சகோதரர் சில்சாம் அவர்களே, ஊழியர்களின் பெயர்களை அறிய வேண்டும் என்பது என் நோக்கமல்ல. கீழ்கண்ட காரணத்துக்காகவே இந்த விவாதத்தை தொடர்ந்தேன். இன்றைய கிருஸ்துவ உலகம் ஒரு வஞ்கத்துக்குள் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இயேசுவை மறுதலிக்கும் கள்ளப் போதகம் செய்பவர்கள் தேவ ஊழியம் நிறைவேறாமல் தடுக்க பயன்படுத்திய அதே முறையை சில (வைராக்கியமாய் இருப்பதாய் நினைத்து கொள்ளும்) கிருஸ்துவர்களும் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர். அது என்னவெனில் கீழ்கண்ட வசனத்தை சொல்லி,
"அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.
ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்."(மத்தேயு 25.23,24)
இயேசுவின் நாமத்தினால் அற்புத சுகமளிக்கும் வரங்களை பெற்று, அதன் மூலம் இயேசுவுக்கு ஆத்துமாவை ஆதாயப்படுத்தும் பணியை செய்து வரும் ஊழியர்களின் ஊழியத்தை தூற்றி அதன் மூலம் அந்த ஊழியத்தை இல்லாமல் செய்வது. அதாவது இது போன்ற ஊழியர்கள் அனைவருமே கள்ளத் தீர்க்கதரிசிகள்தான், இத்தகைய ஊழியர்கள் செய்வதெல்லாம் வஞ்சகமே என்னும் செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இது எப்படி இருக்கிறது எனில் ஒரு சாதியில் இருக்கும் ஒருவர் செய்த தவறுக்காக முழு ஜாதியையே குற்றம் சாட்டுவது போல இருக்கிறது.
இவ்வளவுக்கும் பிற மத்த்திலிருந்து இயேசுவை ஏற்று கொண்ட அனேகர் இவர்களின் ஊழியங்களின் மூலமாகவே தொடப்பட்டிருக்கின்றனர். ஒரு போதும் அசுத்த ஆவி பிடித்திராத, அதனால் அசுத்த ஆவியிலிருந்து விடுதலை பெற தேவையில்லாதவர்கள் எல்லாம், அசுத்த ஆவியினால் அலைக்கழித்து விழுபவர்களையும், அந்த ஊழியத்தை செய்பவர்களையும் கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விட்டனர்.
இயேசுவை உண்மையாக அறிவிக்கும் இந்த ஊழியர்களில் சிலர் புகழுக்காக, பணத்துக்காக நாடகமாடுகின்றனர் என்ற குற்றசாட்டு இருக்கின்றது. இவ்வாறு சொல்பவர்களுக்கு அதை நிரூபிக்க வேண்டிய கடமையும் இருக்கிறது.அடுத்ததாக பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பற்றி சொல்லும் ஊழியர்களும் கள்ளத் தீர்க்கதரிசிகள் ஆகி விட்டனர். பிற மக்களின் உலக நலனுக்காக போதிக்கிறவர்களும் மிக உயர்வான சத்தியமான சீஷத்துவத்தை பற்றி சொல்லாததால் கள்ளத் தீர்க்கதரிசிகள் ஆகி விட்டனர். இன்று உயர்வான சத்தியத்தை போதிப்பவர்கள் வெகு சிலரே உள்ளனர். அதனால் அனேகர் கள்ளத் தீர்க்கதரிசிகளாக இருக்கின்றனர்.
மேற்கண்ட இருவரும் சரியான வழியில் ஊழியம் செய்யாமல் இருந்தாலும், அவர்கள் கள்ளத் தீர்க்கதரிசி என்று சொல்லும் அளவுக்கு மோசமானவர்கள் இல்லை என்பது என் கருத்து. அதை நிரூபிக்கவே நான் போராடி வருகிறேன். அதற்காகத்தான் இந்த விவாதத்தை தொடர்ந்தேன். இது போன்று மொத்தமாக எல்லாரையும் கள்ளத் தீர்க்கதரிசி என்று முத்திரை குத்துவது போதகர்கள் அனைவருமே சரியில்லை என்னும் தேவ அனுபவங்களை ஒத்துக் கொள்ளாத, இயேசுவை மறுதலிக்க கூடிய மற்ற பிரிவினருக்கு ஒத்து ஊதுவது போல் இருக்கிறது.
போதகர்களாக இருக்க கூடியவர்கள் இந்த தளத்தில் இருந்தாலும் இந்த போக்கை அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. நான் தேவ ஊழியனாக இல்லாததால் ஊழியர் சார்பாக இவவளவு தூரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எந்த போதகருமே இதை கண்டு கொள்ளாதது வியப்பை தருகிறது. இந்த நிலை தொடருமானால் நாளை எதையாவது காரணம் சொல்லி உங்களை கூட கள்ளத் தீர்க்கதரிசிகள் என்று சொல்லும் நிலை வரலாம்.
அன்பான சந்தோஷ் அவர்களே,உங்கள் கோரிக்கை என்னவோ அதன் நேரடியான உடனடி அர்த்தத்துக்கே அடியேன் விளக்கமளித்திருக்கிறேன்;நீங்களோ அதற்கு மற்றுமொரு பின்னணி காரணத்தைக் கூறி வாதத்தை திசைதிருப்புகிறீர்களோ என்று தோன்றுகிறது;சரி,தங்களுடைய தற்போதய நிலைக்கு உரிய பதிலைத் தருகிறேன். தற்கால ஊழியர்களின் செயல்பாடுகளை ஒரு வாதத்துக்காக பாம்புபிடிப்பதற்கு ஒப்பாக யோசிப்போமானால் ஒரு நகரவாசி பாம்பைப் பார்த்து அலறி ஓடிச்சென்று பாம்பாட்டியை அழைத்து வந்து பாம்பைப் பிடிக்க முயற்சிப்பது போல விசுவாசியும் அந்த பாம்பை எப்படியாவது பிடித்து அடித்து தன்னை ஒரு வீரனாகக் காட்ட நினைக்கும் அடுத்த வீட்டுக்காரனைப் போல லோக்கல் ஊழியரும் இருக்கிறார்கள்;பாம்பாட்டியைப் போல ஊதினாலும் கேட்காமலே கேட்பதுபோல தலையை ஆட்டும் செவிட்டுவிரியனைப் போல மனந்திரும்ப விரும்பாத சுயநல ஆத்துமா இருக்கிறது;பாம்பாட்டி ஒருபோதும் பாம்பைப் பிடிக்கவே மாட்டான்;ஏனெனில் அதைப் பிடித்து அடித்துவிட்டால் அவன் பிழைப்பில் மண்விழுந்துவிடுமே;அதுதானே அவனது முதலீடு? ஆனால் நீங்கள் வண்டலூர் மிருகக் காட்சி சாலையிலுள்ள பாம்புபிடிக்கும் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தால் அவர்கள் முறைப்படி பாம்புபிடிப்பதில் பயிற்சிபெற்ற மனிதனோடு வந்து அந்த பாம்பை முறைப்படி பிடித்து காட்டில் சென்று விட்டுவிடுவார்கள்;ஏனெனில் பாம்பை அழிப்பதற்கு அவர்களுக்கு உரிமையில்ல;எனவே பாம்புபிடிப்பதற்கு பாம்பாட்டிகளைவிட தொழில் முறை பாம்புபிடிப்பவர்களே இன்றைய உடனடி தேவை என்று அறிகிறோம். அதுபோலவே இன்றைய ஊழியர்களும் இருக்கின்றனர்;அவர்களில் பெரும்பாலானோர் பாம்பாட்டிகளாகவே இருக்கிறார்கள்;அல்லது பாம்பைப் பார்த்து பதட்டத்தில் "அடி.. அடி.." கூச்சலிடும் அடுத்த வீட்டுக்காரனைப் போல இருக்கிறார்கள்;இதைவிட ஒவ்வொருவருமே பாம்புபிடிப்பதில் பயிற்சிபெற்றவர்களாக இருந்தால் வெளியிலிருந்து ஒருவர் வரவேண்டிய அவசியம் இல்லை அல்லவா? அந்த பயிற்சியை யார் தருவார்? அதற்கு விசேஷித்த பயிற்சி முகாமுக்கு பணம் கட்டி செல்லவேண்டுமோ? ஆனால் கிராமங்களில் பாம்பைக் குறித்து பெரிய பிரச்சினை இல்லை;அவர்கள் அதில் இயல்பாகவே தேறினவர்களாக இருக்கிறார்கள்;நாம் தேறினவர்களாக இருப்பதே தேவ சித்தம் அல்லவா? இன்றைக்கு நடக்கும் அற்புத ஊழியங்களை வேத காலத்தின் அற்புதங்களுடன் ஒப்பிடுவதைப் போல பரிசுத்த வேதாகமத்தை இழிவுபடுத்தும் செயல் மற்றொன்று இருக்கமுடியாது;இன்றைய கிறித்தவ பத்திரிகைகளைவிட கின்னஸ் ரெக்கார்டு குறிப்புகள் அடங்கிய புத்தகத் தொகுப்புகள் ஆண்டவருக்கு புகழ்ச்சியை உண்டாக்கமுடியும்;ஏனெனில் கிறித்தவ பத்திரிகைகளின் சாட்சிப் பகுதியானது அத்தனை குழந்தைத்தனமாக இருக்கிறது;தலைவலி சுகமானது,பரீட்சையில் வெற்றிபெற்றேன்,வீட்டை கட்டினேன்,பதவி உயர்வு கிடைத்தது,கடன் பிரச்சினை மாறினது என்பதெல்லாம் அற்புதங்கள் என்றால் அதைவிட பல அற்புதங்களை உலகம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அற்புதத்தின் முதலாவது விதியானது அது இயற்கைக்கு மேலானதாகவும் மனித ஞானத்துக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கவேண்டும்;தேவனுடைய பிரம்மாண்டமான ஞானத்துக்கு முன்பாக பெருக்கத்தின் ஆசீர்வாதத்துக்கு முன்பாக வனாந்தரத்தில் 20,000- க்கும் மேற்பட்டவர்கள் வெறும் ஐந்து அப்பம் இரண்டு மீனைக் கொண்டு போஷிக்கப்பட்டதே சாதாரணம்;இன்றைக்கு இரண்டாயிரம் வருடத்துக்கு முன்பதாகவே அப்படிப்பட்ட அற்புதங்கள் நடைபெற்றதெனில் தற்கால நவீன காலங்களில் அற்புதத்தின் செயல்பாடுகள் இன்னும் எத்தனை அதிகமாக இருக்கவேண்டும்;உதாரணத்துக்கு பாலங்கள் இல்லாத இடத்தில் பாலங்கள் தோன்றவேண்டும்;நகரத்தின் அழகைக் கெடுக்கும் செல்போன் டவர்கள் எல்லாம் காணாமற்போகவேண்டும்;அதிகாரிகள் ஊழியர்களிடம் வந்து கெஞ்சிகூத்தாடி அந்த செல்போன் டவர்களை மீண்டும் அமைத்து தரும்படி வேண்டவேண்டும்;இப்படி என்னுடைய அற்புத ஆசைகளை சொல்லிக்கொண்டே போகலாம். உண்மையில் வேதத்தின்படியான அற்புதசெயல்கள் இன்றைக்கும் நடைபெற்றாலும் அந்த சாட்சிகள் மேடையேற்றப்படுவதில்லை என்பதே உண்மை;ஏனெனில் அவை மலைகிராமங்களில் ஏழைஎளியமக்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது;அந்த அற்புதங்கள் மாதாமாதம் தங்கள் ஸ்தாபனத்திலிருந்து வரவேண்டிய உதவிப்பணத்துக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் மிஷினரிகளால் நடைபெறுகிறது; ஆனால் இங்கே நடைபெறும் அற்புதங்களை மரத்தடியில் நின்று பேய்விரட்டும் ஐயனார் கோவில் பூஜாரிகள் சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறார்கள்;கோனார் கோவில் கோடாங்கிகள் குறிசொல்லி அதைக் குறிப்பாகச் சொல்லி வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கிறார்கள்;நீங்கள் குறிப்பிடும் ஊழியர்கள் பேய்விரட்டுகிறார்கள்;எப்படி தெரியுமா? ஒருவன் மின்சாரத்தில் சிக்கிக் கொண்டால் என்ன செய்யவேண்டும்;சிம்பிளாக ப்ளக்-(Plug) ஐ பிடுங்கினால் போதுமல்லவா? ஆனால் இவர்களோ உயிர்போகும் நிலையிலிருக்கும் அவனைப்பார்த்து "கமௌட், ரைட் நௌ இன் தி நேம் அஃப் ஜீஸஸ்" என்று உளறிக்கொண்டிருக்கிறார்கள்; கிள்ளியெறியவேண்டியதை கடப்பாரையைக் கொண்டு நோண்டிக்கொண்டிருக்கிறார்கள். எப்படியோ அற்புதங்கள்(???) நடைபெறுவது உண்மைதான்;ஆனால் அதற்காக நம்முடைய ஊழியர்கள் படும்பாட்டை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது;வேதம் சொல்லும் முறையைப் பயன்படுத்தினால் மிக எளிதாக இதைவிட பெரிய காரியங்களைச் செய்யமுடியும்;ஆனால் இவர்கள் தங்கள் சொந்த வழிமுறைகளைப் பயன்படுத்துவதால் வெற்றி என்பது கடினமாக இருப்பதுடன் தேவனுடைய நாமத்துக்குரிய மகிமையும் மட்டுப்படுத்தப்படுகிறது. மீண்டும் சொல்லுகிறேன்,அசுத்தாவியின் பிடியிலிருந்து சிக்கிக்கொண்டவனை விடுதலையாக்குவது என்பது மின்சாரத்தில் சிக்கிக்கொண்டவனை ஜஸ்ட் அன்ஃப்ளக் (Unplug) செய்வதைப் போன்றதே;அதனை அதிகப்பட்சம் "போ,பிசாசே" என்ற ஒரே வார்த்தையில் செய்துவிடமுடியும்;அதற்காக பெரிய மேடைகளும் ஒலிபெருக்கிகளும் ஆர்ப்பாட்டங்களும் தேவையே இல்லை; இவையெல்லாம் தங்களை முன்னிறுத்தவும் பிரபலப்படுத்திக்கொள்ளவும் மனிதன் செய்யும் முயற்சிகளே;இது மேஜிக் ஷோ போலவும் சர்க்கஸ் கூத்து போலவும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது;இவை நிறுத்தப்பட்டாலே தேவ இராஜ்யத்தின் பணியானது விரைந்து நடைபெறும்;மேலும் அசுத்தாவியின் பிடியிலிருப்பவனுடன் அமர்ந்து பேசி அவன் உள்ளத்தில் நம்பிக்கை வெளிச்சத்தை உருவாக்கி அவனுடைய ஒத்துழைப்புடனே அவனுக்கு விடுதலை பெற்றுத் தரமுடியும்;இன்னும் இவர்களால் குணமாக்க இயலாதவர்கள் ஆயிரக்கணக்கானோர் உண்டு;அவை விளம்பரப்படுத்தப்படுவதில்லை;நெருக்கிக்கேட்டால் அதற்கும் சொத்தையான காரணங்களை வேதத்திலிருந்தே எடுத்துக் காட்ட பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்;ஆனாலும் ஒரு ஊழியராவது," இது என்னுடைய அந்தரங்க பாவத்தினால் உண்டானது,என்னை மன்னியும், உம்முடைய வல்லமை என்னிடத்திலிருந்து வெளிப்பட முடியாமைக்கு நானே காரணம்" என்று அழுது அறிக்கையிட்டு மனந்திரும்பியதில்லை;இதுவே தற்கால ஊழியங்களின் மொத்த நிலைமை..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)