by Chill Sam on Thursday, 03 November 2011 at 01:36
இன்று எனது சிந்தையில்... இரு முக்கிய காரியங்கள் ஓடிக்கொண்டிருந்தது;விடிய விடிய ஒரு நண்பருடன் இங்கே சாட் பண்ணிவிட்டு காலையில் எழுந்ததும் எழுந்த சிந்தனை...மனம் என்ற தலைப்பில் எழுதக்கூடிய அளவுக்கு விதவிதமான கருத்துக்கள்.
மனம் என்பது என்ன...அதனை எப்படி அமைத்துக்கொள்ளுவது... எப்படி அமைத்துக்கொண்டால் வாழ்வில் நன்மைகள் விளையும்..?
இரவெல்லாம் திகில் படங்களைப் பார்த்துவிட்டு உறங்கப்போகிறோம்,காலையில் மூடு எப்படியிருக்கும், முக்கியமாக முகம் எப்படியிருக்கும்?
ஓயாமல் கொலை, கொள்ளை, கற்பழிப்பு,மோசடி செய்திகளையே கவனித்துக்கொண்டிருக்கும் மனம் தன் அன்றாட அலுவல்களில் எப்படி நடந்துகொள்ளுகிறது..?
அவ்வாறே எனது மனமும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது; எனது மனம் முழுவதும் தாறுமானவர்களின் காரியங்களும் போதனைகளும் வாதப் பிரதிவாதங்களும் ஆக்கிரமித்திருப்பதால் காலையில் எழுந்தவுடன் இருக்கவேண்டிய முகமலர்ச்சியும் புத்துணர்ச்சியையும் உணரவே முடியவில்லை.இதுவா என்னைக் குறித்து தேவசித்தம்..?
நான் அன்பின் இருதயத்தை சுமந்திருக்கிறேன் அல்லவா, நான் கலகக்காரர்களுடன் போராடி என் வாழ்நாள் முழுவதும் உருக்கி ஊற்றினாலும் எதை சாதிக்கமுடியும்?
ஆனால் தேவ அன்புக்காக ஏங்கும் எண்ணற்றோருடன் என் வாழ்நாளின் சிறப்பானதும் முக்கியமானதுமான நேரங்களை செலவிடாமல் அடங்காதவர்களுடனும் இணங்காதவர்களுடனும் செலவிடுவது நியாயந்தானா, பரலோகம் என்னை மன்னிக்குமா ?
ஒரு நண்பரிடம் நான் ரொம்ப வைராக்கியமாக இதுபோன்ற எனது போராட்டங்களை உணர்ச்சிகரமாக சொல்லி அங்கலாய்த்தபோது அவர் சொன்னது சரியோ தவறோ எனக்கு பிடித்திருந்தது, ”உங்கள் பிள்ளைகள் எப்படிப்பட்டவற்றை பார்க்க விரும்புவீர்கள் அல்லது எதையெல்லாம் சாப்பிட விரும்புவீர்கள் அல்லது என்னவெல்லாம் கேட்க விரும்புவீர்களோ...அதை மட்டுந்தானே அவர்களுக்கு அனுமதிப்பீர்கள், மற்றவை எதற்கு..?” என்றார். இது சற்றும் பொறுப்பில்லாத ஒரு கூற்றைப் போல இருந்தாலும் அது ஏனோ இன்னும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது; இதனை அவர் சொல்லி கிட்டதட்ட மூன்று வருடங்களாகிவிட்டது, ஆனாலும் மறக்கமுடியவில்லை.
இது ஒரு சிஎஸ் ஐ குடும்பத்தின் இளைஞனிடம் பேசியபோது வெளிப்பட்டது.நாம் ஆலயத்தில் புது நன்மை அல்லது நற்கருணை என்று எடுக்கிறோம்.அந்த நன்மையானது இயேசுவானவரின் அடையாளமாக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது;அத்தனை விசேஷமான நன்மையை உட்கொள்ளும் நாம் தீமை செய்யலாமா? நாம் ஒருவருக்கு நன்மை செய்திருக்க அதற்கு பதிலாக அவர் நமக்கு தீமை செய்தால் எத்தனை துக்கப்படுகிறோம்..? அதுபோலவே நாம் நன்மையை உட்கொண்டு அதன் பெலனால் தீமையை செய்தால் இறைவனும் வேதனைப்படுவார் அல்லவா..?
இது மிருக குணமா ? அல்ல,ஏனெனில் மிருகங்கள் கூட நாம் செய்யும் நன்மைக்கு தீமை செய்வதில்லை,அவை நன்மைக்கு நன்மையையும் தீமைக்கு தீமையையுமே செய்யும்;இறைவனோ தீமைக்கும் நன்மையே செய்கிறார்;அப்படியானால் நன்மைக்கு தீமை செய்யும் குணம் எங்கிருந்து வ்ந்தது...? ஆம்,அது பிசாசின் குணம்,நம்முடைய எதிராளியாகிய பிசாசு தான் நன்மைக்கும் தீமையே செய்பவன்;நாம் பிசாசின் பிள்ளைகளாக இருந்தால் மட்டுமே நன்மைக்கு தீமை செய்வோம்,ஆண்டவருடைய பிள்ளைகளாக இருந்தால் தீமைக்கும் நன்மையே செய்வோம்.