சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே தொண்டர்கள் முன்னிலையில் கிராமவாசி ஒருவர் தகராறில் ஈடுபட்டதால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தை பாதியில் முடித்து கிளம்பினார். விஜயகாந்த், கடையாலுருட்டியில் பிரசாரம் செய்தார். வாகனத்திலிருந்தபடி அவர் பேசும் போது, ""இடைத்தேர்தலுக்கு பின் மின்வெட்டு அதிகரிக்கும் என்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி, அதிகளவு மின்வெட்டு ஏற்படுகிறது,'' என்ற போது, குறுக்கிட்ட கிராமவாசி ஒருவர்,""மின்சாரம் இருக்கிறதால தானே நீங்க பேசுறீங்க,'' என்றார்.
இதை கேட்டு எரிச்சலான விஜயகாந்த், ""யாரு நீங்க...'' என, அவரை நோக்கி கேட்க, ""எங்க ஊர்ல வந்து என்னை கேட்க, நீங்க யாரு...'' என, கிராமவாசி பதில் கூற, ""மேல வா'' என, சூடானார் விஜயகாந்த். அதே சூட்டுடன், ""நீ... கிழே வா'' என்றார் கிராமவாசி. வாக்குவாதம் கடுமையாக, கிராமவாசியை போலீசார் அமைதிபடுத்தினர். போலீசாரை சூழ்ந்த தே.மு.தி,க.,வினர், "நாங்கள் போகும் இடமெல்லாம்... ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள்; முதல்வர் ஜெ., வரும் போது நாங்களும் பதிலுக்கு செய்வோம்,' என்றனர். "சம்மந்தப்பட்ட நபர், கட்சியை சார்ந்தவர் அல்ல,' எனக்கூறிய போலீசார், தே.மு.தி.க., வினரை சமாதானப்படுத்த முயன்றனர்.தகராறை தொடர்ந்து, தன் பிரசாரத்தை முடித்த விஜயகாந்த், அடுத்த பகுதிக்கு கிளம்பிச்சென்றார்.