Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெண்கள் நம்பும் (ஏழு) பொய்கள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
பெண்கள் நம்பும் (ஏழு) பொய்கள்
Permalink  
 


டாக்டர்.லில்லியன் ஸ்டான்லி அவர்கள் சகோ.R.ஸ்டான்லி (ஆசீர்வாத இளைஞர் இயக்கம்) அவர்களின் மனைவி ஆவார். இவர் எழுத்து கொஞ்சம் சூடாக இருக்கும். இதை வாசிக்கும் வாசகர்கள் இதில் நல்ல ஆலோசனை எது?- ஏற்றுக்கொள்ளமுடியாத ஆலோசனை எது? என்பதை நிதானித்து பார்த்து பயன்படுத்திக்கொள்ளவும்.

25.jpg

1. நான் ஆணுக்குக் குறைந்தவளா?:

இல்லை. நீ குறைந்தவளல்ல. கணவன் தலையானால் மனைவி கழுத்து, இரண்டுமே முக்கியம்தான். காரில் எது முக்கியம்? ஸ்டீரிங் வீலா, எஞ்சினா, கீயரா? குடும்பம் ஓர் அமைப்பு, ஆண் எத்தனை முக்கிமோ பெண்ணும் அத்தனை முக்கியமே.

இரண்டே விதமான மக்கள்தான் உள்ளனர் - வேதத்தைச் சார்ந்தவர். வேதத்திற்குப் புறம்பானவர். பாக்கியவான்கள் யார்? ஆண்களா, பெண்களா? இயேசு போதித்தது. "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்... சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்...." "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்... நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்". ஆணோ பெண்ணோ அல்ல, "நீங்கள்" என்பதையே இயேசு பன்மையில் இருபாலருக்கும் சேர்த்து வலியுறுத்தினார். யார் பெரியவர்? ஆணா, பெண்ணா? இந்த பிள்ளையைப்போலத் தன்னை தாழ்த்துகிறவனெவனோ அவனே இறையரசில் பெரியவனாயிருப்பான்" (மத் 18:4). "இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, இறையரசில் பெரியவன் என்னப்படுவான்" (மத் 5:19). ஆணா, பெண்ணா என்று போட்டியிடுவதை விட்டுவிட்டு நம்முடைய ஆன்மீக வாழ்வில் குடும்பமாக முன்னேறுவதில் கவனம் செலுத்துவோம்.

 

நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே... ஏனெனில் உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக திருமுழுக்கு பெற்றவர்கள் எத்தனை பேரோ அத்தனை பேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே, யூதனென்றும், கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. ஆணென்றும், பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள் என்று வேதம் கூறுகிறது கலா 3:26-27. கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து ஒருவர் வரும்போது, உள்ளிருப்பவர் ஆணா-பெண்ணா என்று அறியமுடியுமா? கிறிஸ்துவை அணிந்துக்கொள்வதும் அப்படித்தான். நம் யாவரையும் ஒன்றாக்குகிறார். ஆணுக்குப்பெண் குறைவு இல்லாதவள் என்ற எண்ணம் உள்ளத்தில் ஒளிந்துகொண்டிருக்குமானால் ஆணுக்கு நிகராகக் காரியங்களைச் செய்யமுற்படுவாய். சாத்தான் முதலாவது தவறான எண்ணத்தை ஊட்டிவிட்டு, பின் உங்களை ஒரு ஆணைப்போலாகத்தள்ளி விடுவதினால், நீ தேவன் உனக்களித்த அழைப்பை அசட்டை செய்ய உங்களை தூண்டுவான். வீட்டிற்கு வெளியே பெண்கள் வேலை செய்வதற்கு வேதம் மறுப்புத் தெரிக்கவில்லை. பெண்கள் வெளி வேலையே செய்யாத யுகத்திற்கு திரும்பவேண்டுமென்று நானும் கூறவிரும்பவில்லை. ஆணுக்குக்கட்டளை இதுதான். பாடுபட்டு வியர்வை சிந்தி சம்பாதிப்பது ஆணுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை. ஆனால் பெண்ணாகிய வேதனையோடு பிள்ளை பெறுவதோடுகூட நீ கூடுதலாக உன்னை ஏன் தண்டித்துக் கொள்ளவேண்டும்?. 

பெண்கள் கூடுதல் வேலை செய்வதால் மிகவும் பாதிக்கப்படுவது ஊழியம்தான். ஊழியத்திற்கான ஜெபம் குறைவுபடுகிறது. வேலையாட்கள் பற்றாக்குறை, வேதத்தை கற்று, போதிக்க பெண் எண்ணிக்கை மிகவும் குறைவு. பெண்கள் ஊழியமும், பெண்கள் வேத ஆராய்ச்சிக் குழுக்களும் பஞ்சப்பாட்டு பாடுகின்றன. சுயாதீனத்தையும், சுய கௌரவத்தையும் நாடுவதாலேயே பெண்கள் வேலையைதேடி வேட்டையாடுகின்றனர். அவற்றை வீட்டிலேயே கொடுத்துவிட்டால்? வேலை செய்வோர் கூட்டத்தில் பெண்கள் அலையலையாய் சேருவதையும், அப்படிப்பட்டவர்கள் கைநிறைய சம்பாதித்து அட்டகாசமாய் வாழ்வதையும் காணும் இளம்பெண்கள், வீட்டில் தரித்திருக்கும் எண்ணத்தை தூர தூக்கி எறிகின்றனர்.

 

வேலை செய்தே தீரவேண்டுமென்றால் வீட்டிலிருந்தே செய்யலாம் அல்லது பகுதி நேரம் செய்யலாம். ஒரு பெண்ணின் எதிர்காலம் மெல்லிய இழையில் தொங்குவதால் அவள் ஒரு வேலையில் தேர்ச்சி பெற்றிருப்பது அவள் வாழ்க்கையில் அவசரத்திற்கு உதவும்

2. கணவனுக்கு நூற்றுக்குநூறு கீழ்ப்படியவேண்டுமா?:

இல்லை. அவசியமில்லை. கணவர் தெய்வங்களல்ல. நம்மைப்போல் மனிதர்தான். அமைப்பு செவ்வனே இயங்கும்படியாக தேவன் ஆணைத் தலையாக்கினார். நாம் தவறு செய்வதுபோலவே அவர்களும் தவறு செய்யலாம். அவிசுவாசிகளான கணவர் மட்டுமல்ல. விசுவாசிகளும்கூட தவறு செய்யலாம். கணவருக்குப் பெண்களை அடிப்பணிய அழைக்கும் முன்பாக எபேசியர் 5 அத்தியாத்தில் வசனம் 8ல் இருந்தே முன்னுரையாக பவுல் எழுதுகிறார். "முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள். இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள், வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துக்கொள்ளுங்கள்" (வச 8). குருட்டுப் பூனையைப் போல் நடவாமல் தேவன் நமக்களித்த வெளிச்சத்தில் நடக்கவேண்டும் ".... கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப் பாருங்கள்" (வச 10). நாம் செய்யப்போவது தேவனது மகிழ்ச்சியான அங்கீகாரத்தைப் பெறுமா என்பதை முதலில் பகுத்தறியவேண்டும். "தூங்குகிற நீ விழித்து மரித்தோரைவிட்டு எழுந்திரு. அப்பொழுது கிறிஸ்து உன்னை பிரகாசிப்பிப்பார் (வச 14). நாம் தூக்கத்தில் நடக்கிறவர்கள் போலவோ, சடலங்கள் போலவோ மற்றவர்கள் நம்மைத் தம் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்க இடமளிக்காமல் கிறிஸ்து அளிக்கும் வெளிச்சத்தைத் தேடவேண்டும். நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல் ஞானமுள்ளவர்களைப்போல கவனமாய் நடந்துக்கொள்ளுங்கள்" (வச 15). கவனம் என்பது சூழ்நிலைகளையும் விளைவுகளையும் கணித்து விவேகமாய் நடந்துக்கொள்வது ஆகும். ஆகவே பெண்கள் தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் (வச 21). கீழ்ப்படிதல் என்னும்போது கணவனுக்குப் பயப்படும் பயமல்ல. இதில் தேவபயமே மேலோங்கியிருக்க வேண்டும். மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல உங்கள் சொந்த புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள் (வச 22). "ஆண்டவர் இந்தக் காரியத்தைச் செய்யும்படி என்னைக்கேட்பாரா? என்ற கேள்வியைக் கேட்டுப்பாருங்கள். சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்த காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும் என்று வேதம் போதிக்கிறது." (வச 24). ஒத்துப்போக முடியாமலே, கீழ்படியமுடியாமலோ சில குறிப்பிட்ட விஷயங்களில் இருக்கும் பட்சத்தில் அகங்காரமாயல்ல, பிடிவாதமாயுமில்லாமல் பணிவோடு செய்யுங்கள். விவேகம், புத்தி, ஞானம், அறிவுக்குறித்து இவ்வளவு போதித்துவிட்டு, நிச்சயமாய் பவுல் மரப்பாச்சி (பொம்மைப்போல்) கீழ்ப்படிதலை ஊக்குவிக்கவில்லை. மனைவியார் நூற்றுக்குநூறு கீழ்ப்படிந்ததால் சமூகத்தில் பல விபரீதங்கள் நேர்ந்திருக்கின்றன. சப்பீராளை யோசித்துப்பாருங்கள். பெண்கள் யோசித்து செயல்படுவதை தேவன் விரும்பாவிட்டால் பெண்களுக்குத் தெளிந்த புத்தியைக் குறித்து வேதம் இவ்வளவு எழுதவேண்டிய தேவையென்ன? சமயோசித புத்தியைப் பயன்படுத்துங்கள். அசம்பாவிதத்தை ஆபத்தை பெண்கள் உணருவீர்களானால் கீழ்ப்படிதலைத் தவிர்த்துவிடுங்கள். பாலியப்பெண்கள். தெளிந்தபுத்தியுள்ளவர்களும் ...தங்கள் புருஷருக்குக்கீழ்படிகிறவர்களும்"(தீத்து 2:4,5).மாயிருக்கவேண்டும் என்று வசனம் கூறுகிறது.

எங்களது குடும்ப முகாம் (Blessing Youth Mission) ஒன்றில் கணவரும் மனைவியரும் நிரப்பிக் கொடுக்க (form) படிவங்கள் விநியோக்கிக்கப்பட்டன. அதில் ஒருவர் "என் மனைவி எனக்குக் கீழ்ப்படிவதில்லை" என்று எழுதியிருந்தார். பரிதாபப்பட்டேன். ஆனால் அவரது மனைவியின் படிவம் வந்தபோது. என் கணவர் குடிக்காரர். என்று எழுதியிருக்கக்கண்டேன். அழுவதா, இல்லைச் சிரிப்பதா? மது, மாது விவரங்களில் மனைவிக்கு கீழ்ப்படியாத கணவன், மனைவியின் கீழ்படிதலுக்குத் தகுதியற்றவன். இதனால் அவரை அலட்சியம் செய்யவேண்டுமென்பதல்ல. எப்போது கீழ்ப்படியக்கூடாது என்பதில் விழிப்பாயிருக்கவேண்டும்.1 பேதுரு 3:1-4ஐக் கைக்கொள்ளளும்போது அதில் குறிப்பிட்டுள்ள நடக்கை என்பது விவேகமான கீழ்படிதலையும் உள்ளடக்கும் என்பதை நினைவிற்கொண்டு, கீழ்ப்படியாதிருக்கவேண்டிய சூழ்நிலையில் பெண்கள் சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியோடிருக்கவேண்டும்.

 

"மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள், என்கிறது." கொலே 3:18. உங்கள் கீழ்படிதலை அங்கீகரித்து தேவன் ஆனந்தமாய் தலையசைப்பாரா? என்பதை அந்த சூழ்நிலையில் யோசித்துபாருங்கள். பின்வரும் கேள்விகளையும் கேட்டுப்பாருங்கள். எனது கீழ்ப்படிதல் தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருமா? என் குடும்பத்தைக் காயப்படுத்துமா? யாருக்கேனும் பங்கம் விளைவிக்குமா? நல்ல சாட்சியாக இருக்குமா? என் மனச்சாட்சியை களங்கப்படுத்துமா? சந்தோஷமாய் மற்றவர்களுடன் என் அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள முடியுமா? என் கீழ்ப்படிதலினால் தேவனைப் பின்பற்றுகிறவளாயிருப்பேனா? அன்பிலே நடந்துக் கொள்கிறவளாயிருப்பேனா?. ஞானத்திற்கும் கணவனுக்கும் கீழ்ப்படிதலுக்கு இடையிலுள்ள கத்திக் கூர்மை விளிம்பில் நடப்பதைபோல் ஒரு பெண் நடக்கவேண்டும். கயிற்றின்மேல் நடக்கும் இந்த வித்தையைக் கற்பிக்க அனுபவமே அவளுக்கு ஆசிரியை. எஸ்தர் அதைச்செய்தாள். உங்களது கீழ்ப்படியாமை உங்கள் கணவரை கௌரவிக்குமானால் அதைத்தான் ஞானம் எனலாம்.

3. எனக்கு ஞானமில்லை:

யார் சொன்னது? பெண்கள் பலர் தங்களுக்கு ஞானமில்லையென்று அங்கலாய்க்கிறார்கள். சமுதாயம் "பெண்புத்தி-பின்புத்தி" என்று மொழிந்ததால் அதை நம்பி ஏற்றுக்கொள்கிறார்கள். புத்தியீனமாய் நடந்துகொண்டால் தங்களையே நொந்துக்கொள்கின்றனர். நீங்கள் ஞானத்தில் வளரவேண்டுமேயொழிய வேறொன்றுமில்லை. ஞானத்திற்கான இறைவாக்கு ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும்தான் (யாக் 1:5). நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தேவனிடம் கேட்க வேண்டியதொன்றே, பெரிய காரியங்களுக்குமட்டுமல்ல, அன்றாடத் தீர்மானங்களுக்கும்தான். திடீர் ஜெபம் மட்டுமல்ல. அனுதின ஆழமானவிடாப்பிடி அங்கலாய்ப்புள்ள ஜெபம் அப்படிப்பட்ட ஜெபத்தில் நீங்கள் கேட்டால் ஏராளமாய் தாராளமாய்க்கிடைக்கும். எழுதுகிறநானும் ஞானத்திற்காய் இறைவனடியைப்பற்றிக்கொண்டு மன்றாடினேன். மாற்றத்தைக் கண்டேன். அதன்பின் எவ்வளவோதூரம் ஆவிக்குரிய முதிர்ச்சியில் கடந்து வந்திருக்கிறேன். "கேட்டல்" என்ற எளிமையான காரியத்தை எத்தனை பேர்செய்கிறோம்? சந்தேகமின்றி நம்பிக்கையோடு கேளுங்கள். தலையே பெண்ணுக்குத் தலை சிறந்த ஆயுதம். ஞானம் என்பது ஞானத்திற்காய் ஜெபிப்பது மட்டுமல்ல. ஞானமான காரியங்களைச் செய்வதுமே. இயேசுகிறிஸ்து மத்தேயு 7:24ல் வரைந்த கோட்டில் வழுவாமல் நடக்கவேண்டும். "நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனை... புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன்" நீதிமொழிகள் 3 அத்தியாயம் ஞானத்தின் புகழைப்பாடுகிறது. ஆனால் அதைச்சொந்தம் கொண்டாடுபவர் யார்? "நீ உன்னை ஞானியென்று எண்ணாதே, கர்த்தருக்குப் பயந்து தீமையை விட்டுவிலகு" (நீதி 3:7) என்ற இந்த வார்த்தைகள் இதைவிடத் தெளிவாய் இருக்க முடியுமா? கடவுளுக்கு நடுங்கி தீமையைக் கண்டால் தூர ஓடுவதே புத்திசாலித்தனம். சந்தேகமான காரியமாயிருந்தால் சாதுரியமாகக் கைக்கழுவிவிடுங்கள் உங்களுக்கு சந்தேகம் வருமானால் வேதத்தை ஆராயுங்கள். தேவன் நமக்குத் தெளிந்த புத்தியுள்ள ஆவியைக் கொடுத்திருக்கிறார். (2தீமோ 1:7).

4. நசுக்கப்படுவதினால் நலிந்துப்போய்விட்டேன்:

ஊஹூம். நீங்கள் நலிந்துபோய்விடவில்லை. எந்தவொரு வெளிப்புறச் சக்தியும் உங்களை நசுக்கிவிடமுடியாது. நீங்கள் பலவீனராயிருந்தால் பலவானாவீர்கள் என்பதுபோன்ற வேடிக்கையான தத்துவங்களை வேதத்தில் காணலாம். தோற்றத்தில் நோஞ்சானாயிருந்த பவுல் மலைக்கவைக்கும் அப்போஸ்தலனானார். அநாதை எஸ்தர் சரித்திரத்தின் ஏடுகளையே தலைகீழாய் திருப்பினாள். நசுக்கப்பட்ட எபிரெயர் நட்சத்திரக் கூட்டாயினர். அடிப்பணிந்தால் அலாக்காகத் தூக்கப்படுவீர்கள். நாம் நம்புவதற்கு முரணானவை இவை. கணவனோ, மாமனார், மாமியாரோ, பெற்றோரோ, உடன்பிறப்புகளோ, பெண்களான, தலைவரோ மற்றெவரோ நம்மைத் தலையில் குட்டிக்கொண்டே இருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆக்ரோஷமடைவதோ ஆசீர்வதிப்பதோ அது நமது தெரிந்தெடுப்பை சார்ந்தது. இறையரசின் எதிர்மறைகளை மலைப்பிரசங்கம் கோடுபோட்டுக் காட்டுகிறது. நீங்கள் ஆவியில் எளிமையுள்ளவர்களானால் இறையரசின் சொந்தக்காரராவீர்கள் - யுத்தம் செய்து கைப்பற்றுவதினாலல்ல. அழுகிறீர்களானால் ஆறுதல்படுத்தப்படுவீர்கள் - துக்கத்தின் காரணத்தைக் துடைத்தெறிவதினாலல்ல. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்திரித்துக்கொள்வார்கள் - பிறர் தலையில் மிளகாய் அரைப்பவர்களல்ல (மத் 5:3-5). என்னுடைய யுத்தங்களை நானே நடத்தாவிடில் கடவுளே எனக்காக யுத்தம் செய்வாரென்பது எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை.

நீங்கள் கீழே தள்ளிவிடப்படலாம். அலட்சியப்படுத்தப்படலாம். தூசியென துடைத்தெறியப்படலாம். கலங்காதீர்கள். லேயாள் காயப்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டதைக் கண்ட கர்த்தர் அவளை தாய்மையடையச் செய்து, இயேசுவின் முன்மாதாவாக்கி அவளைத் தூக்கி நிறுத்தினார். அவர் அழுகையை மாத்திரமல்ல, பெருமூச்சையும் கேட்கிற தேவன் (ஆதி 21:17, யாத் 2:24). கராத்தேயை நிறுத்தி, கரங்களை உயர்த்தி, உங்களைக் கடிப்பவரை ஆசீர்வதியுங்கள். அதன்பின் அசத்தும் விளைவுகளைக் காண்பீர்கள். விரோதமும் குரோதமும் உங்களுக்குள் கொதித்துக் கொண்டிருக்க இடமளிப்பீர்களானால் உங்கள் குடல்கள் வெந்துபோகும். "தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர், நீர் செய்ய நினைத்தது தடைப்படாது" (யோபு 42:2). தேவன் உங்களுக்காய் தீட்டியுள்ள திட்டத்தை தீண்ட யாராலும் முடியாது. தேவனோடு பேசுங்கள், உங்களோடும் பேசுங்கள். வசனங்களோடு பேசுங்கள். சாத்தானும் கொஞ்சம் பேசிப் பார்க்க வருவான். விரட்டியடியுங்கள்.

 

ஊழியத் துவக்க நாட்களில் தலைவர்கள் சிலருக்கு காலைச் சிற்றுண்டி செய்ய ஒரு குழு ஆயத்தமானது. பொறுப்பாயிருந்த சகோதரி என்மேல்கொண்ட பொறாமையினால் என்னை ஒதுக்கிவிடுவார்கள். எனக்கு ஏதாவது வேலை கொடுக்கும்படி நான் கெஞ்சியபோது, "சரி போ, இட்லிக்கு மாவாட்டு" என்றார்கள். அது முந்தினநாள் வேலை என்பது யாரும் அறிந்ததே. அந்நாட்களில் மின் இயந்திரம் இல்லாததால் கல்லில் ஆட்டினேன். மறுநாள் தலைவர்கள் வந்தபோது அந்த சகோதரி தலைவர்களிடம் நற்சான்று வாங்குவதற்காக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தபோது நான் சிலையென நின்று எனக்காகப் பரிதாபப்பட்டுக்கொண்டிருந்தேன். எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒருவர், "இட்லி எப்படி இவ்வளவு பஞ்சுபஞ்சாக சென்றிருக்கிறது?" என்றார். மற்றொருவர் "இட்லியின் இரகசியமே மாவட்டுவதில்தான் இருக்கிறது. யார் மாவாட்டியது?" என வினவினார். என் கணவர் பெருமையாக, "என் மனைவிதான்" என்றார். தலைவர்கள் யாவரும் என் பக்கமாய்த் திரும்பி நான் பீட்ருட்டாய் சிவக்கும்வரை மெச்சினர். யாவரும் சென்றபின் நடந்த கலாட்டாவைச் சொல்லவும் வேண்டுமா? தேவன் அநீதியுள்ளவரல்ல. இது ஓர் அற்ப எடுத்துக்காட்டு. பிறர் என்னைத் துச்சமாய் நடத்தியபோதெல்லாம் தேவன் என் கரங்களைப் பிடித்து வெறுப்பை வெறுப்பால் தாக்குவது மடமை எனக் கற்பித்திருக்கிறார். இருப்பினும், நீங்கள் சுயபரிதாபத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறீர்களா, எழுந்துப் பிரகாசிக்க முழு முயற்சி எடுத்தீர்களா, சுய உரிமையை நிலைநாட்டாமல் விட்டுவிட்டீர்களா என்று எந்தச் சூழ்நிலையையும் சீர்தூக்கிப்பார்க்கவேண்டும் இழிவானவர்கள் உடலளவிலோ, மனதளவிலோ தொல்லை கொடுக்க யாரும் இடமளிக்கக்கூடாது. யாரும் உங்களைத் தங்கள் விருப்பப்படி பந்தாடக்கூடாது. சுய கௌரவமென்பது ஒவ்வொருவரது உரிமை. எப்போது சுய உரிமைக்காய் வாதாடவேண்டும். எப்போது அமைதி காக்க வேண்டும் என்பதை நெடுநாள் அனுபவங்கள் வீசும் வெளிச்சத்தில் கண்டறியலாம். 

5. நான் தேவனைச் சேவிக்க முடியாது:

ஏன் முடியாது? கணவன், பிள்ளைகள், பெற்றோர், மாமியார், மாமனாரைக் கவனித்து வீட்டைப் பேணுவதும் தேவ சேவை என்பதை முதலாவது புரிந்துக்கொள்ளவேண்டும். கூட்டுவதும், கழுவுவதும் அதற்குக் குறைவல்ல. நற்செயலர்கள், பிள்ளைகளைப்பேணுதல், அந்நியரை உபசரித்தல், ஊழியருக்கு உதவி செய்தல், துன்பப்பட்டோரின் துயர்துடைத்தல், வீட்டை நடத்துதல் யாவும் பெண்கள் ஊழியங்களாகும் (1 தீமோ 5:10-14). எப்பக்கத்திலிருந்தும் (பலமுறை கணவர் உட்பட) சோர்பு, குற்றச்சாட்டு, கிண்டல் போன்றவற்றை ஒரு பெண் தொடர்ந்து சந்திப்பதால் அந்த சூழ்நிலையில் அவள் ஊழியம் செய்வது கடினம். இதற்கெல்லாம் மேல் அவள் எழும்புகிற அளவு அவளுக்கு ஆன்மீக வலிமை இன்றேல் அவள் அதிகம் சாதிக்க முடியாது.

தெபொராளைப் பாருங்கள். "நான் பெண், யுத்தத்திற்கு எப்படிச் செல்வேன்?" என்று தயங்கியிருந்தால் என்னவாகியிருக்கும்? பாராக் செய்தது அதுதான். அவனுக்கு தேவன் மேலோ தன்மேலோ நம்பிக்கை கிடையாது. ஆகவே தேவன் வேறொருவரைத் தேடி பெண்ணாகிய தெபொராளைக் கண்டுபிடித்தார். அவள் தன் குடும்பத்தைப் பராமரித்ததோடு இஸ்ரவேலுக்கு நியாயாதிபதியுமாயுமிருந்தாள்.

தேவன் அவளைப் போருக்கு அழைத்தார். "ஓ.கே" என்றாள். அவளால் முடியுமா? அவளாலல்ல. அவளை அழைத்த தேவனின் பெலத்தினால் முடிந்தது. போரில் நடந்ததென்ன? நடந்த அற்புதங்களைப் பாருங்கள்.......

மக்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்து அவளுக்கு உதவினார்கள் (நியா 5:2). பூமி அதிர்ந்தது (வச 4) வானம் சொரிந்தது பர்வதங்கள் கரைந்தன. நட்சத்திரங்கள் தங்களை அயனங்களிலிருந்து சிசராவோடே யுத்தம் பண்ணின. ஆற்றுவெள்ளம் எதிரிகளை அடித்துக்கொண்டுப் போயிற்று. எதிரி குதிரைகளின் குளம்புகள் பிளந்துப்போயின. வேறொரு பெண் யாகேல் சிசெராவைக் கொன்றுப்போட்டாள். தெபொராள் செய்தது ஓ.கே ஒன்றுதான்.

ஒரிசாவில் பட்டினியால் வாடுவோர், வீடற்றோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவிசெய்ய தேவன் என்னை அழைத்தபோது மலையைப் பார்த்து மலைத்து நின்ற எலியைப்போல் தடுமாறினேன். தெபொராளுக்கு நடந்ததே எனக்கும் நடந்தது. எண்ணற்றோர் வந்துதவினர். இன்று நமது மிஷனரிகள் அங்கு அற்புதமாய் சேவை செய்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் பயனடைகின்றனர்.

 

தேவனுக்கு "ஓ.கே" என்று தலையசைப்பீர்களானால் உங்கள் வாழ்வில் பூங்காற்று வீசும். "ஓ.நோ" ஆண்டவரே, என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்களா? பலர் தேவனது அழைப்பை அல்லத்தட்டி நிற்கிறீர்கள். தலை வணங்கி, "இதோ வருகிறேன்" என்று சொல்வீர்களா?.

6. இந்த இடியில் நான் பிழைக்கமாட்டேன்:

நிச்சயமாய் பிழைப்பீர்கள். நோய், பேரிழப்பு, துயரம், ஏமாற்றம், பிரிவு, நஷ்டம், விபத்து, உதிரும் திருமணம் இவை நம்மை இடியாய்த் தாக்கும்போது, வாழ்க்கைப்படகு கவிழ்ந்து துணிவை அவித்துப்போடலாம். நானும் இருந்தென்ன, வாழ்க்கை வாழ்ந்தென்ன என்று நானுமே நினைத்த நாட்களுண்டு. பல செக்குகளை இழுத்து வந்திருக்கிறேன். ஆனால் இன்றோ தலையில் விழுந்த ஒவ்வொரு இடியும் கற்பித்தப் பாடங்களினால் ஆன்மீகத்தில் செல்வச்சீருடன் அகமகிழ்கிறேன்.வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர். அடுத்தத்திருப்பம் என்னவென்று சொல்லவியலாது. வாழ்க்கை அள்ளி அளிப்பதைக் கொண்டு சிறப்பாய் செயல்படப் பழகவேண்டும். சிலர் இடிதாங்கிகளாய் துயரங்களை ஏற்று நிற்க உறுதியுள்ளவர்கள். சிலர் துவண்டுவிடுவர். மனநிலைப் பாதிப்புகள் மனநோய்க்கோ தற்கொலைக்கோ வழிநடத்தலாம். ஆகவே முதலாவது நீங்கள் செய்யவேண்டியது துயருர நேரமெடுத்தலாகும். "'அழாதே கண்ணைத் துடைத்துக்கொள். அழுது என்ன பயன், எழுந்திரு. வெளியே வா" என்று சிலர் நல்லெண்ணத்தோடு உங்களை அவசரப்படுத்தலாம். துயரம் என்பது வாழ்வின் ஓர் உண்மை. நேரமெடுத்துச் கொள்ளுங்கள். அழுவது, பிறரை சந்திக்க மறுப்பது, முடங்கிக் கிடப்பது இவையெல்லாம் இயல்புதான் பரவாயில்லை.

 

துயரத்தில் மூழ்குவோர் ஓராண்டில் பழைய நிலைக்குத் திரும்ப எதிர்ப்பார்க்கப்படுகிறார்கள். என்றாவது ஒருநாள் நீங்கள் உண்மையை ஏற்றுக்கொண்டு, எதிர் சக்திகளை முறியடித்து, சவாலை எதிர்க்கொண்டு உயிர்மீட்சியடையத்தான் வேண்டும். வளையிலிருந்து வெளிவந்து மக்களைச் சந்திக்கத் துவங்குங்கள். உங்களைப்போன்ற மக்களுடன் கரங்கோர்த்து, அதே நிலையில் தத்தளித்துக் கொண்டிருப்போரை தாங்கிப்பிடிக்க ஒரு சுமைதாங்கிக் குழுவை உருவாக்குங்கள். புதுக் கலைகளைக் கற்கலாம். கணினியோ, ஓவியக் கலையோ உங்கள் ஆர்வத்தைத் தூண்டிவிடும் எதிலாகிலும் தேர்ச்சியடையலாம். நடப்பதுபோன்ற உடற்பயிற்சி உங்கள் மனதுக்கும் உடலுக்கும் இதமளிக்கும். வாழ்க்கையை அனுபவிக்கப் பழகுங்கள். முன்னோக்கிப் பாருங்கள். பின்னிட்டுப் பார்க்காதேயுங்கள். கடந்த காலத்தின் கைதியாகிவிடாதபடிக்கு விழிப்பாயிருங்கள்.

 

கடினமான சிக்கல்களுக்குத் தீர்வுகாண தேவன் உறுதியானவர்களைப் பொறுக்கியெடுக்கிறார். மற்றப் பெண்களுக்கு கற்பிப்பதற்காக இந்தக் காரியம் உங்களுக்கு நடக்க நீங்கள் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ என்னவோ, உங்களுக்கு நேரிட்ட ஒரு பயங்கரத்தை அப்படியே திருப்பி பிறருக்கு வழிகாட்டியாக்கலாம்.

 

உங்கள் நிலையை நினைத்து நொந்து நொந்து வாழ்வை வீணடிக்கக்கூடாது. முன்னேறுங்கள். ஒரு பெண், மனைவி, தாய், எருமை மாட்டைப்போலவாயிருக்கவேண்டும். எழுந்து நில்லுங்கள். தைரியம் கொள்ளுங்கள். வீறுநடை போடுங்கள்.

7. நான் முற்றிலும் தோற்றவள்:

இல்லை. இல்லவேயில்லை. மறுபடியும் உங்கள் வாயால் அப்படிச் சொல்லாதீர்கள். வாழ்க்கையில் தோல்வியுற்றவர் என்று நம்மை நாம் கணிப்பதற்குக் காரணம் நாம் தோல்வியுற்றவர் என்பதினாலல்ல. நம்முடைய அன்றாட வெற்றிகளை நாம் கணக்கெடுக்காததினால், நீங்கள் வாழ்க்கை ஓட்டத்தில் தோற்றுப் போனவர்கள் என்று பிசாசு சொல்லும் பொய்யை நம்பாதீர்கள். வாழ்க்கையை வானவில்லாய் பாருங்கள். தான் வாழ்க்கையில் முற்றிலும் தோல்வியுற்றவள் என்று என்னிடம் சொல்லி அழுவதற்கென்றே ஒரு பெண்மனி தூரப் பட்டணம் ஒன்றிலிருந்து வந்தார்கள். அவர்கள் கதையைக் கூறும்போது அவர்கள் செய்த பல அசத்தலான காரியங்களைக் கவனித்தேன். தன் கதையை முடித்து, கண்ணைத் துடைத்து, மூக்கை உறிஞ்சியபோது அவர்களது வெற்றிகளை ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டினேன். கண்ணீர் காய்ந்தது. முகம் ஜொலித்தது. "அப்படின்னா நான் தோல்வியடைந்தவள் என்று நீங்கள் நினைக்கவில்லைiயா?" என்று உதடுகள் துடிக்கக் கேட்டார்கள். "சே. இல்லவே இல்லை" என்றேன். புதுப் பெண்மணியாகத் திரும்பிச்சென்றார்கள்.

 

சிலுவையில் மரித்ததினால் இயேசு தோற்றுப்போனவரோ? உலகமனைத்திற்கும் இரட்சகரானாரே. மண்ணைக் கவ்வியதால் ஏவாள் தோற்றுப்போனவளோ? ஜீவனுள்ளோர் அனைவருக்கும் தாயானாளே. பாவத்தில் விழுந்ததினாலே தாவீது தோற்றுப்போனவரோ? அவர் அழுது அழுது பாடின பாட்டு அனைவரையும் அணைத்துக்கொள்ளுகிறதே.

அற்புத சுகமளிக்கும் ஊழியன் எலிசா நோய்வாய்பட்டு மரித்ததினால் தோல்வியடைந்தவரோ? (2இராஜ 13:14). அவரது எலும்புகளைத் தொட்ட மாத்திரத்தில் மரித்தவன் உயிர்பெற்றானெ. மிரியாம் தன்னுடைய பார்வையிலே தோல்வியுற்றவனாக விண்ணுலகம் சென்றிருக்கலாம். ஆனால் பல நூற்றாண்டுகளுக்குப்பிறகு தீர்க்கன் மீகா அவளை ஒரு தலைவியாகவேக் காண்கிறார். பெரும் வெற்றி வாகை சூடியவர் அருகில் நிற்கும்போது, உங்களைத் தோற்றவராகக் காணத்தோன்றும். உங்களை ஒருபோதும் யாரோடும் ஒப்பிடாதீர்கள். தேவனுக்கு நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர். தேவன், உங்கள் மூலம் சாதிக்க வேண்டும்மென்பதை நீங்கள் சாதித்தால்போதும். நீங்கள் நீங்களாகவே இருங்கள். வேறொருவரைப்போலாக முயலாதீர்கள். பொறாமை, கோழைத்தனம், தன்னம்பிக்கையின்மை, இப்படி ஏதாவது உங்களில் ஒளிந்துக்கொண்டு பயனற்றவராக உங்களை உணரச் செய்கிறதா எனக் கண்டுபிடித்து அதை மேற்கொள்ளுங்ள். உறுதியும் ஊக்கமுமே உங்கள் தேவை.

 

எந்த சூழ்நிலையிலும் சாதகமானவை உண்டு. கண்டுபிடிக்கக் கடினமாயிருந்தாலும், அது அங்குதான் இருக்கிறது. இழப்பு ஒரு இனாமாகலாம். அந்த இழப்பு நீங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர ஒரு வாய்ப்பு, கற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பங்களை எதிர்நோக்கியிருக்கும் மேன்மையான நபராயிருக்கவும், மேன்மையான வீராங்கனையாயிருக்கவும் தோல்வி என்னைத் தூண்டிவிட்டிருக்கிறது. டென்னிசைப்போலவே வாழ்க்கையிலும் அப்படித்தான் முன்செல்லவேண்டும் என்றார். ஒருமுறை தோல்வியைத் தழுவினபின் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸின் தோல்வி உலகின் முடிவல்ல. நமது குறைகளையே எண்ணி தியானித்துக்கொண்டிருப்பதே நமது தோல்வி. அதை விட்டு நமது பலங்களில் கவனம் செலுத்தி, நாம் சிறந்திலங்கும் காரியங்களை மேம்படுத்துவதில் கரிசனை காட்டவேண்டும். நம்மை நாமே இழிவுப்படுத்திக்கொள்வதே நம்மை நாசமாக்கிக்கொள்ள வழி. "ஒரு காரியம் உங்களுக்கு நடக்கவில்லையா? நடக்கச் செய்யுங்கள். வாழ்க்கை நடக்கும் என்று காத்திருக்கக்கூடாது. நீங்களே வாழ்க்கையை நோக்கி திறந்தக்கரங்களுடன் ஓடவேண்டும்" என்றார் ஒருவர். உங்கள் எதிர்காலத்தின் பைலட் நீங்களே. ஆகவே எழுந்திருங்கள். உங்கள் வாழ்வை வெற்றியாய் மாற்றுங்கள். பிசாசின் பொய்களை நம்பவேண்டாம். இறைவனது உண்மையை நம்பி வாழுங்கள்.

 

ஜாமக்காரன்: இன்று கிறிஸ்தவ உலகில் அலட்சியப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட பெண்கள் ஏராளம். என் ஆலோசனை நேரங்களில் மிக அதிகமான பெண்கள் பிரச்சனை உள்ளவர்களாகத்தான் என்னிடம் வருகிறார்கள். அவர்களில் பலர் கணவன்மார்களால் தூக்கிவீசப்பட்டு விதவைகள்போல் வாழுகிறவர்கள் ஏராளம். இவர்களெல்லாம் ஒரு காலத்தில் கல்லூரியில், சபையில் ஜெபகூட்டம் நடத்தியவர்கள். ஆனால் விதவிதமான சூழ்நிலைகளினால் சோர்ந்துபோனவர்களாக இப்போது தனிஜெபம் இழந்து, வேதவாசிப்பு இழந்து, சொந்த வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு பகலில் அழமுடியாமல் இரவில் எல்லாரும் உறங்கியபின் கண்ணீர்விட்டு அழுது வாழ்கிறவர்கள். சகோதரி.லில்லியனின் இந்த செய்தி நிச்சயம் இதை வாசிக்கும் உங்கள் எல்லாருக்கும் புது உத்வேகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கட்டுரையில் சிலது கரடுமுரடாக இருக்கும். ஆனால் கட்டுரையின் நோக்கம் மிக அற்புதம். இவர் எழுதிய புத்தகங்கள் உங்களுக்கு தேவையாயிருந்தால், எழுதிய இந்த கட்டுரை விஷயத்தில் சந்தேகம் எழும்பினாலோ Dr.Lillyan அவர்களோடு தபால் வழியாக அல்லது இ-மெயில் வழியாக தொடர்பு கொள்ளலாம். கர்த்தர் டாக்டர்.லில்லியனுக்கு கொடுத்த தாலந்துகளுக்காக தேவனைத்துதிக்கிறேன். இவர் வாழ்க்கையின் அனுபவ எதிரொலி இவர் எழுதியதில் காணலாம். ஆனால் அது அனைத்து பெண்களுக்கும் நிச்சயம் பெலம்தந்து படுக்கையிலிருந்து உங்களை எழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த கட்டுரையைக்குறித்த விமர்சனங்களை எனக்கு எழுதாமல் சகோதரிக்கு எழுதி பதில் பெறுங்கள்.

 

தொடர்புக்கு:
Dr.LillyanStanley, MBBS., DCH.,
Blessing Youth Mission,
Church Colony Gandhi Nagar,
Vellore-632 006,

E-Mail: hq@bymonline.org

 Thanks@ஜாமக்காரன்

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard