”காலையில் 05:30 மணிக்கெல்லாம் கேம்பஸுக்கு வந்துவிடவேண்டும்,இல்லாவிட்டால் நீங்கள் கைவிடப்படுவீர்கள், நீங்கள் கட்டிய பணமும் வீணாகும்,உங்கள் நண்பர்களோடு நீங்கள் செல்ல இருக்கும் இன்ப சுற்றுலாவின் சந்தோஷங்களையும் இழந்துபோவீர்கள்...” -எனது வகுப்பாசிரியர் அறிவிக்க அந்த எண்ணத்துடனே படுக்க செல்லுகிறேன்.நாளைக்கு எனது பள்ளித் தோழர்களுடன் நான் சுற்றுலா செல்லப்போகிறேன்,நான் முதன்முதலாகச் செல்லப்போகும் இடம் எப்படியிருக்கும்,எனது நண்பர்களுடன் நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கப்போகிறேன், முதன்முறையாக அப்பா,அம்மா இல்லாமல் வெளியே செல்லும் த்ரில், எப்போது பார்த்தாலும் பாடம், பாடம், பாடம்... ஹோம்வொர்க் என்று சிடுசிடுவென்று இருக்கும் எனது ஆசிரியர்கள் இப்போது எப்படியிருப்பார்கள்...இப்படி தொடர் நினைவுகளால் இரவெல்லாம் தூக்கமே வரவில்லை.
கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் படிக்கலாமே என்று கல்யாண வீட்டுக்குக் கூட கோனார் கைடு எடுத்துச்செல்லும் நான் அதையும் எடுத்து வைத்துக்கொண்டேன்.சுற்றுலா செல்லும் இடத்தில் எங்காவது இடைவெளி கிடைத்தால் படிக்கலாமே என்று. ஆனால் இதுவரைக்குமான அனுபவம் எப்படியென்றால் ரொம்ப பொறுப்பாக எடுத்துச்செல்லுவதோடு சரி,படித்ததில்லை.ஆனாலும் இந்த பழக்கம் மட்டும் இன்னும் விடவில்லை.ஒருவழியாக சேவல் கூவியது...விடிந்துவிட்டது என்று திடுக்கிட்டு எழுந்து பார்த்தால் என்னைத் தவிர எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள், கோபமாக வந்தது,யார் மீது...? யார் மீதோ..! மீண்டும் சுருண்டு படுத்தேன்...மீண்டும் (இன்னொரு ?) சேவல் கூவ இப்போதும் திடுக்கிட்டு எழுந்து பார்த்தால் இன்னும் மணி 4 கூட ஆகவில்லை. எப்படியும் 04:30 மணிக்கு எழுந்து புறப்பட்டால் சரியாக இருக்கும். இப்பொழுதே லேசாக குளிருகிறது, அம்மா எழுந்து கொஞ்சம் சுடுதண்ணி வைத்துக்கொடுத்து கொஞ்சம் காபியும் போட்டுக்கொடுப்பார்களா,மதிய உணவு பார்த்துக்கொள்ளலாம், காலைக்கு எதுவும் எதிர்பார்க்கமுடியாது....இப்படி யோசித்துக்கொண்டே மீண்டும் உறங்கிவிட்டேன்.
டேய்...டேய்...எந்திரிடா,நேரமாச்சு...எந்திரிடா என்று அம்மா சத்தம் போடும்போது, நான் எப்போதோ எழுந்து சரியாக பள்ளிக்கு வந்து பேருந்தும் புறப்பட்டுவிட எனது ஊர் எல்லையைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறேன்... ஆமாம்,எல்லாம் கனவு. வழக்கம்போல் சோம்பல் முறிக்... கொட்டாவ்... ஐயய்யோ மணி 5 ஆயிடுச்சே,எப்படி அரை மணி நேரத்துக்குள் போவேன்,ஏம்மா என்னை சீக்கிரமே எழுப்பக்கூடாதா, என்று அம்மாவிடம் புலம்பினேன்; அம்மா கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், ’போய் பால் வாங்கிட்டு வா’ என்று துரத்தினார்கள்; அழாதகுறையாக தெருமுனைக்குச் சென்று அதிகாலையிலேயே திறந்திருக்கும் பால்பூத்தில் பால் வாங்கிக்கொண்டு திரும்பினேன், இதற்குள் 05:15 ஆகிவிட்டது.இப்போதுதான் அம்மா ரொம்ப பாசமாக தண்ணீர் சுடவைத்து குளிப்பாட்டி தலைசீவி என்னை அலங்கரித்துக்கொண்டிருந்தார்கள்,விடுங்கம்மா,எனக்கு நேரமாயிடுச்சு,05:30 மணிக்கே அங்கே இருக்கணுமுன்னு சார் சொன்னாரு,என்று புலம்பினேன்.
அம்மா ரொம்ப சாதாரணமா, போலாம்டா, நாங்க பார்க்காத சுற்றுலாவா, எல்லாம் லேட்டா தான் போவாங்க, நீ ஒண்ணும் டென்ஷன் ஆகாதே, எல்லாம் சரியா இருக்கும், அப்பாவ வண்டில கொண்டு வந்து விடச் சொல்றேன்,என்றார்கள். அப்போது தான் எனக்கு சுற்றுலா சந்தோஷமே மீண்டும் வந்தது.அதுசரி, அப்பா கொண்டு வந்துவிட்டா சரிதான்; அப்படியே லேட்டானால் கூட அப்பா பேருந்தை சேஸ் பண்ணிக்கொண்டுச்சென்று என்னை அதில் ஏற்றிவிடுவார் என்று நம்பிக்கை பிறந்தது. அம்மா கொடுத்த காபியை வாய்க்குள் ஊற்றிக்கொண்டு,நான் ஆயத்தமாக அப்பாவும் மெதுவாக அசைந்து எழுந்து வரவும் எனக்கு சுற்றுலா சந்தோஷம் தொற்றிக்கொண்டது, அப்பாவுடைய வண்டியில் தொற்றிக்கொண்டேன். அப்பா தூக்கக்கலத்திலிருந்தாலும் வேகமாக ஐந்தே நிமிடத்தில் பள்ளிக்கு வந்துவிட்டார்.
பள்ளியில் வந்துபார்த்த எனக்கு ஒரே அதிர்ச்சி..! நான் இத்தனை பரபரப்பாக ஆயத்தமாகி வந்தால், மணி இதோ 6 ஆகி,பொழுது புலர்ந்துவிட்டது, பள்ளியில் ஒருவரும் இல்லை;இன்று தான் சுற்றுலாவா என்று எனக்கே சந்தேகமாகிவிட்டது; பிறகு என்னைப் போலவே சில பரிதாபமான ஜீவன்கள் அங்கே இருக்கவும் நிம்மதியானேன்; அவர்களைப் பார்த்த நம்பிக்கையில் அப்பாவை போகச் சொன்னேன், அப்பாவோ, இருந்து உன்னை அனுப்பிவிட்டே செல்லுகிறேன் என்று சொல்லிவிட்டார்.பிறகு வந்திருந்த மற்ற நண்பர்களிடம் எப்போது எழுந்தாய் எப்படி வந்தாய் என்று துக்கம் விசாரித்தேன்; எல்லாரும் சொல்லிவைத்தது போல என்னைப் போன்றே இரவெல்லாம் துன்பப்பட்டார்களாம்.
ஒருவழியாக பேருந்து ஆடி அசைந்து 7 மணிக்கு பள்ளி வளாகத்துக்குள் நுழையவும் அடுத்து சீட் பிடிக்கும் படலம் துவங்கியது.ஆசிரியர்களும் ஒவ்வொருவராக வந்தனர்;நாங்கள் ஆர்வத்துடன் முன்சீட்டைப் பிடித்தால் அங்கே ஆசிரியர்கள் மட்டுமே உட்காருவார்கள் நீங்கள் பின்னால் போங்கள் என்று விரட்டினார்கள்; ஒரு பேருந்து வேகமாக நிரம்பவும் அடுத்த பேருந்தை நோக்கி ஓடினோம்; அங்கேயும் போட்டி...பல மாணவர்கள் தந்திரமாக,எனக்கு வாந்தி வரும் என்று சொல்லி ஜன்னலோர சீட்டைப் பிடித்துக்கொண்டார்கள்; சில விடாகொண்டன்கள் பரவாயில்லை நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன், என்று வீரத்துடன் பிடித்த சீட்டை விடாதிருந்தார்கள்; இப்படி பெரும்பாலான மாணவர்கள் வந்துசேர்ந்து பேருந்து நிரம்பியபிறகும் இன்னும் பேருந்து புறப்படுவதுபோல் தெரியவில்லை;அப்பாவுக்கு வேலைக்குப் போகணும் என்று போய்விட்டார்.நானோ நேரமானால் என்ன, எப்படியும் இன்று சுற்றுலா நிச்சயம்,பேருந்தை பிடித்ததே பெரிய அதிசயம்,என்ற சந்தோஷத்தில் நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தேன்.
ஆனாலும் நேரம் ஆக ஆக சோர்ந்துபோனோம்,சுற்றுலா சந்தோஷமே தொலைந்துபோனது போலிருந்தது. இன்னும் ஏன் பேருந்து புறப்படவில்லை,யாருக்காக காத்திருக்கிறார்கள், ஆம், யாருக்காகவோ பேருந்து காத்திருக்கிறது, ரொம்ப முக்கியமானவர் பையனாம்,அவன் வராமல் பேருந்து எடுத்தால் பள்ளியே இரணகளமாகிவிடுமாம், ஒரு பேருந்தை விட்டு மற்றவை போனாலும் ஒன்றையொன்று தொடரமுடியாமற்போகும், எனவே எல்லோரும் அந்த ஒரு விஐபிக்காக காத்திருக்கவேண்டியதானது. ’சர்ர்...’ ரென காரில் வந்திறங்கினான் அந்த பையன்,மகராஸா வாப்பா,உனக்காகவே இவ்வளவு நேரமா காத்திருக்கிறோம்,ஏறு உள்ளே போ...என்று பெருமூச்சுவிட்டு எண்ணிக்கை சரிபார்த்து பேருந்தை எடுக்கச் சொல்லி டிரைவருக்கு சைகை காட்டினார், சுற்றுலாவுக்கான பொறுப்பு ஆசிரியர்.பேருந்து அசைந்து ஊர்ந்து பள்ளி வளாகத்தை விட்டு வெளியே சென்றதும் ஆனந்தமோ ஆனந்தம்...பாட்டு போட்டதும் இன்னும் பேரின்பம்....பாட்டுக்கு கைதட்டி டான்ஸ் ஆடி குதூகலித்தோம்... எங்கள் பேருந்து வேகமாக எங்கள் ஊர் எல்லையைவிட்டு வெளியே சென்றது, இரவெல்லாம் கண்டகனவு நனவாக தவிப்பும் பரபரப்பும்... இதோ மறைந்தேபோனது.
இந்த உதாரணத்தை இரண்டே வரியில் ஒரு சகோதரி (காஞ்சி டெய்சி) க்கு சொல்லி தேற்றினேன், அதை இங்கே எனது அனுபவத்துடன் எழுதுகிறேன்; இப்படியே கர்த்தருடைய வருகையிலும் நடைபெறும், ”இதோ வர்றார்.. அதோ வர்றார்..” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களே தவிர அவர் வரும் அறிகுறியே இல்லையே, என்று நாம் சோர்ந்துபோகக்கூடாது, எப்படி சாதாரண சுற்றுலாவுக்கு செல்லும் மாணவர்களில் ஒருவன் வராவிட்டால் எல்லோருமே காத்திருக்க நேரிடுகிறதோ அப்படியே தேவ ராஜ்யத்துக்காக முன்குறிக்கப்பட்ட யாரோ ஒருவனுடைய மீட்புக்காகவே ஆண்டவரும் தாமதிக்கிறார், எப்படியெனில் உங்களுடைய 2 வயது குழந்தை அற்புதராஜ் வளர்ந்து வாலிபனாகி அவன் மூலம் மீட்கப்படவேண்டிய 20 பேர் பட்டியலில் இருப்பார்களானால் அதுவரைக்கும் அதாவது உங்கள் மகன் வளர்ந்து வாலிபனாகி அவன் மீட்பின் அனுபவத்தைப் பெற்று, பின்னர் அவன் மூலம் முன்குறிக்கப்பட்ட 20 பேரில் ஒருவனும் கெட்டுப்போகாமல் இரட்சிப்படையும்வரைக்கும் ஆண்டவர் பொறுமையாக இருப்பார்,என்று கூறினேன்.
இது சற்று சோர்வைத் தரும் கருத்தாக இருந்தாலும் இதுவே சத்தியம்; இதையே வேதம் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் என்று கூறுகிறது. மற்றவை எல்லாம் அதற்கு இணைப்பே.எனவே அவரவர் பொறுப்பை உணர்ந்து அவரவர் எல்லையில் சுற்றுவட்டாரத்தில் இந்த பணியை விரைந்து நிறைவேற்றிடவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். நேற்று அதிநவீன செல்போன் ஒன்றை எனது நண்பர் சாபு -வின் கையில் பார்த்தேன்,அது உலகம் என் கையில் என்ற் ஸ்லோகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.அதன் விலை 30,000/- ரூபாயாம். அதுவே இன்று நம்பர் ஒன் என்கிறார்கள். இதுவரை உலகமெங்கும் சுமார் 30 மில்லியன் விற்றுத் தீர்ந்திருக்கிறதாம்.