புதிய வருடம் - 2011 பிறக்கப்போகிறது; அது சம்பந்தமான ஆர்பாட்டங்கள் துவங்கிவிட்டது; கடைத்தெருவில் வருடம் முழுவதும் இயேசுவை தூஷிக்கும் முசல்மான் ஸ்டார் விற்கிறார்;இயேசுவை தூஷித்த அவரிடமே இயேசுவின் அடியவர் காகித ஸ்டார் -ஐ வாங்கிவந்து வீட்டில் கட்டி குதூகலிப்பார்;
ஐயங்கார் கௌரவம் பார்க்காமல் முட்டையை உடைத்து ஊற்றி மாவு பிசைந்து கேக் சுடுவார்;அவர் இயேசுவை தெய்வமாகவும் இரட்சகராகவும் ஏற்காவிட்டாலும் வியாபாரத்துக்காக கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லி வாடிக்கையாளரை கவர - அவரிடம் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டதாகச் சொல்லிக்கொள்ளும் கிறித்தவன் சென்று கேக் வாங்கி உண்டு - ஊட்டி மகிழுவான்;
அதுபோலவே இஸ்மவேலை ஈசாக்காக மாற்றி அல்லாவைத் தொழுது... ஹலால் செய்யப்பட்ட கறியை வாங்க பண்டிகை கிறித்தவன் வரிசையில் நிற்பான்;அதில் அட்வான்ஸ் புக்கிங்கும் தூள் பரத்தும்;
இப்படி உலகமே கொண்டாடும் கிறிஸ்மஸ் காலத்திலேயே உலகில் அதிக அளவுக்கு மது விற்பனையாகிறது;அந்த ரெக்கார்டு இன்னும் முறியடிக்கப்படவில்லையாம்;மாறாக முந்திய வருட கிறிஸ்மஸ் விற்பனை ரெக்கார்டை அடுத்த வருட விற்பனை முறியடித்துக் கொண்டிருக்கிறது; அச்சகங்களும் கடந்த மூன்று மாதமாகவே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
இப்படி ஆண்டவரை ஏற்றுக்கொண்டோரைக் காட்டிலும் - அவர் வந்து பிறந்த பலனைக் காட்டிலும் அதையொட்டிய களியாட்டுக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் பலனானது பல்லாயிரம் மடங்கு அதிகமாகும்;இது கிறிஸ்மஸ் எனும் நல்லதொரு விழாவை கேலிக்கூத்தாக்கி வியாபாரமாக்கி விட்டது வேதனையான விஷயம்;அதுமாத்திரமல்லாமல் தொடர்ந்து வரும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இந்த விழாக்காலத்தை தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இதற்காக நம்முடைய சபைத் தலைவர்களும் மக்களைக் கவரும் வண்ணமான வண்ணமயமான வாக்குத்தத்த அட்டைகளையும் காலண்டர்களையும் ஆர்டர் போட்டு வாங்கி வைத்துவிட்டார்கள்; பல ஏழை ஊழியர்கள் அட்வான்ஸ் கொடுக்காமலும் அல்லது பணமில்லாமலும் அல்லது பணம் போதாமலும் அதனை டெலிவரி எடுக்கத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்; அதற்கும் வழியில்லாத ஏழை ஊழியர்கள் அங்குமிங்கும் கண்கள் அலைபாய உதவிகேட்டு பெரிய மனிதர்களின் வீடுகளை நோக்கி மிகைப் படுத்தப்பட்ட செலவு திட்டங்களுடன் படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்;கொஞ்சம் அதிகமாகச் சொன்னால் தானே பாதியாவது கிடைக்கும்;அதே போல அந்த பெரிய மனிதரும் எத்தனை பேருக்குத் தான் தரமுடியும்;எல்லோருக்கும் கிள்ளி கிள்ளி கொஞ்சம் கொஞ்சம் பங்கு வைப்பதற்குள் அவருக்கு போதும் போதும் என்றாகிவிடும்.
இந்த எல்லா களேபரத்துக்கும் நடுவில் இன்னொரு சடங்கையும் நிறைவேற்ற வேண்டும்;அது தான் புது வருட வாக்குத்தத்தம்..!
அது சிறப்பாக அமையாவிட்டால் டிவி ஊழியர்கள் பக்கம் மக்கள் கவனம் போய்விடும்;சொல்லி அடித்தது போல நாமும் அடித்து டிவி பிரசங்கியாரும் அதையே சொல்லிவிட்டால் உண்டாகும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை;ஆண்டவர் அற்புதமாகப் பேசிவிட்டார்,நம்முடைய ஊழியரும் ஒரு தீர்க்கதரிசிதான் என்று மக்கள் மெச்சிக்கொள்ளுவார்கள்;மக்கள் கண்டுகொள்ளாவிட்டாலும் ஊழியராவது தனக்கு வேண்டிய ஒருவரைத் தூண்டிவிட்டு சொல்லவைத்துவிடுவார்.
காரணம் புத்தாண்டு என்பது பலரையும் பலவிதத்திலும் பாதித்து ஆர்வத்தைத் தூண்டுகிறது அல்லது கவலைகொள்ளச் செய்கிறது;இதற்காக காலண்டர் வாக்குத்தத்த அட்டை தவிர சபை ஆராதனையில் வாக்குத்தத்தம் மட்டுமில்லாமல் இந்த வருடம் எப்படியிருக்கும் என்ற கணிப்பையும் சொல்லியாக வேண்டும்;இல்லாவிட்டால் ஊழியருக்கும் ஆண்டவருக்கும் தொடர்பு இல்லாதது போலவும் ஊழியர் பவர் இல்லாதவர் போலவும் எண்ணப்படுவார்;போதாக்குறைக்கு கிளி ஜோசிய அட்டை போல குட்டி குட்டி அட்டைகளில் வசனத்தை அச்சிட்டு அதை பரப்பிவைத்திருக்கும் தட்டிலிருந்து வசனத்தை போட்டி போட்டுக்கொண்டு எடுப்பதிலும் ஒரு சுவாரசியம் தான்..!
மேற்கண்ட இத்தனை விதமான (சுருக்கமான) கொண்டாட்டங்களில் எதை தவறு என்போம், எதை சரி என்போம்? எது வேதத்துக்குப் புறம்பானது என்போம், எதை வேதத்துக்கு ஏற்றது என்போம்? கடினமான பணிதான்.
ஆனாலும் இவற்றிலும் ஏதோ சில நியாயங்கள் இருக்குமா என நடுநிலையுடன் ஆராய்ந்தால் சில உண்மைகள் தென்படலாம்; அறிவுஜீவிகளுக்கும் முற்றுந்துறந்தவர்களுக்கும் இதனால் பயனும் இராது;அவர்களுக்கு மாரிகாலமும் கோடைக்காலமும் ஒன்று போலவே தோன்றும்;இனிப்புக்கும் கசப்புக்கும் எந்த விதமான வித்தியாசமும் தெரியாது;ஆனால் சாமான்ய மனிதனுக்கு,அதிலும் பல்வேறு விழாக் கொண்டாட்டங்களின் பாரம்பரியத்திலிருந்து வந்தோரை திருப்திபடுத்தவும் தக்கவைக்கவும் எதாவது வேண்டுமே..?அவர் பூரண அனுபவத்துக்குள் வரும்வரையாகிலும் பொறுமையாக இருந்து தானே எதாவது மாற்றத்துக்கு முயற்சிக்கமுடியும்?
குறிப்பாக புதுவருட வாக்குத்தத்த சடங்கைக் குறித்து மட்டும் சிந்தித்தால், அது முழு வருடத்தின் கருப்பொருளைப் போலவும் (Thought of the year or Theme) போதனை சார்ந்ததாகவும் (Teaching) இருந்தால் அது நல்லது;அது நல்ல தீர்மானங்களை எடுக்க உற்சாகப்படுத்துவதாக இருக்கவேண்டும்; ஏனெனில் எந்தவொரு வாக்குத்தத்தத்தின் முன்பின் வசனங்களையோ அல்லது மொத்த சூழமைவையோ கவனித்தால் அதில் நிச்சயமாகவே ஒரு போதனையும் கண்டிப்பும் தேவ கோபமும் எச்சரிப்பும் இருக்கிறது.
அப்படியானால் தனது மந்தைக்கு எளிதில் ஜீரணமாகும் நல் உணவையே விருந்தாகத் தரும் பொறுப்புள்ள எந்தவொரு சபை போதகனும் இதனை சாமர்த்தியமாக சமைத்து பரிமாற வேண்டும்;ஒரு வேளை அது ஜீரணமாகாவிட்டால் மருந்து கொடுக்கலாம்;ஆனால் மருந்தே உணவே ஆகாது அல்லவா?
உணவே மருந்தானால் மருந்து அவசியப்படாது எனும் கருத்துள்ள "மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்" எனும் குறளை யாரோ முணுமுணுப்பது கேட்கிறது..! ஆனாலும்..?
எந்தவொரு காரியத்திலும் கழுகைப் போன்ற பார்வையும் (Eagle's view) வேண்டும் ஒரு புழுவைப் போன்ற பார்வையும் (Worm view) வேண்டும்;கழுகின் பார்வையானது மொத்தக் கருத்தை (Whole Context) அறிய உதவும்;புழுவின் பார்வையானது உன்னிப்பாக அந்த குறிப்பிட்ட கருத்தின் (in depth) ஆழத்தையறிய உதவும்.
இதன்படி வாக்குத்தத்தம் என்ற போர்வையில் நல்வாக்கு நாயகர்களாக சில உலாவரும் கொடுமை ஒருபுறமிருந்தாலும் ஒரு சபையின் மேய்ப்பனானவன் புதிய வருடத்துக்கான நோக்கங்களையும் தரிசனங்களையும் தீர்மானங்களையும் மையமாக வைத்து சபை மக்களை நடத்துவது எந்த வகையிலும் தவறானதாக இருக்காது;
உதாரணமாக ஒரு பிறந்தநாள் விழாவுக்கு மாலை வாங்கிச் செல்கிறோம்; அதே மாலையை இறந்தவருக்காகவும் வாங்கிச் செல்கிறோம்;இரண்டிலும் மலர் மாலை பொதுவானது, ஆனால் வித்தியாசப்படுவது உணர்வு தானே?
மனிதன் இயல்பாகவே சென்டிமென்டுக்குக் கட்டுப்பட்டவனாக்கும்; எனது பிறந்தநாளன்று எனக்கு என் அம்மா பரிசாகத் தரும் 10 ரூபாயை செலவு பண்ணாமல் நான் வைத்திருக்கிறேன் என்றால் என்னிடம் நிறைய பணம் இருக்கிறது என்பதால் அல்ல,எவ்வளவு அவசர செலவு என்றாலும் அந்த பணத்தை எடுக்காத என்னுடைய தீர்மானத்துக்குக் காரணம் அம்மா தந்த பரிசு என்ற உணர்வு தானே?
அதுபோலவே புத்தாண்டு எனும் கிளர்ச்சி அத்தனை எளிதில் எல்லோருக்கும் வந்துவிடாது;ஒரு குடும்பத் தலைவர் சொல்லுவார்,எல்லா நாளும் ஒரே நாள் தான்,இந்த பண்டிகைகளால் செலவுதான் என்று;குடும்பத் தலைவி சொல்லுவார்,இந்த வருடம் மட்டும் இந்த மனு(புரு)ஷன் என்ன புதுசா சாதிச்சிடப்போறாரு, என்று;
நாளெல்லாம் உழைத்துக் களைத்துப் போன உடல் சோர்வுடனும் எதிர்காலத்தைப் பற்றிய மனப்பாரத்துடனும் வருபவர்க்கு தேவையானது சூடாக ஒரு டீ அல்லது குளிர்ச்சியாக ஒரு மோர் தானே தவிர கஷாயம் அல்லவே?
அவ்வளவு ஏன் புத்தாண்டு அன்று கூட விடுமுறை இல்லாத வெறுப்புடனும் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் புத்தாண்டுக்கான துணிமணிகளையும் பலகாரங்களையும் வாங்கமுடியவில்லையே என்று வேதனையுடனும் வரும் சாமான்ய மனிதனுக்கு எதைச் சொல்லி சந்தோஷப்படுத்துவது?
நம்முடைய சபைகளில் வர்க்க வேறுபாடுகளைக் காணும் அற்புதமான நாள் புத்தாண்டு மற்றும் விழாக்காலங்கள் தானே? ஆனாலும் நல்ல பெரிய மனிதர்கள் விழாக் காலங்களில் எளிய மக்களை மனமுவந்து ஆதரிப்பதை மறுக்கமுடியாது.
இந்த சூழ்நிலையில் மனநிலையில் இருந்து நம்முடைய சபைகளின் புத்தாண்டு ஆராதனையைப் பார்ப்போமானால் சில நியாயங்கள் விளங்கும்; பழைய வருட ஆராதனையில் கடந்த வருடத்தின் நன்மைகளையெல்லாம் சொல்லி ஆராதிக்க வைத்து தொடர்ந்து பாவ உணர்வுண்டாகும் வண்ணமாக சில வசனங்களைச் சொல்லி உணர்த்தி இறுதியில் புத்தாண்டுக்கான ஒரு சிந்தனையைத் தூண்டும் வசனத்தை வாக்குத்தத்தம் என்ற பெயரில் தருகிறார்கள்.
சிலுவையையும் பாடுகளையும் தொடாமல் எந்தவொரு போதனையும் இருக்கப்போவதில்லை;ஏனெனில் வாக்குத்தத்தங்களை வசப்படுத்தியதே கிறித்துவின் இரத்தம்தானே?
நம்முடைய சமூக அமைப்பில் இன்னும் சில துவக்கங்களும் வழக்கத்தில் உள்ளது;அவை கல்வியாண்டு மற்றும் பொருளாதார ஆண்டு ; புதிய கல்வியாண்டுக்குள் நுழையும் கல்வி நிறுவனங்களும் மாணவர்களும் எப்படி அதனை எதிர்கொள்ளுகிறார்கள்?
கல்வி நிறுவனங்கள் தங்களது முந்தைய ஆண்டின் சாதனைகளையும் வரும் ஆண்டின் நோக்கங்களையும் சொல்லுகிறது;மாணவர்களும் தங்களை முந்தைய ஆண்டு தரத்துடன் ஒப்பிட்டு இந்த ஆண்டு அவர்களுக்கு முக்கியமான வருடமாக இருக்கும் பட்சத்தில் இன்னும் ஊக்கத்துடன் செயல்பட தீர்மானங்களை எடுக்கிறார்கள்.
அதுபோலவே வருடாவருடம் அரசாங்கங்கள் தங்கள் நிதிநிலை அறிக்கையை தயார் செய்யும்போது வரவு செலவுகளை சரிபார்த்து புதிய கொள்கைகளையும் சலுகைகளையும் திட்டங்களையும் அறிவிக்கிறது; கம்பெனிகளும் அதையொட்டி தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் சம்பள உயர்வையும் பதவி உயர்வையும் அறிவிக்கிறது. இதேபோல சபை செயல்படக்கூடாதா? எந்தவொரு அரசாங்கத்துக்கும் உற்பத்தி கூடத்துக்கும் சமுதாயத்துக்கும் சற்றும் சளைத்ததல்ல,கர்த்தருடைய சபை;அதற்கென்று தெளிவான நோக்கங்களும் திட்டங்களும் தரிசனங்களும் அதனை உத்வேகப்படுத்தும் பணியாட்களும் நிச்சயம் தேவை;
இப்படியே தேவனுடைய மனுஷனான மோசேயிடம் கர்த்தர் தம்முடைய ஜனங்கள் தம்முடைய சந்நிதானத்துக்கு ஒரு வருடத்தில் மூன்று முறை வரவேண்டும் என்றும் பண்டிகையை குடும்பத்துடன் ஆசரித்து புசித்து களித்து சந்தோஷத்துடன் செல்லட்டும் என்றும் சொல்லச் சொல்லுகிறார்;
நல்ல கண்டிப்புள்ள தகப்பன் தான்;தன் பிள்ளையை நன்றாக அடித்துவிடுவார்;ஆனால் அன்று மாலையே அவனை ஓட்டலுக்கு அழைத்துச்சென்று உடனே அவனை சந்தோஷப்படுத்திவிடுவார்;
இப்படிப்பட்ட மாம்ச தகப்பனைவிட பரலோகத்தகப்பன் மேன்மையானவரல்லவா? காரணம் அவர் சிருஷ்டிகர்; தாம் உண்டுபண்ணின ஆவியும் ஆத்துமாவும் தமக்கு முன்பாக சோர்ந்து போகுமே என தவிக்கிறார்;அந்த ஜீவனின் ஒவ்வொரு பலவீனமும் ஏக்கமும் துடிப்பும் சிருஷ்டிகருக்கு நிச்சயம் தெரியும்.
பண்டிகையை இப்படித்தான் கொண்டாட வேண்டும் என்ற நேர்த்தியான பண்டிகைக் கொண்டாட்ட முறைமைகள் யூதருக்குக் கொடுக்கப்பட்டது போல புதிய ஏற்பாட்டு கிறித்தவர்களுக்கு வழங்கப்படவில்லை;இதன் பொருள் என்ன,புதிய ஏற்பாட்டு சபைக்கு பண்டிகை கிடையாது என்று அர்த்தமா?
(தொடருவேன்...)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)