இன்று (04.03.2011) திருவள்ளூர் அருகே ஒரு இளநீர் கடையில் கிடைத்த அனுபவம்...
"அதெப்படிங்க, நீங்களே சொல்லுங்க... இருவது ரூவா கொடுத்து இளநி சாப்பிடறோம், ஆனா தேங்காயா தான் இருக்குமாம்;அப்பன்னா தண்ணி இருக்காதே...எங்க மரத்துலயே எவ்வளவோ காய் இருக்கு அதை வெட்டக்கூட முடியாம உசரமா வளந்து கிடக்கு...எப்படியும் 100 காய் இருக்கும்" என்று அலம்பல் பண்ணிக் கொண்டிருந்த வாடிக்கையாளரை நான் மடக்கி, "சரி உங்களுக்கு தான் தென்னை மரத்தைப் பற்றி தெரியுதே நீங்களே நிறைய தண்ணி இருக்கற காயா பாத்து அவங்ககிட்ட கொடுங்க அவங்க வெட்டி கொடுக்கட்டும்" என்றதும் கடைக்காரப் பெண்மணி குஷியாகிவிட்டார்; "அதான,சார் சொல்ற மாதிரியே செய்யலாம்" என்றதும் வாடிக்கையாளர் முகம் இருண்டு போனவராகச் சொன்னார்,"அது எப்படி சார் சொல்லமுடியும்" என்றார்.
நான் இருதரப்பையும் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன்," சார்,ஒரு இளநியை வித்தா அவங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்று நினைக்கிறீங்க,என்னம்மா ஒரு ரெண்டு ரூபா கிடைக்குமா, என்றதும் அந்த பெண்மணிக்கு ரொம்ப சந்தோஷமா போயிடுத்து, "அதை ஏன் சார் கேக்கறீங்க" என்பதாக அங்கலாய்த்துக்கொண்டார்;நான் தொடர்ந்து, அதிலேயே அவங்க (தெருவோர கடை என்பதால்..) மாமுல் கட்டணும்,குடும்பத்தையும் கவனிக்கணும்; இதப்பாருங்க,நான் இயேசப்பாவுக்கு ஊழியம் செய்யிறவன்,எனக்கு பெண்களின் சிரமங்கள் நன்றாகத் தெரியும் (என்றதும் ஐயா நல்லா சொல்லுங்க ஐயா, இயேசப்பா தோத்திரம் என்றார் அந்த பெண்மணி..!) ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் குறைந்தது நான்கு ஆண்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்;முதலாவது தகப்பனார்,இரண்டாவது கணவன்,மூன்றாவது மகன்,நான்காவது மருமகன்;இவர்கள் நால்வரில் ஒருவராவது நிச்சயம் குடிகாரராக இருக்கிறார்;இதன் காரணமாக பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்;பெண்களுடைய வாழ்க்கை முழுவதும் போராட்டம் தான் ஐயா" என்றதும் வாடிக்கையாளர் அமைதியானாலும் தனது தென்னந்தோப்பைக் குறித்தே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்;
இதற்கிடையே கடைக்காரப் பெண்மணி,"ஐயா,ஒரு காயை வெட்டறேன், நீங்களே சாப்பிட்டு பாருங்க,என்று சொல்லிக்கொண்டே வெட்டத் துவங்கிவிட்டார்;சரி இவ்வளவு உணர்வுபூர்வமாகப் பேசினோமே விலையில் ஏதாவது சலுகை காட்டுவார் என்ற நப்பாசையுடன் தயங்கிக்கொண்டே "எவ்வளவு'மா" என்றால் சுமாரான காயே இருபது ரூபாய் என்றார்; "என்னம்மா,தேங்காயா இருக்கும் என்கிறீர்களே,இதே காய் 16 ரூபாய் தானேமா" என்றதற்கு, அதைவிட சின்ன காயைக் காட்டி, "இது 15 ரூபா தாங்கய்யா, எல்லாமே தண்ணி தான்" என்று சொல்லிக்கொண்டே வெட்டத்துவங்கிய காயை என் கையில் திணிக்க நானும் அனிச்சையாகப் பர்ஸை எடுத்து 20 ரூபாயை நீட்டினேன்.
உச்சக்கட்ட கிளைமாக்ஸ் என்னவென்றால் அதில் கொஞ்சமே கொஞ்சம் தண்ணீரும் நிறைய தேங்காயுமாக இருக்க அடியேன் நெடும் உபவாசத்தை துவங்கியிருக்கும் காரணத்தினால் தேங்காயை சாப்பிட மனமில்லாமல், "ஒரு கவரில் போட்டுத் தந்துடுங்களேன், நான் இவ்வளவு தேங்காயையும் சாப்பிடமுடியாது" என்றதற்கு கவரும் இல்லை என்று சொல்லிவிட்டு பேப்பரில் சுற்றி கொடுத்தார்கள்; இளநீரைக் குடித்த நாக்கில் தேங்காய் தண்ணீரின் ருசி மீதமாக இருந்ததுடன் தேங்காய்,ரொட்டி போன்ற பொருட்களைச் சாப்பிட்டால் அமில சுரப்பியின் காரணமாக (வயிறு காலியாக இருந்தும்) ஏற்படும் எனது வழக்கமான நெஞ்செரிச்சலுடன் வீட்டுக்கு எனது குதிரையை (Bike) விரட்டினேன்.
அடடே, வாடிக்கையாளருக்கு என்ன ஆனது என்று சொல்லவில்லையே,அவரும் என்னைப் போலவே தேங்கா தண்ணியை ஸாரி, இளநியைக் குடித்துவிட்டு 20 ரூபாயைக் கொடுத்துவிட்டு தேங்காயுடன் விடைபெற்றார்;அப்புறம் ஒரு விஷயம், அவர் என்னுடைய யோசனையின்படியே தானே காயைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்; கடைக்காரம்மா கிண்டலாகச் சொன்னார்கள்,"பாத்திங்களா,நீங்களே எடுத்தது, தண்ணி இருக்கா பாருங்க" என்று சொல்லிக்கொண்டே சொன்னது,"இதப் பாருங்க, ஸார் இந்த காயை வெட்டி வெட்டி ரெண்டு கையும் விட்டுப் போகுது, அவ்வளவு வலி, நீங்க சொன்னா மாதிரியே என் வீட்டு மனுஷன் குடிகாரன் தான், காலையில வந்து ரெண்டு மணிநேரத்து வியாபாரத்த பாத்துட்டு காச எடுத்துட்டு போயி குடிச்சுட்டு படுத்தார்'னா இதோ சாயங்காலம் 6 மணிக்கு தான் வருவார், திரும்பவும் காச எடுத்துட்டு போயி குடிப்பார்,நானா வீட்டுக்குப் போயி சமையல் செய்யணும் "என்பதாக புலம்பினார்.
எப்படியோ புலம்பிக்கொண்டே சாமர்த்தியமாக ரெண்டு பேரை சமாளித்துடன் ரெண்டு இளநி வியாபாரத்தையும் செய்து விட்ட பெண்மணி சாதாரண ஆளாக இருக்கமுடியாது;இல்லாவிட்டால் குடிகாரக் கணவனை சமாளிக்க முடியாதே..!
இந்த அனுபவத்தின் மூலம் நான் பெற்ற பயனுள்ள சிந்தனை:
தற்காலப் பெண்களின் நிலையைக் குறித்த கருத்தாக நான் சொன்னதுதான்;ஆம்,குடிகாரர்களைப் பெருகச் செய்ய அரசாங்கமே திறந்துவிட்டிருக்கும் புதுபுதுவழிகளால் பல இளங்குடிகாரர்கள் பெருகியிருக்கின்றனர்;ஒவ்வொரு வார இறுதியிலும் மாலை வேளைகளில் டாஸ்மாக் கடைகளில் நிற்கும் கூட்டத்தையும் வாகன நெரிசலையும் பார்த்தால் நெஞ்சம் பதறும்;இதைக் குறித்து கரிசனை கொள்வார் யாருமில்லை.
அந்த காலத்தில் குடிகாரர்களுக்கென்று பெர்மிட் முறை அமலில் இருந்தது என் சிறுவயது நினைவில் இருக்கிறது;ஆனால் இன்றைக்கு அரசாங்கம் குடிகாரர்களை நம்பியே பட்ஜெட் போடுகிறது;இலவசங்களை அள்ளிவிடுகிறது;இதன் காரணமாக நான் சொன்னது போல ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கியமான நான்கு ஆண்களில் ஒருவர் குடிகாரனாக (எப்பவாவது தான் குடிப்பேன் என்று சொல்லுபவரையும் சேர்த்து..) இருக்கிறார்;இதைக் குறித்து இன்னும் விரிவாக எழுத இருக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)