நாம் அன்றாடம் சாலைகளில் பார்க்கக்கூடிய ஒரு காட்சியிலிருந்து ஒரு செய்தி...
ஒரு இளம்பெண் சாலையில் தனியே நடந்துசெல்லுகிறாள். அவளை பின் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய ஒரு வாலிபன் செல்லுகிறான்.அடையாளம் தெரியாத ஒருவன் தன்னை பின் தொடர்வதை கவனித்துவிட்ட இளம்பெண் என்ன செய்வாள் ? அவள் தன் வேகத்தைக் கூட்டமாட்டாள்.அது அவளுக்கு கௌரவப் பிரச்சினையாக இருக்கும். ஓடவும் முயற்சிக்கமாட்டாள்.அது அவளுக்கு சங்கடத்தையே தரும்.ஏனெனில் அவளைத் தவிர அவள் பிரச்சினை யாருக்கும் தெரியாது. நடந்துசென்று கொண்டிருந்த ஒரு பெண் திடீரென ஓடினால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் ? அது வேடிக்கையாக இருக்கும். முன்பின் தெரியாதவர்களிடம் சென்று உதவிகேட்கவோ புகார் செய்யவோ அவளுக்கு விருப்பமில்லை.ஏனெனில் ஒருவேளை அவள் அவ்வாறு புகார் செய்தால் அந்த வாலிபன் சட்டென சுதாரித்துக்கொண்டு தன் பாதையையும் பார்வையையும் மாற்றிக்கொள்ளுவான்.
இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு இளம்பெண் எப்படி நடந்துகொள்ளுவாள் ? தற்கால கன்னியர்கள் கடைபிடிக்கும் தந்திரம் என்ன தெரியுமா ? அவர்கள் டென்ஷன் ஆகிறதே இல்லை. சிம்பிளாக தங்களிடம் இருக்கும் மொபைல் போனை எடுத்து யாருக்கோ போன்செய்வது போல பாவனை செய்துகொண்டே ஸ்டைலாக நடந்துபோகிறார்கள்.எப்பேர்பட்ட வில்லன் அவளைத் தொடர்ந்து வந்தாலும் உடனே அவன் விலகி ஓடுகிறான்.இன்னும் சொல்லப்போனால் காதில் போனை வைத்துக்கொண்டு இருக்கும் பெண்ணுக்கு எந்த இளைஞனும் ரூட் போடுவதே இல்லை.
சின்னஞ்சிறு கன்னியரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடம் என்ன ? பிரச்சினையான நேரத்தில் ஒரு விசுவாசியும் இப்படியே செயல்படவேண்டும்.நீ பிரச்சினையோடு போராடவும் வேண்டாம்,அதைவிட்டு ஓடவும் அவசரப்படவேண்டாம். சிம்பிளாக நீ செய்யவேண்டியது, உன்னை நேசித்து அழைத்து பரிசுத்தமாக்கி உன்னோடு இருக்கும் உன் இரட்சகருக்கு ஒரு போன் போடவேண்டும். அவர்கிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட தொலைபேசி எண்கள் இருக்கிறது.அதன்வழியே நல்ல செய்தியும் பாதுகாப்பும் இருக்கிறது. 33:3 / 50:15 / 90:15 இப்படி எந்த எண்ணைத் தொடர்பு கொண்டாலும் உடனே உதவி கிடைக்கும்.
எரேமியா 33:3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
சங்கீதம் 50:15ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
சங்கீதம் 91:15அவன்என்னைநோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
பிரச்சினையோ, பிசாசோ, பிசாசினால் வந்த பிரச்சினையோ, பிரச்சினை செய்ய வந்த பிசாசோ கவலையே வேண்டாம், அவனையோ- அதையோ கொஞ்சமும் பொருட்படுத்தாமல் உன் தேவனை நோக்கிப் பார்த்து துதிக்கத் துவங்கினால் பிசாசானவன் ஓடியே போவான். அவனை எதிர்ப்பது என்பது அவனோடு சண்டைபோட்டு அவனைக் குறித்து பேசிக்கொண்டிருப்பதல்ல. அவனுக்கு (முதுகைக் காட்டி) எதிர்திசையில் திரும்பி அங்கே உனக்காகக் காத்திருக்கும் இரட்சகரை நோக்கி பார்ப்பதே. அவரைத் துதிக்கத் துவங்கினாலே தெம்பு தன்னாலே வரும்.வம்பு ஓடியே போகும். எனவே சாமர்த்தியம் இருப்பவர்கள் பிசாசுடன் எதிர்த்து நின்று போராடுங்கள்; பெலவீனமாக இருந்தால் பரவாயில்லை, ஆண்டவரை துதிக்கத் துவங்குங்கள். வெற்றி நிச்சயம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)