இது இன்று சாலையோரத்தில் நான் காண நேர்ந்த விளம்பரம், இது யாருக்காக வைக்கப்பட்டுள்ளது? கிறிஸ்தவருக்காக; ஆனால் இதனை பார்க்கும் கிறிஸ்தவர்கள் இந்த பண்டிகைக்கு செல்வார்களா? சான்ஸே இல்லை, ஏனெனில் அவரவருடைய சபைப் போதகரின் அனுமதியின்றி யாரும் எங்கும் செல்லமுடியாது; அப்படியே சென்றாலும் பாஸ்டருக்கு வேண்டிய யாராவது ஒரு அக்கா கண்ணில் மாட்டினால் தொலைந்தது,அந்த வாரத்தின் சிறப்பு செய்தி சம்பந்தப்பட்டவருக்கே,தோய தோய துவைத்து அனுப்புவார்,பாஸ்டர்.
போகட்டும், இதென்ன 10 வது மாத உபவாசப் பண்டிகை? என்ற கேள்வியுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினேன்;
// ஐயா, அது என்னங்க ஐயா பத்தாவது மாத உபவாசப் பண்டிகை,புரியலையே..? //
// ஓ,அதுவா, அது எனக்கு சரியா தெரியல, நல்ல ஐயாமார் வாராங்க, அவங்கதான் இதைப் பற்றி நல்லா சொல்லுவாங்க, ஆனாலும் எனக்கு என்னவோ தோணிச்சு போட்டுட்டேன், அதாவது மேல போட்டிருக்கிறேனே அந்த வசனத்திலே இருக்குல்லே,சகரியா.8:19- வசனம் அதிலே இருக்கும் பத்தாம் மாத உபவாசம் என்பதையே உபவாசப் பண்டிகை என்று போட்டிருக்கிறேன், வரப்போவது பத்தாம் மாதம் தானே..? என்றார்.
"நாலாம் மாதத்தின் உபவாசமும், ஐந்தாம் மாதத்தின் உபவாசமும், ஏழாம் மாதத்தின் உபவாசமும் பத்தாம் மாதத்தின் உபவாசமும், யூதா வம்சத்தாருக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நல்ல பண்டிகைகளாகவும் மாறிப்போகும்; ஆகையால் சத்தியத்தையும் சமாதானத்தையும் சிநேகியுங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்."(சகரியா.8:19)
நான் மிகவும் தயக்கத்துடன் // ஐயா, லேவியராகமம்.23:24 -ல் வேறு மாதிரி இருக்கிறதே ஐயா // என்று துவங்கவும் அவருடைய குரலில் ஒருவித பரபரப்பை கவனித்து, // ஐயா நீங்க எதுவும் பிஸியாக இருக்கீங்களோ அப்புறமா பேசலாமா // என்றேன்; //ஆமாம்,நான் இப்போ ஆஸ்பத்திரியில இருக்கேன், //என்றார்; ஆஸ்பத்திரியிலே ஏன் இருக்கிறாரோ யாருக்கு என்ன பிரச்சினையோ என்று "கட்" பண்ணினேன்;
இப்படித்தான் இன்றைய கிறிஸ்தவம் அரைவேக்காட்டு கிறிஸ்தவமாகவும் எடுப்பார் கைப்பிள்ளை என்பது போலவும் போய்க்கொண்டிருக்கிறது; கேட்டால், அவரவருக்குத் தோன்றிய வெளிச்சத்தில் (என்ன வெளிச்சமோ..?!) போகிறோம் என்பார்கள்; வெளிச்சம் ஒன்றாக இருந்தால் பாதையும் ஒன்றாகவே இருக்கும்; ஆனால் வெளிச்சம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வருவதால் பாதையும் வெவ்வேறாக இருக்கிறது போலும்;
கடந்த மாதத்தில் சீர்திருத்த சபையார்அறுப்பின் பண்டிகை என்று கொண்டாடினார்கள்; ஆனால் அது கத்தோலிக்கருக்குக் கிடையாதாம்; இங்கோ சற்றும் சம்பந்தமில்லாமல் பத்தாம் மாத உபவாசப் பண்டிகை என்று கொண்டாடுகிறார்கள்; அதே காலக்கட்டத்தில் வேதத்தின் வேறொரு முக்கிய பண்டிகை காலமாக இருப்பதால் ஆர்வத்துடன் சென்றேன்; ஆனால் அதில் பத்தாம் மாதம் என்று இருந்ததும் ஏமாற்றம் அடைந்தேன்; ஏன் பத்தாம் மாதம் என்றால் ஆங்கில வருடத்தின் பத்தாம் மாதத்தை சொல்லுகிறார்கள்; அப்படியானால் வேதமானது ஆங்கில வருடத்தின் அடிப்படையிலா எழுதப்பட்டுள்ளது, இது வேண்டாத குழப்பம் தானே..?
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் என்பார்களே, அதுபோல வேதத்தை நேர்மையுடன் சொல்லிக்கொடுக்க தைரியமில்லாத அரைவேக்காட்டு மேய்ப்பர்களால் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுகிறது; ஆரம்பத்திலேயே ஒழுங்காக இதுஇது, இப்படிஇப்படி என்று அட்டவணை போட்டு சொல்லிவிட்டால் வேதத்தை வாசிக்கும்போது ஒருவித பிணைப்பு உண்டாகும் அல்லவா?
இந்துமக்கள் ஆங்கில வருடக் கணக்கை ஏற்றுக்கொண்டாலும் அவரவருடைய நல்லது கெட்டது அனைத்துக்கும் இந்திய முறைப்படியான காலண்டரையே பின்பற்றுகிறார்கள்; அவ்வாறே யூதரும் இஸ்லாமியரும் கூட அவரவருக்கென்று தனி ஒழுங்கைப் பின்பற்றுகிறார்கள்; ஆனால் கிறிஸ்தவர்களுடைய நிலைமை பரிதாபத்திலும் பரிதாபம்...இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைமைதான்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)