என் மனைவி ஒரு B.E., நான் ஒரு A.M.I.E பயிற்சி முடித்தவன் எம்.ஏ முடிக்கவும் தேவன் வாய்ப்பைக் கொடுத்தார். இத்தனையும் முடித்த எங்களை ஒரு சிறுவர் மிஷினரி ஸ்தாபனத்திற்கு ஊழியர்களாக தேவன் அழைத்தார். பலர் எங்களை கேலி பண்ணின போதிலும், நானும் என் மனைவியும் தைரியமாக எங்கள் ஊழியத்தை நிறைவேற்றி வந்தோம். என்னுடைய சம்பளம் ரூபாய் 1100. என் மனைவிக்கு உதவித் தொகை ரூபாய் 350 மட்டுமே. எங்கள் குடும்ப வாழ்க்கை பண நெருக்கடியில் சென்றாலும், மன நிறைவுக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவில்லை.
பூனா பகுதியில் வசித்து வந்தோம். திருமணமான 2 ஆண்டுகளில் எங்கள் மகள் பிறந்தாள். அந்தக் குறைந்த சம்பளத்தில், ஒவ்வொரு நாளும் குறைவின்றி எங்கள் வாழ்க்கை கடந்து சென்றது. சில வேளைகளில் எங்கள் வருமானம், ஒரு கேள்விக்குறியாகவே எங்களுக்கு இருந்தது. "கடனே வேண்டாம்" என்ற வேத உண்மையை நாங்கள் நினைவு கூர்ந்து கடைப்பிடித்தோம்.
எனது மகள் பிறந்த அடுத்த ஆண்டே மகனும் பிறந்தான். எங்கள் இயக்கத்தில் சம்பளம் அதிகம் கூட்டுவதில்லை. ஆகையால் அவன் பிறப்பதற்கு முன்பாக எங்கள் செலவினங்களை அதிகம் யோசித்தோம்!
என் மகன் பிறந்தபின், நானும் என் மனைவியும் உட்கார்ந்து செலவைக் கணக்கிட்டு குறைக்க ஆரம்பித்தோம். குட்டிப் பையன் பிஸ்கட் சாப்பிட ஆரம்பித்த நாட்கள் அந்நாட்கள்! அவனுக்கு தினமும் பிஸ்கெட் கொடுத்தால், மாதம் ரூபாய் 200 பற்றாக்குறை விழுவதைக் கணக்கிட்டோம். அதை எப்படி சமாளிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை.
ஓர் இரவு, எங்களுடைய குடும்ப ஜெபம் முடிந்த பின், இரண்டு பிள்ளைகளையும் தூங்க வைத்தோம். பின்னர், நாங்கள் இரண்டு பேரும் மாறி மாறி எங்கள் தேவைக்காக ஜெபிக்க ஆரம்பித்தோம். ஜெபம் முடிந்தவுடன் என் மனைவியிடம் "நீயோ கடன் வாங்காதிருப்பாய்" (உபாகமம் 28:12) என்ற வசனத்தை மூன்று தடவை வாசித்தேன். பின் என் மனைவி தூங்க சென்று விட்டார்கள். அதிகாலையில் எழுந்தவுடன் என் மனைவியுடன் ஜெபித்தேன். ஜெபித்து முடிந்தவுடன் "நீயோ கடன் வாங்காதிருப்பாய்" என்று மறுபடியும் சொன்னேன். அப்போது என் மனைவியின் முகத்தில் கலக்கம் இருப்பதைக் காண முடிந்தது.
நம் பிள்ளைகளுக்கு கொடுக்கும் பிஸ்கட்டை ஏன் நிறுத்திவிடக் கூடாது? என்று கேட்டதும் என் மனைவியின் கன்னத்தில், கண்ணீர்த்துளிகள் விழுவதைக் கண்டேன். உடனே அந்த சம்பாஷனையை அப்படியே நிறுத்திவிட்டேன். வெளியே சென்று வீடுகளைச் சந்திக்கின்ற பணி இருந்தது. ஆனால் எனக்குப் போக மனமில்லை. சமையலுக்காக வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக் கொடுத்தேன். பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
எப்போதும் பிள்ளைகளுக்கான பிஸ்கட்டை நான்தான் வாங்கிக்கொண்டு வருவேன்! அன்றுநான் வாங்கச் செல்லவில்லை.
மாலை சுமார் 4 மணி இருக்கும்.. எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு நண்பர் எங்களைப் பார்க்க மனைவியுடன் வந்தார்கள். வந்தவர்கள், பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடும் மில்க் பிஸ்கட் 2 பாக்கெட் தந்தார்கள்.
"என்ன விஷேம்?" என்று கேட்டேன்.
"இன்று எங்கள் திருமண நாள்.. நீங்கள் உங்கள் வீட்டில் இருப்பதைக் கண்டோம். எங்களுக்காக ஜெபியுங்கள்!" என்றார்கள். என் கண்களில் கண்ணீர் மல்கியது. ஜெபித்து அனுப்பினோம். அந்த நாளிலிருந்து, இப்படி எங்களைப் பார்க்க வருகிறவர்கள் எல்லோருமே எங்கள் பிள்ளைகள் சாப்பிடும் பிஸ்கட்டுகளையே வாங்கிக் கொண்டு வந்தார்கள். ஒரு நாள் கூட எங்கள் பிள்ளைகளுக்கு பிஸ்கட் இல்லாமல் இருந்ததே இல்லை. இது எங்களுக்கு இன்றுவரை ஆச்சரியமாக இருக்கிறது.
வேத புத்தகத்தின் தேவன் உண்மையுள்ளவர் என்பதை நாங்கள் அடிக்கடி ருசித்து வருகிறோம்.
இன்று எங்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இதுவரை நாங்கள் வசனத்திற்குக் கீழ்ப்படிந்து, எங்கள் கொஞ்ச சம்பளத்தில் எளிமையாக வாழ்ந்து வருகிறோம். கடன் வாங்கியதில்லை. பிள்ளைகளின் படிப்பு செலவின நேரங்களில் எல்லாம், அதிக நெருக்கங்கள் இருந்தது. ஆனால் தேவன் இதுவரை நடத்தியிருக்கிறார். என் மாமியாரிடமோ, என் பெற்றோரிடமோ நான் இதுவரை என் தேவையைச் சொன்னதே கிடையாது.
கடன் வாங்கி, தேவனுடைய வார்த்தையை மீறிக் கொண்டிருக்கும் நீங்கள். "நாங்கள் கடன் வாங்க மாட்டோம்" என்று ஏன் தீர்மானிக்கக் கூடாது? "நீயோ கடன் வாங்காதிருப்பாய்" (உபாகமம் 28:12)
இந்த வசனத்தைத் தாங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். "நீங்கள் கடன் வாங்க மாட்டோம்" என்று தீர்மானியுங்கள். தேவன் உங்கள் களஞ்சியங்களை நிரப்புவார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.