Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பால் பிரசங்கியார்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
பால் பிரசங்கியார்
Permalink  
 


ஓ..தேவ மனிதனே( full story..)

பேய்குளம் என்ற ஊரில் இருந்து கருங்குளம் வர சுமார் இருபது மைல் .

பேய்குளத்தில் இருந்து நேராக வடக்கு நோக்கி கருங்குளம் செல்லும் பாதையில் நடந்து போனால் சுமார் நான்கு மணி நேரத்தில் கருங்குளம் போய் சேரலாம்.இடையில் எதாவது மாட்டுவண்டி வந்தால், அதில் இடம் இருந்தால் , அதில் ஏறிக்கொள்ளலாம். மேலும் நம்மைப் போல நடந்து சென்று கொண்டிருக்கும் யார் கூடயாவது பேசிக்கொண்டே போனால் தூரம் கடந்து போவது தெரியாது.

அன்று பால் பிரசிங்கியார் பேய்குளம் சாலையில் வடக்கு நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.பேய்குளத்தில் இருந்து கருங்குளம் வழியாக திருவைகுண்டம் போகும்பேருந்து அன்று வரவில்லை.காலையில் எட்டுமணிக்கு வரக்கூடியது.ஏனோ வரவில்லை

பால்பிரசங்கியாருக்கு பேய்குளத்தில் ஒரே ஒரு விசுவாசிதான் மிக நல்ல அறிமுகம்.
அவர் பெயர் சங்கரவேல் பேய்குளத்தில் கிழக்குபக்கம் உள்ள சலவைத் தொழிலாளிகள் குடியிருப்பில் வாழ்கிறார்.
பெந்தேகோஸ்தே இயக்கம் வளர துவங்கிய காலத்தில்
சமுதாயத்தில் தங்களை மேல்ஜாதிக்காரர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் யாரும் பெந்தேகோஸ்தே ஆராதனையில் கலந்து கொள்வது கிடையாது.

ஆனால் பாவப்பட்ட எளிய மக்கள் இயேசுவை ஏற்று கொண்டு அவர்களுக்கு தெரிந்த அளவு ஆராதனை செய்தார்கள்.
பெந்தேகோஸ்தே கூட்டத்தாரை தாலியறுத்தான் வேதக்காரர்கள் என்றும், அவுத்து போட்டுகொண்டு ஆடுகிறவர்கள் என்றும் ஏளனமாக பேசி எள்ளி நகையாடிய காலம் அது.

சங்கரவேல் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட விதம் வித்யாசமானது.

ஒருநாள் வெள்ளாவியில் வைத்து அவித்த துணிகளை குட்டையில் உள்ள தண்ணீரில் போட்டு அலசிக் கொண்டிருந்தான்.
திடிரென்று அடிவயிற்றில் ஏதோ சுருட்டி இழுப்பதுபோல வலி.
துடித்து தண்ணீருக்குள் விழுந்து விட்டான்.
பக்கத்தில் குளிக்க வந்தவர்களும் மற்றவர்களும் சங்கரவேலை இழுத்து கரையில் போட்டனர்.

சங்கரவேல் வலியால் துடித்துக் கொண்டிருந்தான்.
சங்கரவேலை காப்பாற்றிய மேல்ஜாதிக்காரர்கள் …இவ்வளவு செய்ததே பெரிய விஷயம் என்று சொல்லிவிட்டு போய் விட்டனர்.

சங்கரவேல் ஈரத்துடன் தரையில் சுருண்டு படத்துகிடந்தான்.
எங்கெல்லாமோ அலைந்து விட்டு முகம் கழுவுவதற்காக அந்த பக்கம் வந்தார் பால்பிரசங்கியார்.

சங்கரவேலை பார்த்தவுடன் அருகில் சென்று அவனை பார்த்தார்.
சங்கரவேலுக்கு ஏதோ பிரச்சனை என்று மட்டும் தெரிந்தது.அவனிடம் எதுவும்கேட்காமல்..,

சங்கரவேலின் தலையில் வலது கையை வைத்து…

ஆண்டவரே இந்த மகனை குணமாக்கும் என்று இரண்டு வார்த்தைகள் சொல்லி இயேசுவின் நாமத்தில்…………………..என்று முடிக்குமுன் சங்கரவேல் எழுந்து உட்கார்ந்து விட்டான்.

வேதனை போன இடம் தெரியவில்லை.

பால்பிரசங்கியாரின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தான்.

பால்பிரசங்கியார் அவனைத்தூக்கி மனிதர்களை வணங்குவது பாவம்.

நீ ஆராதிக்க ஒருவர் உண்டு .அவர் பெயர் இயேசு கிறிஸ்து என்று கூறினார்.

சங்கரவேலு அவரிடம் இரகசியமாய் ஒன்று கேட்டான் .
என்னை எப்படி குணமாக்கினீர்கள் ….என்று .

பால் பிரசங்கியார் அவனிடம்

இயேசுகிறிஸ்துவின் பெயரை சொல்லி ஸ்தோத்திரம் சொன்னால் நோயும்
பேயும் பறந்து விடும் என்று கூறினார்.

சங்கரவேல் அவரிடம் மிகவும் பணிவுடன் நடந்து கொண்டான்.

தன் விட்டிற்கு அழைத்துச் சென்றான்.தன் மனைவியிடம் தனக்கு நடந்ததை ரொம்ப மிகைப்படுத்தி கூறினான்.
தான் இரத்தமாக வாந்தி எடுத்ததாகவும் ,
வலிப்பு வந்து கரையில் இழுத்துகொண்டு கிடந்ததாகவும் பால்பிரசங்கியார் வந்து அவனை பார்த்து….

சீ.. எழும்பு……என்று அதட்டினதாகவும் உடனே தன் உடம்பில் இருக்கும் அத்தனை நோயும் பறந்து விட்டதாகவும் கூறினான்.

தன் மனைவி எப்படியும் அவரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும் என்பதற்காக அப்படி சொன்னான்.இனிமேல் நாம் இயேசு கிறிஸ்துவைத்தான் வணங்கவேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகவும் கூறினான்.

அவன் மனைவி ஒன்றும் சொல்லவில்லை.
பால் பிரசங்கியார் தங்கள் வீட்டில் சாப்பிட மாட்டாரே ..!.அவர் மேல்ஜாதிகாரர் போல தெரிகிறதே என்று தன் கணவனிடம்கேட்டாள்.
இவர்களின் போராட்டம் ஆவியானவரால் பால்பிரசங்கியாருக்கு உணர்த்தப் பட்டது. அவர் சங்கரவேலை அழைத்து அவனிடம் பழைய சாதத்தில் ஊற்றபட்ட நீர்த்த தண்ணீர் இருக்குமா..? என்று கேடடார்.

சங்கரவேலுக்கு தாங்கமுடியாத சந்தோசம்.

மனைவியிடம் ஓடினான் .பிரசங்கியார் நீர்த்த தண்ணீர் கேட்கிறார் என்றான்.

அவர்களுக்கு புரிந்து விட்டது. பிரசங்கியார் தங்கள் வீட்டில் சாப்பிடுவார்…. என்று..

கொஞ்சம் மோரில் தண்ணீரை ஊற்றி கொஞ்சம் உப்பும்சேர்த்து பால்பிரசங்கியாரிடம் கொண்டு வந்தான்.

பிரசங்கியார் அதற்குள் பக்கத்தில் இருந்து பொதி மூட்டையில் தலை சாய்த்து தூங்கிகொண்டிருந்தார்.

இதை பார்த்த சங்கரவேலுக்கு சொல்ல முடியாத ஆனந்தம்.
பொதி மூட்டையில் சாய்ந்து உறங்கும் மனிதன் தம்மோடு நிச்சயம் தங்குவார் என்று நினைத்து கொண்டான்.
பக்கத்து குடிசைகளுக்கு ஓடிப்போய் குட்டையில் தனக்கு நடந்ததை மீண்டும் மீண்டும் மிகைப்படுத்தி கூறி அந்த மக்களை திகைக்க வைத்தான்.

பால் பிரசங்கியார் உறக்கத்தில் இருந்து விழிக்கும்போது அவரின் கால்மாட்டில் நிறைய நோய்வாய் பட்டவர்களும் பேய் பிடித்தவர்களுமாக கூடியிருந்தனர்.

பால்பிரசங்கியாருக்கு கொஞ்சநேரம் எதுவும் புரியவில்லலை.

பின்பு விளங்கி கொண்டார்.
அவர்களுக்கு இயேசுவின் அன்பை பற்றியும் அவரின் சுகமாக்கும் வல்லமையை பற்றியும் கூறினார். சங்கரவேலுக்கு இதெல்லாவற்றையும் விட அங்கு அற்புதம் நடப்பதை பார்க்க வேண்டும். அதற்காக ஆவலாக எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தான்.

அங்கே கூட்டததில் சலசலப்பு .
திரும்பி பார்த்தார் பால் பிரசங்கியார் .

கால்களில் சங்கிலிபோட்டு கட்டபட்ட ஒரு வாலிபனை எட்டு பேர் சேர்ந்து தூக்கி கொண்டு வந்தனர்.
அவன் காட்டு கூச்சல் போட்டு கொண்டிருந்தான்.
பால் பிரசங்கியாருக்கு முன்னே இருபது அடி தூரத்தில் அவனை அமுக்கி பிடித்தபடி இருந்தனர்.

பால் பிரசங்கியார் வேதத்தில் இருந்து இயேசு குணமாக்கின மனிதர்களை பற்றி அவர்களுக்கு கூறிக்கொண்டிருக்கையில்… பேய்பிடித்த வாலிபன் தன்னை பிடித்திருந்தவர்களை ஓங்கி உதிறிவிட்டு பால் பிரசங்கியாரை நோக்கி பாய்ந்து வந்தான்.

பாய்ந்து வந்தான் என்று சொல்வதைவிட பறந்து வந்தான் என்று சொல்லவேண்டும்.

சங்கரவேல் பதறி தூணோடு ஒட்டிக்கொண்டான்.

பறந்து வந்த மனிதன் பால் பிரசங்கியாரின் காலடியில் வந்து விழுந்தான். மூச்சும் இல்ல பேச்சும் இல்லை

சற்று நேரத்தில் எழுந்து உட்கார்ந்து விட்டான்.

கூட்டம் திகைத்தது.
ஐந்து வருடம் பையித்தியமாய் இருந்தவன் ஐந்து நிமிடத்தில் சுகமானது எவ்வாறு..?

பால்பிரசங்கியாரிடம் மிகுந்த பயபக்தியாய் நடந்து கொண்டார்கள்.

ஆனால் தங்கள் குல தெய்வத்தை யாரும் விட்டு விடவில்லை.
சங்கரவேல் ஒன்றைப் புரிந்து கொண்டான்.

இயேசு என்ற பெயரை சொன்ன மாத்திரத்தில் எப்பர்பட்ட நோயும் குணமாகும்.ஆகவே தாமும் இதை பரிசோதித்து பார்த்தால் என்ன என்று நினைத்தான்.

முதலில் தன்னிடம் சீர் தட்ட வரும் பிளிளைகளிடம் பரிசோதிக்க ஆரம்பித்தான்.

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்….. ஸ்தோத்திரம்…. ஸ்தோத்திரம்… ஸ்தோத்திரம்….(மிக மெதுவாக..கூறி..)கடைசியாக இயேசுவின் நாமத்தில்….ப்..போ பிசாசே என்று ..சத்தமாக சொல்லுவான் ..

மிக அதிசயமாக எல்லா குழந்தைகளும் பூரண சுகம் அடைந்தார்கள். சங்கரவேல் தன்னை மிக பக்திமானாக ஆக்கிகொண்டான்.அவன் வீட்டில எப்போதும் நோயாளிகள் கூட்டம்.
இப்பேர் பட்ட சங்கரவேலை பார்த்துவிட்டுதான் அன்று பால் பிரசிங்கியார் வந்து கொண்டிருந்தார் ..
அவரின் காலை சாப்பாடு வயிற்றிற்குள் எதோ செய்தது.
கொஞ்சம் ஒதுங்கினால் நல்லது என்று நினைத்தார் .தூரத்தில் ஒரு கிணறு தெரிந்தது .அதனை நோக்கி நடந்தார்.
அந்த கிணற்றில் அவருக்கு ஏற்படப்போகும் ஆபத்தை அவர் அப்போது உணரவில்லை
அந்த பகுதியில் காணம் பயிரிடபட்டதற்கான அறிகுறிகள் தெரிந்தது.
ஆங்காங்கே சில காணப்பயிர்கள் வளர்ந்து காணப்பட்டது .
ஒருசிலவற்றில் காணமும் இருந்தது.

வயிற்று கழிவை போக்குவதற்காக ஒரு முள் மரத்தடிக்கு சென்றுவிட்டு பின் தன்னை சுத்தம் செய்வதற்காக கிணற்று பக்கம் போனார்.

ஒரு விஷயத்தை உங்களுக்கு இதுவரை நான் சொல்ல வில்லை.
அவருக்கு வலது கை சரியாக வேலை செய்யாது.
அதாவது முழுவதுமாக மேல்நோக்கி தூக்க முடியாது. கிணற்றிற்குள் எட்டிப்பார்த்தார் .

பதினைந்து அடிக்கு கிழே தண்ணீர் இருந்தது.
சுவரில் கால்மிதத்து இறங்க ஒரு கல் இருந்தது.

அதன் அடியில் மற்றொன்று. பின் அடிப்பாகம்வரை செல்ல ஓரமாக படிக்கட்டு இருந்தது..

இலகுவாக இறங்கிவிடலாம்.தன் வேஷ்டி ஜிப்பா எல்லாவற்றையும் அவிழ்த்து கரையில் வைத்து விட்டு ,ஒரு துண்டை மட்டும் இடுப்பில் கட்டி கொண்டு மெதுவாக கிணற்றிற்குள் இறங்கினார்..
கை..கால் எல்லாம் தண்ணீரில் துடைத்து கொண்டு மேலே ஏற ஆயத்தம் ஆனார்.

ஒரு கையால் மேலே உள்ள கல்லை பற்றிபிடித்து கொண்டு உடம்பை மேல்நோக்கி தூக்கினார்.ஆனால் மொத்த பாரமும் அவரை கீழ்நோக்கி இழுத்தது.

சரியாக வேலை செய்யாத வலதுகை யால் எதையும் இறுக பற்ற முடியவில்லை…

பால் பிரசங்கியாருக்கு நன்றாக புரிந்தது,தன்னால் மேலே ஏறமுடியாது என்று.

கிணற்றில் ஓரமாக நின்று கொண்டு யோசித்தார் .
இது பலரும் வந்து போகும் இடம் அல்ல.யாராவது வரலாம்.வராமலும் இருக்கலாம்.எப்போது யார் வருவார்கள்..? .அதுவரைக்கும் காத்திருக்க வேண்டுமா...

கிணற்றில் ஓரமாக அடிப்பாகம் நோக்கி போகும் படிக்கட்டில் ஓரமாக இருந்து கண்களை முடிக்கொண்டார்.
மனது நம்பிக்கை இழக்காமலிருக்க வேண்டுதல் செய்தார்.

இந்த கிணற்றுக்குள் சமாதியாகவா கர்த்தர் அழைத்தார்.

மனது கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்து அழுதது .

கிணற்றிற்குள் வெயில் சுள்ளென்று அடித்தது.

வாரா வினை வந்தாலும் சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே
மரணம் உறுகின்ற தருணம்வந்தாலும்
மருள விழாதே நல் அருளை விடாதே
வையகமே உன்குய்ய ஓர் நிலையோ
வானவனை முற்றும் தானடைவாயே.

ஒரு ஓரமாய் கண்களை மூடிதியானத்தில் இருந்தவருக்கு யாரோ பிடித்து தள்ளுவது போல உணர்ந்தார்.திடுக்கிட்டு கண்ணை திறந்து பார்த்தார்.ஆச்சரியம்;

அவர் கிணற்று கரையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.வானத்தை அண்ணார்ந்து பார்த்து கண்ணீர் விட்டார்.

பரலோகத்தின் அருளின் பொருளே
நரலோகரில் அன்பேனைய்யா
ஆழம்அறிவேனோ
அன்பின் ஆழம் அறிவேனோ.
அன்பே அன்பே
அன்பே ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தமே ..

பாடல் மளமளவென்று உரு ஏறியது.

இந்தபாடல் இன்று வரை அனேகரால் பாடப்படுகிறது

--------------------------------------------------------------------------------------------------------------------------------
பெந்தேகோஸ்தே சபைகள் ஆரம்ப காலத்தில் வளர்ந்த விதம் மிக கடுமையான பாதையில்தான்;
நகை போடக்கூடாது……
தாலி போடக்கூடாது…

மருந்து எடுக்ககூடாது…என்று அவர்களுக்கு உபதேசம் செய்யப்பட்டது.

ஏற்கனவே நகை போட்டவர்கள் நகைகளை கழட்டினார்கள்.
தாலி போட்டிருந்தவர்கள் தாலியை கழட்டினார்கள்..

ஆகவே சபையில் ஆள்சேருவது என்பது மிக கடினமாய் இருந்தது.

இதையும் மீறி விசுவாசிகள் சபையில் சேர்ந்தனர்.
போதகர்கள் கையினால் அற்புதங்கள் சாதாரணமாய் நடைபெற்றது.
ஆனால் விசுவாச வீடு எனப்படும் faith home ல்..பாதிநேரம் பட்டினிதான்…

ஆனால் இந்த பேதைகள் கூடி ஆராதிக்கும் போது கர்த்தருடைய மகிமை இறங்கும்….

இதை நான் சிறுவயதிலே நன்றாக உணர்ந்திருக்கிறேன்.

வரிசையாய் ஆண்கள் பாயில் உட்காந்து பாடுவார்கள் ..

உச்ச ஸ்தாயில் பாடும்போது ஆண்களின் குரல் வானம் வரை எட்டி பிடிக்கும்.

இசைக்கருவி என்பது டிரம் மட்டுமே.

ஆனால்கையை தட்டி பாடும்போது ..அதற்கு நிகராக நான் இதுவரை எங்குமே பாடல் கேட்டதில்லை

ஒரு நகிழ்ச்சியை மட்டும் கூறிவிட்டு கதையை தொடர்கிறேன்.

பாளையங்கோட்டைக்கு ஒரு முறை சாது ஏசுதாசன் கன்வென்சனில் பேச வந்திருந்தார் (கிருபாசன சபை ஸ்தாபகர்..)

.நாங்கள் இசைக்கருவிகளுடன் முதலில் அழகாக பாடினோம்.

இறுதியாக சாது மைக் முன்னே வந்து நின்றார்.

மெலிந்த தேகம் .தாடியுடன் கூடிய எளிமையான தோற்றம்.

தொண்டையை செருமிக்கொண்டு .கைகளை தட்டி பாட ஆரம்பித்தார்.

வானந்திறந்தருளும் பல
தானங்களை இந்நேரமதில்
வானவனே ஞான முள்ள வல்ல குரு நாதனே
தேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள்.

அவர் கைதட்டின ஓசை இருக்கிறதே… அப்பப்பா….

இது வரைக்கும் அப்படி கைதட்டின ஒரு நபரை நான் பார்த்ததே இல்லை..

கூட்டம் அவரோடு பாட ஆரம்பித்தது.
அவ்வளவுதான்..

ஒரு நிமிடத்தில் கூட்டத்தினரின் மேல் ஆவியானவர் வல்லமையாய இறங்கினார்.ஆண்களும்பெண்களும் ஆரவாரித்தார்கள். அங்கே இசைக்கருவிகள் செயலிழந்தன..

இப்படி சாதாரனமான ஆட்கள்தான் அந்த காலத்தில் போதகர்களாக இருந்தனர்…(இதற்கு கிழே நான் எழுதுவது ….பாளை மனோஸ் பாஸ்டர் பத்திரிக்கையில் எழுதியதும்…பால் பாஸ்டரிடம் நானே கேட்டதுமாகும்…)

அப்படி ஒருவர்தான் அருளப்பன் என்னும் போதகர்.

இவர் மதுரையில் (கரிமேட்டில்..) ஊழியம் செய்து கொண்டிருந்தார்.
இலங்கை பெந்தேகோஸ்தே சபையின் சார்பாக வேலை செய்தார்.
இருக்க வீடு இலலை..
ஆகவே பகல்நேரம் தென்னந்தோப்பில் தங்குவதும் இரவில் இரயில்வே பாலத்தின் கீழும் தங்கி ஊழியம் செய்தார்.

மிகுந்த பிரயாசத்துக்கு பின் ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு பிடித்து அதிலே தொடர்ந்து வேலை செய்தார்.

ஆரப்பாளையம் ,கரிமேடு . மஹபுபாளையம் இப்பதியில் ஏழுபேரை இரட்சிப்புக்குள் வழி நடத்தினார்….அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும்.

பாஸ்டர் அருளப்பன் அவர் சபையின் மூத்த போதகர்களால் பாஸ்டர் பட்டம் பெறவில்லை.
ஆகவே ஞானஸ்நானம் அவர் கொடுக்க கூடாது.

இலங்கையில் உள்ள தலைமைக்கு தெரியபடுத்தனார். அப்போது இலங்கையில் இருந்து பால் பாஸ்டரையும் நல்லையா பாஸ்டரையும் தலைமை அனுப்பியது.

இருவரும் மதுரை கரிமேடு வந்துசேர்ந்தனர்.
அப்போதெல்லாம் ஞானஸ்நானம் என்பது ஊர் அறிய உலகறிய கொடுக்கபடும்.

ஆற்றில்வைத்து ஞானஸ்நானம் எடுப்பதையே மக்களும் விரும்பினார்கள்.

ஆகவே இவர்களும் ஆற்றில் ஞானஸ்நானம் கொடுப்பதற்காக சென்றார்கள்.

ஆரப்பாளையம் ரயில்வே பாலத்துக்கு கீழேதான் தண்ணீர் கொஞ்சம் அதிகமாக இருக்குமாம்.
இவர்கள் போன நாள் அன்று ஆற்றில் தேவையான அளவு தண்ணீர் இல்லை.

ஞானஸ்நானம் பெறப் போனவர்களும் பாஸ்டர்களும் சோகமடைந்தனர்.

அங்கேயே மணலில் முழங்காலிட்டு ஜெபித்தனர்..கொஞ்சம் விசுவாசம் பெலப்பட நாளை வருவோம் கர்த்தர் நாளைக்குள் அற்புதம் செய்வார் என சொல்லி
விசுவாசிகளை அனுப்பி விட்டு .(..நல்லையா பாஸ்டர் நன்றாக வயலின் வாசிப்பாராம்.)
இருவரும் அதிக பாரத்துடன் ஜெபித்தார்களாம்…பாடல் வரிகள் மெல்ல மெல்ல வரத்தொடங்கியது.

யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
யோசனையால் உன்னை கலக்காததே உள்ளமே

வைப்பாயுன் காலடி தற்பரன் சொற்படி
வானவன் இயேசுதான் வாக்கு மறாரே
வானவன் இயேசுதான் வாக்கு மறாரே

பாடல் முழுவதுமாக வளர்ந்து முடிந்தது.
இருவரும் விசுவாச வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

அற்றின் கரையில் ஏறி கால் வைக்கும்போது மெல்லிய மழை துளி ஒன்று பால் பிரசங்கியாரின் தலையில் விழுந்தது.
நிமிர்ந்து வானத்தை பார்த்தார்.

வானம் மெதுவாக கருக்க ஆரம்பித்திருந்தது..
வேகமாக வீட்டைவந்தடைந்தனர்.

அன்று இரவு பெய்த பேய் மழையால் ஆற்றில் தண்ணீர் தாறுமாறய் ஓடியது.

அடுத்த நாள் அந்த ஏழு பேருக்கும் ஞானஸ்நானம் கெடுக்கபட்டது.

அந்த அதிசயத்தை பார்த்த ஒரு அம்மா மஹபுபாளையத்தில் ஆராதனை கட்டடம் கட்ட கொஞ்சம் இடம் இலவசமாக கொடுத்திருக்கிறார்கள்.

அந்த இடத்தில் இப்போது TPM சென்டர் சபை உள்ளது.

மேலப்பாளையம் சந்தையில் முகப்பில் உள்ள உசிலமரத்தடியில் நான் ஸ்கூட்டரை நிறுத்தும் போது மணி மதியம் 12:30..
அங்கு கருவாடு வாங்குவதற்கு……(என் கடையில் வைத்து விற்பனை செய்ய..)….சென்றிருந்தேன்.
மஞ்சப் பாறை. சீலா.சாளை .வாளை எது கிடைத்தாலும் வாங்க வேண்டியது தான். முடிவுடனே சென்றேன்.
அது மாட்டுச் சந்தை. ஏகபட்ட மாடுகளின் கூட்டம்.

கருவாட்டுக் கடைகள் இருப்பது இந்த மாடுகளை தாண்டிசென்றால் அந்தபக்கம் கருவாட்டுக்கடைகள்.
இடத்திற்கு தகுந்த மாதிரி என்னை மாற்றிக் கொண்டேன்.
கை மடிக்கபட்ட சட்டை .
இடுப்பில் லுங்கி.
தோளில் துண்டு .இப்படி நம்ம ஊரு வியாபாரி கெட்டப்பில் போயிருந்தேன்.

அதுதான் வசதியாக இருந்தது

..மாடுகளை நல்ல விலைக்கு விற்று விட்ட திருப்தியில் பலபேர்அங்கே இருந்த ஹோட்டலில் சத்தம் போட்டு சிரித்து சாப்பிட்டுகொண்டிருந்தனர்..

வறுமையில் மாட்டை விற்றுவிட்டு தொங்கிய முகத்துடன் சிலர் என்னை கடந்து சென்றனர்.

சாட்டை கம்பு….. ,சூரி கத்தி…..,இடைவார்…..மாடுகளுக்கு கழுத்தில் கட்ட வேண்டிய மணிகள்… இவைகளை வியாபாரிகள் கூவி கூவி விற்றுக்கொண்டிருந்தனர்….

என் பர்வை இவைகளை கடந்து சென்று கொண்டிருக்கையில்…… ஒரு இடத்தல் குத்திட்டு நின்றது.
அது செருப்பு வியாபாரயின் கடை.

சாதாரண செருப்புகள் அல்ல….
அடிச்செருப்புகள்……….அதாவது செருப்பின் அடிப்பாகம் டயர் வைத்து தைக்கபட்டவை.

இன்னும் சொல்லப்போனால் ஆணியால் அடிக்க பட்டு ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கும் .

வயல்களில் வேலை செய்வோர்கள்.காடுகளில் வேலை செய்பவர்கள் .கிராமத்து மனிதர்கள்……………இவர்களுக்கு இந்த செருப்பு அவர்களின் கனவுச்செருப்பு.

எந்த முள் செடியிலும் ஏறி மிதிக்கலாம் என்பார்கள்.
இரண்டுவருடமானாலும் கல்லாய் உழைக்கும்.என சந்தோசமாக சொல்வார்கள்..

இந்த செருப்பை நான் இதற்கு முன் போட்டது இல்லை….ஆனால் பார்த்திருக்கிறேன்.

வீசைக்காரர் வெள்ளையா நாடார் இந்த செருப்பை போட்டுக்கொண்டு இடுப்பிலே நீள வெட்டருவாள் தொங்க காலையிலே உடைவெட்டும் வேலைக்கு என் வீட்டுப்பக்கமாக போவார்.

எதிரே யாராவது உறவினன் வந்தால் மிக சத்தமாக….. என்ன மப்பிளே..எப்படி இருக்கீக….என்று தெம்பாக கேட்பார்….இந்த அடிச்செருப்போடு அவர்காலை இழுத்து….. இழுத்து..(பாரம்..)…..நடந்து போகும் .அழகே அழகு.

எனக்கு அந்த கடையை தாண்ட முடியவில்ல…..எதோ ஒரு சக்தி என்னை அங்கே நிறுத்தியது..

எனக்கு அந்த செருப்புகளின் மேல் ஆசை ஆசையாய் வந்தது.
அருகே போய் அந்த செருப்புகளைப் பார்த்தேன்.
ஒன்றை எடுத்து மெதுவாக உட்பக்கமாக தடவி கொடுத்தேன் .

என் கால்களில் போட்டுப் பார்த்தேன்….கொஞ்சம் இருகலாக இருந்தது.

வேறு செருப்பை எடுத்து ஆராய்ச்சி செய்து… முடிவாக விலையை கேட்டு…. கசடி…..கொஞ்சம் குறைத்து …வாங்கினேன். கடைக்காரன் என் கைகளில் அந்த செருப்புகளை எடுத்து தந்தான்…

சந்தோசமாக அதை சுமந்தபடி இருபது அடிதூரம் வந்தேன்.என் கைகளில் இருக்கும் செருப்பை பார்த்தேன்.

அடக்கடவுளே……. இந்த செருப்பு எனக்கு எதற்கும் பயன்படாதே….

என் வாழ்கையில் எந்த பகுதியலும் பயன்படாத ஒரு பொருளை நான் ஏன் இவ்வளவு ஆசைபட்டு வாங்கினேன்…….

இப்போது அதை பார்ப்பதற்கே எரிச்சலாய் இருந்தது…

திருப்பி கொண்டு போய் அவனிடமே கொடுத்து விடலாமா..?.........யோசித்தேன்….ம்……அந்த செருப்பு தைப்பவன் என்னை மகா கேவலமாக அல்லவா நினைப்பான்.

இந்த செருப்போடு வீடு போனால் என் மனைவியின் ஒரு பார்வைக்கே என்னால் பதில் சொல்ல முடியாது…

கருவாடு வாங்க போன இடத்தில் இப்படி ஒரு வேலையா…?.....இந்த .கருமத்தை போகும்போது தூர எறிந்து விடலாம் என முடிவு செய்தேன்..

சரி கருவாடு வாங்க போகலாம் என்று கருவாட்டு கடைக்கு போனேன்.அங்கே கருவாட்டு வியாபாரி என் ஊர்க்காரன்.பெயர் செல்வராஜ்.பக்கத்தில் போனதும் அவன் கழுகுப் பார்வையில் பட இந்த செருப்பு தப்பவே இல்லை.

அண்ணே இதென்ன அடிச்செருப்பு…! இது யாருக்கு..?கேள்வி மேல கேள்வி கேட்டான்…அட போப்பா…எனக்குத்தான் என்றேன்.

விழுந்து விழுந்து சிரித்தான்.பேண்ட் போட்டு சட்டைய இன்பண்ணி இந்த செருப்பையும் போட்டா ரொம்ப சூப்பரா இருக்கும்..ணே….

ஆமா…..இவனும்…இவன் ஜோக்கும்…..எனக்கு எரிச்சலாகவும் வெறுப்பாகவும் இருந்தது.

ஒரு வழியாய் கருவாட்டை வாங்கி கொண்டு என் கடைக்கு வந்து சேர்ந்தேன்.

அங்கே வியாபார மும்முரத்தில் என்மனைவி என்னை கவனிக்கவில்லை.
அப்பாடா….நிம்மதி.

செருப்பை ஒரு மூலையில் வீசிவிட்டு நல்ல பிள்ளையாக இருந்து கொண்டேன்..

சரியாக அன்று மதியம் இரண்டுமணி இருக்கும்..

என் கடைக்கு முன்னே நேர் கிழக்கில் ஒரு உருவம் என் கடையை நோக்கி வருகிறது.அவர் நமது கதாநாயகன் பால்பிரசங்கியார்.

அப்போது அவருக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும்…

நல்ல வளர்த்தியான மெலிந்த தேகம்.
செயலிழந்த ஒரு கை ஆடாமல் அவரோடு வரும்..தோளில் ஒரு ஜோல்னா பை.

கையில் ஒரு குடை.நடக்க முடியாமல் நடந்து வருகின்றார்.

அப்போது என்கடைக்கு முன்னே மிகப்பெரிய மைதானம்தான் இருந்தது..கடையில் இருந்து பார்த்தால் மெயின் ரோடு தெரியும்.

நான் தூரத்தில் இருந்தே அவர் வருவதை கவனித்து விட்டேன்.

ஒருவாறாக வந்து சேர்ந்து விட்டார்.

வந்தவர் ஒரு சேரில் அமர்ந்து…..அப்பாடா…என்றார்

..நான் கேட்டேன்

.என்ன பாஸ்டர்…..என்ன ஆச்சு..தண்ணீர் குடிக்கீங்களா..?

அவர் ..ம்..என்றார்.

தண்ணீர் குடித்து விட்டு…என்னா வெயிலு….செருப்பு வேற அறுந்து போச்சு…அந்த தார் ரோட்டுல வெறுங்காலோட நடக்கமுடியல..என்றார்

.செருப்பில்லா அவர் கால்களை பார்த்தேன்…நடந்து நடந்து பாதத்தின் அடிப்பக்கம் தேய்ந்திருந்தது..

எனக்கு கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது.

நான் மறைத்து வைத்திருந்த செருப்புகளை எடுத்து அவரிடம் நீட்டினேன்…இது உங்களுக்கு பிடிக்குமா..? என்று ..மெதுவாக கேட்டேன்.

அவர்கைகளில் வாங்கி அந்த செருப்புகளை மேலும் கீழும் பார்த்தார்..பின் கால்களில் போட்டுப் பார்த்தார் .அது அவருக்கென செய்யபட்டது போல கன கச்சிதமாக பொருந்தியது.

சாலமன் இந்தமதிரி ஒருசெருப்பு வாங்கணுமுண்ணு ரொம்ப ஆசைபட்டேன்….கர்த்தர் இண்ணக்கிதான் தந்திருக்கார்….என்றார்.

நான் என்ன சொல்ல …!

.தூரமாய் போய் நின்று மனதிற்குள் அழுதேன்…

..நான் காத்திருந்து கர்த்தரின் சத்தத்தை கேட்பவன் அல்ல.

மணிக்ணக்காய் முழங்காலில் நிற்பவனும் அல்ல..

ஆனாலும் தனது ஊழியக்காரனின் செருப்புகள் அறுந்தவுடன் அவருக்கு தேவையான செருப்பை வாங்க சாதாரணமாண என்னை இயக்கிய தேவனை புகழ்வதா…?
..அல்லது

தேய்ந்த கால்களுடன் நடந்து திரிந்த இந்த தேவமனிதனை புகழ்வதா..?….நீங்கள்தான் சொல்லவேண்டும்….


அன்று திருநெல்வேலி வீரராகவபுரத்தில் இருந்து மேலப்பாளையம் வரவேண்டும் என்றால்…. கொக்கிரகுளம் தாண்டி நீளமான வயல் வெளிகளை ஊடுருவித்தான் வரவேண்டும்.

இரவு நேரத்தில் கும்மிருட்டாக இருக்கும்.
கள்ளர் பயம் அதிகம்.
கொக்கிரகுளத்திற்கும் மேலப்பாளையத்திற்கும் இடையில் குறிச்சி ரயில்வே நிலையம்..

கொக்கிரகுளத்திற்கும் குறிச்சி ரயில்நிலையத்திற்கும் இடையில் ஒரு இசக்கி கோயில்.

மதியம் 12மணியிலும் இர (தொடருகிறது...)

https://www.facebook.com/photo.php?fbid=711173625610525&set=a.331847173543174.76681.100001536814612&type=3&theater



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard