Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாராட்டுக்களை எதிர்கொள்வது எப்படி..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
பாராட்டுக்களை எதிர்கொள்வது எப்படி..?
Permalink  
 


பாராட்டுக்களை எதிர்கொள்வது எப்படி..?

by Yauwana Janam on Friday, 4 May 2012 at 22:40 ·

Peter Samuel S

19 hours ago 

    பாராட்டுக்களை எப்படி எதிர்கொள்வது என்று எனக்கு உண்மையாகவே தெரியவில்லை... மனதை கர்வம்கொள்ளவும் விடக்கூடாது, அதேநேரம் பாராட்டுபவரை கண்டுகொள்ளாமல் விட்டால் பாராட்டுபவர் மனம் புண்படும் என்ற எண்ணம்.... மாயமான தாழ்மையையும் காண்பிக்கக்கூடாது... பாராட்டுகளை எதிர்கொள்வது எப்படி என்று ஒரு note யாராவது எழுதினால் உபயோகமாக இருக்கும்...!

    பாராட்டைக்குறித்து ஒரு குட்டி கதை:

    ஒரு மிகப்பெரிய ஊழியர் பிரசங்க பீடத்திலிருந்து இறங்கிய உடன், அவரது நண்பர் ஓடிச்சென்று, நண்பரே, இன்றைய உங்கள் பிரசங்கம் மிகவும் அருமை என்றாராம்.. உடனே அந்த ஊழியர் சட்டென்று, இதே பாராட்டை ஏற்கனவே பிசாசு தந்துவிட்டான் என்றாராம்...

     எனவே பாராட்டு என்றாலே எனக்கு சற்று பயம்தான்...!!!

 மேற்கண்ட கருத்து எனது அருமை நண்பர் பீட்டர் சாமுவேல் அவர்கள் வெளியிட்டதாகும்.அதில் நண்பரின் கருத்துடன் ஒரு கோரிக்கையும் இருப்பதால் அதனை நிறைவேற்றும் முகனாக என்னாலியன்ற கருத்துக்களை எழுத துணிந்தேன்.இது எந்த அளவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று தெரியாவிட்டால் எனக்கும் கொஞ்சம் விஷயம் தெரியும் என்ற மேதாவித்தனத்தைக் காட்டுவதற்காக எழுதுகிறேன்.(?!) நான் எப்போதுமே மற்றவருடைய காரியங்களை அலசி ஆராய்ந்து விமர்சித்து வருவதால் என் சார்பில் எந்த கட்டுரையையும் போதனையையும் தரும் உரிமையற்றவனைப் போல சங்கடப்படுவதுண்டு. பிரச்சினை ஒன்றும் இல்லை,மற்றவர்களை விமர்சிக்கும் நான் எதாவது ஒரு போதனையையோ அல்லது உபதேசத்தையோ செய்யத்துவங்கி மற்றவர் அதை விமர்சிக்கும் நிலைக்கு ஆளாவதை விரும்பவில்லை எனலாம்.ஓகே...ஆவது ஆகட்டும்...இதோ என்னுடைய கருத்து..!

முதலாவது நண்பர் பீட்டர் அவர்கள் எந்த சூழலில் பாராட்டப்பட்டார் என்பதைத் தெரிவிக்கவிட்டாலும் அவர் பாராட்டு பெற்றது குறிப்பிட்டதொரு ஜெபக் கூட்டத்தில் செய்தியளித்தவுடனே என்று கொள்வோம். அதன் அடிப்படையில்  முதலில் பாராட்டுகளைத் தவிர்க்கும் ஒரு சிறப்பான யோசனையை தெரிவிக்கிறேன்.உலகப் பிரகாரமான மக்களுக்கு பாராட்டு என்பது உற்சாக டானிக் ஆகும். பாடகர்கள்,நடன கலைஞர்கள்,கவிஞர்கள்,பேச்சாளர்கள்,நடிகர்கள்,இசைக் கலைஞர்கள் இப்படி ஒவ்வொரு தளத்திலிருந்தும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவோர் அதன்மூலம் பெறக்கூடிய பணத்தைவிட பாராட்டுரைக்கே அதிகமாக ஏங்குவர்.அதே நேரத்தில் விமர்சனத்தை சரியான நோக்கில் எடுத்துக்கொள்ளாமல் சோர்ந்து போகிறவர்களாகவும் எதிர்தாக்குதல் நடத்தி விமர்சனங்களுக்கு உள்நோக்கம் கற்பிக்கிறவர்களாகவும் காணப்படுவோரும் உண்டு. நான் ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணமாக நண்பர் பாராட்டப்படும் களம் பிரசங்கபீடமாக இருக்கவேண்டும் என்பது என்னுடைய கணிப்பு.எனவே அதனடிப்படையிலேயே எனது கருத்து அமைகிறது. பாராட்டப்பட்டு அதனை ஏற்க தவிப்பதைவிட பாராட்டப்படாதிருக்க ஆவன செய்யவேண்டும் என்றேன். அது எப்படி என்று பார்ப்போம்.

ஒரு நற்செய்தியாளன் பகிர்வது இறைசெய்தியாக இருக்குமானால் அதற்காகப் பாராட்டப்படுவது சரியல்ல. அப்படியே அவர் பாராட்டப்படுவதைத் தவிர்க்கவேண்டுமானால் செய்தியளித்து முடிந்ததும் அமர்ந்துவிடாமல் கூட்டத்தினரிடம் ஆல்டர் கால் எனப்படும் அர்ப்பண அழைப்பை விடுக்கலாம். இதன்மூலம் பாராட்டுவோர் எண்ணிக்கை குறைவதுடன் மக்களுக்கு உங்கள் மீது ஒருவித மரியாதையும் அச்சமும் (பயபக்தி ?) ஏற்படும். அதாவது ஊழியன் என்பவன் மக்களிடத்திலிருந்து தேவக் காரியங்களுக்காக தேவனால் அழைக்கப்பட்டு தேவசெய்தியை சுமந்துவருகிறான். அவனை மக்கள் பாராட்டுகிறார்கள் என்றால் உடனடியாக நாம் யூகிக்கலாம், அவனால் கொடுக்கப்பட்ட தேவசெய்தியானது நம்முடைய மூளையறிவினால் கொடுக்கப்பட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். எனவே தேவபயம் இல்லாமல் பாராட்ட துணிகிறார்கள். மெய்யாகவே கொடுக்கப்பட்டது கர்த்தருடைய வார்த்தை என்று அவர்கள் நினைத்தால் சுயபரிசோத்னை செய்வதுடன் தாழ்த்தி ஜெபிக்க முன்வருவார்கள். நம்முடைய செய்திக்கு மார்க் போடுவதற்காக நாம் பேசவில்லை என்பதை நம்முடைய அணுகுமுறையே உணர்த்தியாகவேண்டும்.அந்த வகையில் நம்மிடமும் தவறு இருக்கிறது. இதன் காரணமாகவே பாராட்டு பெறமாட்டோமா என்ற ஏக்கமும் பாராட்டப்படும்போது கூச்சமும் ஏற்படுகிறது.ஆண்டவர் இதுபோன்ற சூழ்நிலைகளை எப்படி எதிர்கொண்டார் என்று பார்ப்போம்.

மத்தேயு 22:16 தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவையில்லையென்றும் (அக்கறையில்லையென்றும்) அறிந்திருக்கிறோம்.

இது ஆண்டவரைப் பாராட்டி சொல்லப்பட்டது. ஆனால் இங்கே இந்த சூழமைவில் ஆண்டவர் பாராட்டின் பின்னணியையும் நோக்கத்தையும் ஆய்ந்தறிந்தவராக பதிலிறுப்பதைப் பார்க்கிறோம்.

(18. இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?)

இதேபோல பல்வேறு சூழலில் ஆண்டவருடைய அணுகுமுறை எப்படியிருந்ததோ அதையே நற்செய்தியாளர்களும் பின்பற்றவேண்டும்.நம்மை பாராட்ட ஒருவர் முன்வரும் போது நீயும் போய் அப்படியே செய் என்று நம்முடைய ஆண்டவரைப் போல சொல்லிவிட்டு திரும்பிவிடவேண்டும். அதிகபட்சமாகக் கண்களை மேலே உயர்த்தி தேவனுக்கு மகிமை செலுத்தலாம்.அப்போது தானே நாம் மாயமாக அதைச் செய்வதாக நம்முடைய உள்ளான மனுஷன் சொன்னால் அது பிசாசின் எரிச்சலிலிருந்து வருவதாக தைரியமாக சொல்லலாம். ஏனெனில் குற்றஞ்சாட்டுகிறவனும் பரியாசக்காரனும் சுயபரிதாபத்தையும் ஏக்கத்தையும் பொறாமையையும் தூண்டுகிறவனுமாக இருப்பவன் பிசாசே.

அதே நேரத்தில் பிசாசு ஏற்கனவே பாராட்டி விட்டான்  என்று அந்த பெரியவர் சொன்னதும் தேவையற்றது. அது நம்மை உற்சாகப்படுத்துவதற்காக முன்வந்தவரின் உணர்வுகளைப் புண்படுத்துமே என்று யோசிக்கவேண்டும். சில பெரியவர்கள் இப்படியே டோன்கேர் பாலிஸியில் தனித்து நிற்பார்கள்.தேவனை மக்களிடத்தும் மக்களை தேவனிடத்தும் சேர்ப்பதே செய்தியாளரின் முக்கிய கடமையாக இருக்கவேண்டுமே தவிர தேவனுடைய சார்பில் நின்று மக்களைக் கடித்து பட்சிக்கக்கூடாது. நாம் இணைக்கும் பாலமாக இருக்கவேண்டுமே தவிர எந்தவகையில் சமநிலை பாதிக்கும் வண்ணமாக உயர்வுமனப்பான்மைக்கு செல்லவே கூடாது. எனவே பாராட்டப்படும்போது அது எப்படிப்பட்ட பாராட்டு என்பதை பரிசுத்தாவியானவரின் துணையுடன் அலசவேண்டும். சீடர்களும் கூட ஆண்டவரைப் பாராட்டினார்கள்.அப்போது ஆண்டவர் அதனை எவ்வாறு எதிர்கொண்டார் ?

சீடர்கள் : “பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.”

இயேசுவானவர் : “ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.” (லூக்கா.10: 17 & 20)

மெய்யாகவே வசனத்தினால் தொடப்பட்டவர்களாக சிலர் முன்வந்து பாராட்டுவதைப் போல சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டால் அவர்களுடைய உணர்வுக்கு மதிப்பு கொடுத்து இன்னும் அதிக ஆலோசனைகளைத் தரும்வண்ணமாக சற்று உரையாடலாம்.வேறு சிலர் ஆர்ப்பாட்டமாக, ”அண்ணே, இன்னிக்கு அடிச்சு நொறுக்கிட்டீங்களே... ” என்பது போல எதையாவது கூறி புகழுவதற்கு முயற்சித்தால் நிச்சயமாகவே அவர்களிடம் கண்டிப்புடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்ளவேண்டும். முக்கியமாக அவர்களிடம் நெளியவோ குழையவோ கூடவே கூடாது. ஏனெனில் நம்முடைய ஆண்டவர் தெளிவாக சொல்லியிருக்கிறார்,

மத்தேயு 10:20 பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.

உதாரணமாக லஞ்சத்தைக் குறித்து அல்லது பொருளாசையைக் குறித்து பேசுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்,அப்போது ஒரு சிலர் நம்மைப் பாராட்ட முன்வருவார்கள்.அவர்கள் பாராட்டில் ஒருவித குற்ற உணர்வு காணப்படுமானால் பாராட்டைப் புறக்கணித்துவிட்டு லஞ்சம் மற்றும் பொருளாசையின் பயங்கரத்தைக் குறித்து இன்னும் சில வார்த்தைகளை பதிலாகச் சொல்லலாம்.அல்லது இதுபோன்ற செயல்களால் பாதிக்கப்பட்டவராக ஒருவர் முன்வந்து பாராட்டுவாரானால் அவருக்கு ஆறுதலையும் சமாதானத்தையும் கூறவேண்டும்.எந்த நிலையிலும் நம்முடைய பாராட்டுக்கு நன்றி என்ற வார்த்தையை சொல்லவே கூடாது.ஏனெனில் செய்தியாளர் நாம் அல்ல,நம்முடைய திறமை அல்ல,நம்முடைய ஞானம் அல்ல...அது தேவகிருபை அல்லவா ? எனவே தேவனுக்கு மகிமையை செலுத்தும்வண்ணமாகவே நம்முடைய பதிலுரை இருக்கவேண்டும். அதேபோல நாம் அமர்ந்ததும் நிறைவுரை ஆற்ற வருபவர் நீட்டி முழக்கி நம்மை பாராட்டத் துவங்கிவிட்டால் அப்போது கையை மேலே உயர்த்தி கண்களை மூடிக்கொள்ளவேண்டும். பாராட்டுரைகளுக்கு செவிசாய்க்காமல் கர்த்தரைத் துதிக்கவேண்டும்.அப்போதும் நமக்குள்ளிருந்து நாம் மாயம் பண்ணுகிறோமோ அல்லது நடிக்கிறோமோ என்று ஒருவித உணர்வை சாத்தான் கொடுப்பான்.அதைப் பொருட்படுத்தாமல் மக்களுடைய ஆர்வத்தையும் தவிப்பையும் கவனித்து அந்த மக்களுக்காக ஜெபிக்கத் துவங்கிவிடவேண்டும். அதேநேரத்தில் எதிர்கருத்துக்களை நேர்மையுடன் எதிர்கொள்ளவேண்டும். சிலசமயம் நம்மைத் தொடர்ந்து வருபவர் தன்னுடைய சாமர்த்தியத்தைக் காண்பிப்பது போல நாம் கொடுத்த செய்திக்கு சற்றும் பொருத்தமில்லாத கருத்துக்களைக் கூறி மக்களுடைய கவனத்தை திசைதிருப்ப முயற்சிப்பார்.இதனைத் தவிர்க்கவே நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஆல்டர் கால் எனப்படும் அர்ப்பண அழைப்பைக் கொடுக்கவேண்டும்.முழு அதிகாரத்துடன் ஒரு ஜெபத்தை செய்து அனல் குறையாத நிலையில் ஆராதனைப் பொறுப்பாளரிடம் மீதமான நேரத்தை ஒப்படைக்கவேண்டும்.

இப்படியாக ஒரு நற்செய்தியாளரின் பார்வையில் பாராட்டு என்பது எப்படிப்பட்டது என்பதும் அதனை அவர் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதும் பரிசுத்தாவியானவரின் துணையுடன் அணுகப்படுமானால் நிச்சயமாகவே தேவனுடைய நாமம் நம்மூலம் மகிமைப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

https://www.facebook.com/spetersamuel/posts/292845187471010



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard