நவீன மிஷனரிப் பணியின் தந்தையாகக் கருதப்படும் வில்லியம் கேரி (1761-1834) இந்திய மொழிகள் பலவற்றில் வேதாகமம் மொழிபெயர்க்கப்படுவதற்கு காரணமாய் இருந்தவராவார்.
1761 இல் இங்கிலாந்திலுள்ள வறிய குடும்பமொன்றில் பிறந்த வில்லியம் கேரி ஆரம்பத்தில் சப்பாத்து தயாரிக்கும் ஒரு தொழிலாளியாகவே இருந்தார். அவர தனது வேலை ஸ்தலத்தில் உலகப் படமொன்றைத் தொங்கவிட்டடிருந்ததோடு, உலக நாடுகளின் இரட்சிப்புக்காக ஜெபித்தும் வந்தார். இதன் காரணமாக, வெளிநாடுகளுக்கு மிஷனரியாகச் செல்ல வேண்டும் எனும் மனப்பாரம் அவருக்கு ஏற்பட்டது.
1785 இல் மூல்ட்டன் எனுமிடத்திலிருந்த ஒரு சிறிய பப்டிஸ்ட் சபையில் பணியாளராகிய வில்லியம் கேரி 1786 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு இறைபணியாளர் கூட்டத்தில், இயேசுக்கிறிஸ்துவை அறியாத நாடுகளில் அவரைப் பற்றி அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டினார்.
சகல நாடுகளுக்கும் சுவிஷேசத்தை அறிவிக்க வேண்டும் எனும் கட்டளை முதலாம் நூற்றாண்டு அப்போஸ்தலர்களுக்கு மட்டுமானது எனும் கருத்து கிறிஸ்தவ உலகில் நிலவிய அக்காலத்தில் ஒரு வயது முதிர்ந்த இறைபணியிலாளர் வில்லியம் கேரியிடம் “இளம் வாலிபனே உட்காரு. புறஜாதியாரை இரட்சிக்கத் தேவன் விரும்பும்போது அவர் நமது உதவியின்றியே அக்காரியத்தைச் செய்வார்” என்று கூறினார்.
வயது முதிர்ந்த இறைபணியாளரின் பதில், வெளிநாட்டு மிஷனரிப் பணியில் வில்லியம் கேரிக்கு இருந்த ஆர்வத்தை குறைத்து விடவில்லை. 1791 இல் அவர் வெளிநாட்மு மிஷனரிப் பணியின் அவசியத்தை ம்களக்கு உணர்ததுவதற்காக ஒரு நூலை எழுதியதோடு, 1793 இல் தானே ஒரு மிஷனரியாக இந்தியாவிற்கு வந்து இயேசுக்கிறிஸ்துவைப் பற்றி அறிவித்தார்.
வயது முதிர்ந்த இறைபணியாளரின் வார்த்தைகளைக் கேட்டு வில்லியம் கேரி் தேவன் தனது உதவியில்லாமல் புறஜாதியாரை இரட்சிப்புக்குள் கொண்டு வருவார் என நினைத்துப் பேசாமல் இருந்திருந்தால் பலர் இயேசுக்கிறிஸ்துவிடம் வருவதற்கு வழியில்லாமல் போயிருக்கும். எனவே, நாமும் வில்லியம் கேரியைப் போல இயேசுக்கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு அவரைப் பற்றி அறிவிக்க முன்வர வேண்டும். இயேசுக்கிறிஸ்துவைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவித்தாலே அவர்கள் அவரிடம் வருவார்கள். (ரோமர் 10:14) நாம் ஒருபோதும் மறக்கலாகாது.