(யோவான் சுவிஷேசத்திலுள்ள இயேசுகிறிஸ்துவின் கடின வரிகளுக்கான விளக்கங்கள்)
ஆசிரியர் : சகோ. வசந்தகுமார் வெளியீடு : இலங்கை வேதாகமகக் கல்லூரி
(வேதபுரட்டர்கள் இயேசுவின் தெய்வீகத் தன்மையை மறைப்பதற்கு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும். இயேசுவை பிதாவினை விட தாழ்வானவராக காட்டுவதற்கு இவ்வசனத்தை பாவிக்கின்றனர. இக்கட்டுரையில் ஆசிரியர் இத்தகைய கருத்து சரியானதுதான என ஆராய்ந்துள்ளார்.)
இயேசுக்கிறிஸ்துவின் போதனைகளில் சில வாக்கியங்கள் முழுமையாக விளங்கிக் கொள்வதற்குச் சிரமானவைகளாக இருப்பதனால், பலர் அவரை தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளனர். யோவான் எழுதிய சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தகைய கூற்றுக்களில் ஒன்று. அவரது தன்மையையும் தேவத்துவத்தையும் சர்வவல்லமையையும் அநேகர் சந்தேகிப்பதற்கும் மறுதலிப்பதற்கும் காரணமாயுள்ளது. ஏனென்றால் அவர் பிதாவாகிய தேவனைப் பற்றிக் குறிப்பிடும்போது யோவான் 14:28 இல் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் என தெரிவித்துள்ளார். இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்கும் அனைவரும் தங்களின் உபதேசத்திற்கு ஆதாரமாக உபயோகிக்கும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும்.(1) இயேசுக்கிறிஸ்துவே பிதா தம்மிலும் பெரியவர் என்று கூறியமையால் அவர் பிதாவைவிடத் தாழ்மையானவர் என்றும் பிதாவுக்குச் சம்மான வல்லமையும் தெய்வீகமும் அற்றவர் என்றும் போதிப்பதற்கு வேதப்புரட்டர்கள் இவ்வசனத்தை உபயோகித்து வருகின்றனர்.
இயேசுக்கிறிஸ்துவின் கூற்றுக்களை சரியான விதத்தில் விளங்கிக் கொள்வதற்கு அவை எச்சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டன என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இன்று பலகையான உபதேசக்குழப்பங்கள் கிறிஸ்தவத்திற்குள் புகுந்துள்ளதற்குப் பிரதான காரணம், கிறிஸ்தவர்கள் வேத வசனங்களை வியாக்கியானம் செய்யும்போது(2) அவை சொல்லப்பட்ட சந்தர்ப்பத்தைக் கருத்திற் கொள்ளாமல் அவற்றை வியாக்கியானம் செய்வதேயாகும். உண்மையில் இயேசுக்கிறிஸ்து மனிதராக வாழ்ந்த காலத்திலேயே “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்“ என்று கூறினார். பிதாவுக்குச் சம்மான நிலையில் பிதாவைப் போல தேவமகிமையுடன் இருந்த இயேசுக்கிறிஸ்து தமது பரலோக மகிமையைவிட்டு, மனிதராக தாழ்வான நிலைக்கு வந்தார். இதைப் பற்றி வேதாகமம் விளக்கும்போது பிலிப்பியர் 2:6-7 ல் அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனத்தில் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சொற்பிரயோகம் மூலமொழியில் “பற்றிப்பிடித்துக் கொண்டிராமல்“(3) என்னும் அர்த்தமுடையது. எனவே, இயேசுக்கிறிஸ்து தேவனுக்குச் சம்மாயிருக்கும் நிலையைப் பற்றி பிடித்துக் கொண்டிராமல், அதை விட்டுத் தாழ்வான நிலைக்குப் பூமிக்கு வந்துள்ளார்.
இயேசுக்கிறிஸ்து பிதாவைவிட தாழ்வான நிலைக்கு வநதாலும் அவர் தமது தேவத்துவத்தைத் துறந்து விட்டு வரவில்லை. என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். தேவனோடு சமமாக பரலோகத்தில் இருக்கும் நிலையையே அவர் விட்டு வந்துள்ளார் என்பதை நாம் மறக்கலாகாது. இயேசுக்கிறிஸ்து இவ்வுலக விட்டு மறுபடியுமாக பிதாவிடம் செல்லும்முன்பு அவரோடு பேசும்போது பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும் என்று யோவான் 17:5 இல் கூறியமை அவர் தமக்கிருந்த மகிமையையே பரலோகத்தில் விட்டு இவ்வுலகத்திற்கு வந்துள்ளார் என்பதை சுட்டிக் காட்டுகின்றது. பிலிப்பியர் 2:6-7ல் “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும்“ என்னும் வாக்கியத்தில் “ரூபம்“ என்பதற்கு மூலமொழியில உபயோகிக்கப்பட்டுள்ள “மோர்பே“ (Morphe) என்னும் கிரேக்கப்பதம் “உட்புறத் தன்மையை குறிக்கும் கிரேக்கப்பதமாகும்.(4) எனவே, இது இயேசுக்க்கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையையும் குணவியல்பையும் சுட்டிக் காட்டுகிறது.(5) இயேசுக்கிறிஸ்து இவற்றை விட்டு வந்ததாக வேதாகமம் கூறவில்லை. ஆதியிலிருந்தே தெய்வீக வார்த்தையாக இருந்த அவர் (யோவா. 1:1) மாம்சமாகியபோது, தெய்வீகத்தன்மையை இழந்து மாம்சமாக மாறிவிடவில்லை. யோவான் 1:14 இல் வார்த்தை மாம்சமாகி“ என்னும் வாக்கியத்தில் “ஆகி“ என்னும் பதம் மூலமொழியில் சிறப்பான அர்த்தம் உடையது. இது, “ஒன்றிலிருந்து இன்னுமொன்றாக மாறியதை அல்ல. மாறாக, முன்பு இருந்த நிலையோடு இன்னுமொரு புதிய நிலை சேர்க்கப்பட்டதையே குறிக்கின்றது.(6) அதாவது இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகிற்கு வந்தது தெய்வீகத் தன்மையைத் துறப்பதை அல்ல மானிடத் தன்மைகளை சேர்ப்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது(7). எனவே, அவர் இவ்வுலகத்தில் மனிதராக வாழ்ந்த காலத்திலும் தேவனாகவே இருந்தார் இதனால்தான் ‘தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. (கொலோ 2:9 என்றும் “தேவனே மாமிசத்தில் வெளிப்பட்டார்’ (1 தீமோ 3:16) என்றும் வேதாகமம் அறியத்தருகிறது.
இயேசுக்கிறிஸ்து இவ்வுலகத்தில் வாழ்ந்த காலத்தில் முழுமையான தேவனாக இருந்தபோதிலும், பிதாவை விடத் தாழ்வான நிலையிலேயே இருந்தார். ஏனென்றால் பிதா பரலோகத்தில் மகிமை பொருந்தியவராய் இருந்தார். ஆனால் இயேசுக்கிறிஸ்துவோ, பூலோகத்தில் ஏழ்மை நிலையில் வாழ்ந்தார். உண்மையில், இத்தகைய நிலையைக் கருத்திற் கொண்டே இயேசுக்கிறிஸ்து என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் என்று கூறினார். அதாவது “இயேசுக்கிறிஸ்து தாம் அச்சமயம் இருந்த நிலையையும் பிதாவின் நிலையையும் ஒப்பிட்டே இவ்வாறு கூறியுள்ளார்.(8) எனினும் அவர் எப்போதும் இவ்வாறு தாழ்த்தப்பட்ட நிலையிலேயே இருந்து விடவில்லை. உலக மாந்தருடைய பாவங்களைப் போக்குவதற்காக தம்மை பலியாக இவ்வுலகத்திற்கு வந்த அவர், பாவப் பலியாக சிலுவையில் மரித்த பின்னர், உயிரோடெழுந்து மறுபடியுமாகத் தாம் முன்பிருந்த உன்னத நிலைக்குச் சென்றுவிட்டார். அவர் எல்லாவற்றுக்கும் மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டதை பிலி 2:9-11 அறியத்தருகிறது.(9). உண்மையில் தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்தபோது அவர் கூறியவை உயர்த்தப்பட்ட நிலைக்கு பொருந்தாது. எனவே, அவர் தாழ்வான நிலையில் இருந்தபோது கூறியவற்றை ஆதாரமாகக் கொண்டு அவர் பிதாவைவிடத் தாழ்வானவர் என தர்கிப்பது தவறாகும். உண்மையில், இயேசுக்கிறிஸ்துவின் இக்கூற்று “அவருடைய தற்காலிக நிலைப் பற்றியதேயன்றி, அவருடைய தன்மையைப் பற்றியது அல்ல(10) என்பதை நாம் மறக்கலாகாது.
இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் வாழ்ந்த காலத்திலும் யோவான் 10:30 இல் குறிப்பிட்டுள்ளபடி அவரும் பிதாவும் ஒரே தன்மையுடையவர்களாகவே இருந்தனர். எனவே இயேசுக்கிறிஸ்து பிதாவை விடத் தாழ்வானவர் அல்ல. யோவான் 14:28 இல தாம் பிதாவைவிடத் தாழ்மையானத் தன்மையுடையவர் என்று இயேசுக்கிறிஸ்து குறிப்பிடவில்லை என்பதை மூலமொழியில் உபயோகித்துள்ள பதம் தெளிவாகக் காட்டுகின்றது. கிரேக்க மொழியில் “பெரியது“ (meizon) என்பதையும் “சிறந்தது“ (Kreitton) என்பதையும் வேறுபடுத்திக் காட்ட இரு வித்தியாசமான சொற்கள் உள்ளன. (11) இயேசுக்கிறிஸ்து சிறந்தது “ (Kreitton) என்று அர்த்தம் தரும் பதத்தை உபயோகித்திருப்பாரேயானால் அவரைவிட பிதா உயர்வானவர் என்றே கருத வேண்டும். ஆனால் இயேசுக்கிறிஸ்து உபயோகித்த “பெரியவர்“ என்னும் பதம் தேவத் தன்மையின் மேன்மையினைச் சுட்டிக் காட்டும் வார்த்தை அல்ல. பிதா பரலோகத்திலும் தாம் பூலோகத்திலும் அச்சமயம் இருந்தமையினாலேயே இயேசுக்கிறிஸ்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பதனால் அவர் பிதாவைவிடத் தாழ்வானவர் என்று எவ்விதத்திலும் கூறமுடியாது.
அடிக்குறிப்புகளும் உசாத்துணை நூல்களும் Footnote and Reference (1) கி.பி 4ம் நூற்றாண்டில் ஏரியஸ் என்பவரினால் உருவாக்கப்பட்ட தவறான போதகத்திற்கு அதாவது பிதாவாகிய தேவனைவிட இயேசுக்கிறிஸ்து தாழ்வானாவர் என்னும் உபதேசத்திற்கு அவர் உபயோகித்த வசனங்களில் இதுவும் ஒன்றாகும் (L.B. Berkhof, The History of Christian Doctrines pp 84-85) ஏரியனிசம் (Arianism) என்று அழைக்கப்படும் இவ்வுபதேசம் கி.பி 318இல் நைசீயா என்னுமிடத்தில் கூடிய கிறிஸ்தவத் திருச்சபையின் ஆலோசனை சங்க்க் கூட்டத்தில் பிழையான வேதப்புரட்டு என்று கணிப்பிட்டுத் தடை செய்யப்பட்ட போதிலும் அதன் பின்பும் இத்தவறான உபதேசத்தின் செல்வாக்கு கிறிஸ்தவ உலகில் இருந்துள்ளது. (R.E. Olson, The Story of Christian Theology pp 141-160) இன்று யெகோவாவின் சாட்சிகள் இதேவிதமான தவறான உபதேசத்தப் பரப்பி வருகின்றனர். இவர்கள் இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு “இயேசுக்கிறிஸ்துவின் தன்மை தேவனின் தன்மையை விடத் தாழ்வானது (Anonymous. Let God be true, p110) என்றும் இதனால் “பிதாவைப் போல அவரால் தேவனாக இருக்க முடியாது. (Anonymous Reasoning from the Scripture p410) என்றும் கூறுகின்றனர். இதுபற்றிய மேலதிக விளக்கத்திற்கு ஆசிரியரின் “யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்“ நூலினைப் பாரக்கவும் (2) இயேசுக்கிறிஸ்து பிதாவுக்குச் சமமானனவர், பிதாவைப்போல் முழுமையான தேவத்தத்துவமுடையவர் என்பதற்கு ஆசிரியரின் இயேசுக்கிறிஸ்து இறைவனா? எனும் நூலினைப் பாரக்கவும் (3) K. S. Wuest, Philipians in Greek New Testament, pp 64-65 (4) J.B. Lighfoot, Saint Paul’s Epistle to The Philippians PP110, 127-133 (5) G.F. Hawthorme, Philippians, World Biblical Commentary, P84 (6) W, Hendriksen, New Testament Commentary : John P84 (7) M.J. Erickson, Christian Theology P735 (8) A.W. Pink, Exposition of the Gospel of John, pp281-282 (9) பிலிப்பியர் 2:9-11 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (10) J.C. McDoell, Jesus : A Biblical Defence of His Deity, P87 (11) கிரேக்கத்தில் “மெய்ஸ்ஸொன் (meizon) க்ரீட்டொன் (Kreitton) என்னும் இரு பதங்களும் முறையே “பெரியது“ “சிறந்தது“ என்றும் அர்த்தம் கொண்ட பதங்களாகும்.