இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது மனிதனின் ஆவி என்னும் பகுதியில் பரிசுத்த ஆவியானர் வாசம் செய்ய தொடங்குகிறார். மனிதன் இந்த பரிசுத்த ஆவியானவரோடு தொடர்பு கொண்டு, ஐக்கியப்பட்டு அதனால் உலகம், மாமிசத்தை நோக்கி இழுக்கும் தன் சுயத்தை இழந்து தேவ ஆவியால் முழுவதும் நிரம்ப வேண்டும். இதுவே பிதாவாகிய தேவனின் சித்தம். இந்த உன்னத நோக்கத்திற்க்காகவே இந்த பூமியில் அவர் மனிதனை படைத்தார். மனிதனின் வாழ்வில் நடைபெறும் பல்வேறு செயல்களும், அவனுக்கு ஏற்படும் வித்தியாசமான அனுபவங்களும், அவனுடைய இன்பமும், துன்பமும், பாவத்தை பற்றிய கட்டளையும் அதனால் வரும் குற்ற உணர்வும், தேவனுடைய பலியும், தேவ இரட்சிப்பும், அதிசயங்களும் என எல்லாமே மனிதனை தன்னுடைய நோக்கத்திற்காக பயன்படுத்த தேவன் அவன் வாழ்வில் கொடுப்பதாகும்.
இவ்வாறு பரிசுத்த ஆவியை பெற்ற (சில மனிதர்கள் தவிர) மனிதர்கள் வாழ்வில் ஆவிக்கும், மாமிசத்திற்க்கும் இடையேயான போராட்டம் நடைபெறுகிறது. இந்த போரட்டமானது மனிதனுக்கு ஆவியானவரின் தேவையையும், அவரோடு கூட ஐக்கியமாவதின் அவசியத்தையும் மனிதனுக்கு உணர்த்துகிறது.
சரீரத்தில் குறைபாடுகள் உள்ள மனிதர்களை இந்த பூமியில் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் குறைபாடுகளினால் பாவம் செய்வதில்லை. அதாவது ஒரு குருடர் பெண்களை தவறாக பார்க்க முடியாது. செவிடர் அசுத்தமானவைகளை கேட்க முடியாது. கைகள் இல்லாதவர்கள் பாவ காரியங்களை செய்ய முடியாது. இவர்களுக்கு மாமிசத்துடனான போராடம் இவர்களின் குறைகளால் இல்லாமல் போகிறது. இன்று பூமியில் உள்ள அனேக மக்கள் (நம்மில் அனேகர்) எல்லா விதத்திலும் ஆரோக்கியமான சரீரத்தை பெற்றவர்கள் அல்லர். இவ்வாறு இல்லாமல் முழு சரீர பெலத்தோடு இருப்பவர்களுக்கு மற்றவர்களை விட மாமிசத்தின் இச்சை அதிகமாக இருக்கும்.
தேவன் சிம்சோன் என்ற மனிதனை படைக்க சித்தம் கொண்டார். இதன் மூலம் இஸ்ரவேலரை பெலிஸ்தியரின் (பெலிஸ்தியர் - பாலஸ்தீனியர் என்பது போல இருப்பதை காணவும். பெலிஸ்தியருடனான போர் இன்றும் ஓயவில்லை) கையிலிருந்து இரட்சிக்கவும்,
தேவ ஆவியானவரோடு இணைந்து தன் மாமிசத்துடனான போரில் வெற்றி கொள்ளவும் தேவன் அவனை உண்டாக்கினார்.
மனிதனில் ஆவி என்னும் கடவுள் பயன்படுத்தும் பகுதி உண்டு. இந்த ஆவிக்கு வெளிப்புற அடையாளமாக சிம்சோனின் தலை முடி இருந்தது. இதன் மூலம் தெரிவது என்னவென்றால்
1. மனிதன் உயிர் வாழ தலை முடி எப்படி அவசியமில்லையோ அப்படியே மனிதனில் உள்ள ஆவி என்ற பகுதி இல்லாமலும் அல்லது செயல்படாமலும் மனிதன் வாழ முடியும்.
2. சிம்சோன் நசரேய விரதம் எனப்படும் சவரகன் கத்தி தலையில் படாமல் தலைமுடியை வளர்க்கும் விரதம் பூண்டவன். தலைமுடி வளர்வது என்பது ஆவிக்குரிய வாழ்வில் வளர்வது என்பது பொருள். ஆவிக்குரிய வாழ்வில் வளர்வது என்பதற்க்கு முடிவே கிடையாது. தேவன் சித்தம் கொள்ளும் வரை வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்,
3. இவ்வாறு தலை முடி வளர்ப்பது என்பது சுலபமான விஷயமல்ல. தினந்தோறும் நேரம் ஒதுக்கி அந்த தலை முடியை பராமரிக்க வேண்டும். கொஞ்சம் விட்டுவிட்டால் முடியெல்லாம் சிக்கலாகி விடும். சிம்சோனுக்கு ஏழு ஜடைகள் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இந்த ஏழு ஜடைகளையும் தினந்தோறும் பின்ன வேண்டும் எண்ணை பூச வேண்டும்.
ஆவிக்குரிய வாழ்வில், தேவனுடைய தொடர்புக்கும், ஐக்கியத்திற்க்கும் தினந்தோறும் முக்கியத்துவம் கொடுத்து அதற்கான முயற்ச்சிகளை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை தேவனிடமிருந்து விலகின வாழ்க்கையாக ஆகி விடும் என்பதை இது காட்டுகிறது.
தேவ பக்தி மிகுந்த தாய். தந்தையருக்கு மகனாக பிறந்த சிம்சோன், வாலிப பருவத்தை அடைந்ததும் தாய், தந்தையரை விட்டு வழி விலக ஆரம்பித்தான். ஆயினும் தேவை ஏற்படும் போதெல்லாம் ஆவியானவர் அவன் மூலமாக பெரிய காரியங்களை செய்தார்.
தேவ ஆவியானது அவன் கோப வசப்படும் போதெல்லாம் அவனில் இறங்கி அவனை பலப்படுத்தினது. இதிலிருந்து தெரிய வருவது என்னவெனில் ஒரு சில குறிப்பிட்ட உணர்வு நிலைகளில் மனிதனில் உள்ள ஆவி என்னும் பகுதி செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஆவி என்னும் பகுதி செயல்படும் போது தேவ ஆவியோடு தொடர்பு கிடைக்கிறது.
இன்று தேவ ஆவி சிம்சோனை போல கோபம் வரும் போதெல்லாம் இறங்கி மனிதனை பலப்படுத்துவதில்லை என்றாலும், பக்தி மற்றும் எதிர்பார்ப்பு என்னும் உணர்வின் வசப்படும் போதெல்லாம் இறங்கி மனிதனை பலப்படுத்துகிறது. இன்று சபைகளில் பாடல்களை உணர்ச்சி வசப்பட்டு பாடி, வேகத்தை அதிகரித்து அதன் மூலம் தேவ பிரசன்னத்தோடு தொடர்பு கொள்ள மக்கள் விருப்பமாயிருக்கின்றனர்.
இது போல பாடல்களை வேகப்படுத்தி பாடி அதன் மூலம் தேவ பிரசன்னத்தோடு தொடர்பு கொள்ளுவதை சிலர் எதிர்க்கின்றனர். சிலர் ஒரு படி மேலே போய் இவ்வாறு செய்யும் போது இறங்குவது தேவ ஆவி அல்ல, அது வேறு எதோ ஒரு ஆவி என்றும், மக்கள் அடைவது ஒரு பொய்யான பரவச நிலை என்றும் கூறுகின்றனர். இது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயமாகும்.
தலைப்பை விட்டு விலகி செல்வதை போல இந்த கட்டுரை தோன்றினாலும், இது மிகவும் முக்கியமான சர்ச்சையாதலால் இதை பற்றி வேறோரு கட்டுரையில் ஆராய்வோம்.
ஒரு தடவை எவனை விழுங்கலாமோ என மனிதர்களை தேடி அவனுக்கு எதிராய் வந்தசிங்கத்தை வெறும் கையால் கிழித்து போட்டான்.கோத்திரமில்லாத சிங்கம் சாத்தானை குறிப்பதாகும். அனேக மக்களிடத்தில் தன் சித்தத்தை நிறைவேற்ற தேவன் சில மனிதர்களை தெரிந்து கொள்ளுகிறார். இவ்வாறு தெரிந்து கொள்ளப்பட்ட தேவ ஊழியர்களுக்கு இவ்வாறு தெரிந்து கொள்ளப்படாதவர்களை விட அதிகமான எதிர்ப்பு வருவது உண்டு. ஏனெனில் இந்த ஒரு மனிதன் தேவனிடத்தில் பயபக்தியாயிருந்து அவரிடத்திலிருந்து வல்லமை பெற்று கொண்டால் அனேக மனிதர் தேவனை நோக்கி முன்னேறுவது எளிதாகும். ஆகவே சாத்தான் அவர்களை விழ வைக்கும்படி கிரியை செய்வான். சிம்சோனும் தேவ மனிதர்களை காப்பாற்ற வேண்டும் என்னும் தேவ தீர்மானத்தை நிறைவேற்ற பிறந்தவன்.
சிம்சோனின் இந்த மகத்தான பணியை செய்ய விடாமல் அவனை ஆரம்பத்திலேயே அழிக்க வேண்டும் என சாத்தான் திட்டம் கொண்டு அவனுக்கு விரோதமாக சிங்கத்தை வர விட்டான். சிம்சோன் தன் மேல் இறங்கின தேவ ஆவியால் அந்த சிங்கத்தை கிழித்து போட்டான்.
இவ்வாறு தான் கொன்ற சிங்கத்தை தேடி மறுபடியும் சிம்சோன் தன் தாய், தந்தையை விட்டு வழி விலகி வந்தான். ஏற்கனவே தேவ பக்தியுள்ள தன் பெற்றோரிடமிருந்து மனதால் வழி விலகி நடந்தவன் இப்போது செயலாலும் வழி விலகி நடந்தான். அங்கே அவனுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. நேரடி எதிர்ப்பால் சிம்சோனை வீழ்த்த முடியாது என அறிந்த சாத்தான், அவனை தந்திரத்தால் வீழ்த்த எண்ணி ஒரு அற்புதத்தை அங்கே நிறைவேற்றியிருந்தான். இறந்த சிங்கத்தின் உடலில் தேனீக்கள் கூடு கட்டும்படி செய்து, அந்த கூட்டில் தேனையும் சேகரித்து வைக்க செய்தான். இன்று பல கிருத்துவர்கள் துன்பம் வரும் போதெல்லாம் தங்களை சாத்தான் தாக்குவதாக நினைத்து கொள்ளுகின்றனர். ஆனால் சாத்தான் வாழ்க்கையில் தேனையும் தருபவனாக இருக்கிறான். துன்பத்தை விட, இன்பத்தினாலேயே அனேகரை வஞ்சிக்க முடியும் என்பதினால் அனேகருக்கு உலக இன்பங்களை கொடுக்க அவன் பிரியமாயிருக்கிறான். அவனுடைய குறிக்கோள் மனிதனுடைய இன்பமோ. அல்லது துன்பமோ அல்ல. மனிதனை தேவனிடத்திலிருந்து பிரிப்பதே அவன் குறிக்கோள் அவ்வாறே மனிதனுக்கு இன்பமோ அல்லது துன்பமோ கொடுப்ப்து தேவனுடைய குறிக்கோள் அல்ல. அவனை தன்னிடம் சேர்ப்பதே தேவனின் குறிக்கோள். நசரேய விரதம் காப்பவன் பிரேதத்தண்டையில் போக கூடாது என்பது தேவனுடைய கட்டளை (எண்ணாகமம் 6 நசரேய விரதத்தை பற்றி சொல்லும் அதிகாரம்) ஆனால் அவனோ செத்த சிங்கத்தை பார்க்க போகிறான்.
இரட்சிக்கப்பட்ட பிறகு பழைய பாவங்களை விட்டு நீங்க வேண்டும். அது மட்டுமல்லாது அந்த பாவ சூழ்னிலையில் இருக்க வேண்டி வந்தால் அந்த இடத்தை, மனிதர்களை விட்டே நீங்க வேண்டும். ஒரு மனிதன் இரட்சிக்கப்படும் போது, இயேசுவின் இரத்தம் அவன் மனசாட்சியை செத்த கிரியைகளற சுத்திகரிக்க வல்லமை உடையதாய் இருக்கிறது.
எபி 9.14. நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட மனிதன் மறுபடியும் தன் செத்த கிரியைகளுக்கு திரும்பி மீண்டும் மன்னிப்பு கேட்காமல் அந்த கிரியைகளை விட்டு நீங்கி பூரணமடைந்து கொண்டே செல்ல வேண்டும் என பவுல் சொல்கிறார்.
எபிரே 6.1. ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், 2. ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக.
செத்த உடல் நாற்றமடிக்கும். யாருமே அதன் அருகே போக அருவருப்படைவார்கள். ஒருவேளை செத்த உடல் எதையும் பார்க்காமல் சிம்சோன் வளர்க்கபட்டிருக்கலாம். ஆனால் செத்த உடல் அழுகி நாற்றமடிக்கும் என தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
சாதாரண மனிதர்களே போக விரும்பாத இடத்துக்கு நசரேய விரதம் என்னும் உயரிய விரதம் காக்கும் சிம்சோன் போகிறான். அங்கே செத்த கிரியைகள் வேறு அவதாரம் எடுத்து அவனுக்கு காத்திருந்தன. நாற்றம் மறைக்கப்பட்டிருந்தது. அவனும் அவனுக்கு விரிக்கப்பட்ட மாய வலையை உணராமல் அந்த தேனை எடுத்து சுவைத்து கர்த்தரின் கட்டளையை மீறினான். அது மட்டுமல்லாது இதை பற்றி பெற்றோரிடமும் செல்லவில்லை. அதனால் பாவ மன்னிப்பு பெறும் வாய்ப்பையும் இழந்தான்.
அவனுக்கு திருமணமான பின் அவன் தோழர்களிடம் விடுகதை போடுகிறான்.
நியாய 14.14 அப்பொழுது அவன்: பட்சிக்கிறவனிடத்திலுருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்றான்; அந்த விடுகதை அவர்களால் மூன்று நாள்மட்டும் விடுவிக்கக் கூடாதே போயிற்று.
இந்த விடுகதைக்கு விடை தெரிந்தது போல சிம்சோன் மற்றவர்களிடம் பதிலை கேட்கிறான். ஆனால் இந்த விடுகதைக்கு விடை தெரியாதவன் சிம்சோனே. அனேகர் தங்கள் வாழ்க்கையில் உள்ள புதிரையே அவிழ்க்க தெரியாமல் அடுத்தவனுக்கு புதிர் போடுகின்றனர். அல்லது அடுத்தவன் வாழ்க்கையின் புதிரை அவிழ்க்க முயலுகின்றனர். (என்னைப் போல)
பட்சிக்கிறவனிடத்திலிருந்து எப்படி பட்சணம் வர முடியும், பலவானிடத்திலிருந்து எப்படி மதுரம் வர முடியும் என ஆர, அமற உட்கார்ந்து யோசித்திருந்தால் அது தனக்கு விரிக்கப்பட்ட மாய வலை என்பதை சாம்சோன் புரிந்து கொண்டிருப்பான். விரோதியிடத்திலிருந்து ஒரு நன்மை வருமானால் அது ஏமாற்று வேலையாகத்தான் இருக்குமே தவிர உண்மையாக இருகாது என்பதை சிம்சோன் தெரிந்து கொள்ளவில்லை.
நீதி 27.6. சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.
இந்த சிம்சோன் எங்கெங்கு தேன்கூடு கிடைக்கிறதோ அங்கங்கு தேனை உண்ணாமல் இருந்ததில்லை. தேன் கிடைக்கும் இன்னொரு இடமாக நீதிமொழிகளில் சொல்லப்பட்டுள்ளது.
3. பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும். 4. அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமுங் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும். 5. அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். 6. நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக்கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது.
சிம்சோனின் மேன்மை பெலிஸ்தியரால் சிதைக்கப்பட்டது. அவன் பூரண வயது வரை வாழாமல் சீக்கிரமே செத்தான்.
8. உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக்கிட்டிச் சேராதே. 9. சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய். 10. அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின்பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும்.
22. துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.
23. அவன் புத்தியைக் கேளாததினால் மடிந்து, தன் மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.
தாய், தந்தையின் போதகத்தை கேட்காத அவன் கண்கள் பிடுங்கப்பட்டது
11. முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து: 12. ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே! 13. என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே! 14. சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் கொஞ்சங்குறைய எல்லாத் தீமைக்குமுள்ளானேனே! என்று முறையிடுவாய்.
வேசியின் முத்தத்தால் வஞ்சிக்கப்பட்ட சிம்சோனுக்கு மாறாக, சத்துருவான யூதாஸ் தன்னை முத்தமிட வரும் போதே இயேசு அவன் தந்திரத்தை வெளிப்படுத்தினார்.
லூக்கா 22.47. அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான். 48. இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.
தேவ மனிதர்கள் சாத்தானின் தந்திரங்களை தெரிந்து கொண்டவர்களாயும், அந்த தந்திரத்துக்கு விலகி தங்களை காத்து கொள்கிறவர்களாயும் இருக்க வேண்டும்.
2.கொரி2.11. சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.
எபே 6.11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
தேவன் சிம்சோன் மேல் அன்பாயிருக்க, சிம்சோனோ வேசியின் மேல் அன்பாயிருக்க, வேசியோ பணத்தின் மேல் அன்பாயிருக்க சிம்சோனின் தலை மொட்டையடிக்கப்பட்டது.
அவன் தன் ஆவியோடு தொடர்பை இழந்தான். தேவன் அவனை விட்டு விலகினார். ஒரு மனிதன் மூன்று விதங்களில் தேவ ஆவியுடனான (தேவனுடனான) தொடர்பை துண்டித்து கொள்ள முடியும்
1.அவரை கண்டு கொள்ளாமல் இருப்பது - பரிசுத்த ஆவியானவர் என்னும் அக்கினிக்கு, உறவு என்னும் எண்ணெய் வார்க்காமல் விட்டதனால் அணைந்து போகும் தீப்பந்தம் வைத்திருந்த ஐந்து கன்னிகைகள். இவர்கள் அடுத்தவரின் அக்கினியில் தங்கள் தீப்பந்தத்தை பற்ற வைக்க முடியாமல் (முடியாது) அந்த நேரத்தில் தேவனிடத்தில் உறவு கொள்ளுவது எப்படி என்ற பிரசங்கத்தை கேட்க தேவ ஊழியரை தேடி ஓடினவர்கள். அக்கினி இல்லாவிடில் மணவாளனை காண முடியாது.
(தொடரும்)
-- Edited by SANDOSH on Sunday 22nd of August 2010 07:43:48 PM