சென்னையில் அண்மையில் அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் யுத்த சத்தம்' 2011 எனும் ஆவிக்குரிய கூட்டம் நடைபெற்றது; அது சென்னை கிறித்தவ வட்டாரத்தில் பெரும் அசைவை உண்டுபண்ணியிருக்கிறது; பலரும் சங்கடப்பண்ணும் வண்ணமாக அவர்களது அபிமான தலைவர்களை அண்ணன் பந்தாடியிருக்கிறார்; 'என்ன தைரியமா பேசறார்', என்று சிலரும் 'இதெல்லாம் தேவையா',என்று சிலரும் 'ஒரு ஊழியர் இன்னொரு ஊழியரை விமர்சிக்கலாமா', என்று ஒரு சிலரும் அங்கலாய்த்தனராம்; எனக்கு அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டவில்லை; ஒருவேளை நான் சென்றிருந்தால் அந்த கூட்டம் முழுவதையும் ஒளிப்பதிவு செய்து இங்கே எனது வாசகர்களின் கண்களுக்கும் செவிக்கும் விருந்தாக்கியிருப்பேன்; அந்த கூட்டத்தில் பங்கேற்ற நண்பர்கள் யாராவது அதுசம்பந்தமான விவரங்களைப் பகிர்ந்துகொண்டால் மிகவும் உபயோகமாக இருக்கும்.
இன்று காலை நான் சந்திக்கச் சென்றிருந்த ஒரு வீட்டிலும் இப்படியே ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் அண்ணனைக் குறித்து பகிர்ந்துகொண்டனர்; நான் என்ன சொல்லுவேன்? சரி என்பதா, தவறு என்பதா? குறிப்பாக அண்மையில் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற பெந்தெகொஸ்தே ஐக்கியத்தின் கிறிஸ்மஸ் விழாவையும் அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் விமர்சித்தாராம்; அதில் முதல்வர் கலைஞரையும் பகிரங்கமாக சாடினாராம்; 'முதல்வரையே தாக்குகிறாரே', என்று அந்த சகோதரி ஆச்சரியப்பட நான் என்ன சொன்னேன் தெரியுமா," இப்ப என்ன அவரைக் காப்பாற்ற எதிர்கட்சி வரிசையில் அம்மா இல்லையா.," என்றேன்;மேலும் அண்ணன் கோலோச்சிக் கொண்டிருக்கும் பீகார் மாநிலத்திலும் அரசியல்வாதிகளை அனுசரித்தே போகவேண்டியிருக்கும், ஏற்கனவே அண்ணன் அவர்கள் மாட்டுத்தீவன ஊழலில் புகழ்பெற்ற மு.மு.லாலுவுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுவதுண்டு.
இங்கேயும் கிறித்தவத் தலைவர்கள் வழியாக சிறுபான்மையினர் ஓட்டுகளைக் கவர அரசியல்வாதிகளும் அரசியல்வாதிகளுடனான நெருக்கத்தினால் தங்கள் பொருளாதார நெருக்கங்களையும் சமுதாய நெருக்கடிகளையும் போக்கிக் கொள்ள கிறித்தவ ஊழியர்களும் படாத பாடு படுவது தெரிந்த விஷயம். ஒருபுறம் சூரியனை சில தலைவர்கள் ஆதரித்தால் அவர்களுடைய எதிரணியினர் அதே ஆவியானவர் துணையுடன் (?!) ரெட்டை இலையை ஆதரித்து தங்கள் தனித்தன்மையைக் காட்ட தீவிரிக்கின்றனர்;இவர்களில் யார் யோக்கியர் என்போம்? கிராமத்தினர் சொல்வழக்காக, "எரிகிற கொள்ளியிலே எந்த கொள்ளி நல்லது.." என்பார்களே அதுபோல இருதரப்புமே பேர் புகழ் பதவிக்காக ஓடிக்கொண்டிருப்பது வெளிப்படை. இப்படிப்பட்டவர்களைக் குறித்து என்ன சொல்லுவோம்? அந்த சகோதரியிடம் நான் பொதுவாகச் சொன்ன கருத்தையே எனதருமை வாசகரின் கவனத்துக்குத் தருகிறேன்... சூரியனும் நட்சத்திரங்களும்
இயேசுகிறித்துவைத் தவிர பின்பற்றத் தகுந்த மாதிரி யாருமில்லை;எப்படி சூரியனானது கிழக்கில் எழும்பும் வேளையில் பரந்துவிரிந்த வானில் இரவெல்லாம் ஜொலித்துக் கொண்டிருந்த நட்சத்திரங்கள் மேற்கில் கரைந்து மறைந்து போகிறதோ அப்படியே ஆண்டவர் வரும்போது மாத்திரமே இதெல்லாம் மறையும்.
சூரியனும் கூட ஒரு நட்சத்திரமே என்பது இன்னும் விசேஷம்;ஆனாலும் அதற்கு இணையான நட்சத்திரம் எதுவுமில்லை என்பது போலவே இயேசுவானவருக்கு இணையான போதகர்கள் யாருமில்லை;அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட சொற்ப காலத்தில் ஜொலிக்கிறார்கள்,சிலர் விழுந்தும் போகிறார்கள்;ஆனால் ஸ்தாபிக்கப்பட்ட நாள் முதலாக ஒளிவீசிக்கொண்டிருக்கிற சூரியனையே படைத்த இயேசுவானவரை எல்லா காரியத்திலும் சார்ந்திருந்து அவரையே பிரதிபலிப்போமாக.
வேதம் சொல்லுகிறது,"ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்.." (மல்கியா.4:2)இந்த வசனத்தின் பாதிப்பில் "இயேசு தான் நீதியின் கதிரவன்" என்றும் பாடுகிறோம்; மேலும் சங்கீதக்காரன், "ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்." ( சங்கீதம்.36:9) என்றும் கூறுகிறார்; இதன் விளைவு என்ன, நம்மையும் அந்த சூரியன் பிரகாசிக்கப்பண்ணும்; அதனை நம்முடைய ஆண்டவரே குறிப்பிடுகிறார், "அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்." (மத்தேயு.13:43) குமாரனையே சூரியனுடன் ஒப்பிட்டு வேதம் பேசுகிறதென்றால் அவரைப் பின்பற்றுவோரையும் சூரியனுடன் ஆண்டவர் ஒப்பிட்டுப் பேசுவது எத்தனை பெரிய பாக்கியம்..!
எல்லாவற்றுக்கும் மேலாக பிதாவாகிய தேவனைக் குறித்தும், "தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்." (சங்கீதம்.84:11)என்று சங்கீதக்காரன் குறிப்பிடுகிறார்.
நாம் இந்த உலகில் நட்சத்திரமாகப் பிரகாசிக்க விரும்புகிறோமா அல்லது பிதாவின் இராஜ்யத்தில் சூரியனைப் போலப் பிரகாசிக்க விரும்புகிறோமா?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)