"உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்." (நீதிமொழிகள்.6:11 & 24:34)
நேற்று மதியம் ஆசீர்வாதம் தொலைக்காட்சியில் சகோதரன் ஆலன்பால் அவர்களின் பழைய செய்தி ஒன்றை மறுஒளிபரப்பு செய்துகொண்டிருந்தனர்; அதில் அவர் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். செய்தியின் ஆரம்பத்தையும் நான் கவனிக்கவில்லை,அதன் முடிவையும் என்னால் கவனிக்கமுடியவில்லை;வெளியே புறப்படும் முன்பதாக சில நிமிடங்கள் மாத்திரமே அவருடைய வார்த்தைகளை கவனித்தேன். ஆனாலும் அந்த ஒரு சில நிமிடம் நான் கவனித்த அவருடைய செய்தியின் பாதிப்பு இரவு வரை நீடித்தது;அவருடைய செய்தியின் மையப் பொருள் தரித்திரம் அல்லது குறைவு ஏன் உண்டாகிறது என்பதாக இருக்கவேண்டும்;தரித்திரத்தின் காரணம், சோம்பேறித் தனமே;உழைக்க ஆயத்தமாக இல்லாதவர் வீட்டில் நிச்சயம் வறுமை இருக்கும்;இதனால் கடன் பிரச்சினைகளும் இருக்கும்;கடன் பிரச்சினைகளூம் குறைவுகளும் கொடிய தரித்திரமும் உண்டான பிறகாவது நீ விழித்து எழுந்து உழைக்க ஆயத்தமாக வேண்டும்;ஆனால் உழைப்பதற்கும் மனமில்லாமல் பெருமை எனும் கொடிய பிசாசு வந்து தடுக்கும்; 'நீ எப்படிப்பட்ட ஆள்,உனக்கு இந்த வேலையெல்லாம் தகுமா',என்று உபதேசிக்கும்; "சோம்பல் தூங்கி விழப்பண்ணும் " எனும் வேத வார்த்தையின்படி தரித்திரத்தை விட்டொழிக்க திட்டமிடாமல் முடங்கிக் கிடந்தாயால் அது உன்னை விழுங்கிவிடும்; உன்னைத் தாழ்த்தி, "ஆண்டவரே, என்னுடைய பெலவீனத்தை மன்னியும், எனக்கு உதவிசெய்யும், என் வாழ்க்கையில் இருக்கும் இந்த கொடிய தரித்திரத்துக்கு எதிராக கடுமையாக உழைத்து சிக்கனமாக வாழ்ந்து இதனை மேற்கொள்ளுவேன், என் காரியத்தை வாய்க்கச் செய்யும் " என்று மன உண்மையுடன் ஜெபித்தால் ஆண்டவர் நிச்சயமாகவே உதவிசெய்வார்.
தரித்திரத்துக்கும் குறைவுக்கும் கடன்பிரச்சினைக்கும் எதிராக திட்டமிட்டு ஒரு வருடம், இரண்டு வருடம் என்று எல்லைகுறித்து குடும்பமாக திட்டமிட்டு உழைத்து அதனை மேற்கொள்ளவேண்டும்;ஏனெனில் வறுமை ஆயுதமணிந்தவனைப் போல தனது அனைத்து பயங்கரங்களுடனும் உன்னைத் தாக்க வந்திருக்கிறது;நீயோ நிராயுதபாணியாக வெறுங்கையுடன் பரிதாபமாக நிற்கிறாய்... என்பதாக சகோதரன் ஆலன்பால் அவர்கள் முழங்கிக் கொண்டிருக்க எனக்கு நேரமாகிவிட்டதால் நான் ஏற்றுக்கொண்ட பணியை நிறைவேற்ற புறப்பட்டேன். மேலே அடியேன் எழுதியிருப்பது, நான் கவனித்ததன் தொகுப்பு மட்டுமே;சகோதரன் ஆலன்பால் அவர்கள் பேசியதில் என்னை பாதித்தவற்றை இன்னும் தியானித்து விவரமாக எழுதியுள்ளேன்;இந்த செய்தியை கவனித்தவர்களுக்கு அது நிச்சயமாகவே மூலிகைச் செடிகளிலிருந்து தயாரிக்கப்படும் கஷாயம் எனும் கசப்பு மருந்துபோல இருந்திருக்கும்.அதைப் பருகியோர் நிச்சயமாகவே ஆவிக்குரிய மந்தத்தன்மையிலிருந்தும் குணமாகி வெற்றிக்கான முதல்படியை நோக்கி முன்னேறுவர்.
மேற்கண்ட வசனத்தின் போதனையில் என் மனதை பாதித்த கருத்து வறுமை ஆயுதமணிந்தவனைப் போல என்பதே;அதனை தியானித்தவுடனே அதன் எதிரொலியாக உன் நிலைமை என்ன என்பதும் எப்படி இருக்கவேண்டும் என்பதும் சிந்தனையாக மாறியது;தொடர்ந்து பின்வரும் வசனங்கள் ஆவியில் எதிரொலித்தது.
"நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்." (எபேசியர்.6:11)
ஆம்,எதிரி ஆயுதமணிந்தவனாக நிற்கிறான், எனில் ஆவிக்குரியவனும் தனக்குரிய ஆயுதங்களை எடுத்துக்கொண்டவனாக நின்றாலே வெற்றிபெறமுடியும்;தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் எதிர்த்து நிற்பதையும் மேற்கொள்ளுவதையும் வெற்றிபெறுவதையுமே மாத்திரமே.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)