இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்,"அவனவன் தன் தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன் தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று." (மீகா.4:4) மேற்கண்ட வசனத்தில் பயப்படுத்துவார் இல்லாமல் எனும் வார்த்தையே விசேஷமானது;"நீ பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவாய்" என்று யார் சொல்லமுடியும்? நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பயமுறுத்தும் சூழ்நிலைகளின் வழியே கடந்துசெல்லுகிறோம்;அந்த காரியங்களிலிருந்து நாம் தப்புவதற்கான வழிகளையே நாம் விரைந்து தேடுகிறோமேயன்றி நம்மை தப்புவிக்க வல்லவரை நோக்கிப் பார்க்கிறோமா? "அவனவன் தன் தன்" எனும் வார்த்தையானது ஒவ்வொரு ஆத்துமாவையும் தனித்தனியாக கண்காணித்து பராமரிக்கும் சிருஷ்டிகரின் அன்பைப் பார்க்கிறோம்; 'எனக்காகக் கரிசனை கொள்ளும் தேவன், என்னுடன் இருக்கிறார்' என்பது தேவை நிறைந்த ஒரு ஆத்துமாவுக்கு எத்தனை ஆறுதல் அல்லவா? அடுத்து,"திராட்சச்செடியின் நிழலிலும், தன் தன் அத்திமரத்தின் நிழலிலும்" எனும் வார்த்தையிலிருந்து வெளிப்பட்ட ஒரு சிந்தனை, திராட்சைச் செடியானாலும் அத்திமரமானாலும் அதன் கீழே நிழல் வருவதற்குக் காரணமானது எது?
பலரும் சொல்லக்கூடும், சூரியனே நிழலுக்குக் காரணம் என்று; ஆனால் அதைவிட விசேஷித்த காரணம் ஒன்று உண்டு; ஒரு மரம் நிழல் தருவதற்கு ஆதாரமானது அதன் செழிப்பு; மரமானது காய் கனிகளோடும் அவற்றுக்குக் குடைபிடிக்கும் இலைகளோடும் இருக்குமானால் அதுவே அதன் கீழ் உட்காருபவனுக்கு நிழலாக மாறும்; அந்த நிழலை அனுபவித்து ஆனந்தமடையும் அவன் இருதயம் சொல்லும், 'என் பிரயாசத்தின் பலனை அடைந்தேன்',என்று.
ஆம்,எனக்கன்பான தேவனுடைய பிள்ளைகளே கடும் வெப்பத்தில் சுட்டெரிக்கும் சூரியக் கதிர்களின் கீழிருந்து பிரயாசப்பட்ட உங்களுக்கு "திராட்சச்செடியின் நிழலும் அத்திமரத்தின் நிழலும்" எத்தனை இன்பமாக இருக்குமல்லவா? அதிலும் அது யாரோ ஒருவருடைய தோட்டமல்ல, உங்களுக்கு சொந்தமாக ஆண்டவர் வகுத்துக் கொடுத்த உங்கள் பங்கின் ஆசீர்வாதம்..! இந்த மாதத்தில் அதுபோன்ற விசேஷித்த ஆசீர்வாதத்தினால் நீங்கள் மகிழ்ந்திருப்பதே ஆண்டவருடைய மனவிருப்பமாகும்;அதனை அடைய நம்முடைய பங்கும் அதிகம் என்பதை மறந்துபோகக்கூடாது; அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, "பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்." (2.தீமோத்தேயு.2:6) என்கிறார்; நம்முடைய ஆண்டவர் இன்னும் மேலாக, "நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்." (யோவான்.4:38)
இது என்ன சலுகையா? சலுகை போலத் தோன்றினாலும் அது நம்மை தேவசித்தம் செய்வது என்கிற நுகத்துக்குட்படுத்துகிறது; உதாரணமாக மரம் வளர்ப்பதைக் குறித்து இன்றைக்குப் பரவலாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது; யாரோ வளர்த்த பலன்களை நாம் புசிக்கிறோமே, புசித்த நாம் பொறுப்புடன் செயல்பட்டு பசித்தவரின் பிணியை ஆற்றுவதற்கு முயற்சித்தோமா? "மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் " என்று ஆண்டவர் சொல்லும்போது இன்னொன்றும் அதில் மறைந்திருக்கிறது, நீங்கள் பிரயாசப்பட்டாலே மற்றவர் அதாவது பின்வரும் சந்ததியினர் பலனையடைய முடியும் என்றும் கொள்ளலாம். இறுதியாக திராட்சச்செடி மற்றும் அத்திமரத்தைக் குறித்த ஒரு பொதுவான ஞானார்த்தமானது என்னவென்றால், திராட்சச்செடியானது இல்வாழ்க்கையின் ஆசீர்வாதத்தையும் அத்திமரமானது சமூகத்தில் நம்முடைய மேன்மையையும் குறிக்கிறது; இதற்கு ஆதாரமாக, " நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்." (உபாகமம்.28:3) வீட்டில் மாத்திரமல்ல, வெளியிலும் ஆசீர்வாதம்; வெளியில் என்பது நம் பிரயாசங்கள், அதாவது வயல்வெளி மற்றும் தோட்டங்களின் பிரயாசம்.
இதன்படி வெற்றிகரமான இல்வாழ்க்கையை மேற்கொள்ளுவோரே சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும் பெறமுடியும்; நம்முடைய அகவாழ்வின் செழிப்பே புறவாழ்வின் மேன்மைக்கு ஆதாரமாக விளங்குகிறது; அப்படிப்பட்ட மேன்மையையும் ஆண்டவரே தமது மிகுந்த கிருபையினால் அருளிச் செய்கிறார்; இது இந்த மாதத்துக்கான வாக்குத்தத்தம் மட்டுமல்ல, இதன் மூலம் வருங்காலங்களில் ஆண்டவர் செய்யப்போகிறவற்றையும் நாம் தியானித்து அறியலாம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)