்மையாக உயர்த்துகிறார் என்பது. மேலும் நம்முடைய சிறுவயது நண்பர்கள் இத்தனை அருகிலிருந்தும் அவர்களோடு சரியான தொடர்பை வைத்துக்கொள்ளாத நிலையில் திடீரென நாம் இனி ஒருபோதும் அவர்களை சந்திக்கமுடியாத நிலை ஏற்படுமானால் அது எத்தனை துக்ககரமானது என்பதையும் கவனிக்கவேண்டும்.
பின்குறிப்பு:
# ஆசிரியர் முத்தையா மேத்யூ அவர்கள் தற்போது பாண்டிச்சேரியில் ஊழியம் செய்கிறாராம்.
# பாஸ்டர் பால் மோசஸ் டேனியல் அவர்களோடு அடியேனுக்கு இதமான நட்பு இருந்தது. எங்கே சந்தித்தாலும் பண்புடனும் அழகான சிரிப்புடனும் என்னை அன்போடு விசாரிப்பார். ஊழியர்களில் பெரியவர் - சிறியவர் வித்தியாசம் பாராமல் எல்லோருடனும் எளிமையாகப் பழகுவார்.அவருடைய மறைவு ஆவிக்குரிய திருச்சபைகளுக்கு பேரிழப்பு என்றால் அது மிகையல்ல.