தமிழ் கிறித்தவ தளத்தில் நண்பர் ஜாண்சன் அவர்களின்"மதிகேடு நிறைந்த மனைவி யார்? ஏவாளா,சாராளா?..?"என்ற திரியானது எதிர்பாராவண்ணமாக பூட்டப்பட்டுவிட்டது;ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத நண்பர் ஜாண்சன் அவர்கள்,"பெருந்துரோகி யார்? பேதுருவா,யூதாஸ் காரியுத்துவா?" என்ற தலைப்பில் மற்றொரு புதிய விவாதத்தை துவக்கியிருக்கிறார்.இதைக் குறித்து நம்முடைய கருத்தாகப் பதித்ததை இங்கே எனதருமை வாசகர்களுக்காக பகிர்ந்துகொள்ளுகிறேன். சிலுவையே சிலுவையே என் நேசர் செய்த பாவம் என்னவோ பாவி நான் இருக்க பரிசுத்தர் பலியாவதோ (2) படைத்த நேசரை மறந்தவனாய் என் பாவத்தில் நான் அலைந்தேன் பரிசுத்தர் தோள்மீது பாரச் சிலுவையை நானே தூக்கிவைத்தேன் கன்னத்தில் அறைந்த பாவியிலும் பெரும்பாவி நான் அல்லவோ காட்டிக்கொடுத்த யூதாஸிலும் கொடும் நீசன் நான் அல்லவோ
-மேற்கண்ட பாடலின்படி பேதுருவையும் யூதாஸையும் குறித்து யார் பெருந்துரோகி என்று துணிகரமாக ஆராயும் தைரியம் எனக்கில்லை;ஆனாலும் நண்பர் ஜாண்சன் இப்படியாக ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறாரெனில் அதற்கு நிச்சயமாகவே ஒரு காரணம் இருக்கும்; நண்பர்கள் அதிர்ச்சியடையாதிருந்தால் ஒரு காரியம் சொல்லுவேன், யூதாஸ்காரியோத்துவின் செயலை நியாயப்படுத்தி, அவரும் தேவ சித்தத்தை நிறைவேற்றியவரே என்று கூறி உபதேசிக்கும் ஒரு கூட்டம் உண்டு என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறேன்; அவர்களில் ஒருவர் சில வருடங்கட்கு முன்பு இதைக் குறித்து தொலைக்காட்சியிலும் பிரசங்கித்தார்; உலகமுழுவதும் எல்லாருக்கும் இரசிகர்கள் உண்டு; அந்த வகையில் யூதாஸ்காரியோத்து இன்றைக்கும் அப்போஸ்தலர்களில் ஒருவனே என்று எதை வைத்தோ சாதிப்போருண்டு.
அப்படியானால் இந்த நண்பர் ஜாண்சன் இந்த கேள்வியை எழுப்பியிருக்கும் நோக்கத்தைக் குறித்து நாம் ஆரோய்வோமானால் அது நிச்சயமாகவே நம்முடைய நிலைகளைச் சற்று ஆராய்வதாகவே இருக்கும் என்று நம்புகிறேன்; பேதுரு மற்றும் யூதாஸுடன் ஏன் நிறுத்திவிட்டீர், ஓடிப்போன மற்ற 10 பேரையும் சற்று கவனத்தில் கொள்ளலாமே? ஓடிப்போவது மட்டும் சாதாரணமான காரியமா என்ன? அது துரோகம் இல்லையா? அப்படியானால் துரோகம் என்ற வார்த்தையையும் கவனத்தில் கொண்டு அதைக் குறித்தும் ஆராயவேண்டும்; அடுத்ததாக சம்பந்தப்பட்டவரின் குணாதிசயத்தையும் அவருடைய குணாதிசயம் மாறுவதற்கான சூழ்நிலையையும் அதன் விளைவுகளையும் ஆராயவேண்டும்; அதற்குப் பிறகு தேவனுடைய அளவற்ற இரக்க சுபாவத்தையும் கணக்கில் கொண்டு முடிவுக்கு வரவேண்டும்; அந்த முடிவானது யார் துரோகி என்று அல்ல,தேவனுடைய இரக்கம் எப்படிப்பட்டது என்று விளக்குவதாக அமைந்திடவேண்டும்; இறுதியாக, இப்படிப்பட்ட ஒரு ஆராய்ச்சின் முடிவானது வாசிப்போருக்கும் தியானிப்போருக்கும் பக்திவிருத்தியை உண்டாக்க வேண்டும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)