"நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப் பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு." (ஆபகூக். 1:3) அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்கள் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் பிரசங்கித்த போது வசனத்தை வலியுறுத்த ஒரு உண்மை சம்பவத்தைச் சொன்னார்;அது மனதை சஞ்சலப்படுத்துவதாக இருந்தது. மஸ்கட்டில் இந்து பாரம்பரியத்திலிருந்து தனது குடும்பத்தாருடன் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு மிகுந்த வைராக்கியமாக இருந்த ஒரு சகோதரன்; அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை மிகவும் நேசிப்பவர்; அந்த சகோதரனுக்கு அழகான ஒரு மகளும் மகனும் உண்டு; மகள் மஸ்கட்டிலேயே பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு மேற்படிப்புக்காக தனது தாய்நாடான தமிழ்நாட்டில் ஒரு விடுதியில் தங்கியிருந்து +2 படித்து முடித்துவிட்டு அடுத்து கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்திருக்கிறாள்;.
இதற்கிடையே அவளை பிரபலமான ஒரு போதகரின் மனைவி சந்தித்து மிகவும் நேசம் பாராட்டினார்கள்; பெற்றோர் அருகில் இல்லாததால் இந்த பெண்ணும் அவர்களுடன் அந்நியோன்னியமாகப் பழகிவிட்டாள்; அவ்வப்போது விடுமுறைக்கு பாஸ்டரம்மா வீட்டுக்குச் சென்று விடுவாள்; இதற்கிடையே அந்த பாஸ்டரம்மாவுக்கு கொள்ளை அழகான இந்த பெண்ணை எப்படியாவது தனது மருமகளாக்கிக் கொள்ள பேராசை பிடித்தது;காரணம்,அவர்களுடைய மகன் போதைக்கு அடிமையானவன்; அவனுக்கு இங்கே யாரும் பெண் தரப்போவதில்லை;எனவே பாஸ்டரம்மா அந்த அப்பாவிப் பெண்ணின் பெற்றோரைக் கூட கலந்தாலோசிக்காமல் அந்த பெண்ணின் இளம் உள்ளத்தை கலைக்கத் துவங்கினார்கள்;அவள் அச்சத்துடன் மறுத்து, இப்போது தானே கல்லூரியில் சேர்ந்திருக்கிறேன், படிப்பு முடியட்டுமே, என்று சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள். ஒரு கட்டத்தில் அவளது பெற்றோருக்குக் கூட அறிவிக்காமல் இந்த அப்பாவிப் பெண்ணைப் பிடித்து வலுக்கட்டாயமாக அந்த குடிகார பையனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்; அவளது பெற்றோர் அதிர்ச்சியுடன் இந்தியாவுக்கு வந்து செய்வதறியாது திகைத்து மனதைத் தேற்றிக்கொண்டு தங்கள் மகளையும் உருப்படாத தங்கள் மாப்பிள்ளையையும் அழைத்துக்கொண்டு மஸ்கட்டுக்குப் பறந்தார்கள்; அங்கே ஒன்றுக்கும் உதவாத அந்த மாப்பிள்ளை பையனுக்கு வேலை வாங்கிக் கொடுத்து தனி பங்களாவும் வாங்கிக் கொடுத்து குடியமர்த்தினார்கள்; ஆனாலும் கொஞ்சமும் உணர்வில்லாத அந்த பையன் இந்த பேதைப் பெண்ணை தினமும் குடித்து அடித்து கொடுமை செய்தான்; பொறுத்துப் பொறுத்து பார்த்த அந்த பெண் கண்ணீருடன் தகப்பனிடம் வந்து முறையிட்டாள்.
என்ன செய்யலாம், திருமணமாகி (?) சில மாதங்களிலேயே அவளுடைய திருமண பந்தம் முறிந்து முடிவுக்கு வந்தது; எல்லாவற்றையும் கனவாக நினைத்து கசப்பாக எண்ணி அவள் மனதைத் தேற்றிக்கொண்டு புதிய வாழ்க்கையைத் துவக்கவேண்டும்;அவளது நிலையைக் கண்டு பெற்றோர் துடித்துப்போயினர்;அந்த சகோதரன், "அண்ணே எனக்கு ஏன் இது நடந்தது, இந்த கொடுமைக்காகவா நாங்கள் ஆண்டவரிடம் வந்தோம்," என்று கதறுகிறார்கள்;அவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்லமுடியும்?
இப்படியாக அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்கள் உணர்ச்சிகரமாகச் சொல்லிமுடித்தபோது வைராக்கியத்தினால் அவருடைய கண்களிரண்டும் சிவந்து கலங்கியிருந்தது; இது நம்முடைய தேசத்தில் நம் தமிழகத்தில் சபை வட்டாரத்தில் நடந்தது தானே, இதனைச் சொல்லலாமா கூடாதா? யாரையும் குறைகூறக்கூடாது, குற்றஞ்சாட்டக்கூடாது என்றால் இதுபோன்ற மோசடிக்கு யார் நியாயம் செய்வார்? அப்படியானால் அழகான பெண் பிள்ளைகள் பையன்களிடம் மட்டுமல்ல, பாஸ்டரம்மாவிடமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் போலிருக்கிறது..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)