வெற்றிகள் பல குவித்த வலிமையான ஒரு இராஜாவானவன் ஒரு பெரிய யுத்தத்தை நடத்தி எதிரி நாட்டு ராஜாவை கொலை செய்து அவனது கிரீடத்துடன் பெருமையாக தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான்;
காட்டுப் பகுதியின் வழியே செல்லும் வழியில் ஓய்வெடுக்க விரும்பி அன்று மாலையில் தனது போர் வீரர்களுடன் தங்கினான்;அவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு அருகில் ஒரு ஆசிரமம் இருந்தது;இராஜா அந்த ஆசிரமத்துக்குச் சென்று முனிவரை சந்தித்து மரியாதை செலுத்த எண்ணி தனது வீரர்களை அனுப்பி உத்தரவு கேட்டு வரச் சொன்னான்;
ஆனால் முனிவரின் சீடர்களோ இன்றைக்கு குருவை சந்திக்கமுடியாது; அவர் ஓய்வில் இருக்கிறார்;நாளைக்கு நீங்கள் வரலாம் என்று கூறிவிட்டார்கள்;
மறுநாள் காலையில் இராஜா தனது மேன்மையான ஆடம்பர ஆடை அலங்காரத்துடனும் மந்திரிமார் மற்றும் உதவியாளர்களுடனும் முனிவரை சந்திக்க ஆர்ப்பாட்டமாக வந்தான்;
முனிவர் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்து தன்னைச் சுற்றிலும் திணைகளை வீசிக் கொண்டிருந்தார்;அவற்றை பொறுக்க நூற்றுக்கணக்கான பறவைகள் கூடிவிட அந்த காட்டுப்பகுதியே பறவைகளின் சத்தத்தால் நிறைந்தது;
இராஜா முனிவரை நோக்கி முன்செல்ல முனிவரோ நிமிர்ந்தும் பார்க்காமல் திணைகளைக் கொறித்துக் கொண்ட பறவைகளின் மீதே கவனமாக அதனை இரசித்துக் கொண்டிருந்தார்;
இராஜாவும் பொறுமையாக "வந்தனங்கள் குருவே" என்றார்;முனிவரிடம் எந்த பதிலும் இல்லை;இராஜா இன்னும் சத்தமாக,"வந்தனங்கள் குருவே" என்றார்;முனிவரிடம் எந்த சலனமும் இல்லை;இராஜா சற்று கோபமான தொனியில்,"குருவே நான் வந்தனம் என்கிறேன்" என்றான்,சத்தமாக.
முனிவர் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல்,"ஏன் சத்தமிடுகிறாய்,பறவைகள் பயந்துவிடும்" எனவும் இராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது;"நான் யார் என்று தெரியுமா" எனக் கத்தினான்;
முனிவர் அமைதியாகச் சொன்னார்,"ஆம்,நீ யார் என்று எனக்குத் தெரியும்,நீ ஆதிக்கவெறியினால் கொலைசெய்பவன்,அந்த ஆதிக்க வல்லமை நிரந்தரமானதல்ல என்பதை நீ அறியாதிருக்கிறாய்;இன்னொரு ஆதிக்க வெறி பிடித்தவன் உன்னையும் கொலை செய்வான்,உனது ஆதிக்கவெறியே உனது வீழ்ச்சிக்கும் காரணமாக அமையும்" என்றார்.
இராஜா உக்கிரத்துடன் முனிவருக்கு அருகில் வந்து,"உன் அறியாமை எல்லை மீறிவிட்டது, இப்போதே உன் தலைசீவுகிறேன்,பார்" என்று கூறிக் கொண்டே தனது வாளை உருவினான்;
உடனே அங்கே திணை பொறுக்கிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பறவைகளும் ஒரே நேரத்தில் பாய்ந்து இராஜாவைத் தாக்கின;இராஜாவின் தலையிலும் தோளிலும் கண்களிலும் முகத்திலும் தங்கள் கூரிய அலகினால் கொத்தின;இராஜா அலறிக்கொண்டே அவ்விடம் விட்டு உயிர் தப்பி ஓட முயற்சித்தும் விடாமல் துரத்தின;
உடனே முனிவர் பறவைகளை நோக்கி,"செல்லங்களே,அவரை விட்டு விடுங்கள்,அவர் நம்முடைய விருந்தாளி,அவருக்கு கெடுதல் செய்யக்கூடாது" என்று சொன்னதும் அத்தனைப் பறவைகளும் அந்த முனிவரின் காலடியில் வந்து அமர்ந்தன;
முனிவர் இராஜாவை நோக்கிச் சொன்னார்,"இராஜாவே,இந்த பறவைகளுக்கு நான் அன்பைத் தவிர ஒன்றையும் செய்யவில்லை,அன்பின் வலிமையை உணர்ந்தாயா? ஆதிக்க வெறி உன் கண்களைக் குருடாக்கி கொலைகளைச் செய்யவைத்தது;இந்த பறவைகளும்கூட உங்களைக் கொலைசெய்திருக்கும், ஆனால் அவை எனது அன்புக்குக் கட்டுப்பட்டிருக்கிறது;நானும் அவற்றை ஒரு அரசனைப் போல ஆளுகிறேன்; ஆனால் அன்பினால் மட்டுமே;அது மட்டுமே இந்த பூமியில் சக்திமிக்கது."
நாம் எதைச் சேர்த்தோம் என்பதைவிட எதை சிந்தினோம் என்பதிலேயே நாம் வாழும் வாழ்க்கையின் தரம் விளங்கும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)