by Yauwana Janam on Monday, 13 February 2012 at 22:41
II தீமோத்தேயு 4:3 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு...
ஒரு குறிப்பிட்ட கருத்துக்கு பின்னூட்டமிடும்போது மேற்காணும் வசனத்துக்கு இருவேறு அர்த்தங்கள் வெளிபட்டது.அண்மையில் தசமபாகம் குறித்த சர்ச்சைகள் மீண்டும் சூடுபிடித்து வாதப் பிரதிவாதத்தின் முடிவில் ஆளைக் கொல்லமுடியாத காரணத்தினால் ஃபேஸ்புக் நாகரீகத்தின்படிப்ளாக் செய்யப்படுவதில் முடிந்தது. ஒருத்தர் கொலை (ப்ளாக்) மிரட்டல் விட்டிருக்க இன்னொரு இளவல் கொலை செய்துவிட்டார், ரொம்ப சந்தோஷம். கர்த்தர் எல்லாவற்றையும் நன்மைக்காகவே செய்வார் (அ) அனுமதிப்பார். தசமபாகம் குறித்த விவாதத்தில் நாம் எழுதியவற்றை தொகுத்து, ”ஓயாத ஒழுக்கு-தசமபாகம் குறித்த சர்ச்சை” - என்ற தலைப்பில் ஒரு கட்டுரையாகப் பதித்தோம். அதில் பின்னூட்டமிட்ட ஒரு நண்பர் பின்வருமாறு எழுத அதிலிருந்தே இந்த கட்டுரைக்கான சிந்தனை கிடைத்தது. அதாவது நண்பர் என்ன கூறுகிறார் என்றால்,
Ebi St /// my understanding of tithing:தசமபாகம் கொடுப்பதோ வாங்குவதோ தவறல்ல. It's not compulsory and at the same time if someone offers tithing according to their faith it's not wrong. It's better not to blame.ஆனால் அதே சமயம் யாரும் யாரையும் மிரட்டியோ,கட்டாயப்படுதியோ பெறுதல் தவறு. நிர்ப்பந்ததின் அடிப்படையில் மனதில்லாமல் கொடுத்தாலும்,கடமையாக கொடுத்தாலும் பயனில்லை ///
இனி நம்முடைய கருத்து: நல்லதொரு கருத்துக்காக நன்றி, நண்பரே. இதுகுறித்து நான் போதிக்கப்பட்ட அனுபவத்திலிருந்து சொல்லுகிறேன், தசமபாகம் என்பது ஆண்டவருக்குரியது. எனவே அதுகுறித்து விவாதிப்பதே தவறாகும். அதனை ஆண்டவருக்காகக் கொடுக்கிறேன் என்ற உணர்வுடன் கொடுத்தால் எந்த சர்ச்சையும் எழாது. ஆண்டவரை முன்னிட்டு கொடுப்போர் மனிதரிடமிருந்தல்ல, ஆண்டவரிடமிருந்தே அதற்கான பலனைப் பெறுவார்கள்.
”இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.” (1.நாளாகமம்.29:14)
இதில் நாம் கவனிக்கவேண்டிய இரு முக்கிய வார்த்தைகள், மனப்பூர்வமாகக் கொடுப்பது மற்றும் கர்த்தருக்கே கொடுப்பது. ஒரு தேசத்தின் தலைவனான தாவீது தானே இப்படி சொல்லியிருக்க ஒரு சிறிய தொகையை நாம் அப்பமும் ரசமும் எடுத்து ஐக்கியங் கொள்ளும் சபைக்குக் கொடுப்பதால் என்ன மேன்மை இருக்கமுடியும் ? இதுபோன்ற சர்ச்சைகளுக்குக் காரணமே வன்கண்ணுடன் ஆலயத்துக்குச் செல்லுவோரின் மேதாவித்தனமே. நம்முடைய தேவன் பழைய ஏற்பாட்டுக்கு மாத்திரமல்ல, புதிய ஏற்பாட்டுக்கும் தேவனாக இருக்கிறார், என்பதற்கு ஆதாரமாக ஒரு சம்பவம் புதிய ஏற்பாட்டு காலத்தில் நடந்தது...
”அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்னும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.” (அப்போஸ்தலர்.5:4)
பிரமாணங்களும் ஆராதனைகளும் முடிந்துவிட்டது என்று கருதப்பட்ட புதிய ஏற்பாட்டு காலத்தில் ஆண்டவர் ஏன் இத்தனை கோபமானவராகத் தன்னை வெளிப்படுத்தினார் என்று யாருமே யோசிக்கவில்லையே. ஆம், தேவனுடைய காரியத்தில் வஞ்சிப்போருக்கு எதிராக பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று வேறுபாடு கிடையாது என்பதே அறியப்படவேண்டிய செய்தியாகும். தற்காலத்தில் அதே ஆண்டவர் நம் மத்தியில் இருந்தாலும் அவர் இருப்பதையே கருத்தில் கொள்ளாமல் யோபுவின் நண்பர்களைப் போல அவரவர் சாமர்த்தியத்தையும் உலக ஞானத்தையும் பிரஸ்தாபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கர்த்தருக்குக் கொடுப்பதைக் குறித்து ஏன் இத்தனை சர்ச்சைகள் பரவியிருக்கிறது ? காணிக்கை கேட்கும் ஊழியர்கள் இதற்குக் காரணமா அல்லது தவறான இடத்தில் கொடுக்கும் விசுவாசிகள் காரணமா என்று யோசிப்போமானால் பிரச்சினை கேட்பவர்களிடம் இல்லை, கொடுப்பவர்களிடமே இருக்கிறது எனலாம். ஏனெனில் பெரும்பாலும் மக்கள் தங்கள் இருதயத்துக்கேற்ற போதகர்களைத் தேடிச்சென்று கொடுக்கவே விரும்புகிறார்கள். ஆனால் உண்மையான ஆசீர்வாதம் பெறவேண்டுமானால், அதாவது தசமபாகத்தினால் வரும் ஆசீர்வாதத்தை மாத்திரமல்ல, (எந்தவொரு கட்டளையானாலும்..) கீழ்ப்படிதலினால் வரும் ஆசீர்வாதத்தைப் பெற கர்த்தருடைய இருதயத்துக்கேற்ற போதகர்களை நாடிச் செல்லவேண்டும். அவ்வாறு மெய்யான தாகத்துடன் கேட்போமானால் நிச்சயமாகவே ஆண்டவர் நடத்துவார். ஏனெனில் மந்தை அவருக்கே சொந்தம்.
எரேமியா 3:15 உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்.
ஏசாயா 30:20 ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும்.
இதுவல்லவோ வாக்குத்தத்தம்... இது இல்லாவிடில் சாபத்தில் இருக்கிறோம் என்றல்லவா அர்த்தம்..? எல்லா போதகர்களும் மோசடியாளர்கள், திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என்று வாதிடுவதற்கு பதில் அழுது புலம்பினால் என்ன...ஊழியம் கர்த்தருடையதல்லவா..? சங்காரம் வருமளவும் ஏலீ ஆசாரியனாக தானே இருந்தார்... சவுல் ராஜாவும் அப்படியே...நாம் அவரிலும் பலவான்களா..? ஜீவனுள்ள தேவனுடைய கரங்களில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே..! காணிக்கை வாங்கும் (அ) கேட்கும் போதகர்கள் மோசமானவர்கள் என்று தீர்த்து காணிக்கை கேட்காத போதகர்களிடம் சென்று கழுதைகளைப் போல காகிதத்தை மெ(தி)ன்றுவிட்டு வருவானேன்... கர்த்தருடைய சபையை பாபிலோன் என்று தூஷிப்பானேன்..?
II தீமோத்தேயு 4:3 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,
திருச்சபையில் போதிக்கப்பட வேண்டிய உபதேசங்களில் எல்லாவற்றையும் போல ஈகையைக் குறித்த உபதேசமும் அவசியமே.இதில் புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடு என்றெல்லாம் எந்த வித்தியாசமும் இல்லை.எப்படி கொடுக்கவேண்டும்,ஏன் கொடுக்கவேண்டும் எங்கே கொடுக்கவேண்டும் என்பதை பிறிதொரு சமயத்தில் தியானிப்போம்.ஏனெனில் அது நம்முடைய மொத்த சமுதாயத்தின் குணாதிசயங்களில் ஒன்று அல்லவா..! ஆனால் தற்போது இந்த கட்டுரையின் தலைப்பு தொடர்பான கருத்துக்களுடன் சுருக்கமாக நிறைவுசெய்வோமாக.
பொதுவாகவே செவித்தினவு எனும் வார்த்தையை அந்திகிறிஸ்துவின் ஆவியினால் பீடிக்கப்பட்டு திருச்சபைக்கு எதிராக போரிடுவோரே பவுலடிகள் கூறிய சூழமைவிலிருந்து திசைதிருப்பி அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.இந்த் வார்த்தையை இன்னும் செக்ஸியாக, காது அரிப்பு (இச்சிங்) என்றும் குறிப்பிடுகிறார்கள். உண்மையிலேயே இந்த காது அரிப்பெடுத்தவர்கள் யார் என்பதையே வேத வசனத்தின் வெளிச்சத்தில் வெளிப்படுத்தப்போகிறோம். எப்படியெனில் காணிக்கை சம்பந்தமான குற்றச்சாட்டில் கேட்பவர் <->தருபவர் / கொடுப்பவர் <-> பெறுபவர் ஆகிய நான்கு முக்கிய தரப்பினர் இருக்கிறார்கள். இது குறித்த தியானத்தையே பிறகு பார்ப்போம் என்று சொன்னோம். ஆனால் செவித்தினவு அதாவது எதிர்தரப்பு குறிப்பிடுவதுபோல காது அரிப்பு யாருக்கு, யாரால், ஏன்,எப்போது ஏற்படுகிறது என்பதை யோசித்தால் கிறிஸ்தவ சமுதாயத்தில் நிலவும் எல்லா பிரச்சினைக்கும் ஒரு தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
அதாவது செவித்தினவு என்பது ஏதோ ஏமாற்றுவேலை அல்ல, அது தேவனுடைய சாபம் என்று யாரும் உணருகிறதில்லை.இதன்படி ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல் ஒருவன் குறிப்பிட்ட தலைமையைவிட்டு வெளியேறி செல்லுகிறான்.அவனுக்கு கிடைக்கக்கூடிய உடனடி மாற்று அவன் அரிப்புக்கு ஏற்ற போதகமே.அது எப்படியிருக்கும் என்றால் ஒன்று சரியானதை தவறு என்று சொல்லும், தவறானதை சரி என்று சொல்லும்.வித்தியாசமாக எதையாவது செய்யவேண்டும் என்ற சொந்த நினைப்பில் இருப்பவன் இதில் சிக்கிவிடுகிறான்.தன் மனதுக்கு திருப்தியாக இருக்கும் போதகத்தை நோக்கி செல்லுபவன் யாராக இருந்தாலும் அவனுடைய நிலைமை பரிதாபமே.கர்த்தருடைய இருதயத்துக்கு ஏற்ற போதனை எனக்குக் கிடைக்கிறது என்று ஒருவன் சொன்னால் அதில் நிச்சயமாக சமநிலையும் சமநோக்கும் இருக்கும். உதாரணமாக ஆரோக்கிய உபதேசம் ஒருபோதும் மேய்ப்பன் தேவையில்லை,ஆலயம் என்பது சரீரமே என்று சொல்லாது.உங்கள் சரீரமே ஆலயம் என்று எங்கே எதற்காக பவுலடிகள் சொன்னாரோ அதற்கு மாத்திரமே அந்த கூற்று பொருந்துமே மொத்த சபை அமைப்புக்கும் அல்ல. சபையாகக் கூடிவரும்போது நாம் கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறோம் என்று மற்றொரு உதாரணத்தினால் விளக்கப்படுகிறது.
புரட்சிகரமாகப் பேசியதாலும் எழுதியதாலும் சேரும் கூட்டத்தை பராமரிக்கவும்கூட கொள்கைகளும் சம்பிரதாயங்களும் உருவாக்கப்படுகிறது. அங்கேயும் தேவைகளை சந்திக்க காணிக்கை சேகரிக்கப்படுகிறது. காணிக்கை சேகரிக்கப்படுவதில்லை என்று அறிவிப்பு செய்யப்படுவதால் தன்னார்வமாகக் கொடுப்போரின் எண்ணிகையும் தொகையும் அதிகமாகவே இருக்கிறது.இதுவும் ஒருவகை வியாபார தந்திரமே. இதனால் பெரும்பணம் குவிய அங்கும் பதவிப்போட்டிகள், குழிபறிப்புகள் உட்பட அவர்கள் விட்டு வந்த இடத்தில் இருந்த அனைத்தும் இருக்கிறது. இன்னும் எல்லோருமே பார்வையாளரைப் போல வருவோரும் போவோருமாக இருந்தால் ஒருவருக்கொருவர் ஐக்கியமும் புரிதலும் இருக்காது.மேலும் யாருக்கும் கட்டுப்படவேண்டிய அவசியமில்லாத தான் தோன்றி மனப்பான்மை பெருகுகிறது.இதனால் ஒருகட்டத்தில் அவர்கள் எதைவிட்டு, எங்கே வந்தார்களோ அங்கிருந்தும் ஏமாற்றத்துடன் வெளியேற வேண்டிய சூழ்நிலை வருகிறது.இவ்வாறு வெளியேறிச் சென்றோர் ஆவிக்குரிய மண்டலத்தின் அபலைகள் எனப்படுகிறார்கள். அதாவது தன் தாயை தூஷித்து பாபிலோனிய வேசி என்ற போதகத்தின் மாயையினால் வஞ்சிக்கப்பட்ட விசுவாசி மேய்ப்பன் அல்லாத அந்நியனால் கெடுக்கப்பட்டு இன்னும் அதிகமாக தன் தாயை தூஷிக்கிறான். தன் ஸ்தானத்தைவிட்டு அலையும் குருவியைப் போன்றவர்கள், இவர்கள்.
இதுவரை தன் இருதயத்துக்கேற்ற போதகர்கள் பின்னால் சென்றவனின் நிலைமையைப் பார்த்தோம். (அதில் இன்னும் அணுகாத பகுதிகள் இருக்கிறது.) அதன் மறுபக்கத்தில் இவர்களுடைய செவித்தினவுக்குக் காரணமாகி தொடர்ந்து (அரிப்புக்கு) இதமானவற்றை பரிமாறும் நூதன சீஷர்களைக் குறித்து பார்ப்போமானால் ஆயாசமாக இருக்கும்.இவர்கள் தங்களிடத்தில் அரிப்பெடுத்து வரும் நபரின் தேவைக்கு ஏற்ப சரிவிகிதத்தில் சரக்கை பரிமாறுகிறார்.உதாரணத்துக்கு ஒருவர் காணிக்கை தொடர்பான ஐயத்தில் வருகிறாரா,அவருக்கு இப்போதெல்லாம் காணிக்கை அவசியமில்லை.அது லேவியருடன் முடிந்துபோனது என்று சொல்லுகிறார்.பண்டிகைக் குறித்த ஐயங்களோடு ஒருவர் வந்தால் பண்டிகைகளெல்லாம் பாபிலோனிய வேசி மார்க்கத்தாருக்கு மட்டுமே என்பார்.ஆவியின் வரங்களைக் குறித்து யாராவது வந்தால் அதெல்லாம் ஒன்றும் கிடையாது,எல்லாம் குண்டலினி பவர் என்பார்.சரி அந்த குண்டலினி பவருக்கும் மேலான சர்வ வல்லவருடைய ஆவியைக் குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன் என்றால் திருதிருவென்று முழிப்பார்.இப்படி கத்தோலிக்கர்களை சமாளிக்க பாபிலோன் வேசி மேட்டர்,சீர்திருத்த சபையாரை சமாளிக்க காணிக்கை மேட்டர்,சுயாதீன சபைகளை சமாளிக்க குண்டலினி மேட்டர்...இப்படியே இந்த செவித்தினவு அதாவது காது அரிப்பெடுத்தவர்களின் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இன்னொரு தரப்பையும் சொல்லியாகவேண்டுமே, அவர் எப்படி என்றால் பாவத்தைக் குறித்தோ மனந்திரும்புதலைக் குறித்தோ பாவ மன்னிப்பைக் குறித்தோ நியாயத்தீர்ப்பைக் குறித்தோ பேசவேமாட்டார். அவரிடம் இருந்து வருவதெல்லாம் எப்போதும் ஆசீர்வாதம், ஆசீர்வாதம், ஆசீர்வாதம் தான்..! ஏனெனில் ஆசீர்வாதத்தைக் குறித்து பேசப் பேச கலெக்ஷன் அதிகமாகிறது. விரைவில் பிரபலமாகலாம் என்பதே. இவ்வாறு ஒருவர் ஆசீர்வாதத்தையே பேசக் காரணம் யார் என்பதிலேயே கிறிஸ்தவ சமுதாயத்தின் பிரச்சினை இருக்கிறது.அதாவது மக்கள் தங்கள் இருதயத்துக்கேற்ற போதகர்களைத் தேடிச்செல்லுவதாலேயே ஆசீர்வாதத்தையே மையம் கொண்ட ஊழியங்கள் பெருகியிருக்கிறது. இது கிறிஸ்தவ சமுதாயத்தின் சாதாரண பிரச்சினையல்ல,இது தேவனுடைய சாபம் என்கிறோம். இதுபோன்ற சூழலுக்காக வெட்கப்படும் விசுவாசி தொடர்ந்து இதுகுறித்து விவாதித்து இன்னும் பிரச்சினையை சிக்கலாக்காமல் உடனே அங்காங்கு கூடி ஜெபிக்கவேண்டும்.ஆண்டவரே உமது இருதயத்துக்கு ஏற்ற போதகர்களை எங்களுக்குத் தாரும் என்று கதறவேண்டும்.ஏனெனில் சரியாகவே ஆரம்பித்து சரியாகவே போய்க்கொண்டிருந்த போதகர்கள் கூட தற்கால கலாச்சாரத்துக்கும் மனப்போக்குகளுக்கும் ஈர்க்கப்பட்டு தங்கள் ஆதிநிலைமையையும் மேன்மையையும் இழந்த நிலையில் காணப்படுகிறார்கள்.இது பேசப்படும் விஷயமல்ல,மொத்த சமுதாயமும் அதிர்ச்சியுடன் கவனித்து ஆவன செய்யவேண்டிய விஷயமாகும்.இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு சில கோட்டான்கள் சபை கிடையாது ஸ்தாபனம் தேவையில்லை மேய்ப்பர் இல்லை காணிக்கை இல்லை ஐக்கியம் கொண்டாட்டம் இல்லை என்று புழுதி கிளப்ப அனுமதிக்கவே கூடாது.நான் எனது போதகரையும் சபையையும் தேர்ந்தெடுப்பதைவிட ஆவியானவருடைய நடத்துதலுக்காகக் காத்திருக்கவேண்டும்.அவர் நிச்சயமாகவே சரியான பாதையில் நடத்துவார்.
மாற்றம் விரும்பும் தன்னார்வப் பணியாளர் முன்பாக இரண்டு முக்கிய களங்கள் இருக்கிறது.அவை தவறான ஊழியங்களை அடையாளம் காண்பதும் தவறான உபதேசங்களை அடையாளங் காண்பதும் ஆகும்.அடுத்த கட்டத்தில் இதுகுறித்து தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். அந்த பிரச்சாரத்தின் தொனியானது திருச்சபையின் ஐக்கியத்தையும் பாரம்பரியங்களையும் உடைப்பதாக இருக்கக்கூடாது. திருச்சபைக்குள் இருக்கும் விவகாரங்களை இயன்ற மட்டும் பொது விவாதத்துக்குக் கொண்டுவரவே கூடாது. அது நம்முடைய கையினால் நம்முடைய கண்ணையே குத்திக்கொள்ளுவதற்கு சமானமாகும். ஆனால் மீடியாவில் வெளிப்படையாக செய்யப்படும் தவறான ஊழியங்களை தாராளமாக விமர்சிக்கலாம். ஏனெனில் அது மக்கள் மன்றத்துக்கு ஏற்கனவே வந்துவிட்டது. அந்த விமர்சனமும் கூட மாற்று வழியையும் சரியானதையும் எடுத்துச்சொல்லுவதாக இருக்கவேண்டும்.எப்படியிருப்பினும் நாம் உடனடி கவனம் செலுத்தவேண்டிய களம் ஆரோக்கிய உபதேசத்தை எடுத்துரைப்பதும் கள்ள உபதேசங்களை எதிர்ப்பதுமே.
தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இந்த (ஃபேஸ்புக்) பொதுமேடையை பொதுவான கிறிஸ்தவ விசுவாசத்துக்கு எதிராக கலகம் விளைவிப்போருக்கு தகுந்த பதில் கொடுக்கும் வாய்ப்பாக பயன்படுத்தினால் நமக்குள் ஐக்கியம் வளரும்.அதற்கு மாறாக திரித்துவ உபதேசத்தை ஏற்று பின்பற்றுவோர் தங்களுக்குள் இருக்கும் பிணக்குகளை பொதுவில் வைத்து விவாதிப்பது நம்மை பெலவீனப்படுத்திவிடும். பொதுவான கிறிஸ்தவ விசுவாசத்துக்கு விரோதமாக எழும்பியிருப்போரை ஒடுக்குவதே நம்முடைய மைய நோக்கமாகக் கொள்ளவேண்டும். பொதுவான கிறிஸ்தவ விசுவாசத்துக்கு எதிராக கலகம் விளைவிப்போரில் இரு பெரும் பிரிவினர் உண்டு. ஒருவர் உள்ளே, இன்னொருவர் வெளியே, அவர்கள் முறையே, யெகோவா சாட்சிகளும் முகமதியர்களும் ஆவர். இவர்களுக்குத் தகுந்த பதிலைக் கொடுக்கும் வண்ணமாக நாம் ஆயத்தப்பட்டு எழுதினால் (மாத்திரமே நாம் இனி நிற்கமுடியும்.) எதிர்வரும் சமுதாயத்துக்கு நல்லதொரு சேவைபுரிந்த பாக்கியம் கிடைக்கும்.எப்படி இன்றைக்கு கூகுள் தேடு இயந்தரத்தில் ஆங்கிலத்தில் எந்தவொரு பொருளைத் தேடினாலும் அதுசம்பந்தமான தகவல் கிடைக்கிறதோ அதுபோன்ற பணியை தமிழ் கிறிஸ்தவத்துக்காக நாம் ஆற்றவேண்டும்.
திருச்சபைக்கு எதிராக (சிஎஸ்ஐ,ஏஜி,ஏசிஏ,சர்ச் ஆஃப் காட், இசிஐ, அட்வெண்ட்,பெந்தெகொஸ்தே... இப்படி எந்த சபைக்கு எதிராகவும்) நாம் கலகம் செய்யவே வேண்டாம்.அதில் இருக்கும் குறைகளை வட்டாரக் குழுக்களிடையே நடைபெறும் ஜெபக் குழுக்கள் மூலமே களைந்துகொள்ளமுடியும். காணிக்கை குறித்தும் மோசடி குறித்தும் நாம் எழுதவேண்டிய அவசியமில்லை. அது எந்தவிதத்திலும் யோக்கியமான செயலாக இருக்கமுடியாது. காணிக்கை மோசடி குறித்த காரியங்களையும் ஆங்காங்கு இருக்கும் கமிட்டிகளே பார்த்துக்கொள்ளும். எல்லாவற்றுக்கும் மேலாக தேசத்தின் அரசாங்கங்களும் நீதிமன்றங்களும் இருக்கிறது.நாம் கவனம் செலுத்தவேண்டியது திருச்சபை ஐக்கியத்திலும் தனிநபர் பக்திவிருத்தியிலும் மாத்திரமே.அதனை ஊக்கப்படுத்தும் வண்ணமாக மாத்திரம் செயல்படுவோம். கர்த்தர் வருகிறார், மாரநாதா..!