தினமும் ஒரு பாக்கெட் : சிகரெட் பழக்கத்தை கைவிட்டான் 8 வயது சிறுவன்
ஜகார்தா: இந்தோனேஷியாவில் பெற்றோருடன் வசிக்கும் 8 வயது சிறுவன் இல்ஹாம் தொடர் புகைப்பழக்கத்துக்கு அடிமைப்பட்டிருந்தான்.அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த 4 வருடங்களாக குழந்தையின் இப்பழக்கத்தை நிறுத்த பல முயற்சிகளை மேற்கொண்டும் அவனால் புகைப்பதை நிறுத்த முடியவில்லை. சிகரெட் கொடுக்காவிட்டால் அழுது புரண்டு தான் நினைத்ததை சாதித்துக் கொள்வான். தினமும் குறைந்தது ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதித் தள்ளுவது வழக்கமாக இருந்தது.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான பெற்றோர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டனர். இந்நிலையில் தனது 4 வருட இந்த பழக்கத்தை தற்போது சிறுவன் விட்டுவிட்டான். அந்நாட்டு குழந்தைகள் நலவாழ்வு மையம் கடந்த மார்ச் மாதம் முதல் இல்ஹாமுக்கு அளித்த தொடர் சிகிச்சையில் தற்போது அவன் இப்பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டுள்ளான் என்று குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.