by Chill Sam on Thursday, 27 October 2011 at 07:05
நாம்நண்பர் விஜய் அவர்களின் ஒரு சிறிய பெட்டி செய்திக்கு எதிராக”ஸ்தாபனங்கள் அல்லது சபைகள் (Denominational-ism) ஒழிக்கப்படவேண்டுமா..? ”என்ற தலைப்பில் பதித்த கட்டுரை உட்பட நேற்று (26.10.2011) ஒரே நாளில் மூன்று கட்டுரைகளை எழுதியிருந்தோம்; இதோ இது நான்காவது கட்டுரை..! இதனிடையே அவர் நமக்கு எழுதுவது போன்ற நடையில் ”சபை மற்றும் தேவாலயம் குறித்து...”எனும் தலைப்பில் ஒரு கட்டுரையைப் பதித்திருக்கிறார்;அதற்கு பதிலாக இன்னமும் நம்பிக்கையுடன் எனது மாற்றுக் கருத்தினை நண்பர்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்; இதனால் எனக்கும் நண்பர் விஜய் அவர்களுக்கும் இடையில் ஏதோ கருத்துவேறுபாடு என்று யாரும் எண்ணிவிடவேண்டாம்; இருதரப்பிலுமிருந்து வெளிப்படுவது அவரவருடைய அனுபவ்ம் சார்ந்த கருத்தே; இது ஒரு புத்தக அலமாரியைப் போன்றது; இங்கே இரண்டு தரப்பு கருத்தையும் சீர்தூக்கிப் பார்த்து வாசக நண்பர்களே ஒருமுடிவுக்கு வரலாம்; இதில் யாருக்கு வெற்றி அல்லது யாருக்கு தோல்வி என்பது பிரச்சினையல்ல.
இனி நண்பர் விஜய் அவர்களுக்கு நான் எழுதிய பதில்...
நண்பரே, அடியேன் ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணமாக உங்கள் கருத்தை உள்வாங்கிக்கொண்டு அதனை இன்னும் வலியுறுத்தும் வண்ணமாகவும் கூர்மைப்படுத்தும்வண்ணமாகவும் ஆழ்ந்து யோசித்ததன் விளைவே எனது பதில் கட்டுரைகள்; கவனியுங்கள்,நான் அண்மையில் ஒரே நாளில் இத்தனை கட்டுரைகள் போட்டதில்லை; மேலும் அதில் முழுமையான கட்டுரைக்கான இலட்சணமும் காணப்படவில்லை என்பதை உணர்ந்தேன்; பல காரியங்களை உங்களைப் போல தீர்க்கமாக எடுத்துரைக்க தவறியிருக்கிறேன்; பல்வேறு வேலைபளுவும் உடல்சோர்வும் என்னை அவசரப்படுத்தியிருந்தது;ஆனாலும் ஒரு காரியத்தில் தெளிவாக இருந்தேன்,இது உங்களுக்கெதிரான போராட்டம் அல்ல, உங்கள் மூலம் பல இளைஞர்கள் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்; உங்களைப் போன்ற இளைஞர்கள் இன்னும் அதிகமானோர் எழும்பவேண்டும்.எனவே உங்களை மனமடிவாக்குவது என் நோக்கமல்ல.முக்கியமாக நீங்கள் ஏஞ்சல் டிவியில் வேலை பார்த்ததால் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகிறீர்கள் என்றும் வெளிப்படையாக நான் சொல்லவில்லை; அது உங்கள் தனிப்பட்ட உரிமையை பாதிப்பதாக இருக்கும்.ஆனால் நான் கிறிஸ்தவ சமுதாயத்தின் தீமைகளையும் பிரச்சினைகளையும் கழுகின் பார்வைகொண்டு அலசியதால் அதில் பல உண்மைகள் வந்து விழுந்தது;ஒரு சித்தாந்தம் அல்லது சிந்தனையாளரின் பாதிப்பு இல்லாமல் யாருமே எழுதமுடியாது;அப்படியானால் உங்களுடைய கட்டுரையின் வாசகங்களுக்குப் பின்னால் இருக்கும் சிந்தனையாளர் யாராக இருக்கமுடியும்? நான் உங்களைத் திறனாய்வு செய்ய விரும்பவில்லை;அது நம்முடைய நட்பை பாதிக்கும் அல்லவா? ஆனால் வேதத்தின் பொதுவான விசுவாசத்துக்கு மாறான கருத்துக்களை மாத்திரம் சரிசெய்ய முயற்சிக்கிறேன். உதாரணமாக உங்களுடைய நீண்டதும் நேர்த்தியானதுமான கட்டுரையின் சரிபாதியில் பின்வருமாறு குறிப்பிடுகிறீர்கள்,
// புதிய ஏற்பாட்டில் இல்லாத ”ஆலயக் கட்டிடம்” “தேவாலயத்தில் தொழுதுகொள்வது” போன்ற ஒரு புதிய காரியங்கள் வந்து இன்று கிறிஸ்தவத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. அவர்களிடம் புதிய ஏற்பாடு சொல்லும் “ஆலயம்” நம் சரீரம்தான், புதிய ஏற்பாட்டின்படி சபை என்பது விசுவாசிகளின் ஐக்கியம்தான் என்று கூறி அவர்களைச் சீர்படுத்துதல் எப்படி தவறாகும்??//
மீண்டும் மீண்டும் சுற்றிவளைத்து நீங்கள் சொல்லுவது ஒரே காரியம் தான்,ஆனாலும் அதற்கு நான் எதிரியல்ல என்றும் சொல்லுகிறீர்கள்,கிறிஸ்தவர்கள் தங்கள் இரட்சகரை ஆராதிக்கக்கூடும் இடம் புனிதமானது அல்ல,அது வெறும் கட்டிடம்,அது அவசியமல்லாதது,அது இடைப்பட்ட காலத்தில் உள்ளே நுழைந்தது என்கிறீர்கள் சரியா? இன்னும் அதனை க்ளப் என்று சொல்லவும் தயக்கமில்லை உங்களுக்கு.
ஒரு ஆராதனைக் கூடத்தின் அவசியத்தை உணரவேண்டுமானால் வடதேசத்தைப் பார்த்துவாருங்கள்; அங்கே திரள்திரளாக ஆண்டவரை ஏற்றுக்கொள்ளும் மக்கள் கர்த்தரை ஆராதிக்கும் ஸ்தலம் இல்லாமல் மழையிலும் பனியிலும் வெயிலிலும் இன்னும் தீவிரவாதிகளின் தாக்குதல்களிலும் எத்தனை சிரமப்படுகிறார்கள்? உங்கள் கூற்றின்படி அவரவர் வீட்டிலேயே சிறுசிறு குழுவாக இணைந்து ஆராதித்தால் லட்சக்கணக்கில் செலவு செய்து சபைகளைக் கட்டவேண்டிய அவசியமிராதே..? இஸ்லாமிய நாடுகளில் கூட ஆராதிப்பதற்கென தனி இடத்தை ஒதுக்கித் தருகிறார்கள்,ஏன் ஒரு பொதுவான இடத்தில் ஆராதிக்கும்போது உண்டாகும் ஆத்மதிருப்தியானது ஈடில்லாதது ஆகும்.
புதிய ஏற்பாடு என்று நீங்கள் குறிப்பிடுவது இயேசுவானவர் பரமேறிச் சென்றதிலிருந்து சுமார் 70 வருட காலத்தையே என்பது சரியா..? இந்த 70 வருடத்தில் அப்போஸ்தலர்கள் பட்டபாடுகள் கொஞ்சமா,நஞ்சமா..? அவர்களுக்கு மத சுதந்தரமோ வழிபாட்டு சுதந்தரமோ இருந்ததா..? அவர்கள் தனி அமைப்பாக ஸ்தாபிக்கப்படும் வரைக்கும் யூதருடைய ஜெப ஆலயங்களையே பயன்படுத்திவந்தார்கள்; மற்றபடி வீடுகள் தோறும் கூடினார்கள்;ஆனாலும் அவர்கள் ஒருபோதும் தங்கள் வழக்கமான பண்டிகைகளையும் சபைகூடிவருதலையும் விட்டுவிடவில்லை; இன்னும் சொல்லப்போனால் யூதருடைய பாரம்பரியத்தின்படியே அவர்கள் சனிக்கிழமையன்றே ஓய்வுநாளை ஆசரித்தார்கள்; அதுசம்பந்தமான விவ்ரம் இப்போது வேண்டாம்;இன்னும் ஒழுங்கமைக்கப்படாத ஒரு மார்க்கமாக கிறிஸ்தவம் இருந்த அந்த காலத்தை தற்போதைய சூழ்நிலையுடன் எப்படி ஒப்பிடுகிறோம்? எருசலேமில் தலைமைப்பீடம் இருக்க பரிசுத்தவான்களுக்கென்று தர்மப்பணம் சேகரிக்கப்பட்டதெல்லாம் புதிய ஏற்பாட்டில் இருக்கிறதே, அந்த விவரமும் தற்போது வேண்டாம்.
சபையானது உபத்திரவக்காலத்துக்குள் சென்று அதற்குள் சில நூற்றாண்டுகளும் கடந்துபோகிறது; அதன்பிறகே மார்க்கமானது ஒழுங்கமைக்கப்படுகிறது;சபையானது வழக்கமாகக் கூடும் ஒரு இடத்துக்கு வந்துசேர்ந்தது; இதற்குள் சுவிசேஷம் எங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் ஆவியுடனும் உண்மையுடனும் ஆண்டவரை ஆராதிக்கும் மக்கள் பெருகினார்கள்;அவர்களும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடினார்கள்; யூதருடைய ஜெப ஆலயத்துக்கும் கிறிஸ்தவர்களின் சபைக்கும் என்ன வித்தியாசம் இருந்திருக்கும்? ஒன்றும் இருந்திருக்காது;ஏனெனில் அன்று வேதப்புத்தகம் என்பது தோற்சுருள்களாக தனித்தனியாகவே இருந்தது; புதிய ஏற்பாடு என்பதோ இல்லவே இல்லை; பெர்க்மான்ஸ் பாடல் புத்தகமோ ஸ்தோத்திர பலி புத்தகமோ யமஹா கீ போர்டோ பிஏ சிஸ்டமோ அலங்காரப்பூக்களோ நாற்காலிகளோ அழகழகான திரைச்சீலைகளோ இருந்திருக்காது.
ஆனால் இப்போதோ எல்லாம் இருக்கிறது,அதனால் என்ன,நாட்களையோ குறிப்பிட்ட இடத்தையோ அல்லது ஒரு பொருளையோ விசேஷித்துக்கொள்ளுவது என்பது அவரவர் உணர்வு சம்பந்தமான விஷயமாகும்; எனவே ஆவியானவர் அதில் ஒருபோதும் தலையிடுகிறதில்லை;எப்படியோ சமயம் வாய்க்கும்போதெல்லாம் நாம் அவருடைய சமூகத்தில் காணப்படுவதையே விரும்புகிறார்.
இந்நிலையில் புதியதாக விசுவாசத்தை நோக்கி வரும் ஒரு நண்பருக்கு நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள், நீயே ஆலயம் என்பதால் நீ ஆலயம் என்ற ஒன்றை தேடிச்செல்லாதே என்றா சொல்லுவீர்கள்? அவர் ஏற்கனவே இன்னொரு அமைப்பில் இருந்தபோது பயபக்தியாக ஏதோவொரு விக்கிரக ஆலயத்துக்குச் சென்று தொழுதிருப்பார்; இப்போது அவரே ஆல்யமாகிவிட்டதால் தொழுகை என்பது அவசியமில்லையோ?
பவுலடிகள் எழுதிய நிருபங்களெல்லாம் சபையில் வைத்துதானே வாசிக்கப்பட்டது?ஐக்கிய விருந்தும் பொதுஇடத்தில் வைத்துதானே பரிமாறப்பட்டது? கர்த்தருடைய பந்தியை ஆசரிக்கும் நேரத்தில் நாம் வழக்கமாக் வாசிக்கக்கேட்கும் வேதப்பகுதியின் இறுதியில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது, "நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன்."(1.கொரிந்தியர்.11:34)
அப்படியானால் அவரவர் வீட்டைவிட்டு வெளியே வந்து ஒருபோதுவான இடத்தில் ஆண்டவரை ஆராதிக்கக் கூடிவந்திருக்கிறார்கள் எனப்து விளங்குகிறது அல்லவா? நீங்களும் அதற்கு நான் எதிரியல்ல, அது அவசியமே என்று எழுதிவிட்டு // புதிய ஏற்பாட்டில் இல்லாத ”ஆலயக் கட்டிடம்” “தேவாலயத்தில் தொழுதுகொள்வது” போன்ற ஒரு புதிய காரியங்கள் // என்றும் எழுதுகிறீர்கள்; அப்படியானால் கொரிந்து சபையார் கூடிய இடத்தைப் பற்றி என்ன? அது கட்டிடம் அல்ல,என்பது தானே, ஒருவேளை அக்கால கலாச்சார வசதிகளின்படி கூடாரமாக இருக்கலாம்,அதனால் என்ன, அதுபோன்ற அமைப்பு அன்றைக்கும் இருந்தது என்பது உண்மையானால் இன்றைய நவீன யுகத்தில் அது இன்னும் எத்தனை அதிகமாக இருந்திருக்கவேண்டும் ?
நான் சிறுவயதில் சென்னை நகரின் சினிமா தியேட்டர்களையெல்லாம் சுற்றித் திரிந்தேன்; அன்றைக்கு நான் பார்த்த சினிமா தியேட்டர்களுக்கும் இன்றைக்கு அவை வளர்ச்சியடைந்து ஓங்கி நிற்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்..? இன்னும் எத்தனை திருமண மண்டபங்கள்..? ஏதாவது விசேஷங்களுக்கு திருமண மண்டபங்களை ஒழுங்கு செய்தால் ஒரே ஒரு நாளைக்கு வாடகையாக 3 ல்ட்சம் ரூபாய் தரவேண்டியிருக்கிறது; ஆனால் சபைகளிலோ உறுப்பினர்களுக்கு எந்த வாடகையும் வாங்காமலே எத்தனையோ சுபகாரியங்களுக்கு சபை திறந்துகொடுக்கப்படுகிறது; ச்பை என்பது சமுதாயத்தின் கௌரவமான அடையாளமாகும்;இனியும் அது தேவையில்லை என்பது போல எழுதாதிருங்கள்; நெகட்டிவ் ஆன கருத்துக்கள் ஒரு ஆத்துமாவுக்கு ஆறுதலைக் கொடுக்கிறதில்லை; பாஸிட்டிவ் ஆன கருத்துக்களோ முன்னேறிச் செல்ல ஊக்கப்படுத்துகிறது.
கர்த்தருக்குள் நித்திரையடைந்த டாக்டர் ஜஸ்டின் பிரபாகர் சுவாரசியத்துக்காக சொல்லுவார், கர்த்தருடைய நாளில் வெளியில் இருப்போர் இருவரில் ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார் ஒருவர் கைவிடப்படுவார்,ஆனால் ஒரு இடத்தில் கூடியிருக்கும் திரளான மக்களில் ஒருவர் கூட எடுத்துக்கொள்ளப்படமாட்டார், அது எந்த இடம் தெரியுமா, என்று நிறுத்தி சொல்லுவார்,அது சினிமா தியேட்டார்..! அதேபோல ஒரு இடத்தில் இருக்கும் எல்லோருமே எடுத்துக்கொள்ளப்படவேண்டும், அது கிறிஸ்துவின் சபையாகும்; அதன் முக்கியத்துவத்தை பின்வரும் வசனம் சொல்லுகிறது,
"முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள் என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம்பண்ணினார்கள்." (எசேக்கியேல்.9:6)
ஆலயம் என்பது இல்லாவிட்டால் இந்த வசனத்துக்கு அவசியம் இராதே,இந்த வசனம் ஏற்கனவே நிறைவேறியிருந்தால் நாம் ஏன் இங்கு இருக்கிறோம்?எனவே நாம் ஆலயம் என்ற அமைப்பை சுத்தம் செய்யவே பணிக்கப்படுகிறோம்; அதனை இயேசுவானவரும் செய்து (யோவான்.2) நமக்கு முன்னோடியாக இருக்கிறார்; ஆலயம் என்ற அமைப்பு தேவையில்லை, அது இடைப்பட்ட காலத்தில் யார் மூலமாகவோ வந்து ஆக்கிரமித்துக்கொண்டது எனும் கருத்தை மறுபரிசீலனை செய்ய மீண்டும் அன்போடு வேண்டுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)