ஒருவரைப் பற்றி மற்றவர்களிடம் பொய்யான கதைகளைக் காவித்திரியும் மனிதர்கள் பற்றிய பதிவு இது.
மனிதனுக்கு மற்றைய மனிதனைப் பற்றி தூற்றி பேசித்திரிவதில் இருக்கும் சுய இன்பம் எல்லையில்லாதது போலிருக்கிறது. வள்ளுவரும் இவர்களைப் போன்றவர்களை நன்கு அறிந்திருந்திருக்கிறார் என்பது அவரின் இநதக் குறளைப்பார்க்கும் போது புரிகிறது.
அறம் கூறான், அல்ல செயினும், ஒருவன்புறம் கூறான் என்றல் இனிது.
இதன் பொருள்: நல்லறத்தை ஒழுகாது இருப்பினும் கூட புறம் சொல்லாமை எனும் ஒரே ஓர் ஒழுக்கம் இனிமையைக் கொடுக்கும் என்பதாகும்.
எம்மில் பலர் மனச்சாட்சியின்றியும், தீர விசாரிக்காமலும், ஆதாரங்கள் இன்றியும் மற்றவரை நோக்கி பல விடங்களுக்கு கைவிரலை நீட்டுகிறோம். ஆனால் எப்போதாவது நாம் பேசுவதற்கு முன் சில வினாடிகளாவது நமது செயலை அல்லது பேசும் பொருளைப் பற்றி ஒரு சுயவிமர்சனம் செய்து கொள்கிறோமா? சுய விமர்சனம் என்பது பற்றி என்று மேடை போட்டு பேசும் புத்திஜீவிகளும் தமக்கு என்று வரும் போது சுயவிமர்சனத்தை மறந்து விடுகிறார்கள் என்பதை எனது அனுபவங்கள் காட்டிப்போகின்றன.
பேசுவதற்கு தலைப்பு இல்லாது போகும் போது ஒரு மனிதனையே தலைப்பாக எடுத்து பேசித்திரிகிறோம். இன்னொருவரைப் பற்றி நாம் பேசும் பேசும் போது எவ்விதமான சுயவிமர்சனமும் இன்றி வளையும் நாக்கின் போக்கில் பேசித்திரிவதின் அபாயம் பற்றி பலரும் சிந்திப்பதில்லை. அல்லது பேச்சின் சுவராஸ்யம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி போன்றவை பலரை சுயவிமர்சனம் இன்றி மற்றவரைப் பற்றி பேசவைக்கிறது.
பலரும் அவர்களுக்கு ஒவ்வாதவர்களைப் பற்றி ஒரு கதையை கட்டவிழ்த்து விடுவதால் பலரும் ஒரு வித குரூரமான மகிழ்ச்சியை அடைகிறார்கள். ஆனால் அவற்றின் விளைவுகள் பற்றி எவரும் நினைத்துப் பார்ப்பதாய் இல்லை. அவர்களால் ஏற்படுத்தப்படும் வேதனைகள் பற்றி எவ்வித சிந்தனையும், மனக்கிலேசம், சுயவிமர்சனம் இன்றி பல மனிதர்கள் உலாவித்திரிகிறார்கள். எந்த வேதனையும் தனக்கு வரும்போது தான் புரியும் என்பது இங்கும் உண்மையாகத்தான் இருக்கிறது. அது வரை அவர்களால் அவ் வேதனைகளைப் புரிய முடியாதிருக்கிறது. எனக்கேதோ மற்றவரைப்பற்றி புறம் கூறுபவர்கள் ஒரு வித மனோவியாதிக்கு உட்பட்டிருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இப்படியான அனுபவங்கள் சில எனக்கும் இருக்கின்றன. அவை நடைபெற்ற காலங்களை திரும்பிப் பார்க்கும் போது இன்று அவை சிரிப்பை வரவழைத்தாலும் அன்று அவை தந்து போன துயரங்களையும், மன அழுத்தங்களையும், அவமானங்களையும் மறக்க முடியாது, மறக்கவும் கூடாது.
சில மனிதர்களால் வேறொரு மனிதனின் மகிழ்ச்சியையும், வெற்றியையும், சாதனைகளையும் தாங்க முடியாத போது அவர்கள் தங்கள் காழ்ப்புணர்ச்சிகளையும் பொறாமையையும் மற்றவரைப் பற்றி அவதூறு பரப்புவதிலேயே காட்ட முயற்சிக்கிறார்கள், காட்டுகிறார்கள் என்பது வேதனைாயான உண்மை என்பதை மறைப்பதற்கில்லை.
இவ்வாறு அவதூறு பரப்புவர்களின் செயல்கள் எந்தளவுக்கு மற்றவரையும், அவரின் குடும்பத்தாரையும், சுற்றத்தையும் பாதிக்கும் என்பதனை இவர்கள் சிந்திக்கும் அளவுக்குக் கூட இவர்களிடம் மனச்சாட்சியோ அல்லது சிந்திக்கும் திறணோ இல்லாதிருக்கிறது என்பது வேதனையே. சற்று ஆழமாக இது பற்றி சிந்திப்போமானால் அவதூறு பரப்புபவர்களினால் மற்றவரை வெற்றிகாண முடியாது என்பதனையே அவர்களின் செயல் காட்டுகிறது.
இவ்வாறான நாட்களிலேயே நான், வாழ்வில் உற்ற நண்பன் யார்? நட்பு என்னும் பெயரில் உலாவும் முதலைகள் யார், யார் என அடையாளம் கண்டுகொண்டேன். நெருங்கிய நட்பு என்று நினைத்திருந்தவர்களின் சுயரூபம் புரிந்த நாட்கள் அவை. தவறை தவறு என்று நேரே ஏற்றுக்கொண்டு மன்னித்துக்கொள் என்ற நண்பர்களும் உண்டு. இப்படியான நண்பர்களே நட்பின் இலக்கணமாகிறார்கள். தன் தவறை அவர் உணர்ந்திருந்தாலும் தனது செயல் சரியானது என்று வாதிடும் நண்பர்கள், நண்பர்களே இல்லை என்பேன் நான்.
,சில வருடங்களுக்கு முன் இப்படித்தான், நண்பர் ஒருவரைப் பற்றி ஆதாரமற்ற ஒரு பொய்க்கதை ஊருக்குள் பரவிற்று. நண்பருக்கு அது தெரியவந்த போது மனமொடிந்து போனார். சற்றும் ஆதாரமற்ற, நியாயமற்ற கதை என்பதை அவருடன் பழகிய நாம் அனைவரும் அறிந்திருந்தோம்.
அதன் பின் நண்பரை பேசவைப்பதே பெருங்காரியமாய் இருந்தது. மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார். மழையில் நனைந்த கோழி போலானார் பல நாட்கள். அவரால் பல காலங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பமுடியவில்லை. பல உரையாடல்களின் பின் அவதூறு பரப்புபவர்களை அழைத்து நேரடியாகவே பேசுவோம் என்னும் முடிவுக்கும் வந்தார்.
அனைவருக்கும் அழைப்பு விடப்பட்டது. ஆனால் எவரும் நேரில் பேசுவதற்கு வரவில்லை. பேடிகள் போல் ஒளிந்து கொண்டார்கள். நண்பரிடம் நான், இதைவிட உன் நியாயத்தை கூற வேறு எதுவும் தேவையில்லை என்று கூறினேன். அவர்களின் வார்த்தைகளில் உண்மையிருந்தால் அவர்கள் இங்கு கூடிப் பேச முன்வந்திருப்பார்களே என்று வாதித்தேன். உண்மையும் அது தானே? அவரும் உண்மையான நண்பர்கள் யார் யார் என்பதை இச்சம்பவம் உணர்த்தியிருக்கிறது என்றார்.
நண்பரின் மனது சமாதானமடையவில்லை என்பதனை நான் நன்கு அறிவேன். அவர் இவ் வேதனையான காலங்களில் இருந்து மீண்டு வர பல மாதங்களாகலாம். இருப்பினும் நாவினால் சுட்ட வடுக்கள் ஆறியதாய் அறிந்ததில்லை நான்.