கிறிஸ்தவ வாழ்வு தேவனுடைய சித்தத்தின்படி அமைத்துக் கொள்ளப்பட வேண்டிய வாழ்வாகும்; நம்முடைய தனிப்பட்ட, சமுதாய, உத்தியோக குடும்ப வாழ்வுக்கான தேவசித்தம் என்ன என்பதை அறிந்து கொண்ட நாம் கடைசியாக, தேவனுடைய சித்தத்தின் அம்சங்களையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இது தேவ சித்தத்தைப் பற்றிய இன்றைய கிறிஸ்தவ உலகில் நிலவும் சில தப்பபிப்பிராயங்களை நீக்கி, தேவசித்தம் என்றால் என்ன என்பதை அறிந்திட நமக்கு உதவிடும். இறையியலாளர்கள் தேவசித்தத்தை பல்வேறு வகைகளாக பிரிப்பது வழமை. அவற்றுள் முக்கியமான மூன்று அம்சங்களை ஆராய்வோம்.
(1) தேவனுடைய அநாதிச் சித்தம்
தேவனுடைய சித்தத்தின் ஒரு அம்சம் அவருடைய அநாதிச் சித்தமாகும். இது அவருடைய அநாதித் தீர்மானம் என்றும் இரகசிய சித்தம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட சித்தம என்றும் முன்குறிக்கப்பட்ட சித்தம் என்றும் பலவாறாக அழைக்கப்படுகி்றது. இது உலகத் தோற்றத்திற்கு முன் தேவன் எடுத்த தீர்மானமாகும். இவ்வாறு தேவனால் தீர்மானிக்கப்பட்டவை நிச்சியமாய் நிறைவேறியே தீரும். அவற்றை எதிர்க்கவோ, மாற்றவோ திரிபடையச் செய்யவோ யாராலும் முடியாது. (தானி. 4l35ஏசா 14:27, 46:10-11, யோபு 23:13) இந்த அநாதிச் சித்தத்தை தேவன் நேரடியாக, இல்லையென்றால் நடைபெறும் சம்பவங்கள் மற்றும் மனிதர்கள் மூலமாக நிறைவேற்றுவார்.
வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் தேவனுடைய அநாதிச் சித்தத்தின்படியானது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால்தான் தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட இயேசு என்றும் (அப் 2:23) உலக்த் தோற்றத்தி்ற்கு முன்பு குறிக்கப்பட்டிருந்தவராயிருந்தார் (1 பேதுரு 1:20) என்றும் பேதுரு கூறினார். ”தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்”. என அறிகிறோம் (ரோமர் 8:29) அதேபோல் சிலர் பிறப்பற்கு முன்பாகவே அவர்கள் செய்ய வேண்டிய பணி என்ன என்றும் தேவன் முன்குறித்திருக்கிறார். உதாரணமாக எரேமியா தாயின் கர்ப்பத்திலிருந்து வெளிப்படும் முன்பே தேவன் அவரைப் பரிசுத்தம் பண்ணி ஜாதிகளுக்கு தீரக்கதரிசியாக கட்டளையிட்டிருந்தார். (எரே. 1:5) அப்போஸ்தலனாகிய பவுலினுடைய வாழ்விலும் நாம் இதை அவதானிக்கலாம். (கலா. 1:15) எனவே, தேவன் நம்முடைய வாழ்விலும் சில காரியங்களை முன்குறித்திருந்தால், அவைகள் நிச்சயமாய் ஒரு நாள் நடந்தே தீரும். ஏனென்றால் தேவனுடைய அநாதிச் சித்தம் ஒருநாளும் மாற்றமடையாது எப்படியும் அது நிறைவேறும்.
(2) தேவனுடைய அனுமதிக்கும் சித்தம்
நம் வாழ்வின் எல்லா அம்சங்களையும் தேவன் முன்குறிக்கவில்லை. சில காரியங்களை அவர் நம்முடைய வாழ்வில் அனுமதிக்கிறார். இது அவருடைய அனுமதிக்கு்ம் சித்தம் என அழைக்கப்படுகின்றது. சில சமயங்களில் தேவன் தான் விரும்பாததையும் அனுமதிக்கின்றார். உலகின் பாவம் இவ்வாறு அவர் அனுமதித்ததொன்றேயாகும். எனினும், இத்தகைய ஒரு காரியத்தை தேவன் அறியாதிருந்தார் என்றோ, இது அவருடைய அநாதிச் சித்தத்தை மாற்விடும் என்றோ சொல்லமுடியாது. அவர் தமது சித்தத்தின் ஆலோசனைக்கத்தக்கதாக எல்லாவற்றிறையும் நடப்பிக்கின்றவர். (எபே. 1:12) அதோடு தேவன் அனுமதிப்பவைகள் அவர் அங்கீகரிப்பவைகளாகவும் இருப்பதில்லை.
சவுல் இஸ்ரவேலின் ராஜாவாகிய சம்பவம் தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்திற்கு சிறந்த உதாரணமாயுள்ளது. 1 சாமுவேல் 8 ஆம் அதிகாரத்தை வாசிக்கும்போது, அக்காலத்தில் இஸ்ரவேல் மக்கள் அரச ஆட்சியின் கீழ் இருப்பது தேவனுடைய சித்தமாயிருக்கவில்லை என்பதை அறிந்திடலாம். மக்கள் தமக்கு ராஜா வேண்டுமெனும் பிடிவாதத்துடன் இருந்தமையினால், அவர்களது கோரிக்கை எத்தகைய விளைவுகளை கொண்டு வரு்ம் என்பதை அறிவித்ததோடு, தான் விரும்பாத நிலையிலும், தேவன் அவர்களுக்கு ஒரு ராஜாவைக் கொடுத்தார். அவர் கோபத்திலேயே இதை செய்தார். (ஓசி 13:11) இதனால் அரச ஆட்சி முறையினால் ஏற்பட்ட துயரகரமான விளைவுகளை இஸ்ரவேல் மக்கள் அனுபவிக்க வேண்டியவர்களாயிருந்தனர்.
தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தைப் பற்றி பிலேயாமின் கதையும் அறியத் தருகிறது. (எண். 22:24) இஸ்ரவேலை சபிக்கும்படி மக்கள் அவனிடம் கேட்டபோது அவன் தேவனிடம் இதுபற்றிக் கேட்டான். தேவன் போகவேண்டாம் என்று சொன்னார். எனவே அவன் தான் வரவில்லை. என கூறினான். (22:9-12) பின்னர் அவனை அழைத்தவர்கள் அவனுக்கு அதிக பணம் தருவதாக கூறினர். பண ஆசை காரணமாக அவர்களோடு போகவிரும்பிய பிலேயாம் இரண்டாந்தரம் தேவனிடம் அனுமதி கேட்டபோது, போகும்படி சொன்னார் (22:18-20) தேவனுடைய சித்தம் பிலேயாம் போகக் கூடாது என்பதுதான் ஆனால் இரண்டாம் தரம் கேட்டபோது தேவன் அனுமதித்தார். எனினு்ம், பிலேயாமினுடைய வழி தேவனுக்கு மாறுபாடாயிருந்ததினால் கர்த்தருடைய தூதனானவர் அவனுக்கு எதிராக புறப்பட்டு வநதார். (22:32-33) மட்டுமல்ல அவன் சென்ற நோக்கமும் நிறைவேறாமல் போய்விட்டது (22.16-24, 24.1-9)
தேவனுடைய அனுமதிக்கும் சித்தம் அவரது விருப்பத்துக்கு முரணானதாகையால் அது மனிதருக்கு நன்மை பயக்கும் ஒன்றாய் இராது. தேவ சித்தத்தை அறியாது இஸ்ரவேலர் ராஜாவைக் கேட்டதினால் ராஜாவாக சவுல் வந்ததினால் ஏறபட்ட துயரங்களை அவர்கள் அனுபவித்தனர். அதேபோல் தேவனுடைய சித்தம் என்ன என்பதை அறிந்ததும் அதற்கு முரணான காரியத்தைப் பிலேயாம் கேட்டான். தேவன் அதை அனுமதித்தாலும் அவன் ஆபத்துக்களை சந்திக்க வேண்டியவனாயிருந்தான். எனவே, தேவனுக்கு சித்தமில்லாத காரியங்களை நாம் அவரிடம் கேட்கக்கூடாது. அவர் கொடுக்காத கொடுக்க விரும்பாதத்தை நாம் கேட்க்கூடாது. அவர் கொடுக்காத, கொடுக்க விரும்பாததைத் தொடர்ந்து நாம் கேட்டுக் கொண்டே இருந்தால் சில சமயங்களில் அதை அவர் நமக்கு தந்து விடலாம். ஆனாலும் அதனால் வரக்கூடிய பாரதூரமான விளைவுகளுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டும். எனவே தேவன் அனுமதிக்கும் காரியத்தை அல்ல. அவர் நமக்கு, விரும்பிக் கொடுக்கும் காரியத்தையே நாம் நாடவேண்டும்.
(3) தேவனுடைய அறிவிக்கப்பட்ட சித்தம்
தேவனுடைய அனுமதிக்கும் சித்தம் அவரது அங்கீகாரமற்றவை என்பதனால் நாம் அவருடைய அறிவிக்கப்பட்ட அல்லது வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தின்படி நடக்க வேண்டியவர்களாயிருக்கின்றோம். அறிவிக்கப்பட்ட சித்தம் என்பது தேவனுடைய வார்த்தையான திருமறையில் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய சித்தமாயிருக்கும். தேவனுடைய அநாதிச் சித்தத்தின் இரகசியங்களை நம்மால் முழுமையாக அறியமுடியாதிருப்பதனால் அதை அறிய முயற்சிக்காமல், நமக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேவசித்தத்தை அறிந்து அதன்படி வாழவேண்டும். “மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படி யெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்“ (உப 29:29) எனவே தேவனால் அறிவிக்கப்பட்ட அவருடைய வார்த்தையின்படி நாம் வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வுக்கான தேவசித்தம் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
கிறிஸ்தவர்களாகிய நாம் தேவசித்தத்தினபடி வாழ்வதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் அனைத்தும் அவருடைய வார்த்தையான வேதாகமத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.“ என அறிவுறுத்தப்பட்டுள்ளோம்(யோசுவா 1:8) உண்மையில் “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.“ (சங்கீதம் 1:2) “கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.“ (சங்கீதம் 119:1) எனவே, தேவசித்தத்தின்படியான பாக்கியமான வாழ்வை அனுபவிக்க, தேவவாரத்தையின் அறிவுறுத்தல்களின்படி நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்வோம்.
(இவ்வாக்கமானது சகோ. வசந்தகுமார் அவர்கள் எழுதிய கிறிஸ்தவ வாழ்வில் தேவசித்த்ம் எனும் நூலிருந்து பெறப்பட்டதாகும்)