அடிக்குறிப்புகளில் Anonymous என்று இங்கு மேற்கோள் காட்டப்பட்டிருப்பது யெகோவா சாட்சிகளின் வெளியீடுகளாகும். இவர்களின் நூல்களும் கட்டுரைகளும் ஆசிரியர்(களின்) [Author(s)] பெயர்கள் இன்றியே வெளியிடப்படுவதால் Anonymous என்று ஆசிரியர் பெயருக்குரிய இடத்தில் இடப்பட்டுள்ளது. விழித்தெழு, காவற்கோபுர சஞ்சிகைகளிலும் இம்முறையே கடைபிடிக்கப்படுகிறது. ஆயினும் இந்நூலினை எழுதியவர் அதன் நிறுவுனர் திரு. ரஸல் அவர்கள் ஆவார்.
நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள் ஆசிரியர் : சகோ. வசந்தகுமார் வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி
(இயேசு தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதை நிரூபிப்பதற்கு வேதப்புரட்டர்கள் அதிகமாக பாவிக்கும் வசனங்களில் இதுவும் ஒன்று. கொலே 1.15 தொடரந்து வரும் வசனங்கள் இதன் அர்த்தத்தை சரியாக எமக்கு விளக்குகின்றது. முந்தினபேறானவர் ஏனைய வேதவசங்களில் எவ்விதம் கையாளப்பட்டுள்ளது என்பதையும் ஆசிரியர் விளக்குகிறார்)
இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிகர் என்பதற்கு யெகோவா சாட்சிகள் சுட்டிக் காட்டும் பிரதான வேதவசனம் கொலோ. 1.15 ஆகும். இவ்வசனத்தில் இயேசுக்கிறிஸ்து “சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யெகோவா சாட்சிகள் இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு “சகலமும் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்னர் சிருஷ்டிக்கப்பட்டவர்“ என்று கூறுகின்றனர்(12). இதில “முந்தினபேறுமானவர்“ என்னும் வார்த்தை “முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர்“ என்னும் அர்த்தமுடையது என்பதே இவர்களது தர்க்கமாகும்(13). இதனால், இயேசுக்கிறிஸ்து “யெகோவா குடும்பத்தின் மூத்தபிள்ளை(14) என்று இவர்கள் கூறுகின்றனர். ஆங்கில வேதாகமத்தில் firstborn என்று மொழிபெயர்க்கப்பட்டிருப்பதும் இவர்களது தர்க்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. எனினும் மூலமொழியில் இப்பதம் (Prototokos) “காலத்தில் முந்தினவர்“ என்றும் “தரத்தால் உயர்ந்தவர்“ என்னும் இரு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. இயேசுகிறிஸ்து முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர் என்று போதிப்பவர்கள் (16) “காலத்தால் முந்தினவர்“ என்னும் அர்த்தத்திலேயே இப்பதத்தை விளக்குகின்றனர். ஆனால் கொலோசெயர் 1.15 ஐத் தொடர்ந்து வரும் வசனங்களைக் கருத்திற் கொள்ளும்போது இயேசுக்கிறிஸ்து “காலத்தால் முந்தியவர்“ எனும் அர்த்தம் இவ்வசனத்திற்குப் பொருத்தமற்றது என்பதை அறிந்திடலாம். ஏனென்றால் இயேசுக்கிறிஸ்து “சபைக்குத் தலைவராகவும் “எல்லாவற்றிலும் முதல்வராகவும்“ இருப்பதாக அவ்வசனங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதால் (கொலோ. 1.18) “சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்“ எனும் சொற்பிரயோகம் இயேசுக்கிறிஸ்து “சிருஷ்டிக்கப்பட்ட சகலவற்றுக்கும் மேலானவராக இருக்கிறார்“ எனும் அர்த்தத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரமாய் உள்ளது(18) மேலும், சகலமும் இயேசுக்கிறிஸ்துவினால் சிருஷ்டிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்துவரும் வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளமையால், சிருஷ்டிக்கராகிய அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல என்பது தெளிவாகின்றது(19) உண்மையில் இயேசுக்கிறிஸ்து “முதற்தரமானவர்“ என்பதையே கொலோசெயர் 1:15 அறியத் தருகிறது. (20)
யெகோவாவின் சாட்சிகள் தங்களது உபதேசத்தை நிரூபிப்பதற்காக கொலோசெயர் 1:15 தொடர்ந்து வரும் வசனங்களில் “சகல“ எனும் பதத்திற்கு முன் ஏனைய (Other) என்னும் பதத்தினை புகுத்தியுள்ளனர். இதன்படி இவ்வசனங்கள் “அவருக்குள் (ஏனைய)சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான (ஏனைய)சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், (ஏனைய)சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் (ஏனைய)எல்லாவற்றிற்கும் முந்தினவர், (ஏனைய)எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (21) இயேசுக்கிறிஸ்துவைத் தவிர ஏனையவை அனைத்தும் அவரால் சிருஷ்ட்டிக்கப்பட்டவை என்றும், இயேசுக்கிறிஸ்துவோ தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்றும் யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். ஆனால். ஒரு உபதேசத்தை நிரூபிப்பதற்காக இவ்வாறு வேதவசனங்களை மாற்றுவது முழுமையான வேதபுரட்டாகும். “ஏனைய“ என்னும் பதம் மூலமொழியில் இல்லாதபோதிலும், மூலமொழியின் சரியான அர்த்தத்தை தருவதற்காக இப்பதத்தை தாங்கள் சேர்த்துள்ளதாக இவர்கள் கூறினாலும்(22) இவர்கள் மூலமொழியின் சரியான அர்த்தத்தைத் தருவதற்குப் பதிலாக, தங்களது உபதேசத்தினையே வேதத்திற்குள் புகுத்தியுள்ளனர். உண்மையில் “இயேசுவை சிருஷ்டிக்கப்பட்டவராகக் காண்பிப்பதற்காகவே மூலமொழியில் இல்லாத இப்பதம் இவ்வசனத்தில் புகுத்தப்பட்டுள்ளது. (23) இதன் மூலம் “சிருஷ்டிகராகிய இயேசுக்கிறிஸ்துவை இவர்கள் சிருஷ்டிக்கப்பட்டவராக மாற்றியுள்ளனர். (24)
யெகோவாவின் சாட்சிகள் தங்களது தர்க்கத்திற்கு ஆதாரமாய் பழைய ஏற்பாட்டில் இப்பதம் உபயோகிக்கப்பட்டுள்ள பகுதிகளையும் சுட்டிக் காட்டுவது வழமை. எனினும் பழைய ஏற்பாட்டின் கிரேக்கமொழி பெயர்ப்பிலும், இப்பதமானது “முன்னுரிமையையும் உயர்தரத்தையும் குறிக்கும் விதத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது(25) ஆனால் பழைய ஏற்பாட்டில் “பார்வோனின் முதற்பேறானவன்“ பார்வோனின் முதற்பிள்ளையாக இருப்பதனால் இயேசுக்கிறிஸ்து முதற்பேறானவர் என்று கூறும்போது, அவர் முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர்“ அவர் “தேவனுடைய முதலாவது பிள்ளை“ எனும் அர்த்தத்திலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாக யெகோவாவின் சாட்சிகள் தர்கிக்கின்றனர் (26) எனினும் கொலோசெயர் 1:15 இல் நாம் அவதானிக்க வேண்டிய முக்கியமான விடயம், இயேசுக்கிறிஸ்து “தேவனுடைய முதற்பேறானவர் என்று இவ்வசனத்தில் குறிப்பிடப்படாதிருப்பதாகும். அதாவது “சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் (முதற்பேறானவர்) என்றே இவ்வசனம் உள்ளது. யெகோவாவின் சாட்சிகள் கூறுவதுபோல இவ்வசனத்தில் “பிறப்பித்தல்“ அல்லது “சிருஷ்டித்தல்“ எனும் அர்த்தத்துடனேயே இப்பதம் உபயோகிக்கப்பட்டிருந்தால் இயேசுக்கிறிஸ்து தேவனுடைய பிள்ளையாக அல்ல. மாறாக சிருஷ்டிக்கப்பட்டவற்றின் பிள்ளையாக இருப்பதாகவே கருதவேண்டும்(27) எனவே இது அர்த்தமற்ற விளக்கமாகவே உள்ளது.
பழைய ஏற்பாட்டில், முதலாவது பிறந்தவர்களே முதற்பேறானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர் எனும் யெகோவாவின் சாட்சிகளின் தர்க்கத்திலும் எந்தவித உண்மையும் இல்லை. உதாரணத்திற்கு தாவீது குடும்பத்தின் கடைசி பிள்ளையாக இருந்தாலும் சங்கீதம் 89.:27ல் அவன் முதற்பேறானவன்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளான். அதேபோல். எப்பிராயீம் யோசேப்பின் இரண்டாவது மகனாக இருந்தபோதிலும் (ஆதி 41:50-51) எரேமியா 31:9 இல் அவனும் ”முதற்பேறானவன்“ என்று அழைக்கப்பட்டுள்ளான். (28) மேலும் இஸ்மவேல் பிறந்து 13 வருடங்களின் பின்னர் பிறந்த ஈசாக்கு ஆபிரகாமின் முதற்பேறானவனாக இருப்பதும் இப்பதத்தின் அர்த்தத்தை நமக்கு அறியத் தருவதாய் உள்ளது. “வேதாகமக் காலத்தில், முதற்பேறானவன் எனும் பதம் முதலாவதாக பிறந்தவன் எனும் அர்த்தத்தில் உபயோகிக்கப்படவில்லை. மாறாக இப்பதம் முன்னுரிமையையும் முதன்மையான இடத்தையும் முதற்தரத்தையும் குறிக்கும் சொல்லாகவே இருந்தது. (29) எனவே இயேசுக்கிறிஸ்து முதலாவதாகச் சிருஷ்டிக்கப்பட்டவர் என்று வேதம் கூறவில்லை. அவர் சிருஷ்டிக்கப்பட்ட சகலவற்றையும் விட மேலானவராகவும், சகலவற்றிற்கும் முதல்வராகவும் இருக்கிறார் என்பதையே சுட்டிக் காட்டுகிறது. மேலும், யெகோவின் சாட்சிகள் தர்க்கிப்பதுபோல் இவ்வசனம் இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்கவில்லை. ஏனென்றால் அடுத்த அதிகாரத்தில் ““தேவத்துவத்தின் பூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது“ எனும் வாக்கியத்தின் மூலம் இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. (கொலோ. 2:9) (30)
Footnote & References (12). Anonymous, Reasoning from the Scriptures p. 408 ஆங்கில வேதாகமத்தில் Firstborn of all creation என்று இவ்வாக்கியம் உள்ளது. (13) Anonymous, Aid to Bible Understanding p 918 (14) Anonymous, Reasoning from the Scriptures, p.408 (15) கிரேக்கத்தில் prototokos எனும் பதமே “முந்தினபேறுமானவர் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (16) நான்காம் நூற்றாண்டில் ஏரியஸ் எனும் வேதப் புரட்டின் இவ்விதமாகவே போதித்தான். இயேசுக்கிறிஸ்து பிதாவை விடத் தாழ்வானவர். பிதாவின் தன்மையற்றவர். பிதாவினால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதே இவனது உபதேசமாய் இரந்த்து. (R.E. Olson, The Story of Christian Thelogy, pp 141-150) உண்மையில் 4ம் நூற்றாண்டில் வேதப் புரட்டாக்க் கருதப்பட்டஏரியஸின் கருத்துக்களையே இன்று யெகோவாவின் சாட்சிகள் உபயோகிக்கின்றனர். (17) C. Vaughan, Colossians, Philemon : Bible Study Commentary, p38 (18) கொலோசேயர் 1:18, ரோமர் 8:29 எபிரேயர் 1:6 போன்ற வசனங்களிலும் இயேசுக்கிறிஸ்து இவ்விதமாக்க் குறிப்பிடப்பட்டுள்ளார். (19) M.J. Erickson, Christian Theology, p697 (20) R.L. Reymond, Jesus, Divine Messiah : The New Testament Witness, p247 (21) New World Translation (22) New World Translation, Forword, p6 (23) B.M. Metzger, The Jehovah’s Witnesses and Jesus Christ p70 (24) W. Martin, The Kingdom of Cults, p96 (25) P.T.O;Brien, Colossians, Philemon : World Bible Study Commentary, p44 (26) ) Anonymous, Reasoning from the Scriptures, p.408 (27) R. Rhodes, , Reasoning from the Scriptures with Jehovah’s Witnesses P. 130 (28) தமிழில் இதனை சிரேஷ்டப்புத்திரன் என்று மொழிபெயர்த்துள்ளனர் (29) L. Ryken, J.C. Wilhoit & T. Longman III, ed., Dictionary of Biblical Imagery, pp 289-290