நம் தேவன் பேச தெரியாத ஒரு விக்கிரகம் அல்ல! அவர் தம்மை தேடுபவர்களிடம் பேசும் ஜீவனுள்ள மெய்யான தேவனாயிருக்கிறார் .
I தெசலோனிக்கேயர் 1:9ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்,
அவர் மட்டுமா ஜீவனுள்ளவர்? அவர் வார்த்தைகளும் கூட ஜீவனுள்ளது என்று வேதம் சொல்கிறது.
I பேதுரு 1:23அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
இந்த ஜீவனுள்ள தேவன் தனது ஜீவனுள்ள வார்த்தைகள் மூலம் மனிதர்களிடம் பேசுகிறார். ஆனால் அதை அறிவதற்கும் உணர்வதக்கும் தேவையான ஞானம் அனேக மனிதர்களுக்கு இருப்பதில்லை.
அவர் ஆதியிலிருந்தே தான் சிருஸ்டித்த மனிதர்களுடன் பேசி உறவாட வாஞ்சை உள்ளவராக இருந்தார். ஆதாம் ஏவாளுடன் உறவாடி மகிழ்ந்தார் அனேக பரிசுத்தவான்களிடம் தேவன் தொடர்புகொண்டு பேசி தனது திட்டங்களை வெளிப்படுத்தியதோடு, தனது ஊழியக்காரர்களுக்கு தெரிவிக்காமல் ஒரு காரியத்தையும் நான் செய்யமாட்டேன் என்றும் வாக்கு கொடுத்திருக்கிறார்.
ஆமோஸ் 3:7கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.
அந்த வார்த்தைகளின்படி சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் ஏதாவது ஒருவருக்கு தெரிவிக்காமல் ஆண்டவர் இதுவரை எதுவும்செய்வதில்லை. அவர் எசேக்கியலுடன் மட்டும்தான் பேசுவேன் என்றோ பவுலுக்கு மட்டும்தான் எதையும் வெளிப்படுத்துவேன் என்றோ எங்கும் கூறவில்லை மாறாக
சங்கீதம் 91:15அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்;
எரேமியா 33:3என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
என்று மிக தீர்க்கமாக தெரிவித்திருக்கிறார். அவர் பொய் சொல்ல ஒரு மனுத்திரன் அல்ல!
அது மட்டுமா!
ஏசாயா 30:21நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.
அவர் நமக்கு சொல்லும் அறிவுரைகள் நமது காதுகளில் கேட்கும் அளவுக்கு இருக்கும் என்றுகூட தெரிவிக்கிறார்.
எனவே அன்பானவர்களே அவருடைய வார்த்தைகளை நீங்கள் கேட்கவில்லை என்றாலோ அவருடைய வெளிப்படுத்தல்களை நீங்கள் அறியவில்லை என்றாலோ அவர் பேசமாட்டார் என்று முடிவு எடுக்கவேண்டாம்
ஒரு செவிடனிடம்போய் நாம் என்னதான் கத்தி பேசினாலும் அது அவனது காதில் விழாது அதுபோல் ஆவிக்குரிய காது மந்தநிலையில் உள்ளவர்களும் இருதயத்தில் விருத்தசேதனம் இல்லாதவர்களுக்கும் அவர் பேசுவதும் அவர் வெளிப்படுத்துவதும் கேட்காது/புரியாது. அதற்காக தேவன் பேசவில்லை அவர் பேசமாட்டார் என்று முடிவெடுப்பது ஒரு செவிடன் உலகில் உள்ள எல்லோரும் பேச தெரியாதவர்கள் என்று முடிவெடுப்பதற்கு சமம்.
ஒரு சிலர் தேவன் சொல்லாத வார்த்தைகளை கூறி மனிதர்களை வழிவிலக செய்யலாம் அதற்காக எல்லாமே உண்மையல்ல என்ற முடிவுக்கு வரவேண்டாம்; இவ்வாறு தேவன் சொல்லாததை சிலர் சொல்வது என்பது புதியதல்ல. வேதாகம காலத்திலேயே அதுபோல் சம்பவங்கள் அநேகம் நடந்துள்ளன. எரேமியாவின் நாட்களில் அனனியா என்ற தீர்க்கதரிசி அதுபோல் பேசியிருக்கிறான்.
எனவே ஒருவர் வெளிப்படுத்தும் காரியங்களை ஆண்டவரின் ஆவியின் துணையுடன் ஆராய்ந்து பார்ப்பதுதான் ஏற்றதேயன்றி, தற்காலங்களில் தேவன் எங்கும் பேசவில்லை, அவர் பேசவும் மாட்டார், என்று இஸ்லாம் சகோதரர்கள் சொல்வதுபோல் நம்பிக்கொண்டு இருப்பது தேவனின் வல்லமையை குறைத்து காண்பிப்பதொடு அது ஆவிக்குரிய ஒரு மந்தநிலையே ஏற்ப்படுத்தும்.