கத்தோலிகர்கள் தவர மற்ற கிருத்துவ பிரிவிலுள்ளவர்கள் உருவ வழிபாடு செய்வது கிடையாது. இவ்வாறு உருவ வழிபாடு செய்பவர்கள் தங்கள் வேண்டுதல்களை தங்கள் எதிரிலிருக்கும் சிலை கேட்கிறது என்றும் அந்த சிலையிடம் தங்கள் வேண்டுதலை சொல்கிறோம் எனவும் நம்புகின்றனர். இஸ்லாமியர்களின் மசூதிகளும் காபா இருக்கும் திசை நோக்கி அமைக்கப்பட்டிருப்பதால் தங்கள் வேண்டுதலை காபாவுக்கு முன்பாக வைக்கின்றனர். ஆனால் கிருத்துவர்கள் உருவ வழிபாடு செய்வதில்லை இருந்தாலும் அவர்களும் வேண்டுதல் செய்கின்றனர்.
இவ்வாறு எதிரில் ஒரு உருவமோ அல்லது ஒரு குறிப்பிட்ட அமைப்போ இல்லாமல் வேண்டுவது என்பது சுலபமான காரியம் அல்ல. இவ்வாறு எதிரில் எந்த அமைப்பும் இல்லாமல் வேண்டினால் வேண்டுபவர் பைத்தியமாக கூட மாறும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கிருத்துவர்கள் அப்படி வேண்டினாலும் அவர்கள் பைத்தியமாவதில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் ஜெபத்தை கேட்கும் ஒரு சக்தியை உணர்ந்திருக்கின்றனர். தேவனும் தன்னை உருவமாக வழிபட கூடாது என்று சொல்லியிருப்பதனால் அவ்வாறு தன்னை வணங்குபவர்களுக்கு அவர்கள் வேண்டுதலை கேட்க நான் இருக்கிறேன் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது அவர் கடமையாயிருக்கிறது.
இவ்வாறு தேவனை நோக்கி ஆராதிக்கும் போதும் அல்லது ஜெபிக்கும் போதும் கிருத்துவர்கள் தங்கள் உடலில் ஏற்படும் ஒரு மாறுதலை ஒரு சக்தி ஓட்டத்தை உணர்கின்றனர். அல்லது தன் ஜெபத்தை கேட்கும் ஒரு உணர்வு நிலை உள்ள ஒரு சக்தி தங்கள் கூட இருப்பதை உணர்ந்திருக்கின்றனர். இவ்வாறு இல்லாவிடில் வேண்டுபவர் பைத்தியமாக மாற வாய்ப்புண்டு.
அனேக கிருத்துவர்கள் அறிந்திருக்கும் இந்த உணர்வு பற்றி வேதாகமத்தில் எங்கேயும் சொல்லப்படவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். வேதத்தில் இல்லாத அனுபவங்கள் பொய் என சொல்லும் அனேகர் இதை மட்டும் ஒன்றும் சொல்வதில்லை இந்த அனுபவத்தை குறை சொல்லும் தைரியமும் அவர்களுக்கு இல்லை. ஏனெனில் இந்த அனுபவம் இல்லாவிடில் உருவமில்லா தேவனை உணர முடியாது. யாரும் இந்த அனுபவத்தை பற்றி அதிகமாய் பேசுவதும் இல்லை. இந்த கட்டுரை இந்த அனுபவத்தை பற்றியதே.
பரிசுத்த ஆவியின் தொடுதல் என்றும் (பல பெயர்களில்) அழைக்கப்படும் இந்த உணர்வு, ஒரு இடத்திலுள்ள தேவ பிரசன்னம், ஒரு போதகருடைய தேவ பக்தியின் ஆழம் முதலியவற்றை அளக்கும் அளவு கோலாகவும் உள்ளது. இந்த அனுபவத்தை பற்றி எனது அனுபவங்கள் : வாசகர்களும் தங்கள் கருத்தை, அனுபவத்தை பதிவிட்டால் நலமாயிருக்கும்.
1. இயேசுவை இரட்சகராக ஏற்று கொண்ட பிறகே இந்த தொடுதல் ஏற்படுகிறது.
2. தேவ பக்திக்கான காரியங்களில் ஈடுபடும் போது மட்டுமே இந்த தொடுதல் ஏற்படுகிறது.
மற்ற நேரங்களில் ஏற்படுவது அபூர்வம்.
3. இந்த உணர்வை ஒரு மனிதன் அவனாகவே ஏற்படுத்தி கொள்ள முடியாது. அதாவது
இந்த உணர்வை பெறுவது என்பது நம் கையில் இல்லை. சில சமயம் அதிகமாய் இருக்கும், சில சமயம் இருக்காது. சில சமயம் தொடர்ந்து இருக்கும், சில சமயம் விட்டு விட்டு வரும்.
4.பாடல்கள் பாடும் போது இந்த உணர்வு அதிகமாக இருப்பது போல தோன்றுவதுண்டு.
5. பாடல்களின் வேகத்தை கூட்டும் போது இந்த உணர்வு அதிகமாவதுண்டு
6. துதி செலுத்துதல், ஜெபம், செய்தி கேட்பது போன்ற நேரங்களிலும் இந்த தொடுதல் இருப்பதுண்டு
7. சபைக்கு சபை, போதகருக்கு போதகர், நேரத்துக்கு நேரம் இந்த தொடுதலில் வித்தியாசம் இருப்பதுண்டு.
8. பாவ உணர்வோ, தேவனிடத்தில் வெறுப்போ இருந்தால் இந்த தொடுதலை உணர முடிவதில்லை.
9. இந்த தொடுதல் அதிகமாக உள்ள சபை உயர்ந்த சபை, இந்த தொடுதல் அதிகமாக எந்த போதகர் முன்னிலையில் கிடைக்கிறதோ அவர் தேவ பக்தி மிகுந்தவர் என முடிவு செய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது.
10. தேவனே தொடும், இறங்கும் என இயல்பாக வேண்டாமல் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு தேவனை கட்டாயப்படுத்துவது போல வேண்டும் போதும், அவ்வாறு வேண்டுவதற்கு நாமும் முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு உடன்படும் போதும் (ஊழியர் அதற்கு மேல் இறுக்கம்) அதிகமாக இந்த தொடுதலை உணர வாய்ப்புள்ளது.
இரட்சிக்கபடும் போதே ஆவியானவர் வந்து விடுகிறாரே அப்புறம் எப்படி இறங்கும், தொடும் என வேண்டும் போது மறுபடி எப்படி அவர் வருவார்? என சில ஊழியர் கேட்க, அவ்வாறு வேண்டும் ஊழியர்கள் அதற்கு சரியாக பதில் சொல்லாமல் போக, இவர் அவரை போலி ஊழியர் என்று தாக்க அவர்கள் இவரை போலி என்று சொல்ல,இவ்வாறு வேண்டும் போது அதிகமாக தொடுதலின் உணர்வை பெற்றவர்கள் எது சரி என்று புரியாமல் விழிக்க மொத்தத்தில் இது குழப்பமான விஷயமாக இருக்கிறது. (இதற்கு நடுவில் என்னை போன்றவர்கள் இன்னும் அதிகமாக குழப்புகிறார்கள்) இது பற்றி எனது கருத்து
பரிசுத்த ஆவியின் செயல்பாட்டை புரிந்து கொள்ள, முதலில் கர்த்தரை நோக்கி வேண்டும் போது என்ன நடக்கிறது என புரிந்து கொள்ளுவது அவசியம். நம்முடைய விலாசம் கர்த்தரை நோக்கி சரியாக அமைந்திருக்கும் எனில் ஒரு இரட்சிக்கப்பட்ட விசுவாசி பல படிகள் வழியே பரலோகத்தோடு தொடர்பு கொள்ளுகிறான். அவை
மனிதனின் மனம்-மனிதனின் ஆவி-பரிசுத்த ஆவியானவர்-தேவ பிரசன்னம் அல்லது தேவ ஆவி-பரலோகம்
இரட்சிக்கபடாத ஒருவருக்கு மனிதனின் ஆவி-பரிசுத்த ஆவியானவர் என்னும் பகுதிகள் கிடையாது.
இதை செல் போனில் பேசுவதற்கு ஒப்பிடலாம் செல் போனில் இன்னொரு மனிதரிடம் தொடர்பு கொள்ளும் போது இரு இடங்களுக்கும் இடையில் உள்ள ஆயிரக்கணக்கான செல் போன் டவர்கள் இரு செல் போனையும் அதே வினாடியே இணைக்கின்றன.
இவ்வாறு மனிதன் தேவனோடு இணைய அவனில் உள்ள ஆவி என்னும் பகுதி தூண்டப்பட வேண்டும். அவ்வாறு தூண்டப்பட தேவனுக்குரிய பக்தியான எண்ணங்களோ அல்லது செயல்களோ அல்லது உணர்வுகளோ உடையவனாய் அந்த மனிதன் இருக்க வேண்டும். அதாவது அந்த மனிதன் காம வசப்படும் போது ஆவி என்னும் பகுதி தூண்டப்படுவதில்லை அதற்கென தனி பகுதி உள்ளது அதுவே தூண்டப்படுகிறது. பொறாமை கொள்ளும் போது இரத்தம் கொதிக்கிறது அதற்கென உள்ள பகுதி தூண்டப்படுகிறது.
இவ்வாறு ஆவி என்னும் பகுதியை தூண்ட அனேகர் உபயோகிக்கும் முறை உணர்ச்சி வசப்படுதலாகும். அதாவது பாடல்களை பாடி பரவசம் என்னும் அதிக பட்ச உணர்வை அடைந்து அதன் மூலம் தொடர்பு கொள்வது அல்லது இறுக்கமாக ஜெபித்து அதன் மூலம் தொடர்பு கொள்வது.
இவ்வாறு பாடல்களை பாடி பரவச நிலை அடைந்து அதன் மூலம் தொடர்பு கொள்வதை எதற்கு ஒப்பாக சொல்லலாம் எனில், சிம்சோன் கோபமடையும் போதெல்லாம் அவனில் இறங்கி அவனை பலப்படுத்தின தேவ ஆவிக்கு சமமாக சொல்லலாம். தேவ ஆவி கோபபடும் போதெல்லாம் தன் மேல் இறங்குகிறது என்பதினால், தேவ ஆவி எப்போது வேண்டுமோ அப்போதெல்லாம் கோபப்பட வேண்டும என முடிவு செய்வது எவ்வளவு அபத்தமானதோ அது போலவே இதுவும்.
இவ்வாறு பாடல்களை பாடுவதினால் மட்டுமே மனிதர்களை தேவனோடு தொடர்பு கொள்ள வைக்கும் ஊழியர்கள் தாங்கள் வேறு வழிகளில் மனிதனை தேவனோடு இணைக்க அருகதையற்றவர்கள் என்பதை தெரியப்படுத்துகின்றனர்.
ஒரு மனிதன் எண்ணம், உணர்வு, செயல் அனைத்தாலும் தேவனோடு இணைந்திருக்க வேண்டும். இவ்வாறு இல்லாமல் தேவ அனுபவம் உணர்வோடு மட்டுமே சம்பந்தபட்டது எனில் அந்த மனிதன் தன் வாழ்வில் ஏற்படும் பல்வேறு நிகழ்ச்சிகளாலும் தேவனோடு சேர்ந்திருக்க முடியாதவனாயிருக்கிறான்.
அதாவது தேவனோடு உடனான தனது தொடர்புக்கு தன் உணர்வை நம்பியிருந்த சிம்சோன் தன் காமத்தை வெல்ல முடியவில்லை (எண்ணம், செயல்கள் மூலமாக தேவனோடு இணைந்திருக்க முடியவில்லை). இருந்தாலும் உணர்வின் மூலமாக தேவனை தொடர்பு கொள்வது ஒன்றுமில்லாததை விட சிறந்தது. அதற்கும் சில பலன்கள் உண்டு.
பாடல்களின் மூலமாக தேவனோடு தொடர்பு கொள்வதனால் உண்டாகும் நன்மைகள் :
1. மகிழ்ச்சியாய் இருப்பதினால் அனேகர் சபைக்கு ஆர்வமுடன், தவறாமல் வருகின்றனர்.
2. அனேக ஏழைகளும், பிரச்சனை உள்ளவர்களும் தங்கள் நிலையை, துன்பத்தை விட்டு மகிழ்ச்சியாக இருக்கின்றனர். உலகத்தின் காரியங்களில் இவர்களுக்கு இவ்வளவு இன்பம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.
3. ஒரு சிலர் உடல் முழுவதையும் இயக்கி இந்த அனுபவத்தால் நிறைந்து உடலின் சோர்வுகளிலிருந்து விடுதலை அடைகின்றனர்.
4. இதனால் தேவனோடு நெருங்கியுள்ளோம் என்ற உணர்வு உண்டாகிறது.
இத்தகைய ஆராதனையை ஒரு சிலர் எதிர்க்கின்றனர். சிலர் மேலே ஒரு படி போய் இது ஆவிக்குரிய காரியம் கிடையாது என்றும் சொல்கின்றனர். ஆனால் கலந்து கொண்டவர்களோ ஒரு மகிழ்ச்சியை, தொடுதலை அனுபவிக்கின்றனர். மக்கள் விரும்பும் இந்த காரியத்துக்கு ஒரு முடிவு கட்டி அதன் மூலம் வருகிற கொஞ்ச நஞச மக்களையும் வர விடாமல் செய்யும் காரியமே இது. இவர்கள் சொல்வது இவ்வாறான கூட்டங்களில் மக்களை நிரப்பும் ஆவி அசுத்த ஆவி என்று. இதனால் அனேகர் குழப்பம் அடைந்துள்ளனர்.
இது போன்ற கூட்டங்களில் கவனிக்க வேண்டியது இயேசுவின் நாமம் மகிமைப்படுத்தபடுகிறதா என்பதே. அவ்வாறு மகிமைப்படுத்தும் பட்சத்தில் இறங்கும் ஆவி பரிசுத்த ஆவியாகத்தான் இருக்க முடியும். எந்த மனிதனும் தன் பெயரில் கையெழுத்து போட மற்றொரு மனிதனை விட மாட்டான். மனிதனே விடாத போது, தன் பெயர் சொல்லி நடக்கும் கூட்டங்களில் இன்னொரு ஆவி செய்லபடுவதை தேவன் எப்படி அனுமதிப்பார்.
அவ்வாறு அனுமதித்தால் அனுமதிக்கிற கடவுளின் வல்லமைதான் எத்தகையது?
ஆனால் இது போன்ற கூட்டங்களில் இறங்கும் ஆவி அசுத்த ஆவி என்று வாய் கூசாமல் அனேகர் சொல்கின்றனர். (கலந்து கொண்டவர்கள் மகிழ்ச்சி, அமைதி பெற்று கொண்டாலும்)
இது போன்ற ஆராதனையை மனிதர்களை பிடிக்கும் கருவியாக பயன்படுத்தி அதன் மூலம் தேவ பக்திக்குரிய செய்திகளை மக்கள் மனதில் ஏற்றுவது என்பது மிகவும் சரியானதாகும்.
இது போன்ற ஆராதனை முறை தெளிப்புக்கும், செய்தி சொல்வது விதைப்புக்கும் சமமாக செய்தி ஒன்று படித்தேன். இவ்வாறு விதைப்பும், தெளிப்பும் சரியான விகிதத்தில் இருக்கும் போது பயிர் செழித்து வளரும் என்பதில் ஐயமில்லை.
உணர்வுகளின் மூலமாக தேவனோடு இணைய முயற்ச்சிக்கும் வழிகளால் ஒரு பிரச்சனையுண்டு. அது என்னவெனில் அந்த உணர்வோடே எப்போதும் இருக்க முடியாது. அதாவது நாம் தேவ ஆவி பெற எப்போதும் அதிக வேகமாக பாடலை பாடிக் கொண்டே இருக்க முடியாது. நாம் போகும் இடமெல்லாம் வேகமாக பாடி, இசைக் கருவிகளை இயக்கும் குழுவினர் கூடவே வந்து கொண்டிருக்க முடியாது. இவ்வாறு பரவச நிலையால் மட்டுமே தேவனோடு உறவு கொள்பவன் தன் வாழ்வில் துன்பம் வரும் போது அல்லது பாவ நினைவுகள் வரும் போது அவைகளை வெற்றி கொள்ள முடியாமல் போக வாய்ப்புண்டு.
மேலும் துன்பம் வரும் போது இந்த பரவச நிலையிலும் கலந்து கொள்ள முடியாது.
மனதில் கஷ்டத்தோடு சபைக்கு போகும் சிலர் அங்கு நடக்கும் பரவச ஆராதனையில் கலந்து கொள்ள முடியாமல் ஒதுங்கி நிற்பதும்,மிகவும் மகிழ்ச்சியாய் சபைக்கு சென்றால் கண்களில் கண்ணீர் வரும்படிசோகமாக ஊழியர் பேசுவதும் நாம் சந்திக்கும் காரியமாகும்.
ஏற்கனவே இருக்கும் ஆவியானவரை மீண்டும் எப்படி வாரும், தொடும், இறங்கும் என சொல்ல முடியும் என அனேகர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இவ்வாறு வேண்டும் போது அனேகர் ஒரு அதிக வல்லமையை உணர்கின்றனர். மக்களின் அனுபவமானது, சிலரின் நியாயமான கேள்விக்கு எதிர்மாறாக உள்ளது. இது போன்ற சமயங்களில் அனுபவமே உண்மையானது. அதாவது ஆவியானவர் இறங்குகிறார், தொடுகிறார் என்பதே உண்மை.
அது எப்படி என்று சிலர் கேட்கலாம். வெகு நாள் கழித்து சிறு வயது நண்பனை பார்க்கிறேன் என்று வைத்து கொள்வோம். ஆனால் எனக்கு அந்த நண்பனுடைய பெயர் மறந்து விட்டது. அதாவது எனக்குள்ளே அந்த பெயர் இருக்கிறது. ஆனால் எனக்குள்ளே இல்லை. அதாவது எனக்குள்ளே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அந்த பெயர் வர வேண்டியது அவசியமாகிறது. இதே போலவே ஆவியானவரும், மனிதனின் சாதாரண வாழ்க்கைக்கு தேவைப்படாத ஆவி என்னும் பகுதியில் இருப்பவராவார். அவரை ஆத்துமாவில் அறிய முடியாத போது வாரும், இறங்கும் என வேண்டுவது தவறில்லை. அதாவது ஆவி என்னும் பகுதியிலுள்ளவரை ஆத்துமாவில் அறிய எடுக்கப்படும் முயற்ச்சியே அவ்வாறு வேண்டுவது.
சிலர் இறுக்கமாக இருந்து தேவனை கட்டாயப்படுத்துவது போல் வேண்டி தேவ வல்லமையை அதிகமாக பெற முயற்சிக்கின்றனர். இதை எதற்கு சமமாக சொல்லலாம் எனில் எட்டாத உயரத்தில் இருக்கும் ஒன்றை பெற எகிறி குதிப்பதற்க்கு சமமாக சொல்லலாம். இவ்வாறு இறுக்கமான நிலையில் அதிக நேரம் இருக்க முடியாது, இதன் மூலமும் சில நேரம் நாம் வேண்டுவதை பெற்று கொள்ள முடியும்.
இதைப் பற்றி என்னுடைய மேலும் சில அனுபவங்கள்.
1. ஒரு தடவை ஒரு ஊழியருடைய கூட்டத்தில் கலந்து கொண்டேன். அவரும் உண்மையான ஊழியராகவே தெரிந்தார். ஆனால் தேவ ஆவியின் தொடுதல் இல்லை. கூட்டம் முடிந்த பிறகு ஏன் இப்படி என யோசித்து கொண்டே சென்று விட்டேன். ஆனால் மறுனாள் முழுவதும் எந்த காரணமும் இல்லாமல் ஒரு சந்தோஷம் என்னை நிரப்பியிருந்ததை உணர்ந்தேன். .
2. அதே போல ஒரு தடவை விருந்தினராக வந்த ஒரு ஊழியர் சரியில்லாதவர் போல் தெரிந்தார். ஆனாலும் தேவ ஆவியின் தொடுதலை உணர முடிந்தது. அது ஏன் என்று யோசித்த போது ஒவ்வொறு ஞாயிறும் தன்னை தேடி வரும் மக்களை ஏமாற்ற விரும்பாமல் அவர்களுக்காக தேவன் அந்த சபையின் தேவ பக்தியை கணக்கில் கொண்டு தன் தொடுதலை அளித்தார் என உணர முடிந்தது.
3. பொதுவாக ஒரு சபையிலுள்ள மக்களின் தேவனுக்குரிய பயபக்தி மற்றும் அந்த சபையை வழினடத்தும் ஊழியரின் தேவனுக்குரிய பயபக்தி இவைகளை பொறுத்தே ஆவியானவரின் தொடுதல் இருக்கிறது.
இந்த தொடுதலை இருவகையாக சொல்லலாம். ஒன்று ஒருவன் தன் தனிப்பட்ட அனுபவமாக பெறும் தொடுதல் இது அவன் தன் தேவனுக்குரிய வாழ்வில் எவ்வளவு முன்னேறியுள்ளான் என்பதை பொறுத்தது. இத்தகைய தொடுதலை அவன் தனி ஜெயம் செய்யும் போதோ அல்லது பக்திக்குரிய காரியங்களை செய்யும் போதோ. அல்லது வேத வார்த்தையை வாசிக்கும் போதோ பெற முடியும்.
மற்றொன்று மற்றவர்களின் முன்னிலையில் பெறும் தொடுதல். அனேகர் ஒரு சில ஊழியரின் முன்னிலையில் இந்த தொடுதல் அதிகமாக இருப்பதை உணர்ந்துள்ளனர். ஆனால் மற்றவர்களின் முன்னிலையால் வரும் தொடுதலினால் ஒருவனுக்கு அவ்வளவாக பயனில்லை. ஏனெனில் அவன் தொடுதலை பெற வேண்டும் என்பதற்காக அந்த ஊழியர் எப்போதும் அவன் முன்பாக நின்று கொண்டிருக்க முடியாது அல்லது அந்த ஊழியர் அவனோடு கூடவே இருக்க முடியாது. தேவ பக்தியின் ஆரம்ப கட்டங்களில் இது போன்ற தொடுதல் நமக்கு உதவியாயிருக்கலாம். ஆனால் தேவ பக்தியில் முன்னேறுவதன் மூலமாக இத்தகைய தொடுதலை நாமே பெற்றுக் கொள்ள வேண்டும்.
(தொடரும்)
-- Edited by SANDOSH on Monday 6th of September 2010 08:43:41 PM