நில ஆக்கிரமிப்பு பிஷப் அதிரடி கத்தோலிக்க நிர்வாகத்தின் மீது இதுவரை பெரிதான புகார்கள் எதுவும் வந்ததில்லை எனும் என்னுடைய கருத்தினை மறுஆய்வு செய்யவேண்டுவது போலான செய்தி இது;ஆனாலும் இதிலும் சூழ்ச்சிகள் இருக்கலாம் என்பது என்னுடைய திடமான நம்பிக்கை;பெந்தெகோஸ்தே ஆட்களைவிட இவர்களுக்கு பணஆசை குறைவுதான்..!
அத்துமீறி உள்ளே நுழைந்து பிஷப் இல்லத்தை படமெடுத்த பத்திரிகையாளர்களை பாதிரியார்கள் தாக்கினார்களாம்..!
தசமபாகம் குறித்த மேற்காணும் திரியின் விவாதத்திலிருந்து பிரிந்து வரும் பொருள் இது; இதில் ஆராயப்படும் பொருளானது "கிறித்தவ அறநிலையத் துறை அல்லது கிறித்தவ வாரியம் " தேவையா,என்பதே; கிறித்தவ ஊழிய அமைப்புகளுக்கெதிராக குவியும் ஊழல் புகார்களைக் களைய அரசாங்கமும் இந்து அடிப்படைவாதிகள் நம்மீதான பொறாமையினாலும் காழ்ப்புணர்ச்சியினாலும் அந்தரங்கமாக யோசித்துவரும் காரியமானது கிறித்தவ அறநிலையத் துறை அல்லது கிறித்தவ வாரியம் என்பதாகும்; எப்போது அந்த பேச்சுகள் அடிபடத் துவங்கியதோ அது எப்படியும் வந்தே தீரும்; நாமும் கலெக்ஷன் பாதிக்குமே என்று பரிசுத்த உபவாசக் கூட்டங்களை அதனைத் தடுக்க நடத்துவோம்; போராடுவோம், அதுபோகட்டும்; ஆனால் இது சம்பந்தமான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை நாம் பகிர்ந்துகொண்டால் அதனால் சிலராவது தெளிவடைய வாய்ப்புண்டாகுமே;
அண்மையில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஆந்திர முதல்வர் இராஜசேகர ரெட்டி இதுபோன்ற காரியங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார்; இதற்கு உதாரணமே கிறித்தவ புனிதப் பயணத்துக்கு அரசாங்கம் உதவிசெய்யும் திட்டமாகும்; இந்த திட்டம் இஸ்லாமியருக்கு ஹஜ் பயணத்துக்கு அரசு மானியம் தருவதைப் போன்றது; இந்த முயற்சியினால் அவர் அதிகம் விமர்சிக்கப்பட்டதுடன் அவருடைய மரணமும் இந்து வெறியர்களால் கொண்டாடப்பட்டது நாம் அறிந்ததே;
"கிறித்தவ வாரியம்" என்பது எனது ஜெப விண்ணப்பமல்ல; ஆனால் அதுவே இன்று ஊழியர்களுக்கெதிராக எழுப்பப்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கும்;அதில் ஊழல் இருந்தாலும் அந்த ஊழலுக்கு ஒரு கணக்கும் கட்டுப்பாடும் இருக்கும்; தற்போது அதுவும் இல்லையே;
பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறிய போது நம்முடைய சபைகளை நிர்வகித்து வந்த வெளிநாட்டினர் எப்படிப்பட்ட நம்பிக்கையில் இந்த சொத்துக்களை நம்மிடம் கொடுத்துச் சென்றார்களோ அதே நிலையில் நம்மால் பராமரிக்கமுடிகிறதா, ஏதாவது புதிய சொத்தையோ ஏன் கல்லறை மண்ணையோ நாம் வாங்கியிருக்கிறோமா?
புற்றீசலைப் போல பெருகியிருக்கும் ஏஜி (AG Churches of India) சபைகளுக்காகக் கல்லறை மண் கூட கிடையாது யாருக்காவது தெரியுமா? இவர்கள் சபையைச் சார்ந்த யாராவது மரித்துப்போனால் அப்போது மட்டும் கத்தோலிக்க அல்லது சிஎஸ் ஐ அமைப்பின் உதவி தேவைப்படுகிறது;அதுவும் சுமார் 12 மணிநேரத்துக்குள் அந்த உதவி கிடைத்தாகவேண்டும்; இல்லையேல் எல்லாம் நாறிவிடும்?அதற்காக போலியான ஆவணங்களையும் லஞ்சப்பணத்தையும் கொடுத்து கல்லறை பூமிக்காக அனுமதி வாங்கப்படுகிறது;எல்லோருக்குமா மறுரூபம் அனுபவம் கிடைத்துவிடும்? இது நிதர்சனமான உண்மை;
இந்த போர்களை அருகிலிருந்து உணர்ந்துள்ள நான் புதைத்தாலே சொர்க்கம் என்பது மூடநம்பிக்கையோ என்று யோசிக்கிறேன்; நான் மரித்தால் என்னை தகனம் செய்யவோ (மின் பொறியில்) உடலை தானம் செய்யவோ யோசித்துவருகிறேன்;
இதுபோல பற்பல பிரச்சினைகள் வேகமாக வளர்ந்துவரும் ஆவிக்குரிய சபைகளில் உண்டு; ஆனால் கத்தோலிக்க நிர்வாகம் இந்த காரியத்தில் சிறப்பாக செயல்படுவதாகத் தோன்றுகிறது; சபைகளில் குவியும் பணம் எப்படி செலவிடப்படுகிறது அல்லது எப்படி செலவிடப்படவேண்டும் என்பதற்கான ஒரு சுயபரிசோதனையினை செய்தாக வேண்டும்;
அரசியல்வாதிகளில் கம்யூனிஸ்டுகள் மீதிருக்கும் நம்பிக்கை கூட இந்த சுயாதீன ஊழியர்கள் மேல் இந்த சமுதாயத்துக்குக் கிடையாது என்பது உண்மைதான்; அதனை மீட்டெடுக்கவேண்டுமே தவிர சத்தியத்தை விட்டு விலகிச்செல்லுதல் கூடாது;
நம்முடைய வேதத்தைப் பார்த்தே அனைத்துலக அரசாங்கங்களும் மக்கள் நலத் திட்டங்களை ஏற்படுத்தி நிறைவேற்றுகின்றன; வேறு எந்த மார்க்க புத்தகமும் இத்தனை நேரடியாகவும் தெளிவாகவும் பண நிர்வாகத்தைக் குறித்தும் அதன் நன்னடத்தை விதிகளைக் குறித்தும் இத்தனை தீர்க்கமாகப் போதிக்கவில்லை; இந்நிலையில் போதகர்களாகிய நமக்கு நம்மிடம் கற்றவர்கள் போதிக்கும் நிலையினை அனுமதிக்கக்கூடாது;
ஏற்கனவே சிறுபான்மையினர் என்ற போர்வையில் நாமும் இஸ்லாமிய அமைப்புகளும் அதிக சலுகைகளைப் பெற்று வருவதாக இந்து அடிப்படைவாதிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்; இந்நிலையில் நாம் நம்மை விரைந்து சரிசெய்து கொள்ளாவிட்டால் இஸ்ரவேலரை எப்படி ஆண்டவர் எதிரியிடம் ஒப்புக்கொடுத்தாரோ அதுபோலவே நமக்கும் நேரிடும்;
அப்படியானால் தற்கால சூழலில் உடனடியாக செய்யவேண்டுவது என்ன?சபைகள் பெருகுவதை அதாவது வீங்குவதைத் தடுக்கவும் அவை சிறுசிறு குழுக்களாக உடையவும் வேண்டும்; தற்போதய சூழல் ஊடகங்களின் மாயையான போதையினால் விளைந்த போலியான வளர்ச்சியாகும்; இது வளர்ச்சியே அல்ல, வீக்கம்... இந்த நோய் குணமாக ஒவ்வொருவனும் தன்னளவில் தேவ சமூகத்தில் நின்று யோசிக்கவேண்டும்;
"ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்." (உபாகமம்.Deu 16:17) என்று கூறும் தேவன் அது இனிமேல் தேவையில்லை என்று சொன்னாரா?
எனவே காணிக்கை அல்லது தசமபாகம் என்பது நம்முடைய குணாதிசயம் சம்பந்தமானதாகவும் அவர்தம் சமூகத்திற்கு வந்துசெல்லும் ஆத்துமாவின் திருப்தியுணர்வு சம்பந்தமானதாகவும் இருக்கிறது;
சகேயுவை கர்த்தர் சந்தித்தபோது தான் குற்ற உணர்விலிருந்து விடுபட ஈகையை பிணையாக வைக்கிறான்; விருந்து சமைக்கிறான்; எனவே வாங்குபவன் அல்லது வாங்கும் பீடத்தின் நிலையைத் தவிர்த்து கொடுப்பவன் நிலையிலிருந்து பார்த்தாலும் கொடுப்பதே பாக்கியமாக இருக்கிறது; இதன்படி " இட்டார்க்கு இட்ட பலன் " என்பது விளங்கும்;
அடுத்து சிறுசிறு குழுக்களாக ஒத்த கருத்துடையவர்கள் பிரிந்து செயல்படும் போது ஓரளவுக்கு நேர்மையும் வெளிப்படையான தன்மையையும் எதிர்பார்க்கலாம்; அவர்கள் ஆண்டவருக்காகச் செய்ய நினைக்கும் காரியங்களுக்குத் தேவையான பணத்தேவைக்கு என்ன செய்வார்கள்? அப்போது மீண்டும் தசமபாகமாகவோ காணிக்கையாகவோ மீண்டும் பணமே மைய காரியமாகும்;
எனவே நம்முடைய பணத்தை எப்படி செலவிடுகிறோம் என்பதில் நமக்கு தெளிவில்லாதபோது அது ஒரு பொதுவான சுயாதீனமுள்ள அமைப்பினால் கண்காணிக்கப்படுவதையும் தணிக்கை செய்யப்படுவதையும் அனுமதிப்பது மட்டுமே நம்முடைய நேர்மைக்கான அக்கினி பரீட்சையாகும்; அதிலுள்ள சாதக பாதகங்கள் என்ன,அல்லது வேறு என்ன தீர்வுகள் உண்டு என்பதை ஆலோசிக்கவேண்டும்; ஏனென்றால் வாங்குபவரல்ல, கொடுப்பவரே இதில் முக்கியம்;
கிறித்தவன் ஈகையில் தாழ்ந்துபோனால் அல்லது ஊழல்களால் சலித்துப்போய் கொடுப்பதை நிறுத்தினால் அவனிடமிருக்கும் கர்த்தருடைய பணத்தைப் பங்கு போட சாத்தான் நிறைய திட்டங்களை வைத்திருக்கிறான்; ஆம்,ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையிடமும் தேவனுக்கான ஒரு பங்கு அவனுடைய சம்பாத்தியத்திலிருந்து இருந்தாக வேண்டும்;
உன்னிடமிருக்கும் 100 ரூபாயும் எனக்கே சொந்தம், ஏனெனில் அதனை சம்பாதிக்கும் பெலனாக நானிருக்கிறேன், என்பதை நீ நம்பி ஏற்றுக்கொள்வதன் அடையாளமாக அதிலிருந்து ஒரு சிறுபங்கை என்னிடம் கொண்டு வா என்கிறார், சிருஷ்டிகரும் மீட்பருமான சர்வவல்ல தேவன்;
அது விதவையின் வீட்டிலிருந்த கொஞ்ச மாவோ அல்லது வனாந்தரத்திலிருந்த சொற்ப அப்பங்களோ "என்னிடம் கொண்டு வா " என்பதே கர்த்தருடைய மாறாத- மாற்றப்பட முடியாத பிரமாணமாகும்;
நண்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை முன்வைக்க உற்சாகப்படுத்துகிறேன்...
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)