பொதுவாக இயேசு எவ்வாறு பிதாவகிய தேவனிடம் பக்தியுடையவராக இருந்தார் என்பது
இயேசுவை மட்டுமே (திரியேக தேவனின் ஒரு அம்சத்தை மட்டும்) தேவனாக காட்ட வேண்டும் என முயல்பவர்களால் சொல்லப்படுவதில்லை. கிருத்துவர்கள் இயேசுவிடம் ஐக்கியம் கொள்ளுவது மூலமாக மட்டுமே பிதாவாகிய தேவனோடு ஐக்கியப்பட முடியும்.
ஆனால் அதற்கு வழிகாட்டியாக, எடுத்துகாட்டாக இயேசுவே இருந்தார். அவரின் மனித குமாரனுக்கேற்ற இந்த தன்மையை போதிப்பதை அனேகர் விரும்புவதில்லை. இதன் மூலம்
கிருத்துவர்கள் தேவனோடு (அவரோடு) சேர்வதற்க்கு உண்டான ஒரு வழியை அவர்கள் அடைத்து விடுகின்றனர்.
இயேசு வனாந்திரத்தில் பிதாவாகிய தேவனோடு ஐக்கியமாயிருந்த வேளையில், அவர் இந்த பூமியில் ஆற்ற வேண்டிய பணி பற்றி அவருக்கு வெளிப்படுத்தப்பட்டது. அதோடு அல்லாமல் நாற்பது நாட்கள் முடிந்த பிறகு தேவ தூதர்கள் மூலமாக அவருக்கு உணவு அருளப்படும் என்பதையும் தேவன் அவருக்கு தெரிவித்தார்.
நாற்பது நாட்கள் உண்ணாமல் உறங்காமல் தேவனையே நினைத்திருந்த அவர் வெற்றிகரமாக தன் தவத்தை முடித்தார். அந்த நாட்கள் முடிந்த பிறகு அவருக்கு கடுமையான பசி உண்டாயிற்று. நாற்பது நாட்கள் உண்ணவில்லையாதலால், உயிரை உலுக்கி எடுக்கும் பசி உண்டாயிற்று. தேவ தூதர்களையோ காணவில்லை. இங்கே மோசே வனாந்திரத்தில் வழி நடத்தி வந்த இஸ்ரவேலர்களுக்கு உண்டான சோதனை இயேசுவுக்கும் வந்தது. இந்த சோதனையை சந்தித்த இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் மனத்தில் இது போன்ற சோதனையை எந்த மனிதனாலும் தாங்க முடியாது. அதில் வெற்றி பெறவும் முடியாது என நினைத்திருக்க கூடும். ஆனால் இயேசுவோ இந்த சோதனையை வென்றார்.
இந்த பகுதி நான்கு சுவிசேசத்தில் மத்தேயு மற்றும் லூக்காவில் மாத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மத்தேயுவே சரியாக இருப்பதாக எனக்கு தோன்றுவதால் மத்தேயுவையே எடுத்து கொள்ளுகிறேன்.
பசி தாங்க முடியாத, சாகும் தருவாயில் இருந்த, அவர் மனிதில் சாத்தான் ஒரு எண்ணத்தை கொண்டு வந்தான். (மனிதனுடைய மனதை உருவாக்கியதில் அவனுக்கும் ஒரு பங்குண்டு) அது என்னவெனில்
கற்களை அப்பமாக மாற செய்து உண்டு பசியிலிருந்து விடுபடலாம் என்பதே அது. ஆனால் இயேசுவோ தன்னைப் பற்றிய பிதாவின திட்டத்தை நினைவு கூர்ந்தார். தன்னை குறித்து ஒரு திட்டம் உள்ளது என்றால் தான் எப்படியும் உயிரோடு இருக்க போவது நிச்சயம். அதனால் தேவனும் தேவ தூதர்கள் மூலமாக உணவு வழங்க போவதும் நிச்சயம். ஆதலால் அவர் இந்த வார்த்தையை சொல்லி சாத்தானின் தந்திரத்தை முறியடித்தார்.
3. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். 4. அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
நம்மை பற்றிய நீண்ட கால தேவ திட்டம் எது என்பது நாம் அறிந்திருந்தால், சாத்தானின் வஞ்சகத்தை சுலபமாக முறியடிக்க முடியும். அதற்காக நம்மை குறித்த தேவ திட்டத்தை தேவனிடத்தில் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த சோதனை முடிந்த பிறகும் தேவ தூதர்கள் வரவில்லை. பசியின் கொடுமை அதிகரித்து கொண்டே வந்தது. பிதாவே சீக்கிரம் தேவ தூதரை அனுப்பும் என வேண்டியவாறு இருந்தார். ஆனால் பதிலில்லை. அவருக்கு தற்கொலை செய்து கொள்ளலாமா என்றும் தோன்றியது. உடனே சாத்தான் அடுத்த எண்ணத்தை அவர் மனதில் ஏற்படுத்தினான். அதன் மூலம் தனக்கு கேடுண்டாக்கும் சிலுவை பலி நிறைவேறாமல் அவரை அழித்து விட நினைத்தான். அந்த எண்ணம் என்னவெனில் மேலிருந்து கீழே குதித்தால் தேவ வார்த்தையின்படி தேவ தூதர்கள் அவரை காப்பாற்ற வருவார்கள். அதன் மூலம் அவர்களிடமிருந்து உணவை பெற்று கொள்ளலாம் என்பதே. அதாவது தற்கொலை செய்து கொள்வேன் என பயமுறுத்தி, அதன்படி செய்து தேவனிடம் உதவி பெறும் திட்டமே அது. சாத்தானின் வஞ்சகத்தை அறிந்த இயேசு நான் தேவனை சோதனை செய்ய மாட்டேன். ஒன்று தேவன் என்னை காப்பார். அவ்வாறு காப்பாற்றாவிட்டாலும் அவரிடம் நம்பிக்கை கொண்டு இறந்து போவனே தவிர நான் தேவனை சோதனை செய்வதில்லை என தற்கொலை செய்து கொள்ள மறுத்து விடுகிறார்.
(சாத்தான் சென்டிமெண்டாக அவரை தேவாலாயத்தின் உப்பரிகையில் நிறுத்தி சொன்னது : மற்ற இடத்தில் ஒரு வேளை தூதர்கள் வரமாட்டார்கள் ஆனால் இது தேவ ஆலயம் என்பதால் அவர்கள் வந்தே தீர வேண்டும்)
5. அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி:
6. நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
7. அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
சாத்தானின் திட்டம் தோல்வியில் முடிந்தது. தேவ தூதர்கள் வந்து அவருக்கு உணவு அளித்து, பணிவிடை செய்தனர்.
அதன் பிறகு தேவனின் சித்தத்தை நிறைவேற்ற அவர் புறப்பட்டு சென்றார். பிதாவின் ராஜ்ஜியத்தை பூமியில் நிறுவ வேண்டும் என சிந்தித்து கொண்டிருந்த அவரை பிசாசு மறுபடி ஒரு மலையின் மேல் கூட்டி சென்று சொன்னது :
8. மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
9. நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
பிசாசு சொன்னது : பிதாவின் ராஜ்யம் எல்லாம் உடனே வராது. அதற்க்கு வெகு காலமாகும். அப்படி வந்தாலும் அது எவ்வளவு நன்றாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு வேளை வராமல் போனாலும் போகலாம். ஆனால் என் ராஜ்யம் அப்படிப்பட்டதல்ல. இது கண்களுக்கு முன்பாக இருப்பது. இப்போதே இருப்பது. இன்பமானது. மண், பெண், பொன், புகழ் என மனதிற்க்கு மகிழ்வான பல காரியங்கள் நிறைந்தது. அதோ நீர் காணும் அந்த மாளிகை முழுவதும் தங்கத்தால் கட்டப்பட்டது. இதோ இத்தனை தேசத்து ராஜாக்களும் உமக்கு அடிமைகள்.
இது எல்லாம் எனக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது இவை எல்லாவற்றையும் நான் முழுவதுமாக உமக்கு கொடுத்து விடுகிறேன். நீர் இந்த பூமியில் இப்போதே அரசாளலாம். எதற்கு சிலுவையில் அறையப்பட உம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும்? உடலெல்லாம் இரத்தம் வடிய தாங்க முடியாத வலியை ஏன் நீர் சுமக்க வேண்டும்? இவ்வளவு துன்பத்தை நீர் அனுபவித்தாலும் நாளைக்கு மனிதர்கள் உம்மை ஏற்று கொள்ளுவார்கள் என்பது நிச்சயமில்லை. ஆதலால் என்னுடைய ராஜ்யத்தை நீர் எடுத்து கொள்ளும். அதற்கு பதிலாக நீர் ஒன்றே ஒன்று செய்தால் போதும். அது கடினமானதும் அல்ல. நீர் சாஷ்டாங்கமாக விழுந்து என்னை பணிந்து கொண்டால் போதும். என்றான்.
உடனே இயேசு மிகுந்த கோபமடைந்து சொன்னது :
10. அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
முதல் இரண்டு சோதனைகளுக்கும், மூன்றாவது சோதனைக்கும் கால இடைவெளி உண்டு.
அதாவது முதல் இரண்டு சோதனை முடிந்தவுடன் இயேசு தேவ தூதர்கள் மூலமாக பிதா அருளிய உணவை உண்டு விட்டார். இவ்வாறு கால இடைவெளி இல்லாவிடில் மூன்றாவது சோதனையை ஒரு முட்டாள் கூட வெல்ல முடியும். அதாவது பசியாயிருப்பவனுக்கு எவ்வளவுதான் செல்வத்தை கொடுத்தாலும் அவன் அதை ஒதுக்கி தள்ளி உணவைத்தான் விரும்புவான். (ஏசாவின் கதையை நினைவு கூறவும்) மூன்றாவது சோதனையை கால இடைவெளியில்லாமல் அதுவும் தேவ ஞானம் உள்ள இயேசுவிடம் செய்யும் அளவுக்கு சாத்தான் முட்டாள் அல்ல.
இதை போன்ற கேள்விகள் விசுவாசிகளுக்கு நிறைய வருகிறது. போதாகுறைக்கு பல போதகர்கள், விசுவாசிகளை குழப்பி தானும் குழப்புகின்றனர். இதனுடன், புத்தகங்களும், இணையதளமும் சேர்ந்து குழப்புகிறது.
இந்த குழப்பங்களுடன் என் வார்த்தைகளும் சேர்ந்து குழப்பாதவண்ணம் ஆண்டவர் என் வார்த்தைகளை காப்பாராக. நண்பர் சந்தோஷ் சொன்னது போன்ற கேம்ப்கள் பல நடத்தபடுகின்றன? தினம் ஜெபிக்கவே நேரமில்லை என்று புலம்பும் மனிதனுக்கு நாற்ப்பது நாள் ஒரு கேம்ப் செல்ல முடியுமா? கண்டிப்பாக, இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் எந்த ஒரு நிறுவனமும் யாருக்கும் அவ்வளவு பெரிய விடுமுறை தரப்போவதில்லை. வேண்டுமானால் முழுநேர ஊழியர்களாக அழைக்கப்பட்டவர்கள் இந்த நாற்ப்பது நாள் கேம்ப் போன்றவற்றை முயற்ச்சி செய்யலாம். ஆனால் இது ஒன்றே வழி என்று இல்லை. தக்க வேதவிளக்கங்களுடன், விரைவில் வருகிறேன்...
அனேக விசுவாசிகள் தாங்கள் தேவனுக்குரிய வாழ்வில் முன்னேற வேண்டும் என விரும்புகின்றனர். ஊழியர்களும் தங்கள் சபையை சேர்ந்த விசுவாசிகள் தேவனுக்குரிய வாழ்வில் முன்னேற வேண்டும் என பல முயற்ச்சிகள் செய்கின்றனர்.ஒரு நாளில் வேதம் வாசிப்பதே மிக பெரிய காரியம் என்று பல வசனங்களை காட்டி போதிக்கின்றனர். இவர்கள் சொன்னது சரி என்று முடிவு செய்து அடுத்த வாரம் சென்றால் ஜெபமே பெரிய காரியம் என போதிக்கின்றனர். அடுத்த நாளே எல்லாவற்றையும் விட மேன்மையானது துதி செலுத்துதலே என போதிக்கின்றனர். சரி இதுதான் முக்கியமானது என நினைத்தால் அடுத்த வாரம் பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதே மிகவும் முக்கியமானது என போதிக்கின்றனர். சில நாட்கள் கழித்து விசுவாசமே பெரிது என சொல்லும் இவர்கள் அதற்கு அடுத்த வாரம் அன்பை பற்றி சொல்கின்றனர்.
இதை கேட்கும் விசுவாசிகள் குழம்பி போய் எதற்க்கும் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் செய்து வைப்போம் என எல்லாவற்றையும் சேர்த்து தங்கள் வாழ்க்கையில் நிறைவேற்ற பிரயாசப்படுகின்றனர். ஆனாலும் அனேகர் முன்னேற முடியாமல் தவிக்கின்றனர்.
அனேக சபைகளில் விசுவாசிகளின் எண்ணிக்கை (அகலம்) பற்றி கவலைப்படுகின்றனரே தவிர அவர்களின் ஆன்மிக வாழ்வில் முன்னேற்றம் (ஆழம்) பற்றி கவலைப்படுவதில்லை.
தினமும் ஜெபிக்க வேண்டும், வேதம் வாசிக்க வேண்டும் என சொன்னாலும் அதை செய்ய அனேக விசுவாசிகளால் முடிவதில்லை.
மனித மனம் என்பது புதிய காரியம் எதையும் மறந்து விடும் தன்மை கொண்டது. ஒரு மனிதன் ஒரு காரியத்தை தொடர்ந்து செய்ய வேண்டுமானால் அது அவன் ஆழ் மனதிற்க்குள் சென்றிருக்க வேண்டும். இவ்வாறு ஒரு காரியம் ஒரு மனிதனின் ஆழ்மனதிற்க்குள் செல்ல வேண்டுமானால் அந்த காரியத்தை தினமும் செய்து அவன் பழக்கப்பட்டிருக்க வேண்டும்.
சிறிய வயதிலிருந்து சொல்லிக் கொடுக்கப்படும் பழக்கம் சுடுகாடு வரைக்கும் தொடர்கிறது.
உதாரணமாக அதிகாலையில் எழுவதை சொல்லலாம். தினமும் எழுந்து பழக்கப்பட்டவர்கள் அதிக நேரம் தூங்க விரும்புவதில்லை. ஹாஸ்டலில் படித்த மாணவர்கள், இராணுவத்தில் வேலை செய்பவர்கள் ஒரு கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும் இருப்பதை காணலாம். ஏனெனில் இவர்கள் இப்படி இருப்பதற்க்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆன்மிக வாழ்க்கையில் கூட இது போன்ற பயிற்ச்சிகளின் மூலம் மனிதனின் அடிமனத்திற்க்கு ஆன்மிக உணர்வை செலுத்த முடியும் என அனேக மதத்திலுள்ள ஞானிகள் உணர்ந்துள்ளனர். இதன் விளைவாக உண்டானதே குருகுலங்களும், மடங்களும். இதன் மூலம் உலக மனிதர்களின் தொந்தரவு, உல்க பந்தங்கள் எதிலும் சிக்கி கொள்ளாமல் இயற்கையான ஒரு இடத்தில், அமைதியான சூழ்னிலையில் தங்கி வேறு காரியம் எதுவும் செய்ய தேவையில்லாததால் கடவுளிடம் முழு மனதையும் செலுத்தி அவரை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகிறது. இவ்வாறு பல நாட்கள் தங்கள் மனதை கடவுளை நோக்கி செலுத்தும் போது அந்த நிலை மனிதனின் ஆழ்மனதிற்க்குள் சென்று அவனை விட்டு நீங்காத பழக்கமாகிறது.
இந்துக்கள் செய்வதெல்லாம் கிருத்துவர்களுக்கு பொருந்தாது என கிருத்துவர்கள் சொல்லக் கூடும். ஆனால் இயேசுவை போல இருக்க வேண்டும் அதுவே ஒரு கிருத்துவனின் குறிக்கோள் என ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளும் இவர்கள் இயேசு செய்த ஒரு காரியத்தை மறைத்து விடுகின்றனர். அது என்னவெனில்
அவர் வனாந்திரத்திற்க்கு சென்று நாற்பது நாள் தங்கி பிதாவகிய தேவனை நோக்கி தவம் செய்தார் என்பதே அது.
இயேசு தன் ஊழிய நாட்களில் பிதாவை விட்டு நீங்காமல் இருந்ததற்க்கும், இவர் செய்த அற்புதங்களுக்கும், அதிசயங்களுக்கும் அடிப்படையானது இந்த தவமே. முதலில் இந்த தவத்தை செய்த பிறகே அவர் தன் ஊழியத்தை தொடங்கினார்.
மோசேயும் நாற்பது நாட்கள் மலையின் மேல் தேவ பிரசன்னத்தில் விழுந்து கிடந்தான். அதனாலேயே அவன் இஸ்ரவேலரை வழி நடத்தி செல்ல முடிந்தது.
இங்கே ஏன் குறிப்பாக இவர்கள் நாற்பது நாட்கள் தேவ சமூகத்தில் இருந்தார்கள் என கேள்வி வரலாம். நாற்பது நாட்களை பற்றி இந்து மதத்திலும் சொல்லப்பட்டுள்ளது. நாற்பது நாட்கள் என்பது ஒரு மண்டலம் என சொல்லப்படும் காலகட்டமாகும். மனித மனத்தை ஆராய்ந்த ஞானிகள் ஒன்றை கண்டு பிடித்தனர். அது என்னவெனில் எந்த ஒரு காரியத்தையும் நாற்பது நாட்கள் தொடர்ந்து செய்யும் போது அது அந்த மனிதனின் ஆழ்மனதிற்க்குள் சென்று அவனை விட்டு நீங்காத பழக்கமாகிறது என்பதே அது. நாற்பது நாட்களுக்கு மேல் எவ்வளவு காலம் வேண்டுமானலும் அந்த காரியத்தை செய்யலாம். ஆனால் நாற்பது நாட்களுக்கு குறையும் போது மனம் அந்த காரியததை மறந்து விடுகிறது.
இயேசு பிசாசினால் சோதிக்கபடுவதற்காக ஆவியானவரால் வனாந்த்திரத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டார் தவம் செய்வதற்காக அல்ல என்று சிலர் சொல்லாலாம். ஆனால் அது தவறு.
அவர் தவம் செய்து முடித்த பிறகு அவருக்கு சோதனை வந்தது என்பதே உண்மை. அவர் சென்றது (உணவு கூட உண்ணாமல்) பிதாவோடு ஐக்கியப்பட்டிருக்கவே. அவரின் வெற்றியை உலகிற்க்கு தெரிவிக்கவே சாத்தான் அனுமதிக்கப்பட்டான். இயேசுவை போலவே ஆவியானவர் நம்மையும் வனாந்த்திரத்திற்க்கு கொண்டு செல்வார் என எதிர்பார்க்க வேண்டாம். நமக்கு வேண்டுமானால் நாம்தான் செல்ல வேண்டும்.
ஊழியர்கள், தங்கள் சபை விசுவாசிகள் ஒவ்வொரு ஞாயிறும் சபை ஆராதனைக்கு வருவதிலேயே திருப்தியடைந்து விடுகின்றனர். ஆனால் அனேக விசுவாசிகளுக்கு அது போத மாட்டேன் என்கிறது. நீரானது நீராவியாக மாற வேண்டுமானால் அது தொடர்ந்து சூடுபடுத்தப்பட வேண்டும். ஆனால் விட்டு விட்டு சூடுபடுத்தப்படும் நீர் நீராவியாக மாறுவதற்க்கு வாய்ப்பில்லை. அடி மேல் அடி வைத்தால்தான் அம்மியும் நகரும் என்பது பழமொழி.
இது போன்ற பிரச்சனையை தீர்ப்பதற்க்கு தேவ சமூகத்தில் நம்மை இருக்க பயிற்றுவிக்கும் கூட்டங்கள் உதவுகின்றன. ஆனால் இதை சரியானபடி செய்ய அந்த ஊழியர்களுக்கும் தெரிந்து இருக்க வேண்டும். மேலும் இவர்கள் உண்மையானவர்களாகவும், தேவ பக்தி மிகுந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இது போன்ற கூட்டங்களில் கலந்து கொள்வதால் மனிதனுக்கு நன்மையே. உதாரணமாக அதிகாலையில் எழ விருப்பமுள்ள ஆனால் முடியாத மனிதன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது வேறு வழியில்லாமல் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டியதாயிருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து செய்யும் போது அது பழக்கமாகி அவன் அதற்கு பிறகு அதிகாலையில் எழுந்து கொள்ளுகிறான். இது போல கூட்டங்களின் மூலம் ஒரு மனிதனை தினமும் வேதம் வாசிக்கும்படி செய்யவும், தினமும் ஜெபிக்கும்படி செய்யவும், தன் வேலையை தானே செய்து கொள்ளும்படி செய்யவும் (இப்படி பல) முடியும். பல வருடங்கள் போதித்தும் ஒரு ஊழியரால் சாதிக்க முடியாததை இது போன்ற கூட்டங்கள் நடத்துவதன் மூலம் சாதிக்க முடியும்.
(தொடரும்)
-- Edited by SANDOSH on Sunday 22nd of August 2010 07:37:00 PM