"கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்."(லூக்கா.6:38)
நம்முடைய இரட்சகர் சொல்லிக்கொடுத்த இந்த பாலபாடத்தை சிறுவயதுமுதல் எனது தாயார் மூலம் பெற்று, பார்த்து, அனுபவித்து வருகிறேன்; கொடிய தரித்திரமான சூழ்நிலைகளிலும் கூட ஈகையில் சிறப்பான பங்கை எனது தாயார் நிறைவேற்றிய தருணங்களை அறிவேன்.
"இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்." (அப்போஸ்தலர்.20:35)
இப்படிப்பட்ட வசனங்களின் மூலம் வாங்குகிறதைக் காட்டிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்ற பாரம்பரியத்தில் வளர்ந்தேன்; தனிப்பட்ட வாழ்க்கையில் பலருக்கு மனதுருகி உதவி செய்தாலும் ஒருபோதும் பிணைப்பட்டு ஜாமீன் நிற்கவோ மற்றொருவரிடம் கடன் வாங்கி இன்னொருவருக்குத் தரவோ நான் துணிந்ததில்லை; உதவி கேட்கும் யாரையும் லேசில் நம்பவும் மாட்டேன்; ஆனாலும் ஒருவரை நம்பிவிட்டால் மனதுருகி என்னிடம் இருப்பதில் இயன்றதையும் சிறப்பானதையும் செய்வது வழக்கம்; இந்த மனமாற்றமும் கூட ஆண்டவரை ஏற்றுக்கொண்டு நெருங்கி ஜீவிக்கத் துவங்கிய பிறகே ஏற்பட்டது; அதுபோன்றதொரு அண்மைய அனுபவத்தையே பகிர்ந்துகொள்ளுகிறேன்.
வேதமாணவர் குழுவைச் சேர்ந்த ஒரு சகோதரனுடன் கடந்த மூன்று வருடத்துக்கு மேலாக பழகிவருகிறேன்;அவருக்கு அண்மையில் சாலை விபத்தில் கையில் பலத்த அடிபட்டு மிகவும் சிரமப்பட்டார்; தொழில் முடங்கியது, சபை ஐக்கியம் இல்லை, உதவிசெய்வாரும் இல்லை; அவருடைய குணாதிசயம் மற்றும் போதிக்கப்பட்டவைகள் காரணமாக மிகவும் சுயசார்புடையவர், சுயகௌரவம் பார்ப்பவர்;தன்னுடைய கஷ்டத்தை யாரிடமும் சொல்லிக்கொள்ள விரும்பமாட்டார்.
ஆனாலும் அவருடைய நண்பர் ஒருவர் இதேபோன்று விபத்தில் அடிபட்டு தவித்தபோது சொந்த சகோதரனைக் காட்டிலும் அதிகமாக ஓடிஓடி உதவிசெய்தார்;அவர் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதை அறிந்தும் இவர் கேட்டபோதெல்லாம் பண உதவி செய்தார்;ஆனால் இவர் இன்றைக்கு அடிபட்டு தவிக்கும்போது உதவி செய்ய யாருமில்லை;அவருடைய உற்ற நண்பர்களாகப் பழகி அவருக்கு சத்தியத்தைச் சொன்னவர்கள் கூட அவரை நியாயந்தீர்ப்பது போல பேசினார்கள்.
அதாவது அவருக்கு இயேசுவின் தெய்வத்தன்மையை எடுத்துக்கூறி அவரை வேதமாணவர் குழுவின் போ(தை)தனையிலிருந்து மீட்கப் போராடிய ஒரு பெரியவர், அவர் தன்னுடைய மனமாற்றத்தை வேதமாணவர் கூட்டத்தில் சாட்சியாகச் சொல்லி அவர்களிடமிருந்து முழுவதுமாக விலகவேண்டும் என்று நிர்பந்தித்தார்; அதனை இவர் செவிமடுக்காத காரணத்தினாலேயே விபத்து நேரிட்டது என்று கூறி அவரை வேதனைப்படுத்தினார்கள்; இந்நிலையில் கடந்த சிலவாரங்களுக்கு முன்பு மீண்டும் அதே வாகன விபத்தினால் அவருடைய காலில் கணுக்கால் பகுதியில் மீண்டும் அடிபட்டு மிகவும் சிரமப்படுகிறார்.
அத்தனை கௌரவம் பார்ப்பவர், உழைப்பாளி, அவருடைய நிலைமை சரியில்லாமற்போன ஒரே காரணத்தினால் என்னிடம் வெட்கத்தைவிட்டு பண உதவி கேட்கிறார், "வீட்டு வாடகை கட்டவேண்டும் பிரதர்" என்பதாக; எனக்கு அவருடைய நிலைமை நன்கு தெரிந்தும் உதவி செய்யமுடியாத நிலை; ஆனாலும் அவர் சமாளித்துக்கொண்டு, "பரவாயில்லை ப்ரதர் உங்களை வந்து ச்சும்மா பார்த்துவிட்டு வரேன் கொஞ்சம் மனசுக்கு ரிலாக்ஸாக இருக்குமே கடந்த மூன்று மாதமாக வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிறேன்" என்றார்.
சொன்னது போலவே காலையில் வராவிட்டாலும் தேர்தல் நாளன்று (13.04.2011) மாலையில் வந்தார்; சற்றும் எதிர்பாராமல் தன் மனைவியுடன் வந்தார்; திருச்சி பட்டணத்தின் பின்னணியில் வேதமாணவர் குழுவிலேயே சிறுவயது முதலாக ஊறிப்போன அவரும் அவருடைய மனைவியும் எந்த கிறித்தவர் வீட்டுக்கும் போகமாட்டார்களாம்; அதிலும் அவருடைய மனைவி இப்போது தான் முதன்முதலாக ஒரு கிறித்தவ போதகர் வீட்டுக்கு வருகிறார் என்று சிலாகித்தார்.
நான் பலதரப்பட்ட மக்களுடன் பழகிவருவதால் அவர்களை எந்தவகையிலும் புண்படுத்தாமல் தத்துவம் போல சிலவார்த்தைகளைக் கூறியதுடன் நிறுத்திக்கொண்டேன்; நாம் பேசிக்கொண்டிருப்பவை எல்லாமே மனிதக் கருத்து தானே; ஒரு மனிதன் தன் எண்ணத்தை மற்றொருவனுடன் பகிர்ந்து கொள்கிறான்; இப்படி ஒத்தகருத்துடையவர் இணைந்து மொத்த கருத்து உருவாக அது ஒரு இயக்கமாகவும் கலாச்சாரமாகவும் பாரம்பரியமாகவும் வழக்கமாகவும் மாறிவிடுகிறது; இப்படியே மொழிகளும் இனங்களும் தேசங்களும் தேசத்தின் எல்லைகளும் வகுக்கப்பட்டது.
உதாரணமாக கோதுமை சாப்பிடறவனெல்லாம் சேர்ந்து நம்மை இங்கே இந்த பக்கம் அனுப்பிட்டான்; அரிசி சாப்பிடறவனெல்லாம் இங்கே வராதே;இது கோதுமை சாப்பிடறவன் ஏரியா என்பதாக; இப்படியே ஆடை கலாச்சாரமும் பிரிந்திருக்கிறது; இதுபோலவே மதங்களும் மார்க்கங்களும் தத்துவங்களும் பிரிந்தே இருக்கிறது; இதிலிருந்து நாம் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு இணைந்து வாழ முயற்சிக்கிறோம்" என்பதாக பேசி சமாளித்தேன்;ஏனெனில் அந்த சகோதரி வாயைத் திறந்து எதுவும் பேசுவதாக இல்லை;அவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள்.
இவரை சந்திப்பதற்காக ஆயத்தமான போதே ஆவியானவர் உணர்த்தினார்; அவருக்கு சிறு பண உதவி செய்யவேண்டும் என்பதாக;அதற்கான காரணத்தையும் நினைவுபடுத்தினார்;அதாவது கடந்த வருடத்தின் இறுதியில் நான் ஒரு வேத ஆராய்ச்சி கூட்டத்தை வீட்டிலே நடத்திக்கொண்டிருந்தேன்; அப்போது கலந்துகொள்ள வரும் சுமார் 20 பேருக்கும் ஒவ்வொரு வாரமும் இரவு உணவளித்து அனுப்புவது வழக்கம்;அதுசம்பந்தமாக யாரிடமும் எந்தவிதமான பங்களிப்பையும் நான் கோரவில்லை;என்னுடைய சொந்த செலவிலேயே அதனை நிறைவேற்றினேன்;சுமார் இரண்டு மாதங்கள் இதனை கவனித்த இந்த சகோதரர் அவராக முன்வந்து 25கிலோ அரிசி (ரூபாய் 750/-) வாங்கிக்கொடுத்தார்; அந்த நற்கிரியையை மனதில் கொண்டு தற்போது சிரமத்தில் இருக்கும் இவருக்கு கடனாக இல்லாவிட்டாலும் பண உதவியாக ரூபாய் 500/- கொடுக்க ஏவப்பட்டேன், கொடுத்தேன், மிகுந்த சங்கடத்துடன் வாங்கிக்கொண்டார்; ஜெபம் செய்து அனுப்பிவைத்தேன்.
அவரை அனுப்பிவிட்டு நான் கடந்த சுமார் எட்டு வருடமாக ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் வழக்கமாகச் செல்லும் வீட்டுக்கூட்டம் நடத்தும் களத்துக்குச் சென்றேன்; முதல் வாரத்தில் மட்டும் இங்குள்ள ஏழை மக்கள் ஒரு சிலர் தங்கள் சம்பாத்தியத்திலிருந்து ஒரு சிறு தொகையை கர்த்தருக்கென்று காணிக்கையாகத் தருவார்கள்; இது இரண்டாவது வாரம் என்பதால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலே செல்லுகிறேன்; கூட்டம் என்றால் பெரிய கூட்டம் இல்லை அந்த வீட்டின் உறுப்பினர்கள் மற்றும் ஒரு சில வாலிபர்கள் அவ்வளவு தான்; கூட்டம் முடிந்ததும் ஒரு சகோதரன் வந்து எதிர்பாராமல் ஒரு காணிக்கையைக் கொடுத்தார்; அடுத்து ஒரு தம்பி வந்து அவருடைய வீட்டுக்கு ஜெபம் செய்ய அழைத்தார்; இப்போது இரவு 9 மணியாகி விட்டாலும் கடந்த வாரமே அந்த தம்பியை நான் ஏமாற்றிவிட்டதால் தற்போது மறுக்கமுடியாமல் சென்றேன்;அவர் வீட்டில் ஜெபித்ததும் ஒரு காணிக்கை; அடுத்து வெளியே வந்தால் இன்னொரு அறிமுகமான சகோதரி அவருடைய வீட்டுக்கு அழைத்தார்;அங்கே அவர் தன்னுடைய இரு மகன்கள் வீட்டிலும் ஜெபிக்க வைத்து இருவர்மூலம் காணிக்கை தரவைத்தார்;
இப்படியாக இன்று எதிர்பாராத நல்ல கலெக்ஷன்..!
என்ன இரகசியம் என்று பார்த்தால், வீட்டுக்கு வந்து என் மனைவியிடம் சொன்னேன், நம்முடைய ஆண்டவர் யாருக்கும் கடன்காரர் அல்ல, நம்முடைய வீட்டுக்கு வந்த தேவையிலிருந்த ஒரு சகோதரனுக்கு சிறு உதவி செய்தோம்;அதே 500 ரூபாயை வெவ்வேறு நபர்கள் மூலமாக சற்றும் எதிர்பாராமல் ஆண்டவர் கொடுத்துவிட்டார், என்றேன்.
இதுவே அதிசயம் என நான் சிலாகித்து சொல்லிக்கொண்டிருக்க அதே நாளின் மாலையில் வந்த ஒரு அழைப்பை ஏற்று இன்று (15.04.2011) சென்றிருந்தேன்; சுமார் ஐந்து மணிக்கு இந்த சகோதரருக்கு உதவிசெய்ய மனதில் தீர்மானித்திருப்பேன் என்றால் இந்த போன் கால் ஐந்தரை மணிக்கு வந்தது, "ப்ரதர் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு சுமாருக்கு வீட்டுக்கு வந்துட்டு போங்க" என்பதாக.
அந்த அண்ணன் வீட்டுக்கு கடைசியாக எப்போது போனேன் தெரியுமா,கடந்த ஜனவரி மாத இறுதியில் வீட்டுக்கூட்டத்தில் செய்தியளிக்கச் சென்றிருந்தேன்; அதற்குப் பிறகு அவருடைய வீட்டுக்குப் போகவுமில்லை, அவருக்கு போன் பண்ணவுமில்லை;அவருடைய மனைவிக்கு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் தோன்றியிருக்க அதுசம்பந்தமான மன உளைச்சலிலும் மருத்துவ நடைமுறைகளிலும் அவர்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்; ஆனாலும் விசுவாசத்தில் தளர்ந்துபோகவில்லை;இன்று என்னை அழைத்த அண்ணன் அவர்கள் என்னிடம் ஒரு கவரைக் கொடுத்து காணிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள், என்றார்; அவர் மாத்திரமல்ல,அவருடைய மாமியாரும் கொடுத்தார்கள்.
வீட்டில் வந்து அந்த கவரைப் பிரித்து பார்த்து ஆச்சரியப்பட்டேன்; தங்கள் நெருக்கமான கட்டங்களிலும் இவ்வாறு ஆண்டவருக்கு தங்கள் அன்பை செலுத்துவது கூடுமா என்று நெகிழ்ந்துபோனேன்;அந்த கவரில் ரூபாய் 5000 இருந்தது;ஆன்ட்டி கொடுத்தது ரூபாய் 1000.
மீண்டும் ஆண்டவர் பேசினார், கடந்த புதன்கிழமையன்று ஒரு ஏழை சகோதரனுக்கு நான் தியாகமாகக் கொடுத்தது வெறும் 500 ரூபாய்;அதற்குப் பிரதிபலனாக நான் எதிர்பாராத வகையில் பெற்றதோ இன்று அதின் பத்துக்கும் மேற்பட்ட மடங்கின் பங்கு அல்லவா? மீண்டும் சொல்லுவேன், என் ஆண்டவர் யாருக்கும் கடன்காரர் அல்ல..!
கொடுக்கும் போது மகிழ்ந்தேன்; வாங்கும் போது நெகிழ்ந்தேன்; இது இப்படியும் அப்படியும் தொடரும், என் வாழ்நாள் முழுவதும், நன்மையும்கிருபையும் போல..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)