ஆமோஸ் 5:26 நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளேகுடைய கூடாரத்தையும், உங்கள் தேவர்களின் நட்சத்திர ராசியாகிய உங்கள் சொரூபங்களின் சப்பரத்தையும் சுமந்துகொண்டு வந்தீர்களே.
கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் தவிர்க்கமுடியாத அடையாளம் நட்சத்திரமாகும்.இதுகுறித்து பொதுவான அபிப்ராயம் பின்வரும் கட்டுரையில் இடம்பெற்றிருக்கிறது.
கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ம் தேதி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்களும், அவரைப் பின்பற்றுவோரும் இயேசுவின் பிறப்பை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர்.
இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தின் அடையாளமாகத்தான் தங்கள் வீடுகளில் பெரிய நட்சத்திரங்களை அலங்காரமாக தொங்க விடுகின்றனர்.
டிசம்பர் மாதம் பிறந்த உடனேயே கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கான ஒரு அழைப்பு மணியாக அனைத்து கிறிஸ்துவர்களின் இல்லங்களிலும் இந்த நட்சத்திரத்தை மின் விளக்கு அலங்காரத்துடன் தொங்க விட்டு, தங்கள் வீடுகளிலும் இயேசு பிறந்திருக்கிறார் என்று அறிவித்து மகிழ்கின்றனர் என்பதை நாம் காணலாம்.
இதன்படி கிறிஸ்தவர்களாகிய நாம் நமது வீட்டு வாசலில் அட்டையில் செய்யப்பட்ட அலங்கார நட்சத்திரத்தை தொங்கவிட்டு ஏதோவொரு செய்தியை சொல்ல முயற்சிக்கிறோம்.ஆனாலும் இது எந்த அளவுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்று நாம் சிந்திக்கவேண்டும்.ஏனெனில் நட்சத்திர அடையாளத்தில் பல்வேறு பாரம்பரிய நம்பிக்கைகள் இருப்பதை மேற்காணும் வேத வசனத்தில் வாசிக்கிறோம்.மேலும் யோபுவின் புத்தகத்திலுள்ள பின்வரும் வசனமும் நம்மை எச்சரிப்படைய தூண்டுகிறது.
அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ? இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ? (யோபு 38:31&32)
இதன்படி நாம் பொதுவாக வாங்கி பயன்படுத்தும் நட்சத்திர அட்டையானது ஐந்து முனைகள் கொண்டதாக இருக்குமானால் அது பாபிலோனிய அடையாளமாகும்.ஆனால் இன்றைக்கும் நாம் இஸ்ரவேல் தேசத்தின் கொடியினை அடையாளத்தை கவனித்தால் அதில் ஆறு முனைகள் இருப்பதை காணலாம்.ஐந்து என்ன ஆறு என்ன அதுவா முக்கியம் நம்முடைய நோக்கம் தானே பிரதானம்,ஆண்டவர் இதையெல்லாம் பார்க்கிறதில்லை அவர் உள்ளத்தையே பார்க்கிறார் என்போமாகில் நாம் ஒன்றை கவனிக்கவேண்டும்.இதேபோன்ற ஒத்துப்போகும் தன்மையினாலேயே ஆதிகிறிஸ்தவர்கள் ரோம சாம்ராஜ்யத்தின் சலுகைகளுக்கு மயங்கி பெரிய மதசுதந்தரம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் துள்ளி தங்கள் வேர்களை மறந்துவிட்டு கலப்பு மார்க்கத்திடம் சரணடைந்து புண்ணியமான மார்க்கத்தை மதமாக்கும் இழிசெயலுக்கு விற்கப்பட்டார்கள்.
ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்றும் சீர்திருத்தவாதிகள் என்றும் எழும்பிய ஒரு கூட்டம் எதையோ பெரிதாக சாதிக்கப்போகிறது என்று ஆவலுடன் பரலோகமே பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் சில வருடங்களிலேயே அவர்களும் நீர்த்துப்போய் பாரம்பரியத்தில் கலந்துவிட்டார்கள்.இன்றைக்கு பெந்தெகொஸ்தே கிறிஸ்தவர்களாக சொல்லிக்கொண்டோரும் பாபிலோனிய நட்சத்திரத்தை தங்கள் வாசலில் தொங்கவிடுகிறார்கள்.ஏனெனில் மனிதன் ஆதிமுதலே தனித்து நிற்பதை விரும்பியதில்லை.அவன் சமுதாயமாக ஒரு கூட்டத்தில் ஒருவனாக இருப்பதையே விரும்புகிறான்.தனித்து நிற்பது பாதுகாப்பு இல்லை என்பது அவனுடைய எண்ணமாக்கும்.ஆனால் ஆபிரகாம் எனும் தேவ மனிதனை ஆண்டவர் அழைத்தபோது அவன் தனித்து செல்வதுகுறித்து அச்சப்படாமல் தன்னை அழைத்த தேவன் மீது தனது நம்பிக்கையை வைத்தான்.அதையே தேவன் அவனுக்கு நீதியாக எண்ணியதாக வேதம் சொல்லுகிறது.
”கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.” (ஆதியாகமம்.12:1)
எனவே கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படும் தற்கால கிறிஸ்தவமானது இதுபோன்ற அந்நிய மார்க்க வழிபாடுகளிலிருந்து விலகி தங்களை சுத்திகரித்துக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.