18ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல பிரஞ்சு தத்துவ ஞானி வொல்ட்டயர் கிறிஸ்தவத்தை உலகிலிருந்து முற்றாக அழிப்பதற்கு பலவிதத்திலும் முயற்சி செய்தவனாவான். வேதாகமத்திற்கும் தேவனுக்குமெதிராக நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ள வொல்ட்டயர், “கிறிஸ்தவம் வளர்வதற்கு பல நூற்றாண்டுகள் எடுத்தன. ஆனால் 50 வருடங்களுக்குள் அதை ஒரே ஒரு பிரெஞ்சு மனிதனால் எவ்வாறு அழிக்க முடியும் என்பதை நான் காட்டுகிறேன் எனக் கூறினான்.
வேதாகமத்தை பூமியிலிராதபடி ஒழிக்க தான் தான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற்றுவிடும் எனும் எண்ணத்தில் “இன்னும் நூறு ஆண்டுகளில் கிறிஸ்தவம் பூண்டோடு அழிந்துவிடும்“ எனப் பெருமிதங் கொண்டான் வொல்ட்டயர்.
கிறிஸ்தவத்தை அழிக்க முயன்ற வொல்ட்டயர். கடைசியில் தன்னைத் தானே அழித்துக் கொண்டான். பிரபல தத்துவ ஞானியாக இருந்த அவன், தன் வாழ்வின் இறுதிப் பகுதியில் விரக்தியடைந்த நிலையில் “நான் பிறவாதிருந்திருந்தால் நலமாயிருந்திருக்கும்“ எனக் கூறியதோடு மரணப் படுக்கையிலிருக்கும்போது தனக்கு சிகிச்சையளித்த வைத்தியரிடம் “நான் தற்போது மனிதர்களினாலும் தேவனாலும் கைவிடப்பட்டுள்ளேன். உம்மால் எனக்கு ஆறு மாத காலம் வாழ்வைக் கொடுக்க முடியுமென்றால் நான் எவ்வளவு பெறுமதியானவனோ அதில் பாதியை உமக்குத் தருகிறேன்“ என்றான். ஆனால் வைத்தியரோ “உம்மால் ஆறு கிழமைகள் கூட உயிர்வாழ முடியாது“ என்று தெரிவித்தார். அதைக் கேட்ட வொல்ட்டயர் “அப்படியானால் நான் நரகத்திற்குத்தான் போவேன். நீயும் என்னோடு வருவாய்“ என்று கூறியதோடு சிறிது நேரத்துக்குள்ளாக மரணமடைந்தான்.
கிறிஸ்தவத்தையும் வேதாகமத்தையும் அழிக்கப் பாடுபட்ட வொல்ட்டயர் கடைசியில் தன் வாழ்வையே அழித்துக் கொண்டான். ஆனால் அவன் அழிக்க முயன்ற கிறிஸ்தவமோ வளர்ந்து கொண்டே வந்துள்ளது. வொல்ட்டயர் மரித்து 20 வருடங்களின் பின்னர் அவனது வீட்டை ஜெனீவா வேதாகமச் சங்கம் விலை கொடுத்து வாங்கியதோடு அதை வேதாகமத்தை அச்சிட்டு வெளியிடும் அச்சகமாக்கியது. பிற்காலத்தில் அவ்வீடு பிரித்தானிய வெளிநாட்டு வேதாகமச் சங்கத்தின் பாரீஸ் தலைமையகமாகியது.
வொல்ட்டயர் அழிக்க முற்பட்ட வேதாகமம் இன்று உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் புத்தகமாக உள்ளது. ஆனால் 6 தொகுதிகள் கொண்ட வொல்ட்டயரின் எழுத்துக்களை ஒரு டொலர் கொடுத்தும் வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. கிறிஸ்தவத்தை அழிக்க முற்படுவது தற்கொலை செய்வதற்கு சமமானது என்பதற்கு வொல்ட்டயரின் வாழ்வு உலகமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய ஒரு உதாரணமாய் உள்ளது.
(நன்றி - சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. (Matt 24:35 Ps 102:26; Isa 51:6; Mark 13:31; Heb 1:11;)