Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மரித்தும் பேசப்படும் நீதிமான்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
மரித்தும் பேசப்படும் நீதிமான்..!
Permalink  
 


தேவனுடைய மனுஷனான டிஜிஎஸ் அவர்கள் ஊழியர்களுக்கும் ஊழியங்களுக்கும் விளம்பரமில்லாமல் நிறைய உதவி ஒத்தாசைகளைச் செய்திருக்கிறார்கள்,என்பது அநேகர் அறியாத காரியமாகும்;

இப்படியே நான் தளத்தில் உலாவந்தபோது சற்றும் எதிர்பாராமல் நான் வாசிக்க நேர்ந்ததொரு ஜீவனுள்ள சாட்சியினை தளநண்பர்கள் கவனத்துக்குக் கொண்டு தருகிறேன்...

ஷாலோம் மிஷனெரி ஊழியப்பாதையில்  இயேசு அழைக்கிறார் ஊழிய ஆசிர்வாதம்

 

JC_Rev_DGS1.jpg

 

உடைந்த உள்ளங்களை ஆற்றித் தேற்றும் ஊழியம்

1992-ஆம் ஆண்டு ஜனவரி இறுதி வாரத்தில் ஒருநாள் நானும், என் மனைவியும் ஊழியப்பாதையில் அன்பு மகளை இழந்து, பாடுகள், கஷ்டங்கள் மத்தியில் (இருதயம் நொறுங்குண்டு) எங்களை உண்மை உள்ளத்துடன் தேற்றுவார் யாராவது உலகில் உண்டோ என்று எண்ணியபடி சென்னையில் வந்திருந்த வேளையில் ஜெபகோபுரம் என்ற இயேசு அழைக்கிறார் அலுவலகத்திற்கு முதன் முறையாக உள்ளே சென்றோம்.  அங்கிருந்த ஊழியரிடம் நாங்கள் குஜராத் மிஷனெரிகள் என்று கூறி தினகரன் ஐயாவைக் கண்டு ஜெபிக்க முடியுமா? என்றோம்.  அன்றையதினம் பார்வையாளர் தினமாக சகோ. டாக்டர். பால் தினகரன் ஒவ்வொருவருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.  நாங்களும் முதல் முறை அவர்களை சந்தித்து சில நிமிடங்கள் எங்களைப்பற்றி, ஊழியங்களைப்பற்றி கூறினோம்.  எங்களுக்காக ஜெபிக்கக் கேட்டுக்கொண்டோம்.  கண்களில் கண்ணீருடன் சொந்த சகோதரனுக்கு வந்த இழப்பைப்போல உருக்கமாக ஜெபித்தது மட்டுமல்லாமல் ஜெபிக்கும்போது “Lord I am unworthy to Pray for thy servant” என்று கூறின வார்த்தை என்னை உடைத்தது.  அவரது மனதுருக்கமும் தாழ்மையுமான ஜெபம் மூலமாக தேவன் எங்களை பெலப்படுத்தினார்.  நான்கு நாட்களில் குஜராத் பணித்தளம் வந்தடைந்தோம்.  என்ன ஆச்சரியம்! ரூ.500 டிராப்ட் வெகுமதியுடன், அன்பின் கடிதம் மற்றும் ஊழியத்திற்கு பயன்படுத்த இலவசமாக 10 வீடியோ கேசட்டுகளும் அனுப்பி வைத்தார்கள்.  இதுதான் இயேசு அழைக்கிறார் ஊழியத்துடன் அறிமுகமான ஆரம்பம்.

வல்லமை ஊழிய பயிற்சி

1992 ஜுன் மாதம் நடைபெற்ற இயேசு அழைக்கிறார் வல்லமை ஊழிய பயிற்சி முகாமிற்கு இருவரும் விண்ணப்பம் செய்தோம்.  அதில் கேட்கப்பட்ட கேள்விகள் பலவற்றிற்கு இல்லை என பதில் எழுத வேண்டியிருந்தது.  இயேசு அழைக்கிறார் பத்திரிகை, இளம் பங்காளர், காருண்யா, தொலைகாட்சி போன்ற ஊழியத்தில் பல பிரிவுகளில் ஒன்றுமே நாங்கள் பங்கெடுத்தது கிடையாது. எனவே எங்களுக்கு இடம் கிடைக்காது என நினைத்தோம்.  ஆனால் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் அவர்கள் எங்கள் இருவரையும் தெரிந்தெடுத்து முகாமில் பங்கெடுக்கச் செய்தார்கள்.  அந்த முகாமில் ஆவியின் ஒன்பது வரங்களும், கனிகளும் பற்றி ஆழமான சத்தியங்களையும், இயேசுவின் அன்பையும், மனதுருக்கத்தையும், பரிசுத்த ஆவியின் வல்லமையுடன் ஊழியங்கள் செய்வதையும் கற்றுக் கொண்டதுடன் விசேஷித்த ஆவியானவரின் அபிஷேகத்தையும் பெற்றுக்கொண்டோம்.  அந்த நாள் முதல் சுகமாக்கும் வரங்கள் பெற்று, ஊழியத்தில் அற்புத அடையளங்கள் மூலமாக திரளான ஆத்துமாக்கள் வருவதைக் கண்டோம்.

எங்களை மட்டுமின்றி 1998 அக்டோபர் மாதத்தில் மத்தியபிரதேசத்தில் இண்டோர் பட்டிணத்தில் நடைபெற்ற வல்லமை பயிற்சி முகாம் 23-ம் அணியில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் மத்தியில் படிப்பறிவு குறைவான, ஞானம் குறைவான, எளிய ஊழியர்களாகிய நம்முடைய 40 பீல் சுதேச ஊழியர்களை (விண்ணப்பித்த அனைவரும்) ஏற்றுக்கொண்டு பயிற்சி கொடுத்தார்கள்.  அந்த 40 சுதேச ஊழியர்கள் நட்சத்திரங்களைப் போல அடுத்த இருவருடங்களில் பெரிய எழுப்புதலை, பீல் மக்கள் மத்தியில் அற்புத, அடையாளமான ஊழியங்கள் மூலமாகக் கொண்டு வந்துள்ளார்கள்.  தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

ஊழியர்களை நேசிக்கும் தகப்பன்

கடந்த 15 வருடங்களும் அவர்களே வருடந்தோறும் பிள்ளைகளுடன் குடும்பமாக ஒருமுறை அல்லது இருமுறை சந்திக்க வாய்ப்பளித்துள்ளார்கள்.  அநேக முறை ஊழியத்தைக் குறித்துப் பேசுவதைவிட எங்கள் நலனைப்பற்றி, சுகத்தைப்பற்றி பேசுவார்கள்.  பிள்ளைகளைப் பற்றி அதிக அக்கறைகொண்டவர்கள்.  ஊழியர்களின் துக்கங்களை விசாரித்து ஏற்றுக்கொண்டு ஜெபித்து, ஆறுதல் தருவது அவர்களுக்கு தேவன் தந்த கிருபையாகும்.  எங்களது ஷாரோன் பெண் குழந்தை இறந்தவுடன் இரண்டு ஆண்பிள்ளைகளுக்கு மேல் வேண்டாம் என தேவன் நினைத்தாரோ என எங்களுக்குள் இருந்த ஆசை அகன்றுவிட்டது.  ஆனால் அன்பு ஐயா அவர்கள் முதன்முறை எங்களுக்காக ஜெபித்தபோது மறுபடியும் அந்தக் குழந்தையை கட்டாயம் தந்து ஊழியர்களை பரவசப்படுத்தும் என்று சொன்னபொழுது அவர்கள் கண்களிலிருந்து கண்ணீர் எங்கள் மீது விழுந்தது. ஜெபத்தைக் கேட்ட தேவன் 10 மாதங்களில் ஷெக்கினா என்ற அழகான குழந்தையைத் தந்து ஆறுதலையும் சந்தோஷத்தையும் தந்தார்.

நான் சுகவீனப்படும்போது, குறிப்பாக ஒரு முறை காலில் அடிபட்டு நடக்க கஷ்டமானபோது அவர்கள் ஜெபத்தைக் கேட்ட நான் பெலவீனம் எனக்கா, அவர்களுக்கா என்று திகைத்துவிட்டேன்.  எந்த நேரத்தில் தொலைபேசியில் அவர்களோடு பேசும்போதும் பிள்ளைகளை அன்புடன் விசாரிப்பதும், பிள்ளைகளை நேரில் காணும்போது தன் பேரப்பிள்ளைகளைப் போல முத்தமிட்டு அன்பு பாராட்டுவதும் என்னவென்று சொல்வேன்! “தம்பி, நன்கு சாப்பிடவேண்டும், தேவையானபோது ஓய்வு எடுக்க வேண்டும், என்னைப்போல உடம்பைக் கெடுத்துவிடாதே” என தனிப்பட்ட ஆலோசனைகளைக் கூறுவார்கள்.  எனக்காக, குடும்பத்திற்காக தரும் காணிக்கைகளை மனைவிக்குத்  தெரிவிக்காமல் ஊழியத்திற்கே கொடுத்துவிடுவேன்.  ஒருமுறை அவர்கள் ஜெபிக்கும்போது தீர்க்கதரிசனத்தில் “மகனே ஊழியத்திற்குக் கொடுப்பதை ஊழியத்திற்கு, ஆனால் உனக்கு என நான் கொடுப்பதை உனக்காக. நான் ஊழியர்களின் சுகத்தையும் நலனையும் வரும்பும் கர்த்தர்”  என கூறினார்கள்.  எனக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவ உலகில் புண்பட்ட அநேக தேவ ஊழியர்களை ஆவியானவரின் ஏவுதலின்படி தேற்றுவதற்காக, தேவன் கொடுத்த ஆவிக்குரிய தகப்பன் அவர்கள்தான்.

1999-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஊழியப்பாதையில் பணநெருக்கத்தின் மத்தியில் உடைக்கப்பட்டவனாய், மாடியில் சென்று கண்ணீருடன் ஆண்டவரே கடந்த 8 வருடங்கள் இந்த ஊழியத்தை உண்மையாகவும், எனக்காக, குடும்பத்திற்காக, பிள்ளைகளுக்காக ஒன்றும்கூட இச்சிக்காமல் ஊழியம் செய்தேனே பின்னும் ஏன் இந்த நெருக்கம் என ஜெபித்தேன்.  தேவன் ஆறுதல் தந்தார்.  அடுத்தநாள் காலை வந்த தபாலில் தினகரன் ஐயா கடிதம் வந்தது.  அதில் நானும் என் மகன் பால் தினகரனும் ஜெபித்து ஆவியானவர் ஏவுதலின்படி இந்த காணிக்கையை உங்கள் சொந்த செலவிற்கென அனுப்பியுள்ளேன் என எழுதி ரூ,1 இலட்சத்திற்கான டிராப்டை வைத்திருந்தார்கள்.  பலமுறை நாங்கள் சோர்வுற்றபொழுதெல்லாம் சொந்த பிள்ளைகளுக்கு உதவுவதுபோல எங்களுக்கு உதவும் தகப்பன் உள்ளம் கொண்டவர்கள் அவர்கள்.

 JC_Rev_DGS3.jpg JC_Rev_DGS.jpg 

ஊழியப்பாதையில் தேவ ராஜ்யத்தைக் கட்டுவதில் பங்கு.

ஊழியப்பாதையில் எதிர்ப்புகள் வரும்போதும் சரியான ஆலோசனை வழங்கி ஜெபித்து தைரியம் கொடுப்பார்கள்.  ஒருமுறை திடீரென பேசிக்கொண்டிருக்கும்போது மத்தியபிரதேசம் போப்பாலில் போதகர். அனில் மார்டீன் என்ற போதகர் மிகவும் கண்ணியமான அரசியல் செல்வாக்கு மதிப்பு பெற்றவர்.  அவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி சிறப்பாக கடிதமும் நான் கேட்காமலேயே தந்தார்கள்.  ஏன் என எனக்குப் புரியவில்லை.  ஆறு மாதங்கள் கழிந்தது. மத்தியபிரதேசம் ஜாபுவா மாவட்டத்தில் நாங்கள் பயங்கரமான எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாத வேளையில் போதகர். அனில் மார்டீன் மூலமாக முதலமைச்சர் மற்றும் DGP  அவர்களைச் சந்திக்கவும், மத்தியபிரதேசத்தில் மாநில அளவில் ஊழியர்களை M.P. State Christian Association உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவும் தேவன் கிருபை செய்தார்.  ஊழியங்கள் வளரும்போது ஆலோசனைகளையும் வழங்கி முன்னேற்ற காரியங்களையும் பகிர்ந்துகொள்வார்கள்.  எதிர்காலத் திட்டங்களைக் கேட்டு அறிவதிலும் ஊழியர்களின் தேவைகளை சந்திப்பதிலும் வாஞ்கை காட்டுவார்கள்.

 

JC_Rev_pal.jpg

 

JC_Rev_DGS2.jpg

 
     

சிறிய வாடகை வீட்டிலிருந்து சொந்த பங்களா.

பலமுறை ஊழியத்திற்கு தேவைகள் இருக்கும்போது “இயேசு அழைக்கிறார்” ஊழியத்திலிருந்து ஆசீர்வாதமாக நிதி உதவிகள் வருவதுண்டு.  குறிப்பாக நாங்கள் ஜாலோத்தில் ஊழியம் ஆரம்பித்த இரண்டாம் வருடத்தில் ஊழியங்கள் வளரவே திரு. சாந்திலால் மெர்வானி என்ற சிந்தி வியாபாரியுடைய பெரிய பங்களாவை ரூ.2,500/- மாத வாடகையில் மூன்று வருடங்களாக தங்கவும், ஊழியங்களை வளரச் செய்யவும் தேவன் கிருபை செய்தார்.  ஊருக்கு வெளியில் இருக்கும் இந்த பங்களாவில் கொள்ளையடிப்பவர்கள் அடிக்கடி வந்தபடியால் வீட்டுக்காரர் பழைய வீட்டிற்குச் சென்றுவிட்டார்.  திடீரென வீட்டை விற்பனை செய்யவேண்டும் என்ற நிலை வந்தபோது ரூ.6 லட்சத்திற்கு நாங்கள் அதை வாங்க தீர்மானித்து ரூ.4 லட்சம் வரை கிடைத்த நிதி உதவியை அவர்களிடம் கொடுத்துவிட்டோம்.  காலதாமதமானபோது வீட்டு உரிமையாளர் “இன்னும் மூன்று நாளில் மீதி ரூ.2 இலட்சம் தரவில்லையெனில் வீட்டை காலி செய்ய வேண்டும்.”  என்று கடுமையாக கூறினார்.  கண்ணீருடன் “ஆண்டவரே இந்த காட்டு ஜனங்களுக்காக எங்களை அனுப்பினீர் இந்த இடத்தில் நீர் கொடாவிட்டால் யார் எங்களுக்கு கொடுப்பார்கள்” என்று ஜெபித்தேன்.  அப்பொழுது தொலைபேசி மணி அடித்தது.  சோர்வுடன் சென்று எடுத்து “ஹலோ” என கூறினேன்.  என்ன ஆச்சரியம் மறுபுறத்தில்  “யாரு தம்பி, தேவதாஸா?” என்று தினகரன் ஐயா அவர்கள் பேசினார்கள்.  ஊழியங்களைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் விசாரித்துவிட்டு அவர்களே “அந்த கட்டிடத்தை நீங்கள் வாங்கிவிட்டீர்களா?” என்று கேட்டார்கள்.  விவரங்களை கண்ணீருடன் கூறினேன். 2 லட்சம் ரூபாயை நானே தருகிறேன் என்று சொன்னார்கள்.  நான் 2 லட்சம் ரூபாய் இருந்தால் போதும் சமாளித்து விடுவேன் என்று சொன்னேன்.  காட்டிற்குள் இருந்து சமாளிக்கும் பையனைப் பாரு என்று சிரித்துக் கொண்டே கவலைப்பட்டாதே என்று கூறி ஜெபித்து ஆசீர்வதித்தார்கள்.

அடுத்த நாளே மீதி தேவையான பணத்தையும் மற்றும் பதிவு செய்வதற்கான பணத்தையும் சேர்த்து ரூ.2,50,000/- க்கு டிராப்டை கொரியரில் அனுப்பி வைத்தார்கள். பெற்றுக்கொண்டதும் பணத்தைக் கொடுத்து வீட்டை  Sharing Love Mission  என்ற பெயருக்கு  பதிவு செய்யும்படி தேவன் கிருபை செய்தார்.  பணத்தைப் பெற்றுக்கொண்ட சிந்தி மனிதர் மெய்யாகவே நீங்கள் வணங்கும் ஆண்டவர் ஜீவிக்கிறார். என்றும் உங்கள் ஆண்டவர் என்னை அழகான வீட்டைக் கட்ட வைத்து குறைவான விலையில் உங்களுக்கு கொடுக்க வைத்துள்ளார் என்றும் சாட்சி கூறினார்.

தூத்துக்குடியில் எங்கள் குடும்பத்திற்காக தேவன் கொடுத்த வீடு

நாங்கள் எங்கள் பிள்ளைகளின் விடுமுறை நாட்களில் பணித்தளத்திலிருந்து தமிழகம் வருவதுண்டு.  ஆரம்பநாட்களில் ஆறுமுகநேரி, நாசரேத்தில் என்னுடைய மாமியார் அவர்கள் வீட்டில்தான் தங்குவது வழக்கம். அதன்பின் தூத்துக்குடி அலுவலகத்திற்கு எதிரே உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தோம்.  அப்பொழுது அதன் பக்கத்தில் உள்ள பழைய கட்டிடத்துடன் உள்ள ஒரு இடம் விலைக்கு வந்தது.  வீட்டுக்காரரும், அருகில் உள்ள அனைவரும் நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.   அப்போது D.G.S. தினகரன் ஐயா அவர்களிடம் இதற்காக ஜெபிக்கும்படி கூறினோம்.  அவர்களும் ஜெபித்துவிட்டு “கடந்த 26 ஆண்டுகள் தேவனுடைய ஊழியத்தை உண்மையும் உத்தமத்துடன் செய்த உங்களுக்கு கர்த்தர் இந்த வீட்டைத் தருகிறார்.  பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.  இந்த பழைய வீட்டிலேயே ஒரு சில அறைகளை கட்டி அதில் குடியிருக்கலாம் என நாங்கள் நினைத்தோம்.  ஆனால் D.G.S. தினகரன் ஐயா “பழைய வீட்டை உடைத்துவிட்டு எல்லாமே புதிதாக கட்டிவிடுங்கள் ஆண்டவர் தேவைகளை சந்திப்பார்” என்று கூறினது மாத்திரமல்ல வீடு கட்டுவதற்கான செலவில் மிகப்பெரிய பங்கை கொடுத்து உதவி செய்தார்கள்.  எங்கள் குடும்பத்தை நேசித்த எங்கள் ஆவிக்குரிய தகப்பன் D.G.S. தினகரன் ஐயா அவர்கள் செய்த உதவியை எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது.

 JC_Rev_pal_1.jpg JC_bunglow.jpg 

இவற்றை தேவ நாமம் மகிமைக்காக, சாட்சியாக எழுதுகிறேன்.  எங்கள் மீதும் பீல் ஆதிவாசி மக்கள் மீதும், ஊழியத்தின் மீதும் அளவு கடந்த அன்பு உள்ளம் கொண்ட  Dr. D.G.S. தினகரன் ஐயா, அம்மா, மற்றும் அன்பு சகோதரர் பால் தினகரன் அவர்கள் குடும்பத்திற்காகவும் இயேசு அழைக்கிறார் ஊழியர்கள் அனைவருக்காகவும் தேவனைத் துதிக்கிறோம்.  அத்தோடு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை அவர்களுக்கு கூறிக்கொள்கிறோம்.  அவர்கள் மறைமுகமாக செய்யும் பணிகள் எத்தனையோ உண்டு.  அதன் பலனாக ஆசீர்வதிக்கப்பட ஊழியர்களும் தேவபிள்ளைகளும் அநேகர் உண்டு.

“இயேசு அழைக்கிறார்” ஊழியங்களுக்காக எழும்பியுள்ள சுமார் 600 தன்னார்வ பிதிநிதிகளில் ஒரு குடும்பமாக நாங்கள் எங்கள் பகுதியில் பணிசெய்து முதல் முப்பது பிரதிநிதிகளில் ஒருவராக செயல்பட்டு வருவது எங்களுக்கு மகிழ்ச்சியும், தேவ ஆசீர்வாதமுமாகும்.  இயேசு அழைக்கிறார் ஊழியங்களுக்காகவும், Dr.  தினகரன் ஐயா குடும்பத்திற்காகவும், சகோ. பால் தினகரன் குடும்பத்திற்காகவும் தேவனைத் துதிப்போம்.

எங்களுக்குள் ஊற்றப்பட்ட கல்வாரி அன்பு

சிலுவையண்டையில் இருந்த இயேசுவின் தாயார் மரியாளையும், அன்பான சீஷரான யோவானையும் ஆண்டவர் இயேசு அன்பினால் இணைத்தது போல் எங்கள் குடும்பத்தை Dr. D.G.S. தினகரன் ஐயா அவர்கள் குடும்பத்துடன் இணைத்து வைத்தார் என்றுதான் சொல்வோம்.  2007-ம் ஆண்டு மே மாதம் காருண்யா இயேசு அழைக்கிறார் கூடுகையில் எங்கள் இருவரையும் மேடையில் அழைத்து டாக்டர். பால் தினகரன் அவர்கள் என் அன்பு தந்தை Dr. D.G.S. தினகரன் அவர்களுக்கு “சொந்த பிள்ளைகள் மாதிரி” பிள்ளைகளேதான் இவர்கள் என்று அறிமுகம் செய்த போது எங்கள் கண்களில் கண்ணீர் புரண்டு ஓடியது.

தகப்பனை போல் உள்ளம்

நாங்கள் அப்பாவை தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்தாலும் அவர்களே மாதம் ஒரு முறையாவது குஜராத், தாகோத் தொலைபேசியில் தொடர்புகொள்வார்கள்.  அடிக்கடி தம்பி உபவாச நாட்கள் தவிர மற்ற நாட்களில் ஒழுங்காக சாப்பிடு, நன்றாக ஓய்வெடு, இரவு பிரயாணங்கள் ஜீப்பில் போகவேண்டாம் பிள்ளைகளின் பெயரைச் சொல்லி டைட்டஸ், ஷாலோம், குட்டிநாய் என்று செல்லமாக ஷெக்கினாவை கேட்டு விசாரிப்பார்கள்.  ஒவ்வொரு வருடமும் பிள்ளைகள் மேற்படிப்பு வரவர கேட்காமலே கல்விக்காக உதவிகள் செய்வார்கள்.

அன்பு மகள் ஷெக்கினா பெரியவளாகியபோது நேரில் வருகை தந்து அவளை ஜெபித்து ஆசீர்வதித்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்கள். “தாத்தா எனக்கு தங்க வளையல்தான் வேண்டும்” என ஜெபிக்கிறேன் என்று ஷெக்கினா பதில் கூற ரூ.25,000/-  அவளிடம் கொடுத்து 4 வளையல்கள் வாங்கி இன்றே போட்டுக்கொள் என்று கூறி ஆசீர்வதித்தார்கள்.  மூத்த மகன் டைட்டஸ் Lyola College-ல் B.B.A விண்ணப்பித்தபோது தினமும் விசாரிப்பார்கள் இடம் கிடைத்ததா? ஹாஸ்டலில் இடம் கிடைத்ததா? என்று கரிசனத்துடன் விசாரிப்பார்கள்.  ஷாலோம் காருண்யாவில் படிப்பதற்கு இடமும், நிதி உதவியும் செய்து அவனையும் ஆசீர்வதித்தார்கள்.

ஒருமுறை நான் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து கால் பலவீனமாகிவிட்டது.  கோவை KMCH  ஆஸ்பத்திரியில் 2 நாட்கள் கழித்து ஆப்ரேஷனுக்கு நாள் குறித்துவிட்டார்கள்.  காருண்யாவிற்கு ஐயா வந்தபோது அவர்களை கண்டு ஜெபித்தேன்.  அவர்கள் கண்களிலிருந்து கண்ணீர் என் காலில் பட்டது.  அவர்கள் கரங்களை என் காலில் வைத்து ஜெபித்தார்கள்.  ஜெபித்து முடித்து வெளியில் வந்தபோது ”சடக்” என்ற சத்தம் காலில் கேட்டது.  அவ்வளவுதான் ஆப்ரேஷன் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போயிற்று.  இன்று வரை தேவன் பெலன் தந்துள்ளார்.

கோத்ராவில் ரயில் பெட்டி எரிப்பு, கலவரம் குறிப்பாக குஜராத்தில் பூகம்பம் வந்த நாட்களில் அடிக்கடி கூப்பிட்டு கரிசனையாக விசாரிப்பார்கள்.  அன்பு ஐயா அவர்கள் மரித்த அன்று வந்தபோது சகொ. பாண்டியன் அவர்கள் ”என் கரங்களை பிடித்து கூறினார்கள் தம்பி தேவதாஸ், வஹிதா எப்படியிருக்கிறீர்கள்.  மரிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு குஜராத் தொலைபேசி தொடர்பு வேலைசெய்யாத காரணத்தினால் உங்களோடு பேச முடியாமல் துடிதுடித்துப்  போனார்கள்.  பின் 3-வது நாள் உங்கள் போன் வந்தபோதுதான் அப்பா என்று சந்தோஷமடைந்தார்கள்” என்று கூறினார்கள்.

ஊழியப்பாதையில் நெருக்கப்படும் போதெல்லாம்

நாங்கள் 16 வருடங்கள் கடந்து வந்த பாதைகளை நினைக்கும் போது எத்தனையோ எதிர்ப்புகள், கலவரங்கள் மத்தியில் தினகரன் ஐயாவிடம் தான் தொடர்புகொள்வோம்.  உடனடியாக தொடர்புகொள்வார்கள்.  சில நேரங்களில் கிடைக்கவில்லையெனில் இரவு 10 மணிக்கு மேல் வுட அவர்களே கூப்பிட்டு விசாரிப்பார்கள்.  எப்படிப்பட்ட பிரச்சினைகள், எதிர்ப்புகளாக இருந்தாலும் அவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும் அதன்பின் சமாதானமாகிவிடும்.  அதுமட்டுமன்றி ஆலோசனைகளையும் தருவார்கள்.

எங்களுக்கு மட்டுமல்ல நூற்றுக்கணக்கான போதகர்கள், பிள்ளைகள் திருமணம், படிப்பு, மருத்துவ உதவி என்றும் அநேக ஆலயங்களுக்கு கூரை அமைக்க இலட்சங்களை அள்ளித் தந்தார் அன்பு உள்ளம் கொண்ட தினகரன் ஐயா அவர்கள்.  ஐயா அவர்களின் இறுதி ஆராதனையில் நாங்கள் கலந்துகொண்டபோது எத்தனையோ ஊழியர்கள் பெற்ற நன்மைகளை, ஆறுதல்களை, ஆலோசனைகளை பெற்றவர்கள் கதறினார்கள்.  இஸ்ரவேலுக்கு அக்கினியும், இரதமுமாயிருந்தவர்  இந்த தேசத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல வட இந்தியாவிலும்  ஆசீர்வதிக்கப்பட்ட ஊழியர்தான் எத்தனை!

மிஷனெரி பணியில் நாங்கள் சபைகளை என்ன செய்ய வேண்டும்? பிச்சனைகளில் என்ன ஆலோசனைகளை கேட்கிற போதெல்லாம் வெறுமென ஜெபிக்காமல் உபவாசித்து தேவசித்தத்தை சொல்லுவார்கள்.  அல்லது கடிதம் எழுதுவார்கள்.  எங்களைப் போன்ற ஊழியர்களுக்கு எலியாவாக! எலிசாவாக  ஒரு தேவனுடைய தீர்க்கதரிசியாக இருந்தார்.

இயேசு அழைக்கிறார், காருண்யா ஊழியங்களுக்கு பல கோடிகள் தேவைப்பட்டாலும் பிறர் நலன் கருதி தசம பாகத்திற்கு மேலாக எடுத்து உபசரிக்கும் இந்த மகனுக்காக தேவனைத் துதிப்போம்.  மற்றவர்கள் துன்பப்படுத்தி பேசினாலும் இவர் காதில் விழுவதில்லை.  எத்தனை துன்பங்கள் எழுந்தாலும் அவைகளை காண்பதில்லை. இயேசுவின் அன்பும், மனதுருக்கம்தான் தெரியும்.  தன்னை பகைத்தவர்கள் ஜெபத்திற்காக வந்துவிட்டால் பிள்ளை மனம்போல் பகிர்ந்து கொடுக்கும் உள்ளமல்லவா?  அன்பு தினகரன் ஐயா அவர்கள் ஆயிரமல்ல, இலட்சமல்ல, கோடிகளில் ஒருவர்.  தேவன் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல உலகத்திற்கு தந்த பெரிய ஈவாகும்.

தினகரன் ஐயா ஒரு தீர்க்கதரிசி

1992-ம் வருடத்திலிருந்து ஷாலோம் ஊழிய ஆரம்ப காலத்தில் இருந்து அன்பு தினகரன் ஐயா அவர்கள் ஜெபித்து கூறின தீர்க்கதரிசனங்கள் ஒவ்வொன்றும் அப்படியே நிறைவேறிக்கொண்டே வருகிறது.  எத்தனையோ காரியங்கள் கூறிக்  கொண்டே போகலாம்.

நாங்கள் மிஷனெரி ஊழியம் ஆரம்பித்த நேர்த்தில், சுவிசேஷத்தை மட்டும் கூறி பீல் மக்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்தோம்.  பின்பு உழியத்தில் அற்புதங்கள், அடையாளங்கள் பெருகவே, நாம் நல்ல பெரிய கூட்டங்களை நடத்தி அற்புத அடையாள ஊழியங்கள் இந்த பீல் மக்கள் மத்தியில் செய்ய வேண்டும் என்று பலவாறு நினைத்தபோது தினகரன் ஐயாவுக்கு கடிதம் எழுதினோம்.  இந்த காரியத்திற்காக கர்த்தரிடம் உபவாசத்தோடு காத்திருந்து அதிகநேரம் ஜெபித்த பின்பு பதில் எழுதினார்கள்.  நீதான் சுவிசேஷ ஊழியமும் செய்ய வேண்டும்.  சபைகளையும் நிறுவ வேண்டும்.  மிஷனெரி பணியையும், சபை ஊழியத்தையும் தேவன் உனக்கு கொடுத்திருக்கிறார் என்று தெளிவாக பரிசுத்த ஆவியானவர் பேசினார்.  அந்தபடியே இன்று பீல் மக்கள் மத்தியில் ஊழியம் நிறைவேறிக்கொண்டே வருகிறது.  இப்படி எத்தனையோ முறை சரியான ஆலோசனையை கர்த்தரிடம் இருந்து பெற்றுக்  கூறுவார்கள்.

ஒவ்வொரு வருடமும் எங்கள் பிறந்த நாட்கள் திருமணநாட்கள் புது வருடங்களில் எங்களுக்காக தொலைபேசியில் ஜெபிப்பார்கள்.  2007-ம் வருடம் ஜுலை 8 எங்கள்  திருமண நாளன்று ஜெபித்தபோது, சபைகளை பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.  சபை பல மடங்காய் பெருகும்.  சபைகள் ஸ்திர சபைகளாய் மாறும், சபை மிகுந்த செல்வாக்கு பெற்ற சபையாய் மாறும்.  பீல் திருச்சபை மக்களே உங்களுக்கு அதிகமாய் உதவுவார்கள்.  என்று சபை வளர்ச்சியை பற்றி மிகவும் தெளிவாய் கூறினார்கள்.  அந்த நாளிலிருந்து சபைகளில் ஒரு பெரிய வளர்ச்சியைப்  பார்க்கிறோம்.  ஸ்திர சபைகளாய் மாறுகிறதை பார்க்கிறோம்.  ஒவ்வொரு தீர்க்கதரிசனமும் அப்படியே நிறைவேறி வருகிறதைக் கண்டு தேவனைத் துதிக்கிறோம்.

அன்பு தினகரன் ஐயாவுக்காக ஜெபித்த ஜெபங்கள்

2006-ம் ஆண்டும் ஜனவரி மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி நமது தகப்பனார் தினகரன் ஐயாவுக்காக விசேஷித் உபவாச ஜெபம் செய்யும்படியாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி சுமார் 50 பெண்களாக (சுதேச ஊழியர்கள் மனைவிமார்கள்) கூடி தாகோத்தில் ஜெபித்து வந்தோம்.  குறிப்பாக அவர்கள் கால்களில் உள்ள பெலவீனம் நீங்கி எழும்பி நடக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் கண்ணீருடன் ஜெபித்து வந்தோம்.  இப்படி நாங்கள் ஜெபிப்பது அப்பாவுக்கு தெரிந்தபடியினால் ஒவ்வொரு மாதம் 1-ம் தேதிக்கு முன்பே தொலைபேசியில் எங்களோடு கூட பேசி ஜெபக்குறிப்புகளை கொடுப்பார்கள்.  1-ம் தேதி ஜெபத்திற்கு பின்பும் கூட அநேக முறை தொலைபேசியில் பேசி கர்த்தர் கொடுத்து வருகிற நல்ல சுகம் கால்களில் பெலன் இவற்றை பகிர்ந்துகொள்வார்கள்.  6 மாதங்கள் கழித்து என்னுடைய கால்களில் 50 சதவீதம் பெலன் கிடைத்து விட்டது என்றும் சரீரத்திலே முன்பு இருந்த பெலவீனங்கள் நீங்கி நல்ல பென் கிடைத்துள்ளது என்றும் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

பின்பு அக்டோபர் மாதம் இவ்வாறு கூறினார்கள்.  என்னுடைய கால்களில் நல்ல பெலன் கிடைத்துள்ளது.  நான் நன்றாக நின்று பிரசங்கம் செய்யும் அளவிற்கு பெலன் கிடைத்துவிட்டது.  இவ்வளவாக எனக்காக ஜெபித்து என்னை எழுப்பி விட்டீர்கள்.  இன்னும் தொடர்ந்து ஜெபியுங்கள் விரைவில் நடந்து விடுவேன் என்று கூறினார்கள்.  அதன்பின்பு 2008 ஜனவரி மாதம் தொலைபேசியில் பேசும்போது என் கால்களில் கிடைத்த பெலன்தான் 2007-ல் கர்த்தர் எனக்கு செய்த பெரிய அற்புதம் என்று சொல்லி மிகவும் சந்தோஷமாய் கூறி சத்தமாய் சிரித்தார்கள்.  அந்த சிரிப்பின் தொனி இன்றும்  எங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

எப்படியாகிலும் கர்த்தர் கடைசி நாட்களில் அவர்கள் இருதயத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணமாக கால்களில் பெலன் கொடுத்து நிற்கச் செய்தார்.  அவர்கள் எதையும் பிடிக்காமல் நன்றாக நின்று செய்து கொடுத்த சீ.டி-யையும் உடனே எங்களுக்கு அனுப்பி தந்தார்கள்.  நாங்களும் அதைக் கண்டு தேவன் நம் ஜெபத்திற்கு பதிலை கொடுத்தார் என்று மிகுந்த சந்தோஷத்துடன் ஆண்டவருக்கு நன்றி கூறினோம்.

பின்பு ஜனவரி மாதம் மிகவும் சரீர பெலவீனம் அடைந்த நேரத்திலும் நாங்கள் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருந்தோம்.  பெண்களாகச் சேர்ந்து சங்கிலி தொடர் உபவாச ஜெபம் செய்தோம்.  ஆனாலும்  கர்த்தருடைய வேளையை யாராலும் தடுக்க முடியாது என்றபடி தேவன் தமது சித்தத்தின்டி அவருடைய வேளையில் எடுத்துக்கொண்டார்.  பெப்ரவரி 20-ம் தேதி அன்று அதிகாலையில் மத்தியபிரதெசத்தில் உள்ள ஒரு சுதேச ஊழியர் மனைவி சகோதரி. பாசுடி திலிப் சிங் என்ற சகோதரிக்கு கர்த்தர் காட்டி இந்த இயேசு அழைக்கிறார் காலண்டரில் உள்ள உங்கள் அங்கிள் இப்பொழுது என்னிடத்தில் இருக்கிறார்கள் என்று கூறினார்.  அவர்கள் வந்து மார்ச் 1-ம் தேதி கூட்டத்தில் சாட்சி கூறினார்கள்.

எங்களை அதிகமாக நேசித்த D.G.S. தினகரன் ஐயா அவர்களை தேவன் தம்முடைய இராஜ்யத்திற்குள் எடுத்துக் கொண்டதை நினைக்கும்போது இன்றைக்கும் எங்கள் கண்களில் கண்ணீர் வருகிறது.  ஆனாலும் தேவன் எங்களை பெலப்படுத்தி வருகிறார்.  நாங்களும் அனைத்து பீல் சுதேச ஊழியர்களும், பீல் விசுவாசிகளும் D.G.S. தினகரன் ஐயா விட்டுச் சென்ற இயேசு அழைக்கிறார் ஊழியங்களுக்காகவும், அம்மாவுக்காகவும், டாக்டர். பால் தினகரன் குடும்பத்திற்காகவும் அதிகமாக ஜெபிக்கிறோம்.

“ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியேகிறிஸ்துவினுடையபிரமாணத்தை நிறைவேற்றுங்கள்”. (கலா 6 : 2)

http://www.shalommission.in/tam_jesus_calls.html#^

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard