நான் சொல்லுவதை வார்த்தை மாறாமல் சொல் என்று கர்த்தர் பணித்ததாகச் சொல்லும் சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் அந்தக் குறிப்பிட்ட தினம் பரலோகத்தின் மிக முக்கிய முடிவுகள் எடுக்கும் நாள் என்றும். கர்த்தர் பரலோகத்தின் அந்த மிக முக்கியமான நாளிலே தாங்களைக் கூட்டம் நடத்தும்படி கர்த்தர் அழைத்ததாகவும், ”இது பரலோகத்தில் மாத்திரம் முக்கியமான நாள் அல்ல உங்கள் வாழ்க்கையிலும் முக்கியமான நாள்” என்று சொல்லுகிறார்.
பரலோகத்தின் நாள் என்பது என்ன? பரலோகத்தின் நாள் என்பதை ஆராய்வதற்கு முன்னர் "நாள்" என்பது என்ன என்று சொல்லுங்கள்? பூமிக்கு ஒரு பகலும் இரவும் சேர்ந்தது ஒரு நாள், அதாவது 24 மணி நேரங்கள். இது நமது சூரிய மண்டலத்திலேயே கோளுக்கு கோள் மாறுபடுகிறது. உதாரணமாக ஜுபிடர் கிரகத்தின் ஒரு நாள் என்பது வெறும் 9.9 மணி நேரங்களே! பரலோகத்தின் நாள் என்பது என்ன? பரலோகத்தின் ஒரு குறிப்பிட்ட அதேநாளில் பூமியிலும் ஒரு கூட்டம் நடத்தும்படி கர்த்தர் பணித்தார் என்பது உங்கள் அறிவுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா? இது பரலோகத்தில் மாத்திரம் முக்கியமான நாள் அல்ல உங்கள் வாழ்க்கையிலும் முக்கியமான நாள் என்றால் பரலோகத்திலும் ஒரு நாளுக்கு 24 மணிநேரங்கள் தானா?
பரலோகத்தில் நாள் கணக்கு அல்லது நேரக்கணக்கு இருப்பதாக வேதத்தில் வாசித்திருக்கிறீர்களா? சிலர் 2பேதுரு3:8-ஐ வைத்துக் கொண்டு பரலோகின் நாள் கணக்கை அறிய முயலுகிறார்கள் "பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.[2பேதுரு3] " இந்த வசனத்தை வைத்துக் கணக்குப் போட்டால் பைத்தியம் பிடித்துவிடும். காரணம் இது கர்த்தர் காலங்களுக்கும் நேரங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை உணர்த்த கொடுக்கப்பட்ட வசனமாகும்.
பரலோகில் நாள்கணக்கு இருக்கிறது என்று சொல்லுவதே நித்தியத்தை, நித்தியரை மறுதலிக்கும் தேவதூஷணம் ஆகும்.
பரலோகில் முக்கிய முடிவுகள்(!) கர்த்தர் சர்வஞானி, சர்வவியாபி என்பவைகள் எல்லாம் நமது அடிப்படை விசுவாசங்கள். கர்த்தருக்கு ஆலோசனை சொல்ல ஒரு ஆலோசனைக் கமிட்டி பரலோகத்தில் இருக்கிறதென்பதே கொடூரமான தேவதூஷணம் ஆகும். கர்த்தர் உலகத் தோற்றத்துக்கு முன்பாகவே சகலத்தையும் அறிந்திருக்கிறார். கர்த்தர் உங்களையும் என்னையும் தாயின் கர்ப்பத்துக்கு முன்னரே அறிந்திருக்கும்போது இனி யாரைப்பற்றி என்ன முடிவு எடுக்கப் போகிறார்? இனிமேல் கர்த்தர் உட்கார்ந்து சில முடிவுகளை எடுக்கும் சூழ்நிலை ஏற்படும் அளவுக்கு சாத்தான் அவ்வளவு அபாரமான ஞானியா?
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஏற்கனவே நமது பாவத்திற்காக சிந்தப்பட்டுவிட்டது. மேலும் இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம் பாவத்தை போக்கும் என்றே வேதத்தில் உள்ளது.இப்படி தெளிக்கப்படுவதால் என்ன பயன்? ஏன் இப்படி தப்பு தப்பா கண்டதையும் உளறுகிறார்கள். மக்கள் வேதத்தை கையில் வைத்துக்கொண்டு ஆராயாமல் இப்படிபட்டவர்களின் வாய் பார்த்து தங்கள் வாயை பிளப்பதனாலே இவர்களின் ரீல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. என்ன சொன்னாலும் நம்புகிறவர்கள் இருக்கும் வரை இப்படிபட்டவர்கள் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டேதான் இருப்பார்கள். இது மாத்திரம் தானே அவர்களை தனிச்சிறப்பாக காட்டுகிறது. இந்த மாதிரியானவர்களை வேதவெளிச்சத்தில் தோலுரிக்கும் ஜாமக்காரன் ஆசிரியரின் பணி போற்றதக்கது.
கதையை பார்த்தால் யூத ராஜசிங்கம் போல தெரியவில்லை வேறு ஒரு 'பல்லும், நகமும் பிடுங்கப்பட்ட' சிங்கம் போலதான் தெரிகிறது
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். (I பேதுரு 5:8)
ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். (II தீமோத்தேயு 4:3-4)
ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள். (I தீமோத்தேயு 4:1) அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். (மத்தேயு24:23-24) நிச்சயமாக நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம்..!
மேடையில் பலர் யூத ராஜசிங்கத்தை பார்த்தார்கள். தேவனின் கண்களை பிரத்யட்சமாக கண்டார்கள்
என்று சகோ.வின்சென்ட் செல்வகுமாரின் 2010 டிசம்பர் மாத அற்புத இயேசுவின் தொனி பத்திரிக்கையில் பக்கம் 27ல் ஊழிய செய்திகள் தலைப்பில் மேற்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது. சேலம் நகரத்தில் நடந்த கூட்டத்தில் சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் பிரசங்கித்தபோது மேலே குறிப்பிட்டவாறு பிதாவின் கண்களை கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் கண்டதாக அந்த பத்திரிக்கையில் இந்த செய்தியை எழுதியுள்ளார்கள். இது நானே வாசித்ததும் அறிந்ததுமாகும்.
சேலத்தில்தானே இந்த நிகழ்ச்சி நடந்ததாக அந்த பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்கள்! நானும் சேலத்தில்தான் இருக்கிறேன். இதை நேரில் பார்த்த சேலம் நண்பர்கள் யாராவது இருந்தால் தயவுசெய்து நேரில்வந்து என்னை கண்டு தாங்கள் அந்தகூட்டத்தில் பார்த்ததை அறிவிக்கமுடியுமா? தயவுசெய்து ஏதாவது ஒரு செவ்வாய்கிழமை நீங்கள் என்னை நேரில் சந்தித்து இதைக்குறித்து விவரித்துகூறி விளக்கி எனக்கு உதவிசெய்யுங்களேன்! என் தொலைபேசி எண்: 0427-2387499 ஆகும். தயவுசெய்து தொலைபேசியில் இந்த விவரத்தை விவரிக்கவேண்டாம். என் வீட்டுக்கு நேரில் வாருங்கள். சிரமம்பாராமல் இந்த விஷயத்தை பகிர்ந்துக்கொள்ள வாருங்கள். வாக்குவாதம் செய்யும் நோக்கத்துடன் வரவேண்டாம். நீங்கள் கண்டதை விவரித்தால்போதும். நானும் உங்களுடன் வேத வசனத்தின் மூலம் அவைகளைக்குறித்து பேச அனுமதி கொடுங்கள். மேலே கண்டது பிசாசின் செய்தி மட்டுமல்ல, அது பொய் செய்தியுமாகும். அதற்கான விளக்கம் வேதவசனமூலம் கொடுக்க வாஞ்சிக்கிறேன்.
கோயமுத்தூரில் இயேசுவின் இரத்தம்: கோயமுத்தூரில் நடந்த கூட்டத்தில் சகோ.வின்சென்ட் செல்வகுமார் பிரசங்கித்ததை ஏஞ்சல் டிவியில் காட்டினார்கள். நானும் அதைக் காண நேர்ந்தது. பிரசங்கம் முடித்து அவர் ஜெபிக்கும் வேளையில் அவர் கூறுகிறார். இதோ சிவந்த வானத்தைக் காண்கிறேன். இயேசுவின் இரத்தத்தின் துளிகள் கூட்டத்தின்மீது தெளிப்பதை காண்கிறேன். சிலருடைய உடைகளில், கைகளில் அந்த இரத்த துளிகள் விழுந்திருப்பதை நீங்களே கண்களை திறந்து பாருங்கள். பல பெண்களுடைய கைகளில், உடைகளில் இரத்த துளிகள் காணப்பட்டதாக அந்த சாட்சி கூறுகிறது.
சகோ.வின்சென்ட் செல்வகுமார் பத்திரிக்கையிலிருந்து மேலும் சில பொய் சாட்சிகள்.............. தவறான பொருத்தனை - தவறான சாட்சி
சகோ.வின்சென்ட் செல்வகுமார் பத்திரிக்கைக்கு சாட்சி எழுதுவோம் என்ற எங்கள் பொருத்தனையை கர்த்தர் கேட்டார். எங்கள் பேரன் சிலரால் கடத்தப்பட்டான், பத்திரிக்கையில் சாட்சி எழுதுவோம் என்று பொருத்தனை செய்து ஜெபித்தோம். உடனே கடத்தல்காரர்களின் கண்களில் தயை கிடைத்தது. துலுக்கப்பட்டியில் கடத்திய அவனை சேலத்தில் கொண்டுவந்து விட்டுச்சென்றனர்.
- வசந்தா, துலுக்கப்பட்டி.
குறிப்பு: பையன் கிடைத்துவிட்டது உண்மையாக இருக்கலாம். ஆனால் பத்திரிக்கைக்கு சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை செய்ததால்தான் பையன் கிடைத்தான் என்பது நூற்றுக்குநூறு பொய்யாகும். நம் தேவன் அந்த மாதிரி பொருத்தனையை அங்கீகரிக்கமாட்டார். ஆத்துமாவுக்கு பிரயோஜனமான தீர்மானம் அல்லது பொருத்தனை செய்து ஜெபிக்கலாம். இன்று முதல் நான் பொய் பேசமாட்டேன், இன்று முதல் மதுபானம் குடிக்கமாட்டேன் என்மேல் இறங்கும் என்று ஜெபித்தால் அதன் அடிப்படையில் தேவன் உங்களுக்கு இறங்கி காரியங்களை வாய்க்கச் செய்யலாம். பத்திரிக்கையில் சாட்சி எழுதுவதால் உங்கள் ஆத்துமாவுக்கு என்ன பிரயோஜனம்? கர்த்தருக்கு எப்படி மகிமை உண்டாகும்? பத்திரிக்கை நடத்துகிற அந்த ஊழியருக்குத்தான் பெருமை சேரும். கர்த்தருக்கு போகவேண்டிய மகிமை ஊழியருக்கு போய் சேர்ந்துவிடும். மேலே குறிப்பிட்ட சாட்சியில் கடத்தல்காரர்களில் தயை கிடைத்ததாக எழுதியுள்ளார். கர்த்தரின் கண்களில் எங்களுக்கு தயை கிடைத்ததாக அறிவித்திருக்க வேண்டும். அந்த பெருமை கர்த்தருக்கு சேரவேண்டியது. இப்போது பெருமை கடத்தல்காரருக்கு சேர்ந்துவிட்டது. இதை வின்சென்ட் செல்வகுமாரை உயர்த்தும் விளம்பரம் என்று கூறலாம். சாட்சி என்று கூற இயலாது. சங்கீதக்காரன் இப்படி கூறுகிறான்: கர்த்தர் என் ஆத்துமாவுக்கு செய்ததை அறிவிப்பேன் என்கிறான். அதுதான் சரியான சாட்சி ஆகும். இதை எடுத்து வெளியிட்ட வின்சென்ட் செல்வகுமார் இந்த விஷயத்தில் யோசிக்காமல் தவறு செய்துவிட்டார். இந்த மாதிரி பல பத்திரிக்கைகளில் ஊழியனை உயர்த்தும் சாட்சிகளை ஏராளமாக காண்கிறேன்.
அக்கினியும், மஞ்சளும் கலந்த ஒளி இறங்கி வந்தது.
அக்டோபர் 8, 9 தேதிகளில் இராமநாதபுரத்தில் சகோ.வின்சென்ட் செல்வகுமார் பேசி அங்கு நடந்த கூட்டங்களை அப்படியே ஏஞ்சல் டிவியில் மறுபடியும் காட்டினார்கள். அந்த டிவி நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த நிர்மலா என்பவர் தன் சாட்சியை கீழ்கண்டவாறு எழுதுகிறார். "அதை நாங்கள் டிவியில் பார்த்துக்கொண்டிருந்தபோதே சகோ.வின்செனட் செல்வகுமார் அவர்களின் ஜெபவேளையில் மஞ்சளும், அக்கினியும் கலந்த ஒளி டிவி பார்த்துக்கொண்டிருந்த எங்கள் மேலும் இறங்கிவந்தது" என்று எழுதுகிறார்.
- நிர்மலா, சென்னை.
இதுவரை நீங்கள் வாசித்த வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் மேலே கூறின இந்த தரிசனங்களும், வெளிப்பாட்டையும், அதை சாட்சியாக சிலர் எழுதிய கடிதத்தையும் வின்சென்ட்டின் தீர்க்கதரிசனத்தையும் உங்களால் நம்பமுடிகிறதா? வேத வசனத்தின் அடிப்படையிலா? இவர் தரிசனம் இருக்கிறது.
இயேசுவின் இரத்தம் இவர்களுக்கு என்ன பைப் தண்ணீரா? அல்லது மழை தண்ணீரா? இவர் ஜெபித்தவுடன் இரத்த தண்ணீர் ஜெபிக்கவந்த மக்கள் மீது தெளிக்கப்பட்டதாம்? என்ன விளையாட்டு இது? இயேசுவின் இரத்தம் அத்தனை சீப்பாக, சுலபமாக இவர்களுக்கு மாரியம்மன் கோவில் மஞ்சள் நீராட்டம்போல ஆகிவிட்டதே! இவர் கூட்டத்தில் கூறியதை கேட்ட மக்கள் அதை அப்படியே நம்பி அக்கினியும் மஞ்சளும் கலந்த ஒளி இறங்கி வந்ததாக சிலர் சாட்சி எழுதியிருக்கிறார்களே! இதற்கு என்ன அர்த்தம்? இதன்மூலம் என்ன ஆசீர்வாதத்தை இவர்கள் அடைந்தார்கள் என்பதை இவர்கள் எழுதவில்லையே! அதை வின்சென்ட் செல்வகுமாராவது விளக்குவாரா? மஞ்சளும் - அக்கினியும் கலந்த ஒளி இறங்கியதற்கு விளக்கம் அவரால் கொடுக்க இயலுமா? என்ன ஏமாற்றுத்தனம் இது?
வின்சென்ட் பத்திரிக்கையில் சாட்சி எழுதுவோம் என்று பொருத்தனை செய்து ஜெபித்தவுடன் கடத்திய பிள்ளையைகூட கொண்டுவந்துபோட்டுவிட்டார்களாம். இவர் பத்திரிக்கையில் எழுதும் சாட்சிக்கு அவ்வளவு வல்லமையா? மக்கள் தவறாக பொய்யாக அல்லது மிகைப்படுத்தி சாட்சி எழுதுகிறார்கள் என்பதை வின்சென்ட் அறியாதவர் அல்ல, அதை வெளியிடும் வின்சென்ட் செல்வகுமாருக்கு அப்படி பொருத்தனை செய்வது தவறு என்று அவர்களை எச்சரித்து தடுக்கமுடியவில்லையே! பத்திரிக்கையில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை செய்வதுமூலம் அதை எழுதியவரின் ஆத்துமாவுக்கு என்ன நன்மை ஆண்டவருக்கு என்ன பெருமை? அதற்கு பதில் கர்த்தாவே, வேதத்தை இனி ஒழுங்காக வாசிப்பேன், பாவத்தை விட்டுவிடுகிறேன், ஒப்புரவாகிவிடுகிறேன் என் பிள்ளையை காப்பாற்றும் என்பதை போன்ற பொருத்தனை செய்தால் கொஞ்சமாவது ஆவிக்குரிய ஜீவியத்துக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும்.
அக்கினியும், மஞ்சளும் இறங்கியதாக கூறிய வின்சென்ட் செல்வகுமார் வாசகர்களுக்கு இதன்மூலம் என்ன கூறவிரும்புகிறார். கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்களையும் மடையராக்கி இதை அவர் பத்திரிக்கை வாயிலாக வாசிக்கும் வாசகர்களையும் மடையராக்கி சாட்சி கூறிய அந்த கூட்டத்தில் தானும் அதில் ஒருவன் என்று கூறாமல் கூறி வெளிப்படுத்திவிட்டாரே! இது மிகப்பெரிய ஆவிக்குரிய மோசடி இது? கிறிஸ்தவ ஆவிக்குரிய நல்ல உயர் போலீஸ் அதிகாரி ஒருவர்முன் இப்படிப்பட்ட ஆவிக்குரிய மோசடி கூட்டங்கள் நடக்கிறது. அவரும் இப்படிப்பட்ட சில பொய் ஊழியர்கள் கூட்டத்தில் அடிக்கடி கலந்துக்கொள்கிறார். ஆனால் அவர் எப்படி இந்த மாயமாலத்தை விளங்கிக்கொள்ளமல் இருக்கிறார் என்பதை கேள்வி கேட்க வைக்கிறது. கர்நாடகா முதன்மந்திரி எடியூரப்பா போன்ற மந்திரிகளும், மிக உயர்ந்த போலீஸ் அதிகாரிகளும் காமலீலை நித்தியானந்தாவின் கால்களை பிடிக்கவில்லையா! ஆகவே கிறிஸ்தவ அதிகாரிகளும் வேதம் தெரிந்த பாஸ்டர்களும் இப்படிப்பட்ட கள்ளதீர்க்கதரிசிகளிடம் விழுவது பெரிய ஆச்சரியம் இல்லைதான்.
பரிசுத்த ஆவியை பெற்றேன் என்று கூறும் பாஸ்டர்மார்களை நான் கேட்கிறேன், குறிப்பாக பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்மார்கள் இவர் தரிசனத்தை உண்மை என்று நம்புகிறீர்களா? மேலே குறிப்பிட்டவைகளை பொய்சாட்சி என்று எனக்கு எப்படி வாசகர் பலர் கடிதம் எழுதி அறிவித்தார்களோ! அப்படித்தான் ஊட்டியைப்பற்றி இவர் கூறிய தீர்க்கதரிசனமும் இருந்தது என்பது இப்போதாவது உங்களால் உணரமுடிகிறதா?
சாது சுந்தர் செல்வராஜ் அவர்களும், வின்சென்ட் செல்வகுமார் அவர்களும் ஏஞ்சல் TV மூலமாக கிறிஸ்தவர்களையும், பாமர மக்களையும், புறமதத்தவர்களையும் எண்ணமாய் ஏமாற்றுகிறார்கள்?. இந்த பொய்களை காண சகிக்காத சிலர் இந்த TV சேனலை நிறுத்த வழி இல்லையா என்று அங்கலாய்க்கிறார்கள். குறிப்பாக படத்தில் கண்டபடி டிவியில் இவர்கள் இருவரின் கலந்துரையாடலில் ஏராளமான பொய் தரிசனங்கள் செய்தியாக அறிவிக்கப்படுகிறது.
வின்சென்ட் கூட்டத்தில் கலந்துக்கொண்டால் யூத ராஜ சிங்கத்தையும், தேவனின் அதாவது பிதாவின் கண்களையும் பிரத்யட்சமாக, அதாவது முகமுகமாக காணமுடியும் என்பதை இவர்கள் இப்படி எழுத, இப்படிப்பட்ட முட்டாள்தனமான தைரியத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது? உங்களால் நிதானிக்கமுடிகிறதா? இவர் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் உடையில் இவர் ஜெபிக்கும் வேளையில் இரத்தம் தெளித்திருப்பதை பார்க்கிறேன் என்று இவர்கூற கொஞ்சம்கூட கூச்சப்படவில்லையே! அந்த இரத்தகரையோடு அந்த பெண்கள் எப்படி கூட்டத்தைவிட்டு மக்கள்முன் வெளியேறிருப்பார்கள். இரத்தம் எங்கள் கைகளிலும் உடையிலும் நனைந்திருப்பதை நாங்களே பார்த்தோம் என்று கூச்சம் இல்லாமல் சாட்சி எழுதிய அந்த பெண்களுக்கு வெட்கம் இல்லாமல் போனதே! அப்படி எழுத எப்படி அவர்களுக்கு மனம் வந்தது. இவர்களெல்லாம் கிறிஸ்தவர்களா?
பல வருடங்களுக்கு முன்பேயும், சமீபகாலத்தில் 2 வாரங்களுக்கு (ஜன 2011) முன்பேயும் இந்த இரட்டை பொய்யர்களைப்பற்றி ஏராளமான கடிதங்களும், பெண்கள் சம்பந்தமான குற்றசாட்டுகளும், இவர்களால் வஞ்சிக்கப்பட்ட பெண்களின் கண்ணீருள்ள சாட்சிகளும் வந்துக்கொண்டிருந்தன. பலர் இது விஷயமாக ஃபாதர்.பெர்க்கமான்ஸ் அவர்களையும், உசிலம்பட்டி பாஸ்டர்.ஜோசப் பாலசந்தர் அவர்களையும், இன்னும் பிரபல பாஸ்டர் ஊழியர்களையும் சந்தித்து இவ்விவரங்களை அறிவித்து இவர்களிடமிருந்து மக்களை காப்பாற்றுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். இவர்களைப்பற்றி புகார் கூறியவர்களின் நோக்கத்தில் ஒன்று ஏஞ்சல் TVயை நிறுத்தவேண்டும் என்பதாகும்.
பல வருடங்களுக்குமுன்பே சகோ.வின்சென்ட் செல்வகுமாருக்கு அவரைப்பற்றி எனக்கு வந்த செய்திகளை, கடிதங்களைக்குறித்து தனி கடிதம் எழுதினேன். அவரும் அதற்கான பதிலை மிக திருப்தியான முறையில் எனக்கு பதில் எழுதினார். அது ஏஞ்சல் டிவி ஆரம்பிக்காததற்கு முன் உள்ள காலம். ஆனால் ஏஞ்சல் டிவியை சாது சுந்தர் செல்வராஜ் அவர்களுடன் இணைந்து நடத்த தொடங்கியபின் குறிப்பிட்ட புகார்கள் எண்ணிக்கை அதிகமானது. இது இவர்கள் வசனத்திலிருந்து விலகி எங்கோ போய் கொண்டிருக்கிறார்கள் என்பதை உறுதி செய்கிறது. மக்களை அந்த தவறான வழியில்கூட அழைத்து செல்வதால்தான் இதை வாசகர்களை எச்சரிக்கும் நோக்கத்தோடு எழுத வேண்டிவந்தது.
நான் என்ன சொல்கிறேன் என்றால் ஏஞ்சல் TV வந்ததால் பல கிறிஸ்தவர்கள் TV, சினிமா, சீரியல் பார்ப்பதை குறைத்துள்ளார்கள். ஏஞ்சல் TV நல்ல ஒரு மீடியா ஆகும். அதில் நல்ல விஷயங்கள் பலவும் சில நல்ல செய்திகளையும் அவ்வப்போது கேட்கவும், பார்க்கவும் முடிகிறது. குறிப்பாக வியாழக்கிழமை தோறும் ஆராய்ச்சி அரங்கம் என்ற தலைப்பில் பெங்களுர் பாஸ்டர் ஒருவர் மிக நல்ல நிகழ்ச்சிகளை தருகிறார். குறிப்பாக வேதகம சந்தேகங்கள், கேள்வி-பதில் பகுதிகளை நல்ல வசன ஆதாரத்தோடும், குழப்பமான வேதாகம விஷயங்களை உபதேச குழப்பம் உண்டாகாதபடி, ஞானத்தோடு ஆலோசனைக்கூறி அந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறார். இப்படிப்பட்ட நல்ல நிகழ்ச்சிகளை ஊறுகாய் போல்தான் ஏஞ்சல் டிவியில் அனுமதிக்கிறார்கள். இவர்கள் தங்கள் பொய்வெளிப்பாடுகளையும், தேவையற்ற சம்பாஷனைகளையும் நிறுத்திவிட்டு இவர்கள் இதைப்போன்ற நல்ல செய்திகளை ஆவிக்குரிய நிகழ்ச்சிகளை இந்த டிவி நிகழ்ச்சியில் வரவைக்க இவர்கள் முயலுவார்களோயானால் அது கிறிஸ்தவ மக்களுக்கு நல்லது. ஏஞ்சல் டிவியை நிறுத்திவைப்பதைவிட நான் குறிப்பிட்ட நல்ல ஆவிக்குரிய நிகழ்ச்சிகளை வெளியிடும் முயற்சியால் இறங்குதல் கிறிஸ்தவர்களுக்கு நல்லது. ஆகவே அந்த டிவி சேனலை நிறுத்த முயற்சிக்க வேண்டாம். ஆனால் குத்துப்பாட்டுகள், சாது சுந்தர் செல்வராஜ், வின்சென்ட் செல்வகுமார் ஆகியவர்களின் பொய் தீர்க்கதரிசனங்களின் சம்பாஷனைகள், பரலோக பொய்கள் இனி வெளிவராமல் இருக்க யாராவது முயற்சி எடுத்தால் நல்லது. ஆனால் அது இயலாது என்றுதான் தோன்றுகிறது. காரணம் அந்த பொய்கள் மூலமாகத்தான் இவர்களுக்கு பணவரவு வியாபாரம் செழிக்கிறது ஆகவே அவர்கள் டிவி நிகழ்ச்சிகளை நிறுத்தமாட்டர்கள். ஜெபிப்போம். இப்படி தவறான செய்திகள் தொடர்ந்து வந்தால் அந்த ஏஞ்சல் TVயை காண்பவர்கள் அவர்களுக்கு பணம் அனுப்புவதை நிறுத்தி அவர்களின் இப்படிப்பட்ட முட்டாள்தனமாக மக்களை ஏமாற்றும் இப்படிப்பட்ட காட்சிகளை TVயில் காண்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவியுங்கள். பணம் அனுப்புவதற்கு பதில் பல ஆயிரம் எதிர்ப்பு கடிதங்கள் ஏஞ்சல் TVக்கும், வின்சென்ட் செல்வகுமாருக்கும் எழுதி அறிவியுங்கள்.