குன்னூர் மக்களை அச்சுறுத்திய "மரண அறிக்கை' துண்டு பிரசுரம்
குன்னூர்: குன்னூர் நகரின் பல இடங்களில் "மரண அறிக்கை' என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள துண்டு பிரசுரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பரசுராம் தெரு; நேற்று காலை 6.00 மணிக்கு வீடுகளில் இருந்து வெளியே வந்த மக்கள், வீடுகளின் சுவர், தடுப்புச்சுவர் உட்பட ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்த துண்டு பிரசுரத்தை படித்து, அதிர்ச்சியில் உறைந்தனர். "மரண அறிக்கை' என்ற தலைப்பில் "குற்றவாளிகளுக்கு முடிவு நெருங்கி விட்டது' என்ற முகப்புரையுடன் துவங்கிய அந்த துண்டு பிரசுரத்தில், அனுப்புனர் முகவரி, "கருட புராண நிர்வாகிகள், எமலோகம்' எனவும், பெறுநர் முகவரியில், "அடுத்தவர்களின் வாழ்க்கையில் விளையாடுபவர்கள், அடுத்தவர்களுடன் பாவ வாழ்க்கை வாழ்பவர்கள், 60 வயதை தாண்டியும் பாவ வாழ்க்கையை துறக்காதவர்கள், கலாசாரத்திற்கு சீர்கேடு விளைவிப்பவர்கள், பணத்தின் மீது பேராசை கொண்டவர்கள், மருத்துவத்தில் அடுத்தவரின் உயிரோடு விளையாடுபவர்கள், இறைவனை தேடாதவர்கள்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
"மேற்கூறிய அனைவரும் கருட புராணத்தின்படி, மிருக சீரிசனம் (மிருகங்களின் காலில் மிதிபடுதல்), கிருமி போஜனம் (அட்டைப்பூச்சி, தேள், குளவி, பூரான்), அந்த கூபம் (எண்ணெய் வாளியில் வறுத்தெடுத்தல்), கும்பிபாகம் (உடலில் குத்து விளக்கு சொருகுதல்) தண்டிக்கப்படுவார்கள். இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் செய்யும் தவறுகள் எங்கள் நீதிமன்றங்களுக்கு புகாராக வருகின்றன. தாங்கள் செய்து வரும் தவறுகளை நிறுத்தி கொண்டும், உங்களை திருத்தி கொண்டும் முறையான வாழ்க்கை வாழ அறிவுறுத்தப்படுகிறது,' எனக் கூறப்பட்டிருந்தது. இப்படிக்கு, "எமலோக பொதுக்குழு மற்றும் கருட புராண நிர்வாகிகள்', எனவும், இந்த அறிவிப்புக்கு சாட்சி, "இந்திரலோகத்தின் நா. அழகப்பன்' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த துண்டு பிரசுரம் வீதியெங்கும் ஒட்டி வைக்கப்பட்டிருந்ததால், மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. கடிதத்தின் இடையிடையே சிறிய அளவில் சில ஆங்கில எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன. "அன்னியன்' சினிமா பாணி ஸ்டைலில், அச்சுறுத்தும் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை எழுதியது, ஒட்டியது யார்? என்ற குழப்பத்தில் நகர மக்கள் உள்ளனர்.
மேற்காணும் செய்தியில் //கிருமி போஜனம் (அட்டைப்பூச்சி, தேள், குளவி, பூரான்) // ஆகிய வரிகளை வாசித்ததுமே நண்பர் சுந்தர் அவர்களின் ஞாபகம் வந்துவிட்டது. அவருடைய கொள்கையின்படி இறைவன் சாத்தானின் ஆவிகளை இதுபோன்ற தீங்குசெய்யும் பூச்சிகளாக மாற்றிவிட்டாராம். அந்த வகையில் கொசுவும்கூட சாத்தானின் அவதாரமே. ரூட் எங்கிருந்து வருகுது பாத்தீகளா..?