இந்த பூமிக்கு வந்த கர்த்தராகிய இயேசு கிருஸ்துவின் பணி இரு படிகளை கொண்டது. அவரது சுவிசேஷமும் இரண்டு வகையானது. ஒன்று மனிதர்களை மனந்திரும்ப அழைக்கும் அழைக்கப்பட்டவர்களுக்கான சுவிசேஷம் மற்றொன்று தேவ ராஜ்ஜியத்தை பற்றிய தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கான சுவிசேஷம்.
அழைக்கப்பட்டவர்கள் :
லூக்கா 5.31. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. 32. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். மத்தேயு 9.13. பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். மத்தேயு 4.17. அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். மத்தேயு 10.7. போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். 8. வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள். மாற்கு 1.15. காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
ஆனால் அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாக மாறுவதில்லை. அனேகர் தங்கள் ஆன்மிக வாழ்வில் முன்னேறாமல் அதே நிலையிலேயே நின்று விடுகின்றனர். இவர்களை தெரிந்து கொள்ளப்பட்டவர்களாக மாற்றும் அளவுக்கு அனேக இடங்களில், அனேக நேரங்களில் போதிக்கப்படுவதில்லை. அனேக போதனைகள் அழைக்கப்பட்டவர்களுக்கும், தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கும் இடைய இருக்க வைக்கும்படியே போதிக்கபடுகிறது. இதையே இயேசுவும்,
மத்தேயு 20.16. இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் :
தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்றால் தேவனை தேவனுக்காக தேடுகிறவர்கள் / அவருக்காக அவரை சேர்ந்திருக்கிறவர்கள் என அர்த்தமாகும்.
லூக்கா 10.39. அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். 40. மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா)? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். 41. இயேசு அவளுக்குப் பிரதியுத்தமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். 42. தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
இயேசு பிதாவினால் தெரிந்து கொள்ளப்பட்ட அவருடைய தாசன். அவர் இடைவிடாது எப்போதும் பிதாவாகிய தேவனோடு கூடவே இருந்தார்.
மத்தேயு 12.18. இதோ, நான் (பிதாவாகிய தேவன்) தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்.
இயேசுவின் இரண்டாம் வருகையில் எடுத்து கொள்ளப்பட போகிறவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களே
மத்தேயு 24.31. வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
ஊழியம் செய்யும் அனைவரும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாக இருக்க வேண்யது அவசியம்.
மாற்கு 3.14. அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், 15. வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.
நமது தேவைகளுக்காக தேவனை நோக்கி இடைவிடாமல் ஜெபம் செய்ய வேண்டும் என சொல்வதற்கு கீழ்கண்ட வசனத்தை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கான வசனமாகும். அவர்களே தேவனை நோக்கி இரவும், பகலும் அவர்களுக்கு தேவை இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் கூப்பிடுகிறவர்களாயிருக்கின்றனர். இப்படிப்பட்ட தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் ஜெபம் தேவனால் சீக்கிரமே கேட்கப்படும்
லூக்கா 18.6. பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள். 7. அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? 8. சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
இப்படிபட்டவர்களுக்கு தேவன் அவர்கள் ஜெபத்தை கேட்டு நியாயம் செய்வார். இங்கே நியாயம் எனப்படுவது நாம் எதிர்பார்த்திருக்கிற முடிவாக இல்லாமல் கூட இருக்கலாம். நாம் எதிர்பார்ப்பது போலவே நடந்தால் அது நல்லது. இல்லாவிட்டாலும் அது நல்லதே.
ஜெபம் எனப்படுவதற்க்கு தேவனோடு பேசுவது என்பது பொருள். இவ்வாறு சோர்ந்து போகாமல் தேவனோடு பேச வேண்டும் என இயேசுவும், இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் என பவுலும் சொல்லியுள்ளனர். ஆனால் ஜெபம் என்றால் நம்முடைய தேவைகளை கேட்டு பெறுவது என்ற தவறான அர்த்தம் மனிதர்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. அந்த வார்த்தை தன் புனிதமான அர்த்தத்தை இழந்து விட்டது. இவ்வாறு தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் பல வழிகளில் தேவனோடு தொடர்பு கொண்டு இருக்கின்றனர். அவை
1. எப்போதும் தேவனுடைய பிரசன்னத்தில் இருத்தல்
யோவான் 8.29. என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.
2. அவரை எப்போதும் பார்த்து கொண்டு இருத்தல்
சங்கீதம் 16.8. கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம் 62.5. என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். 6. அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.
3. அவரோடு எப்போதும் பேசிக் கொண்டு இருத்தல் 4. அவரது வார்த்தையை எப்போதும் கேட்டு கொண்டு இருத்தல் 5. அவரை சுவாசமாக கொள்ளல் 6. அவரை நுகர்தல்
ஆக தேவனுக்குரிய வாழ்வில் மூன்று படிகள் இருக்கின்றன என அறியலாம். ஒன்று அழைக்கப்பட்ட முதல் நிலை, தெரிந்துகொள்ளப்படும் வழியில் இருப்பவர்களின் மூன்றாம் நிலை, இவை இரண்டுக்கும் மத்தியில் இருக்கும் நிலை (இப்போது அனேக மக்கள் இருப்பது)
வேதத்தின் ஆரம்ப முதல் முடிவு வரை உள்ள வசனங்கள் மூலமாக தேவம் மனிதனுக்கு தர விரும்பிய சுவிசேஷம் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கான தேவ இராஜ்ஜியத்தை பற்றினதே.. வேதத்தில் தேவ ராஜ்ஜியம் என்பது பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. தேவ ராஜ்ஜியம் என்றால் தேவன் அரசாட்சி செய்யும் இடம் என்று பொருள். தேவ இராஜ்ஜியத்தில் இருப்பது என்றால் தேவனோடு இருப்பது அல்லது அவர் அருகாமையில் இருப்பது என்று பொருள்படும். ஆகவே இதை தேவனுடனான ஐக்கியம் என்றும் சொல்லலாம். இதன் பல பெயர்கள்.
1. பரலோக ராஜ்ஜியம் 2. தேவனுடனான ஐக்கியம் 3. கிருஸ்துவுடனான ஆத்துமாவின் கல்யாணம் 3. புது சிருஷ்டியாதல் 4. இடைவிடாமல் ஜெபித்தல் 5. சுயம் அழிதல் 6. தெரிந்து கொள்ளப்பட்டவர்களாக மாறுதல் 7. இடுக்கமான வாசல் வழியே பிரவேசித்தல் 8. தேவனோடு சஞ்சரித்தல் 9. இயேசுவை போல மாறுதல் 10. சிறு பிள்ளைகளை போல் ஆதல் இப்படி பல பெயர்களால் சொல்லப்பட்டுள்ளது. இவைகளை பற்றி எழுதி கொண்டிருந்தால், எழுதி கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அதிகமான இடதத்தில் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அடுத்ததாக தேவ ராஜ்ஜியத்தை பற்றின ஒரு நற்செய்தி என்னவெனில் அது எதிர்காலத்தில் வர வேண்டியதாக இல்லாமல் இப்போது, இங்கேயே இருக்கிறது என்பதே.
லூக்கா 17.20. தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக. தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. 21. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
ஒரு மனிதன் இயேசு கிருஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொள்ளும் அதே நேரத்தில் அவனுக்குள்ளே வாசம் செய்ய தேவன் வந்து விடுகிறார். அவரது ராஜ்ஜியம் நம்முள் ஆரம்பமாகிறது. அவன் இதுரை அனுபவித்திராத சந்தோஷத்தை, சமாதானத்தை பெறுகிறான். ஆனால் நாளாக, நாளாக மனிதனை ஆசைகள் ஒரு பக்கம் இழுக்க, இச்சைகள் ஒரு பக்கம் இழுக்க, துன்பங்கள் ஒரு பக்கம் இழுக்க, உலக கவலைகள் ஒரு பக்கம் இழுக்க அவன் தேவ இராஜ்ஜியத்தை விட்டு விலகி விடுகிறான். எப்போதாவது சில சமயம் மட்டுமே தேவனுடனான தொடர்பை பெறுகிறான். ஆனால் தேவனுடனான தொடர்பு எல்லா நாட்களும், 24 மணி நேரமும் இருக்க வேண்டிய ஒன்று என வேதம் சொல்கிறது.
இவ்வாறு ஒரு மனிதன் தேவனோடு ஐக்கியம் கொண்டிருக்கும் போது அந்த மனிதனுக்கு ஏற்படும் துன்பங்கள், பிரச்சனைகள் எதுவுமே அந்த மனிதனுடையது அல்ல. அது தேவனுடையது. அவரே அவைகளை எதிர் கொள்ளுவார். அந்த மனிதனோ தேவனுக்குள் இளைப்பாறலை அடையலாம்.
மத்தேயு 11.28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 29. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 30. என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.
இங்கே நுகம் என சொல்லப்பட்டுள்ளது தேவனோடு எப்போதும் சேர்ந்திருக்க எடுக்கப்படும் முயற்ச்சிகளே.