புதுடில்லி : "நாட்டில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள்' என, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்: ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில், சமூக, பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக ஆண்களும்; உணர்வுப்பூர்வமான மற்றும் சொந்தப் பிரச்னைகளால் பெண்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தற்கொலை செய்து கொள்வோரில் 26 சதவீதம் பேர் நன்கு படித்தவர்கள்; 19.8 சதவீதம் பேர் படிக்காதவர்கள். திருமணமான நபர்களில், பெண்களை விட, ஆண்கள் தான் பெருமளவு(70 சதவீதம்) தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களில், அரசுப் பணியாளர்கள் 1.4 சதவீதம் பேர்.
கடந்த 2010ம் ஆண்டில் மட்டும், நாடு முழுவதும் 1 லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் (69.2 சதவீதம்) திருமணமான நபர்கள். குறிப்பாக, சுயவேலைவாய்ப்பு பெற்றவர்கள் 41 சதவீதம் பேர்; 7.5 சதவீதத்தினர் வேலை இல்லாதவர்கள்.
சொத்துப் பிரச்னை காரணமாக 48 சதவீதத்தினரும்; மிக நெருக்கமானவர் உயிரிழந்ததால், 28.9 சதவீதம் பேரும் தற்கொலை செய்து கொண்டனர். இதில், ஆண்; பெண் விகிதாச்சாரம் 52:48. இதுவே, 2009ம் ஆண்டில், 65:35 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில் 11.9 சதவீதம், ஆந்திராவில் 11.8, தமிழகத்தில் 12.3, மகாராஷ்டிரா 11.8 மற்றும் கர்நாடகாவில் 9.4 சதவீத தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில், மேற்கு வங்கத்தில் அதிகளவு தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. அதேபோல, 2010ம் ஆண்டில், 12.3 சதவீதத்துடன் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
கேரளா, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் பெருமளவு (65.8 சதவீதம்) தற்கொலை செய்து கொள்கின்றனர். அதேபோல, மத்திய பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் சிறுவர்கள் அதிகம் (55.9 சதவீதம்) தற்கொலை செய்து கொள்கின்றனர்.
விபத்துகளில் 4 லட்சம் பேர் பலி : கடந்த 2010ம் ஆண்டில், சாலை, ரயில், தீ விபத்து என, பல்வேறு விபத்துகளில் சிக்கியும், மின்னல் தாக்கியும் நான்கு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றில் ஆண்; பெண் விகிதம் 78:22. பெரும்பாலான சாலை விபத்துகள் மாலை 6 மணி துவங்கி, இரவு 9 மணி வரையிலும் நிகழ்ந்தவை. சாலை விபத்துகளில் மட்டும் 73 ஆயிரத்து 312 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில் சென்று, விபத்துக்குள்ளானவர்கள்.
இவற்றில் பெரும்பாலான விபத்துகள் 2010, மே மாதத்தில் நிகழ்ந்தவை. இதில், மத்திய பிரதேசம் 9.3, தமிழகம் 8.4 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளன. அதேபோல, எதிர்பாராத இயற்கைப் பேரிடர்களில் சிக்கி, 3 லட்சத்து 59 ஆயிரத்து 583 பேர் உயிரிழந்துள்ளனர்; 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.