"துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், "(சங்கீதம்.1:1)
"சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா." (சங்கீதம்.150:6)
மேற்கண்ட இரு வசனங்களும் சங்கீதங்களின் புத்தகத்தின் முதல் மற்றும் கடைசி வசனங்களாம்; இவற்றில் ஒரு ஒற்றுமையைக் காணலாம், இவ்விரண்டுமே ஆறு வசனங்களைக் கொண்டவை;
மேலும் இந்த வசனங்களூடாக நாம் தியானிப்போமானால் மேலும் சில சத்தியங்களை அறியலாம்;கர்த்தர் மனிதனை சிருஷ்டித்த ஆறாம் நாளிலேயே மிருகங்களையும் உண்டாக்கினார்; இந்த காரியம் அதிகமாக கவனிக்கப்படுகிறதில்லை;
மனிதனும் மிருகங்களும் ஒரே நாளில் உண்டாக்கப்பட்டிருந்தாலும் மனிதனைக் குறித்த தேவனுடைய விசேஷித்த நோக்கமாவது தேவன் தம்மை சார்ந்திருக்கவும் தம்மைத் துதிக்கவும் வேண்டும் என்பதே;
தேவனால் படைக்கப்பட்ட மனிதன் தேவனை மறந்து சுயசார்புடையவனாக வாழும்போது அவன் ஒரு மிருகம் போலாகிறான்;மிருகத்தின் சுபாவங்கள் அவனுக்குள் வருகிறது;
எனவே தேவனுடைய ஆலோசனை என்னவென்றால் உன்னை மிருக குணமுள்ளவனாக்கக் கூடிய சூழ்நிலைகளைத் தவிர்த்துவிடு;அதிலே நடவாதே, நடந்தாலும் நிற்காதே, நின்றாலும் உடகாராதே, உட்கார்ந்தாலும் எழுந்து, விட்டுவிட்டு ஓடு; தேவனுடைய சமூகத்தை நோக்கி ஓடு, அங்கே தங்கியிரு; ஆராய்ச்சி செய், அதையே மேன்மையாக எண்ணி நாடுவாயானால் நான் அளிக்கும் நன்மையினால் நீ திருப்தியாவாய்;
இந்த எண்ணத்துடனே நாம் தேவனை ஆராதிப்போம், நமக்குள்ளிருக்கும் சுவாசம் தேவன் தந்தது,நம்முடைய சுவாசம் வேறே,மிருகங்களின் சுவாசம் வேறே; கர்த்தர் நம்மை துதிப்பதற்காகவே சிருஷ்டித்திருக்கிறார்.
(இது "அடைக்கலமே உமதடிமை நானே.." பாடலைப் பாடிவிட்டு ஆராதனைக்கு முன்னுரையாக சொன்னது; அடுத்து ஆரம்ப ஜெபத்துக்குப் பிறகு "நன்றியால் துதிபாடு.." பாடலைப் பாடிவிட்டு ஜெப நேரத்தில் வெளிப்பட்ட வார்த்தையான சங்கீதம்.65:9 ஐ வாசித்து...)
"தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்."(சங்கீதம்.65:9)
மண்ணான மனுஷனும் தேவனுடைய பிள்ளையும்
மேற்கண்ட வேத வசனத்தில் இரு அர்த்தங்கள் உண்டு;முதலாவது எழுத்தின்படி இது பூமியைக் குறிக்கும்; மற்றொன்று மண்ணான மனுஷனைக் குறிக்கும்;எழுத்தின்படியான பொருளை நாம் வசனத்தின் மூலமே அறியலாம்;
மண்ணான மனுஷன் என்ற பொருளில் நாம் முதலில் மனிதர்கள், அடுத்து தேவனுடைய பிள்ளைகள்; மற்ற மனிதர்களைக் காட்டிலும் நமக்கு எந்த விசேஷமும் வித்தியாசமுமில்லை; ஒரே வித்தியாசம் மற்றும் விசேஷம் நாம் தேவனை அறிந்து அவரை மகிமைப்படுத்த அறிந்திருப்பதால் பிள்ளைகள் என்கிற அதிகாரத்தைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறோம்;
மற்றபடி பசி, துக்கம், வருத்தம், கண்ணீர், தவிப்பு போன்ற அனைத்து உணர்வுகளும் மற்ற மனிதர்களைப் போலவே நமக்கும் உண்டு;
பொதுவாக நாம் அறிந்தவண்ணம் தேவன் இஸ்ரவேலரைத் தம்முடைய ஜனமாகத் தேர்ந்தெடுத்து பல சலுகைகளைக் கொடுத்து விசேஷமாக நடத்துவதைப் போல நினைக்கிறோம்;ஆனாலும் இந்த பசி, துக்கம், வருத்தம், கண்ணீர், தவிப்பு, சஞ்சலம், பிரசவம், மரணம் உட்பட அனைத்தும் அவர்களுக்கும் பொதுவானது;
அப்படியானால் நம்மை ஆண்டவர் அழைத்த நோக்கம் என்ன?நமக்கு வெளிப்பட்ட தேவ அன்பானது நம்மூலம் இந்த உலகமனைத்துக்கும் சென்று சேரவேண்டும் என்பதே; மற்றபடி இந்த உலக மக்களுக்கும் நமக்கும் எந்த பெரிய வித்தியாசமுமில்லை;
ஆனாலும் நம்முடைய தேவைகளை அறிந்து நம்மை விசாரிக்கும் தேவனுடைய அன்பை நாம் உணர்ந்திருந்தால் நாம் பொறுமையுடன் காத்திருப்பதுடன் ஒன்றுக்கும் கவலைப்படாமல் தேவனைத் துதித்து மகிழுவோம்; கவலைப்பட்டால் சாதாரண உலகமனிதர்களைப் போலாகி துதிப்பதை நிறுத்திவிட்டு மிருகத்தைப் போலாகிவிடும் ஆபத்து உண்டு; எனவே பரிசுத்த பேதுரு இவ்வாறு கூறுகிறார்,
"அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்." (1.பேதுரு.5:7)
இப்படிப்பட்ட மனநிலையுடன் நாம் நமது ஆவிக்குரிய வாழ்க்கை நடத்துவோமானால் நம்முடைய குடும்பங்கள் ஆசீர்வாதமயமாகவும், ஆரோக்கியமயமாகவும், சமாதான மயமாகவும் விளங்கும்;
ஆசீர்வாதமயமோ, ஆரோக்கியமயமோ, சமாதானமயமோ இடையிலே ஒரு (சாத்தானின்?) கால் முளைக்குமானால் எல்லாம் மாயமாகிவிடும்; இதனால் ஆசீர்வாத மாயமாகவும், ஆரோக்கிய மாயமாகவும், சமாதான மாயமாகவும் மாறி பெருந்துன்பம் வந்துசேரும்; இன்றைக்கு நாம் ஊடகங்களில் கேள்விப்படுவதெல்லாம் மாயமானவைதானே? இந்த மாயங்களைவிட்டு நாம் விலகவேண்டுமாம்;
"யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே."(சங்கீதம்.24:3,4)
மேற்கண்ட வாக்கியத்தில் "மாயை" வார்த்தையானது இந்த உலகவாழ்வில் நாம் சந்திக்கும் நிலையற்றதும் அதிமுக்கியமானது போல பாவிக்கப்படுவதுமான காரியங்களைக் குறிக்கிறது; இதன்படி நிலையற்றவற்றின் மீதான நம்முடைய ஈர்ப்புகளைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.
தேவன் சர்வபூமிக்கும் தேவனாக இருக்கிறார்
"தேவரீர் பூமியை விசாரித்து" என்ற வார்த்தையினால் என்ன அறிகிறோம்? இது தேவனுடைய உலகளாவிய ஆளுமைக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்;
நாம் வேதத்தில் வழக்கமாக வாசிக்கும்வண்ணமாக ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியான இஸ்ரவேல் மக்கள், இஸ்ரவேல் தேசம், சீயோன், எருசலேம் போன்ற வார்த்தைகள் இங்கே குறிப்பிடப்படாமல் "பூமியை" என்று கூறுவதால் இந்த வார்த்தையில் அவர் தம்மை நம்பியிருக்கும் அல்லது தம்முடைய மகிமையை அறிந்து தொழுதுகொள்ளும் தம்முடைய மக்களை மாத்திரம் விசாரித்து காப்பாற்றாமல் முழு உலகத்தையுமே அவரே பராமரிக்கிறார் என்ற சத்தியத்தை அறியமுடிகிறது;மாத்திரமல்ல,
"பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான சமுத்திரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்தரவு அருளுகிறீர்." (சங்கீதம்.65:5 )எனும் வசனத்தினால் நாம் அறிவதென்ன?
அவர் நமக்கு மட்டுமல்ல, அவருடைய மகிமை வெளிப்படாத வேற்று இன மக்களுக்கும் தேவனாக இருக்கிறார்; அவரை "இன்னார்" என்று அறிந்து தொழாவிட்டாலும் இறைவன், கடவுள், பகவான், பரம்பொருள், ஆல்மைட்டி (Almighty), சுப்ரீம் பவர் (Supreme power) என்றெல்லாம் யாரை சொல்லுகிறார்களோ அவரே நாம் அறிந்து தொழும் தேவனாக இருக்கிறார்; நாம் அவரை அறிந்து அவருடைய செயல்களை உணர்ந்திருப்பதனால் அவருடைய பிள்ளைகள் என்கிற பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்;
அவருடைய பிள்ளைகள் என்ன செய்யவேண்டும்? இன்னும் அநேகரைப் பிள்ளைகளாக்கி தேவ சந்ததியைப் பெருகச் செய்யவேண்டும்; அதுவே நாம் பெற்றிருக்கும் மேலிட கட்டளையாக்கும்; நாம் இரண்டு விதத்தில் தேவனுக்கு உறவுகளாக்கும்; ஒன்று ராஜாவாகிய அவருடைய் குடிமக்கள்; இரண்டு அவருடைய பிள்ளைகள்;
இன்றைக்கு நம்முடைய தேசத்தில் பல தலைவர்கள் தங்கள் வாரிசுகளை அரசியலுக்குக் கொண்டு வந்து ஆட்சிபீடத்தில் அமர்த்தியிருக்கிறார்கள்; இதன்படி அந்த வாரிசுகளுக்கு இரு உரிமைகள் உண்டு;ஒன்று அவர்கள் வீட்டிலே அவர்கள் அந்த தலைவரின் பிள்ளைகள், இரண்டு பொதுவாழ்விலே அவர்கள் அமைச்சர்களாகவும் தலைவர்களாகவும் இருக்கிறார்கள்;
இதில் பிள்ளைகள் என்ற உறவுதானே விசேஷமானது?ஆம், அந்த பிள்ளைகள் என்ன தவறு செய்தாலும் அந்த தலைவர் தன்னுடைய செல்வாக்கினால் அவற்றையெல்லாம் மூடி மறைக்கிறார்; ஆனாலும் அந்த பிள்ளையின் தவறான நடத்தையினால் தகப்பனுக்கு அவமானம் நேரிடுமல்லவா?
ஆம், தேவனுடைய பிள்ளைகளாகிய சாதாரண குடிமக்களைவிட அதிக பொறுப்புடனும் தியாக உணர்வுடனும் நடந்துகொள்ளவேண்டும்; நம்முடைய தேவன் நீதிபரராக இருப்பதால் அவர் இந்த உலகத் தலைவர்களைப் போல கண்டும் காணாமலிருக்கவோ மூடிமறைக்கவோ மாட்டார் என்பது நிச்சயம்.
உலகத்தார் தமக்கு மேலிருக்கும் விசேஷித்த இறைசக்தியைக் குறித்த அறிவுடையவர்களாக இருக்கிறார்கள் என்று பார்த்தோம்; இதைக் குறித்து இரண்டு வேதவாக்கியங்களில் நாம் அறியலாம்,
"எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்." (அப்போஸ்தலர்.17:23)
"அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து: நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்."(யோனா.1:6)
இவ்விரண்டு வேத வசனங்கள் மூலம் நமக்குத் தெரியவருவது என்னவென்றால் இந்த உலக மக்களுக்கு பொதுவாகவே சர்வ வல்ல தேவன் மீது நம்பிக்கை இருக்கிறது;அவர் "இன்னார்" என்ற தெளிவே இல்லை; இது தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு ஒரு பெரிய சிலாக்கியமாகும்; ஏனெனில் தேவனை அறிமுகப்படுத்தவோ நிரூபிக்கவோ அவசியமில்லை; அந்த வேலையை அவரே பார்த்துக்கொள்ளுகிறார்.
பவுலடிகள் இவ்வாறு கூறுகிறார்,"தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை." (ரோமர்.1:19,20)
அப்படியானால் தேவனுடைய பிள்ளைகள் என்ற விசேஷித்த அந்தஸ்துடன் இந்த உலகில் வாழும் நாம் அந்த தகுதியின் மீது மாத்திரமே அதிக கவனம் செலுத்த அழைக்கப்படுகிறோம்; அந்த தகுதியானது வெளிப்படும் கிரியைகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும்; இதன் மூலம் அநேகர் போதனையின்றி ஆதாயப்படுத்தப்படுவர்.
பரிசுத்த ஆவியானவரும் தம்மை பரிசுத்தம் பண்ண நம்மை அழைக்கிறார்; நாம் எப்படி சர்வ வல்லவரை பரிசுத்தம் பண்ணமுடியும்?அதுதான் நமக்கு முன்னுள்ள சவால்;
"சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக." (ஏசாயா. 8:13)
நமக்குள்ளிருக்கும் அவருடைய மகிமையை உணர்ந்து அதற்கேற்ப நாம் நடந்துக்கொள்ளும்போது அவர் மகிமைப்படுவார்; இதனைச் சுருக்கமாகச் சொன்னால் "உனக்குள்ளிருக்கும் என்னை கவனி, எனக்குள்ளிருக்கும் உன்னை கவனிப்பேன் " என்கிறார், ஆவியானவர்;
லாரிகளின் பக்கவாட்டிலுள்ள மின்கலத்தின் மீது இவ்வாறு எழுதப்பட்டிருக்கும், "தினமும் என்னை கவனி " என்று;ஆம், நம்முடைய உள்ளான மனுஷனைப் போஷிப்பதில் அன்றாடம் கவனம் செலுத்தினால் நம்முடைய வெளிப்புறமாகிய உலக வாழ்வு சிறப்பாக அமைந்திருக்கும்; இது ஒரு இராஜ இரகசியமாகும்;
நமக்குள் அவர் இருப்பது போலவே அவருக்குள் நாம் இருக்கிறோம்; இது எப்படி சாத்தியமாகும்?அசாத்தியமானதை சத்தியத்தினாலே சாத்தியமாக்கலாம்; அசத்தியத்தினாலே சாத்தியமானதும் அசாத்தியமாகும்; சத்தியம் அசத்தியமானால் சாத்தியம் அசாத்தியமாகும், சத்திய்ம் சத்தியமானால் அசாத்தியமும் சாத்தியமாகும்;
தேவன் நம்மோடும் நமக்குள்ளும் இருக்கிறார், நாம் தேவனுடனும் தேவனுக்குள்ளும் இருக்கிறோம்;நமக்குள்ளிருக்கும் தேவனை நாம் சந்தோஷப்படுத்தினால் நம்மோடு இருக்கும் தேவன் நம்முடைய அனைத்து தேவைகளையும் சந்திப்பார்; தேவனுக்குள் இருக்கும் நாம் அநேகருக்கு அவரை வெளிப்படுத்தினால் அநேகரை தேவனோடு சேர்க்கமுடியும்;
தேவகிருபையில் பெலப்படுவோம்; கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக..!
( இது இன்று (19.09.2010) எங்களுடைய குட்டியூண்டு வீட்டு சபையில் தியானித்தது..!)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)